என் மலர்tooltip icon

    கரூர்

    • தவுட்டுப்பாளையம் அருகே பள்ள வாய்க்காலை தூர்வார விவசாயிகள் கோரிக்கை
    • பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நன்செய்புகளூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    வேலாயுதம்பாளையம்,

    ஈரோடு மாவட்டம் காரணாம்பாளையம் காவிரி ஆற்றின் தடுப்பணை பகுதியில் இருந்து புகளூர் வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. திறந்து விடப்பட்ட தண்ணீர் ஊஞ்சலூர், கொடுமுடி ,ஆவுடையார் பாறை வழியாக வந்து கரூர் மாவட்டம் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வழியாக மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், கோம்புபாளையம், திருக்காடுதுறை ,பாலத்துறை, நன்செய் புகளூர் ,தோட்டக்குறிச்சி, தளவாபாளையம் வழியாக புகளூர் வாய்க்கால் செல்கிறது.புகளூர் வாய்க்காலை தாய் வாய்க்கலாக கொண்டு பாலத்துறை அருகே பிரியும் பள்ளவாய்க்கால், செம்படாபாளையம் அருகே பிரியும் பாப்புலர் முதலியார் வாய்க்கால், வாங்கல் வாய்க்கால், நெரூர் வாய்க்கால் ஆகியவற்றில் புகளூர் வாய்க்காலில் இருந்து உபரி நீர் திருப்பி விடப்படுகிறது. இந்த 5 வாய்க்கால்கள் மூலம் வரும்தண்ணீரைக் கொண்டு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சுமார் 15ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட ஏக்கரில் தென்னை, வாழை, கரும்பு, நெல், வெற்றிலை, மரவள்ளி, கோரை உட்பட பல்வேறு பணப்பயிர்களை பயிரிடப்பட்டுள்ளனர்.பாலத்துறை அருகில் இருந்து பிரியும் பள்ள வாய்க்காலில் வரும் தண்ணீரின் மூலம் விவசாயிகள் பல்வேறு பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் புகளூர் வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் பள்ள வாய்க்கால் தலைப்பு முதல் பள்ள வாய்க்காலுக்குள் ஏராளமான செடி கொடிகள் முளைத்து வாய்க்காலையே மூடி உள்ளது. மோதுக்காடு முதல் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை வரை உள்ள பள்ள வாய்க்காலுக்குள் ஏராளமான செடி கொடிகள் முளைத்து வாய்க்காலுக்குள் இருக்கும் தண்ணீர் தெரியாத வகையில் வாய்க்கால் மூடி உள்ளது. இதன் காரணமாக பள்ள வாய்க்காலில் செல்லும் தண்ணீர் கடைமடை வரை செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் குறைந்த தண்ணீரே வாய்க்காலுக்குள் செல்வதால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பள்ள வாய்க்கால் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது .இந்நிலையில் புகளூர் வாய்க்காலில் இருந்து பிரியும் பகுதியில் இருந்து பள்ள வாய்க்காலில் முளைத்துள்ள ஏராளமான செடி கொடிகளையும் அகற்றி பள்ள வாய்க்காலை தூர்வாரி தண்ணீர் கடைமடை வரை செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் .மேலும் இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நன்செய்புகளூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சி மங்காசோளிபாளையம் ரயில்வே கேட் பழுதானது
    • 2 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    வேலாயுதம்பாளையம்,

    ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மாங்காய் சோளிபாளையம் வழியாக ரயில்வே பாதை செல்கிறது. இதன் காரணமாக இந்த ரயில்வே பாதையில் குறுக்கே ரயில்வே கேட் அமைந்துள்ளது. நேற்று மாலை 6:45 மணி அளவில்பயணிகள் ரயில் செல்வதற்காக கேட் மூடப்பட்டது. ரயில் சென்ற பின் ரயில்வே கேட்டை திறக்க முடியவில்லை. இதனால் மாங்கா சோளிபாளையதிலிருந்து கரூர், வேலாயும்பாளையம், தளவா பாளையம் , சேலம் பைபாஸ் ரோடு ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வந்து மீண்டும் தங்கள் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ரயில்வே கேட் பழுதடைந்தது தொடர்பாக ரயில்வே நிலைய அதிகாரியிடம் ரயில்வே கேட் ஊழியர் தகவல் கூறிய பின் ரயில்வே கேட் பழுதுபார்க்கும் ரயில்வே பணியாளர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி மாங்கா சோளி பாளையம் ரயில்வே கேட்டை,இரவு 9.30மணி அளவில் சரி செய்யப்பட்டது.அதன் பின் அங்கு வரிசையாக நின்றிருந்த அனைத்து வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக சென்றது. பொதுமக்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல முடிந்தது. சுமார் 2 .30மணி நேரம் பொதுமக்கள் சிரமப்பட்டனர். 

    • புகளூர் அருகே 17 வயது சிறுமிக்கு திருமணம் நடத்த மாப்பிள்ளை பார்த்த பெற்றோர்கள்
    • தடுத்து நிறுத்திய குழந்தைகள் உதவி மைய அலுவலர்கள்


    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புகளூர் அருகே 17 வயது உள்ள சிறுமிக்கு பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதை அறிந்த, பலர் அந்த சிறுமியை பெண் பார்த்து வந்துள்ளனர். இதை அறிந்த சமூக ஆர்வலர்கள் கரூரில் உள்ள குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதேபோல் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கும் தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்ற போலீசார் மற்றும் குழந்தைகள் உதவி மைய அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.


    • கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப்பில் சாலையை கடந்து செல்லும்போது இரு சக்கர வாகனம் மோதி படுகாயமடைந்தார்
    • தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்


    கிருஷ்ணராயபுரம்,

    கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் கீழ அக்ரஹரத்தை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 65). இவர் கரூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றார். திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப்பில் சாலையை இவர் கடந்து செல்லும்போது கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், சிந்தலவாடி ஊராட்சி, மகிளிபட்டியை சேர்ந்த பாண்டியன் மகன் மணிகண்டன் (26) என்பவர் ஓட்டி வந்த பைக் மோதி படுகாயமடைந்தார்.கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.உடலை கைப்பற்றிய மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    • காருடையாம்பாளையம் கிராமத்தில் கல்குவாரி அமைப்பதற்கான கருத்துக் கேட்பு கூட்டம் பவித்திரம் பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது
    • கல்குவாரி அமைந்தால் சுற்று புற பகுதிகளில் பலருக்கு பணிகள் கிடைக்கும்


    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் க.பரமத்தி அடுத்துள்ள காருடையாம்பாளையம் கிராம பகுதியில் கல்குவாரி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கருத்துக் கேட்பு கூட்டம் க.பரமத்தி அடுத்த பவித்திரம் பகுதியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார்.தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். இதில் புதுக்கநல்லி, மாலப்பாளையம்புதூர் ஆகிய சமூக ஆர்வலர்கள் ஒரு சிலர் கல்குவாரி அமைக்கப்படுவதால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பு குறித்து பேசினர். அதில் ஒரு சிலர் கல்குவாரி அமைந்தால் அதன் சுற்று புற பகுதிகளில் வசிக்கும் பலருக்கு பணிகள் கிடைக்கும் என ஆதரவாக பேசினர். பிறகு தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேசும் போது,

    கரூர் மாவட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது ஒரு சில குவாரிகளுக்கு போதிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில கல்குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 50 மடங்கு கூடுதலாக ஆழமாக கல்வெட்டி எடுக்கப்பட்டு வருவது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. குவாரிகளில் வெடி வெடிப்பதற்கான நேரத்தை பின் பின்பற்றுவது கிடையாது. மேலும் கல்குவாரிகளில் போர்டு வைக்க வேண்டும் ஆனால் அவற்றை பல்வேறு கல் குவாரி நிறுவனங்கள் செயல்படுத்துவது இல்லை. ஒன்றியம் முழுவதும் சட்ட விரோதமான இயங்கும் கல்குவாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சுருக்க அறிக்கையில் முழுமையான விபரங்கள் எதுவும் இல்லை. கல் குவாரிக்கான திட்ட அறிக்கையில் சரியான தகவல்களை முதலில் அதிகாரிகள் தயார் செய்து கொடுக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


    கரூர் மாவட்டம் பல்வேறு பகுதிகளில் வெல்லம் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, காளிபாளையம், குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம் , நல்லிக்கோவில், முத்தனூர், கவுண்டன்புதூர், பேச்சிப்பாறை , நடையனூர் ,கொங்கு நகர், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம் ,நன்செய் புகளூர், தளவாபாளையம், கடம்பங்குறிச்சி, வாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை வெட்டிச்செல்வதற்காக விவசாயிகள் புகளூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் வெல்லம் தயாரிக்கும் ஆலை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.ஆலைகளில் தயாரிக்கப்பட்ட வெல்லம் ஏலச் சந்தை மூலமாக விற்பனைக்கு வரும். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300- வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும் ஏலம் போனது. நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,230 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று1,230 வரையிலும் ஏலம் போனது. வெல்லம் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


    • தவிட்டுப்பாளையம் பகுதியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்ட சிறப்பு முகாம்
    • சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது


    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் தட்டுப்பாளையம் பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று வீடுகளில் உள்ள முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகள் மற்றும் பொது மக்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு, மற்றும் உடல் பரிசோதனை,தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு தேவையான உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினார்கள்.


    • உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கரூரில் அ.தி.மு.க.வினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
    • ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பு

    கரூர்,

    அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொது செயலாளர் தேர்தலை எதிர்த்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை கடந்த ஜூன் 28-ல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

    இந்நிலையில் நேற்று மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் உத்தரவிட்டனர். இதை அடுத்து கரூர் மாவட்ட அ.தி.மு.க அவை தலைவர் திரு விகா தலைமையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை வரவேற்று பஸ் நிலையம் ரவுண்டானா அருகே மனோகரா கார்னர் பகுதியில் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகளும் வழங்கி கொண்டாடினர். அப்போது பொதுக்குழு உறுப்பினர் சிவசாமி, மாவட்ட மாணவரணி செயலாளர் சரவணன், முன்னாள் நகர செயலாளர் நெடுஞ்செழியன், கரூர் தெற்கு பகுதி செயலாளர் விசிகே ஜெயராஜ், மத்திய தெற்கு பகுதி செயலாளர் சேரன் பழனிச்சாமி, பகுதி செயலாளர் சக்திவேல், மாநகராட்சி கவுன்சிலர் சுரேஷ், தினேஷ்குமார் உட்பட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கரூரில் தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் புதிய மின் இணைப்பு பெற அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
    • ஏற்கனவே விவசாய மின் இணைப்பு கேட்டு, பதிவு செய்துள்ள விவசாயிகள் இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ், புதிய விவசாய மின் ‘இணைப்பு பெறலாம் என அறிவிப்பு

    கரூர்,

    தட்கல் சிறப்பு திட்டத்தில், புதிய விவசாய மின் இணைப்பு பெற, மின் வாரிய கோட்ட அலுவலகத்தை அணுகலாம் என, கரூர் மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்ட அறிக்கையில், தட்கல் முறையில் ஏற்கனவே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும், தற்போது தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிக ளுக்கும், முன்னுரிமை அடிப்படையில், விவசாய மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது. மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், ஏற்கனவே விவசாய மின் இணைப்பு கேட்டு, பதிவு செய்துள்ள விவசாயிகள் இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ், புதிய விவசாய மின் 'இணைப்பு பெறலாம். இதற்காக, கரூர் மின்பகிர்மான வட்டத்தில் உள்ள கரூர் நகரியம், கரூர் கிராமியம், கரூர் மற்றும் குளித்தலை கோட்டத்துக்குட்பட்ட அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • வீரணாம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் மாயமானார்
    • வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்

    கரூர் 

    குளித்தலை அடுத்த, வீரணம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள்,மணல்மேடு பகுதியில் உள்ள டெக்ஸ் பார்க்கில் வேலை செய்து வந்தார். வீட்டில் இருந்து வெளியில் சென்ற அவர் அதன் பன்னர் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. மகளை காணவில்லை என, தந்தை கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார், சிறுமியை தேடி வருகின்றனர்.

    • கடவூர் தாசில்தாருக்கு, தொழிலாளி ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்
    • அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர்,

    குளித்தலை அடுத்த, கடவூர் தாசில்தார் முனிராஜ்.இவர், கவுண்டம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி அருகே, நத்தம் புறம்போக்கு நிலம் வழியாக, காத்தான் தெரு, சோப்புலான் தெரு, கொம்பு காரன் தெரு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பாதையில், தடுப்பு ஏற்படுத்தியவரிடம் விசாரித்து கொண்டிருந்தார். அப்போது, தொண்டமான் பஞ்., கவுண்டம் பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி கிருஷ்ணன் (வயது 55) என்பவர், தாசில்தாரை பணி செய்ய விடாமல் தடுத்து, மிரட்டியுள்ளார். இதுகுறித்து, தாசில்தார் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார், கிருஷ்ணன் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்
    • மீட்கப்பட்ட பசு மாட்டிற்கு அரசு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்தார்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே அதியமான் கோட்டை பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (45).அப்பகுதியில் உள்ள ஒரு விவசாயத் தோட்டத்தில் அவருக்கு சொந்தமான பசு மாட்டை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது பசு மாடு விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்துவிட்டது. இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து கிணற்றுக்குள் தத்தளித்த பசுமாட்டை கயிற்றால் கட்டி மீட்டனர்.

    60 அடி ஆழ கிணற்றில் பசுமாடு விழுந்ததால், நொய்யல் கால்நடை மருத்துவமனை மருத்துவர் டாக்டர் உஷாவும் வரவழைக்கப்பட்டார். அவர் மீட்கப்பட்ட பசு மாட்டிற்கு மருத்துவ பரிசோதனை நடத்தி சிகிச்சை அளித்தார்.

    ×