என் மலர்
கரூர்
- கரூரில் 2 சிறுவர்கள் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்
- குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில், 24 மணி நேரமும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்
கரூர்,
தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.இதன் காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம், கொசு ஒழிப்பு பணிகள்மற்றும் மக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் டாக்டர்கள், செவிலியர், மருத்துவ பணியாளர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளது. கரூர் அரசு கல்லுாரி மருத்துவமனையில், 50 படுக்கைகள் கொண்ட காய்ச்சல் வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளப்பட்டியில் வசிக்கும், ஒரே குடும்பத்தை சேர்ந்த, 10, 8 வயதுள்ள இரு சிறுவர்கள் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில், 24 மணி நேரமும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன் தாமோதரன் கூறுகையில்," பருவநிலை காரணமாக, குழந்தைகள் உள்பட பலர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ள னர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை, யாருக்கும் டெங்கு பாதிப்பு ஏற்படவில்லை,' என்றார்.
- கரூர் மளிகை கடையில் ரூ.1 லட்சம் திருட்டு நடந்தது
- பணத்தை திருடிய கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்
கரூர்,
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கல்லடை ஊராட்சி கீழ வெளியூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சுப்ரமணி (வயது 56). இவர், அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இதேபோல் அதே பகுதியை சேர்ந்தவர் தங்கராசு என்பவ ரது மகன் சரத்குமார் (30). இவர்கள் கட்டிடம் உடைக்கும் கூலி வேலை செய்கிறார். இந்நிலையில் நேற்று சுப்ரமணி மளிகை கடைக்கு சரத்குமார்சென்று பன்னீர் சோடா கேட்டுள்ளார். இதனால் சுப்ரமணி பன்னீர் சோடா எடுப்பதற்காக கடைக்கு உள்ளே சென்றதாக தெரிகிறது. அப்போது மளிகைக்கடைக்கு உள்ளே சென்ற சரக்குமார், அங்கு கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தை திருடி உள்ளார். இதனை பார்த்த ராமசாமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சரத்குமாரை பிடித்து தோகைமலை போலீசாரிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து தோகை மலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சரத்குமாரிடம் இருந்து ரூ.1 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
- வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஒத்திகை நடைபெற்றது
- தீயை கட்டுப்படுத்துவது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது. வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், மழை வெள்ளம் வரும்போது, கிடைக்கும் பொருட்களை கொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்வது, மற்றவர்களை காப்பாற்றுவது குறித்து செயல்முறை ஒத்திகை நடத்தி காண்பிக்கப்பட்டது. மேலும் தீவிபத்தின் போது தற்காத்து கொள்வது குறித்தும், தீயை கட்டுப்படுத்துவது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். காட்டினார்கள். இதில் பள்ளி தலைமையாசிரியர் வளர்மதி, ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு
- தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம், புது குறுக்கு பாளையம், கூலக்கவுண்டனூர், கடைவீதி, சுந்தராம்பாள் நகர், கொங்கு நகர், புகழி மலை அடிவாரம், காந்திநகர், நந்தவனம், கந்தம்பாளையம், முல்லை நகர், காந்தி மண்டபம், மலைவீதி, நடுநானப்பரப்பு, அண்ணா நகர், கொங்கு நகர், பாலத்துறை தேசிய நெடுஞ்சாலை, கட்டிபாளையம், பாண்டிபாளையம், புன்னம்சத்திரம், செம்படாபாளையம், அண்ணா நகர் மேட்டு தெரு காவல் நிலையம் எதிரில், கந்தம்பாளையம் காலனி, காந்தி நகர் மூன்றாவது தெரு, முருகம் பாளையம், அதியமான் கோட்டை, முல்லை நகர், அய்யம்பாளையம், அதியமான் கோட்டை லட்சுமி நகர், நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, பெரியார் நகர், பிரேம் நகர், பெருமாள் நகர், அம்மாபட்டி, முருகம்பாளையம், முத்தனூர், நடையனூர், கரைப்பாளையம், நன்செய் புகளூர், திருக்காடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் சுமார் 23க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. நேற்று காலை3-வது நாளாக விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நேற்று மாலை 4 மணிக்கு மேல் நொய்யல் சுற்று வட்டார பகுதி மற்றும் அனைத்து பகுதிகளிலும் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று புகழிமலை அடிவாரத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு சுமார் 6.30 மணி அளவில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. இந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமானது முக்கிய வீதிகள் வழியாக சென்று கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தவுட்டுப்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்று தண்ணீரில் இரவு கரைக்கப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலத்திற்கான பாதுகாப்பு பணியில் அரவக்குறிச்சி டி.எஸ்.பி. அண்ணாதுரை தலைமையில் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சுரேஷ், நந்தகோபால் மற்றும், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
- குளித்தலை பகுதியில் வாகன விதி மீறலில் ஈடுபட்ட 1,675 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது
- ரூ.18½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது
கரூர்,
குளித்தலை, தோகைமலை, லாலாபேட்டை, மாயனூர், சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குளித்தலை போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் செய்த வாகன சோதனையில் லாரியில் அதிகபாரம் ஏற்றிவந்தது, மது அருந்தி வாகனம் ஓட்டியது, ஓட்டுனர் உரிமம் இல்லாதது.தலைக்கவசம் அணியாதது, இன்சூரன்ஸ் இல்லாதது, 3 பேர் இருசக்கர வாகனத்தில் சென்றது, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது, உரிய நம்பர் பிளேட் பொருத்தாமல் இருந்தது, சரக்கு வேன்களில் ஆட்களை ஏற்றுவது, தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்துவது, சீட் பெல்ட் அணியாதது போன்ற பல்வேறு வாகன விதிமீறல்களில் ஈடுபட்ட ஆயிரத்து 675 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு ரூ.18 லட்சத்து 56 ஆயிரம் அபராதம் குளித்தலை போக்குவரத்து போலீசாரால் விதிக்கப்பட்டுள்ளது.
- கரூர் வாங்கல் காவிரியாற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு
- 41க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
கரூர்,
கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில், 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், பல்வேறு ஹிந்து அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நி லையில், நேற்று மாலை இந்து மக்கள் கட்சி சார்பில் வைக்கப்பட்ட, 20 விநாயகர் சிலைகள், 80 அடி சாலைக்கு கொண்டு வரப்பட்டது.
பிறகு, விநாயகர் சிலைகள் கோவை சாலை, ஜவஹர் பஜார், ஐந்து சாலை, பாலம்மாள் புரம், அரசு காலனி, கணபதிபாளையம் வழியாக, வாங்கல் காவிரியாற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு, விசர்ஜனம் செய்யப்பட்டது. அதேபோல் ஹிந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், சிவ சேனா சார்பில் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 21 விநாயகர் சிலைகளும் நேற்று இரவு, 80 அடி சாலையில் இருந்து முக்கிய பகுதிகள் வழியாக, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, வாங்கல் காவிரியாற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
- கட்டண கழிப்பிடம் செல்வதில் தகராறு காரணமாக பஸ் டிரைவருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது
- கரூர் டவுன் போலீசார் மற்றொரு டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கரூர்,
கரூர், வடக்கு பிரதட்ணம் சாலையை சேர்ந்தவர் வெற்றி முரசு (வயது 26), மினி பஸ் டிரைவர். இவர், கரூர் பஸ் ஸ்டாண்டில், கட்டண கழிப்பிடத்துக்கு சென்றுள்ளார். அப்போது, கழிப்பிடத்தின் ஊழியர், வெற்றி முரசுவிடம் கட்டண தொகையை கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கரூர் நெரூரை சேர்ந்த மற்றொரு மினி பஸ் டிரைவர் கபில் (30), கழிப்பிடத்துக்கு சென்றுள்ளார். பிறகு, கழிப்பிட ஊழியருக்கு ஆதரவாக கபில் பேசியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வெற்றி முரசு, கபிலை கத்தியால் தலை, கண்களில் குத்தினார். அதில், காயமடைந்த கபில் கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் வெற்றி முரசுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கேஸ் சிலிண்டர் விற்பனையாளர் படுகாயம் அடைந்தார்
- லாரியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் தளவாபாளையம்அருகே அய்யம்பாளையம் பகுதி சேர்ந்தவர் சுந்தரம் (55). இவர் காகிதபுரம் பகுதியில் சிலிண்டர் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். கேஸ் சிலிண்டர்களை மோட்டார் சைக்கிளில் எடுத்துக்கொண்டு வீடுகளுக்கு விநியோகம் செய்வதற்காக சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலை கடந்த போது பின்னால் வந்த லாரி ஒன்று சுந்தரம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. லாரி டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் ஆம்புலன்ஸ் மூலம்கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சரவணன் லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து, லாரியை பறிமுதல் செய்தார். லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- கரூரில் கல்குவாரி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
- க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்
கரூர்,
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே அத்திபாளையத்தை சேர்ந்த தனியார் கல்குவாரியில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள அழகம் பட்டியை சேர்ந்த முனியாண்டி மகன் மணிவேல் (வயது 30) பணியாற்றி வந்தார். இவர் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அருகில் தங்கி இருந்தவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த, க.பரமத்தி போலீசார் பிரேதத்தை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிவேல் மனைவி முருகேஸ்வரி, அளித்த புகார்படி நடத்திய முதற்கட்ட விசாரணையில் திருமணமாகி ஒன்பது ஆண்டுகளாக குழந்தை இல்லாத ஏக்கத்தில், இருந்து வந்த மணிவேல் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டதாக க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- கரூர் மாவட்டம் பாலத்துறை அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டு உள்ளார்
- அவரிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகேபாலத்துறை அருகே அரசு அனுமதி இன்றி திருட்டுத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசருக்கு தகவல் கிடைத்தது . தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பாலத்துறை பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு ஒருவர் அரசு அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்துக் கொண்டு திருட்டுத்தனமாக விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் புகழூர் நகராட்சி மலை காவலன் தெரு ஆர்.எஸ்.ரோடு பகுதியை சேர்ந்த குழந்தை மணி என்பவர் மகன் மதுரை வீரன் (35) என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
- கரூர் டீ கடையில் குட்கா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
- ரூ.3500 மதிப்புள்ள 3 கிலோ 300 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறி முதல் செய்யப்பட்டது
கரூர்,
கரூர் மாவட்டத்திற்குட்பட்ட கரூர் டவுன் மற்றும் சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிக ளில் டீ கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த 2 பேரை பிடித்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3500 மதிப்புள்ள 3 கிலோ 300 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறி முதல் செய்யப்பட்டது.
- மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு அரசு மகளிர் பள்ளி தேர்வு
- தேர்வு செய்யப்பட்ட மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியரையும், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் வெகுவாக பாராட்டினர்
கரூர்,
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பாக வருவாய் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டிகள் கடந்த செப்டம்பர் 13ம்தேதி அன்று நடைபெற்றது. இதில், 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட ஐந்து குறுவட்ட அளவில் அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இந்த போட்டிகளில் கரூர் வாங்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு முதலிடம் பெற்றனர். இந்த பள்ளி மாணவிகள் மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள னர். தேர்வு செய்யப்பட்ட மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியரையும் பள்ளி தலைமை யாசிரியர் ஷண்முகவடிவு உட்பட அனைத்து ஆசிரி யர்களும், பள்ளி பணியாளர்களும், சக மாணவி குறுவட்டத்தை சேர்ந்தகளும் பாராட்டினர்.






