என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் தடை கண்டித்து பொதுமக்கள் மறியல்
    X

    மின்சாரம் தடை கண்டித்து பொதுமக்கள் மறியல்

    • தவுட்டுப்பாளையத்தில் குடிநீர் திட்ட பணிக்காக மின்சாரம் தடை செய்யப்படுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்
    • அரசு அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நன்செய் புகளூர் தவுட்டுப்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் சார்பில் அரவக்குறிச்சி மற்றும் ராமநாதபுரம் பகுதிக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் எடுப்பதற்கு காவிரி ஆற்றில் 50 அடிக்குமேல் குழி தோண்டியுள்ளனர். இதனால் தவுட்டுப்பாளையம் நன்செய் புகளூர் பகுதிகளில் கிணறுகளும், ஆழ்துளை கிணறுகளும் வற்றிவிட்டதால் இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அல்லது வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டர், உயர் அதிகாரிகள் வரை மனு கொடுத்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் காவிரி ஆற்றில் வைக்கப்பட்டுள்ள மிக அதி நவீன ராட்சத மின்மோட்டருக்கு மின் சப்ளை பற்றாக்குறையாக இருப்பதால், நன்செய் புகளூர் தவுட்டுப்பாளையத்திற்கு வரும் மின்சாரத்தை நிறுத்திவிட்டு ரட்சத மின்மோட்டோருக்கு புதிதாக மின் கேபிள் அமைக்கும் பணி நடைபெற்றது. இதன் காரணமாக காலை முதல் மாலை வரை அந்தப் பகுதியில் மின் சப்ளை இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட குவிந்தனர். இது குறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், வருவாய் ஆய்வாளர் சுமதி, கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். இருப்பினும் சாலை மறியலில் ஈடுபட முயன்ற போது போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினார்கள். அப்புறப்படுத்தும் போது பொதுமக்கள் குடிநீர் திட்ட பணிகள் நடைபெறும் இடத்திற்கு சென்று முற்றுகை போராட்டம் நடத்தினார்கள் . அப்போது குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் கிருஷ்ணனிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இரவு நேரம் ஆனதன் காரணமாகவும் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் இன்று மாலை 4.30 மணி அளவில் கட்டிபாளையம் ,தவுட்டுப்பாளையம் நன்செய் புகளூர் ,அக்ரஹாரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி குடிநீர் திட்ட பணிகளை நிறுத்துவதற்கான கூட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் தவுட்டுப்பாளையம் பகுதிகளில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    Next Story
    ×