என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • அத்தியாவசிய பொருட்களின் வரியினை குறைக்க வேண்டும்.
    • நடுத்தர மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வு.

     கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து மாணவர்களுக்கு வட்டியில்லா கல்வி கடன், மற்றும் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர பல அத்தியாவசிய பொருட்களின் வரியினை குறைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டேன்.


    முன்னாள் தமிழக முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் நினைவு தினத்தில் எமது இதய அஞ்சலி.


    • குமரி மாவட்டத்தில் 72 கி.மீ. தூரத்தில் கடற்கரை உள்ளது.
    • அனைத்து மீனவ கிராமங்களிலும் மீன் பதனிடும் நிலையங்கள் நிறுவ வேண்டும்.

    நாகர்கோவில்:

    மீன் பிடிக்க செல்லும்போது கடலில் மீனவர்கள் காணாமல் போனால் 3 மாதங்களில் இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் விஜய்வசந்த் எம்.பி. பேசினார்.

    பாராளுமன்றத்தில் மீன்வள பட்ஜெட் மானியங்கள் குறித்த கூட்டத் தொடர் நடந்தது. இதில் விஜய் வசந்த் எம்.பி. பேசியபோது கூறியதாவது:-


    குமரி மாவட்டத்தில் 72 கி.மீ. தூரத்தில் கடற்கரை உள்ளது. கடற்கரையோரமாக 48 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 5 லட்சம் மக்கள் கடலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். குமரி மாவட்ட கடற்கரையில் அடிக்கடி நிகழும் கடல் அரிப்பு காரணமாக மீனவர்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பெரும் அச்சம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண கடற்கரை முழுவதும் தடுப்பு சுவர்கள் மற்றும் தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும். இதற்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.

    மீன்பிடிக்க சென்று கடலில் காணாமல் போகும் மீனவர்களுக்கான இறப்பு சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு பிறகு தான் வழங்கப்படுகிறது. இந்த கால கட்டத்தில் அந்த குடும்பம் பல இன்னல்களை சந்திக்கிறது. எனவே இதுபோன்ற சூழலில் உயர்மட்ட குழு அமைத்து 3 மாதத்திற்குள் இறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மீனவர் கடலில் இறந்தால் அவர்களது குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.


    டீசல் மற்றும் மண்ணெண்ணெய்க்கு வழங்கப்படும் மானியத்தின் அளவை உயர்த்த வேண்டும். குமரி மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் சாலை உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்க நிதி ஒதுக்க வேண்டும். தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தின் பணிகளை விரைவில் முடிக்கவும், குளச்சல் துறைமுகத்தை விரிவாக்கம் செய்யவும், வாணியகுடியில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அனைத்து மீனவ கிராமங்களிலும் மீன் பதனிடும் நிலையங்கள் நிறுவ வேண்டும். தேங்காப்பட்டணம்-இரயுமன்துறை இடையே மேம்பாலம் அமைத்து, ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை கடற்கரை சாலைகளை சீரமைக்க வேண்டும். வெளிநாட்டு சிறைகளில் வாடும் இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க கடல்சார் பாராளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கி பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு உயர்மட்ட குழு அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடல் சீற்றத்தினால் எழுந்த ராட்சத அலையில் சிக்கி இவர்களது வள்ளம் கவிழ்ந்தது.
    • வள்ளம் கடலில் கவிழ்ந்ததில் என்ஜின் சேதம் அடைந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் ஜார்ஜியார் குருசடி தெருவை சேர்ந்தவர் ரஸ்டன் (வயது 50) மீனவர். இவருக்கு சொந்தமான வள்ளத்தில் இவரும், மற்ற 5 பேரும் இன்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நடுக்கடலில் வலை விரித்து நெத்திலி மற்றும் சாளை போன்ற மீன்களை பிடித்து விட்டு இன்று காலை 7.30 மணிக்கு கரை திரும்பி கொண்டிருந்தனர். அப்போது கடல் சீற்றத்தினால் எழுந்த ராட்சத அலையில் சிக்கி இவர்களது வள்ளம் கவிழ்ந்தது.

    இதில் வள்ளத்தில் இருந்து 6 மீனவர்களும் கடலில் தவறி விழுந்தனர். அவர்கள் 6 பேரும் கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். இதை பார்த்த கரையில் மீன் இறக்கி கொண்டிருந்த மீனவர்கள் கடலில் குதித்து நீந்தி சென்றனர். பின்னர் அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் கடலில் தத்தளித்து கொண்டிருந்த அந்த 6 மீனவர்களையும் பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

    அதன்பிறகு கடலில் கவிழ்ந்து கிடந்த அந்த வள்ளத்தையும் அவர்கள் மீட்டனர். அதன் பிறகு அந்த 6 மீனவர்களையும் அந்த வள்ளத்தில் ஏற்றி பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் வள்ளம் கடலில் கவிழ்ந்ததில் என்ஜின் சேதம் அடைந்தது.

    இதேபோல கடந்த வாரம் கோவளத்தில் நடுக்கடலில் ஒரு வள்ளம் கவிழ்ந்து 5 மீனவர்கள் உயிருக்கு போராடியபடி தத்தளித்ததும் அவர்களை கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மற்ற மீனவர்கள் உயிருடன் மீட்டதும் குறிப்பிடத்தக்கதாகும். இப்போது கோவளத்தில் 2-வது முறையாக ராட்சத அலையில் சிக்கி வள்ளம் கவிழ்ந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடற்கரையையொட்டி உள்ள கடல் அரிப்பு தடுப்பு சுவர்கள் மீது ராட்சத அலைகள் வேகமாக மோதியது.
    • கடல் சீற்றமாக காணப்பட்டதையடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    கன்னியாகுமரி:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் கேரளாவில் வருகிற 7-ந்தேதி வரை கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதையடுத்து குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குமரி மாவட்டத்தில் வருகிற 7-ந்தேதி வரை அனைத்து கடற்கரை கிராமங்களிலும் கடல் வழக்கத்தை விட சீற்றமாக காணப்படும். காற்றின் வேகம் 35 முதல் 45 கிலோமீட்டர் வரையிலும் சில நேரங்களில் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கும் என தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகளும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் குளிக்கவோ, இறங்கவோ கூடாது என்று கூறியுள்ளார்.

    இது தொடர்பான அறிவிப்பு குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள அனைத்து மீனவ கிராமங்களுக்கும் மீன்வளத்துறை அதிகாரிகள் மூலமாகவும், பங்கு தந்தைகள் மூலமாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதனால் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் நேற்று மாலை கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. கணபதிபுரம் லெழூர் கடற்கரையில் நேற்று மாலை சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு வந்திருந்தார்கள்.

    போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடற்கரை பகுதிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் அங்கிருந்து திருப்பி அனுப்பினார்கள். முட்டம், தேங்காய்பட்டினம் உட்பட கடற்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டனர். இன்று மாவட்டம் முழுவதும் கடல் சீற்றமாகவே இருந்தது. ராட்சத அலைகள் எழும்பியது.

     

    கன்னியாகுமரி கடற்கரையில் வள்ளங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை காணலாம்.

    கன்னியாகுமரி கடற்கரையில் வள்ளங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை காணலாம்.

    கடற்கரையையொட்டி உள்ள கடல் அரிப்பு தடுப்பு சுவர்கள் மீது ராட்சத அலைகள் வேகமாக மோதியது. கடல் சீற்றமாக காணப்பட்ட தையடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் வள்ளல்கள் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. குளச்சல், சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து ஒரு சில விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடலோர காவல் படை போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    • குமரி அனந்தன், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • விருதுடன் ரூ,10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுதந்திர தின விழாவின்போது அவருக்கு இந்த விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுடன் ரூ,10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

    இதுதொடர்பாக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-


    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தமிழ் இலக்கியவாதியுமான எனது பெரியப்பா குமரி அனந்தன் அவர்களுக்கு அவர் சேவையை பாராட்டி தகைசால் விருதினை வழங்க முடிவு செய்த தமிழக அரசுக்கும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்

    • 3 அணைகளில் இருந்தும் 1,806 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.53 அடியாக இருந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது சற்று குறைந்துள்ளது. மலையோர பகுதியான பாலமோர், பேச்சிபாறை மற்றும் பெருஞ்சாணி அணைப்பகுதிகளில் மட்டும் மழை பெய்தது. பாலமோரில் அதிகபட்சமாக 18.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் அணைகளுக்கு தொடர்ந்து மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிபாறை அணையில் இருந்து தொடர்ந்து உபரி வெளியேற்றப்பட்டு வருவதால் கோதை ஆறு, குழித்துறை தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதையடுத்து அருவியில் குளிப்பதற்கு இன்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சிற்றார், பெருஞ்சாணி அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 3 அணைகளில் இருந்தும் 1,806 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.53 அடியாக இருந்தது. அணைக்கு 749 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 432 கனஅடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 764 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.88 அடியாக உள்ளது. அணைக்கு 894 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையி லிருந்து 460 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார்1 அணை நீர்மட்டம் 14.73 அடியாக இருந்தது. அணைக்கு 125 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்2 நீர்மட்டம் 14.83அடியாக உள்ளது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 48.39 அடியாகவும், முக்கடல் நீர்மட்டம் 21.50 அடியாகவும், பொய்கை நீர்மட்டம் 15.40 அடியாகவும் உள்ளது.

    • ஓட்டல்களில் கெட்டுப்போன உணவுகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்குவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது.
    • மீன், இறைச்சி, நண்டு போன்றவை சமைத்து பயன்படுத்தாமல் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்கு ஏராளமான ஓட்டல்கள் உள்ளன. இந்த ஓட்டல்களில் கெட்டுப்போன உணவுகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்குவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது.

    இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் நேற்று கன்னியாகுமரியில் உள்ள ஓட்டல்களில் திடீரென அதிரடி சோதனை மேற்கொண்டனர். கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள 5-க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் சோதனை மேற்கொண்ட போது மீன், இறைச்சி, நண்டு போன்றவை சமைத்து பயன்படுத்தாமல் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இவ்வாறு 150 கிலோவுக்கும் மேற்பட்ட பழைய மற்றும் கெட்டுபோன உணவு பொருட்களை கைப்பற்றி அவற்றை குப்பைத் தொட்டியில் கொட்டி பினாயில் ஊற்றி அழித்தனர். அத்துடன் 5 ஓட்டல்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    இதுகுறித்து குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் செந்தில்குமார் கூறும்போது, ' உணவு பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து வழங்கினாலோ, செயற்கையான வண்ண பொடிகளை சமையலில் பயன்படுத்தினாலோ அந்த ஓட்டல்களுக்கு 'சீல்' வைக்கப்படும். ஓட்டல்களில் தரமற்ற உணவுகளை வழங்கினால் பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவிக்கலாம்' என்றார்.

    இந்த சோதனையின்போது அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தி முருகன், தக்கலை வட்டார அலுவலர் பிரவீன் ரகு, குளச்சல் வட்டார அலுவலர் ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • திற்பரப்பு அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
    • பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 46 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது. தொடர்ந்து நேற்று இரவும் இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. நாகர்கோவில், தக்கலை, குளச்சல், இரணியல், பூதப்பாண்டி, சுருளோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

    மலையோரப் பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை அணைப் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 46 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஏற்கனவே அணைகளில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதையடுத்து அணைகளை பொதுப் பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் குழித்துறையாறு, கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.


    கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்குள்ள சிறுவர் பூங்காவை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.79 அடியாக இருந்தது. அணைக்கு 1080 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 432 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 532 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.52 அடியாக உள்ளது. அணைக்கு 941 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 460 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 14.69 அடியாக உள்ளது. அணைக்கு 199 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கீரிப்பாறை, தடிக்காரங்கோணம், குலசேகரம் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது. ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களும் வேலை இன்றி தவித்து வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-பேச்சிப்பாறை 45.8, பெருஞ்சாணி 46, சிற்றார் 1-27.4, சிற்றார் 2-34.2, கன்னிமார் 6.2, கொட்டாரம் 24.2, மயிலாடி 25.4, நாகர்கோவில் 14.6, முக்கடல் 10, பாலமோர் 22.2, தக்கலை 38, குளச்சல் 19.4, இரணியல் 5.2, அடையாமடை 26.4, குருந்தன்கோடு 10.2, கோழிப்போர்விளை 22.4, மாம்பழத்துறையாறு 20.5, களியல் 30.2, குழித்துறை 26.4, புத்தன் அணை 40.2, சுருளோடு 35.4, ஆணைக் கிடங்கு 20, திற்பரப்பு 41.2, முள்ளாங்கினாவிளை 16.8.

    • கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
    • சுற்றுலா பயணிகள் வருகை இன்று திடீர் என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கன்னியாகுமரி:

    சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் வாரத்தின் கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களிலும் பண்டிகை கால விடுமுறை நாட்களிலும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது.

    இந்த நிலையில் வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமையான இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியிலும் பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியி லும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர். கருமேகம் திரண்டு மழை தூறி கொண்டிருந்ததால் இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரியவில்லை. இதனால் சூரியன் உதயமான காட்சியை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்து இருந்தனர். ஆனால் இன்று காலை மழை செய்து கொண்டிருந்ததால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை.

    காலை 8.30 மணிக்கு மழை நின்றதை தொடர்ந்து ½ மணி நேரம் தாமதமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதைத்தொடர்ந்து படகு துறையில் சுற்றுலா பயணிகள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

    மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள பாரத மாதா கோவில் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    சுற்றுலா பயணிகள் வருகை இன்று திடீர் என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • ராஜ்குமாருக்கும், ஜாக்சனுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டுள்ளது.
    • முன்விரோதத்தில் தான் தற்போது ஜாக்சன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    திருவட்டார்:

    குமரி மாவட்டம் திருவட்டார் மூவாற்றுமுகம் குன்னத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜாக்சன் (வயது 38). திருவட்டார் நகர இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவரான இவர் தற்போது சொந்தமாக டெம்போ வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி உஷாகுமாரி. இவர் திருவட்டார் பேரூராட்சியின் 10-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார்.

    நேற்று இரவு ஜாக்சன், அந்தப் பகுதியில் உள்ள ஆர்.சி. சர்ச் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்கள் வந்தன. அதில் 6 பேர் இருந்தனர். அவர்கள் ஜாக்சன் அருகே வந்து பேசினர். இந்த பேச்சு திடீரென வாக்குவாதமாக மாறியது.

    அப்போது 6 பேர் கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தியை எடுத்து ஜாக்சனை சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் அலறியபடி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதனை கண்ட கொலைக்கும்பல் மோட்டார் சைக்கிள்களில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது.

    அவர்களை பிடிக்க அந்தப் பகுதியினர் முயன்றனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜாக்சனை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை ஜாக்சன் பரிதாபமாக இறந்தார்.

    பெண் கவுன்சிலரின் கணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவட்டார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், தக்கலை துணை சூப்பிரண்டு உதய சூரியன் வந்து விசாரணை நடத்தினர். இதில் சிதறால் அருகே உள்ள புன்ன மூட்டுவிளை வெள்ளாங்கோடு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (32) என்பவர் தலைமையில் வந்தவர்கள் தான் ஜாக்சனை வெட்டிக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    ராஜ்குமாருக்கும், ஜாக்சனுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவரும் திருவட்டார் போலீசில் புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முன்விரோதத்தில் தான் தற்போது ஜாக்சன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    இது தொடர்பாக திருவட்டார் போலீசில் உஷா குமாரி புகார் செய்தார். அதில், நேற்று இரவு எனது கணவர் ஜாக்சன், குழந்தைகளுக்கு பழம் வாங்க மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது வழியில் பாரதபள்ளியில் உள்ள அந்தோணியார் ஆலய குருசடியில் ஜெபம் செய்தார். அங்கிருந்து வெளியே வரும் போது முன்விரோதம் காரணமாக ராஜகுமார் என்ற விலாங்கன் மற்றும் கண்டால் தெரியும் 5 பேர் சேர்ந்து தகராறு செய்து தாக்குதல் நடத்தினர் என குறிப்பிட்டு உள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • இஎஸ்ஐ மருத்துவ மனை இல்லாதது பெரும் குறையாக உள்ளது.
    • பல்நோக்கு இஎஸ்ஐ மருத்துவமனையின் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு அவர்களை சந்தித்து கன்னியாகுமரியில் விமான நிலையம் மற்றும் ஹெலிகாப்டர் தளம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டேன்.

    வெளிநாட்டு வாழ் குமரி மாவட்டத்தின் மக்கள், சுற்றுலா பயணிகள், கடலில் காணாமல் போகும் மீனவர்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இவை தேவை என்பதை எடுத்து கூறினேன்.


    அதே போல் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் உள்ளன ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லா நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க கூடிய ஒரு இஎஸ்ஐ மருத்துவ மனை இல்லாதது பெரும் குறையாக உள்ளது.

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட பல்நோக்கு இஎஸ்ஐ மருத்துவமனையின் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டுமென மத்திய தொழிலாளர் நல துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தேன்.

    • இருளப்பபுரம் சந்தை தற்காலிகமாக செயல்பட அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது.
    • சில வியாபாரிகள் சந்தைக்கு வந்து கடை அமைத்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியில் மீன் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு காய்கறி வியாபாரமும் நடைபெற்று வருவதால் காலை முதல் மதியம் 1 மணி வரை இந்த மார்க்கெட் பகுதியில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் நெருக்கடியாக உள்ளது போன்ற காரணங்களை கூறி மீன் மார்க்கெட்டை மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபோது, வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின் பேரில், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மீன் மார்க்கெட்டை மாற்றுவதற்காக சென்றனர். அந்த இடம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம் என்றும், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் மார்க்கெட்டை மாற்ற வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள், ஜே.சி.பி. எந்திரம் மூலமாக வியாபாரிகள் கடை வைக்க முடியாத அளவிற்கு மணல்களை கிளறி விடும் நடவடிக்கையை எடுத்தனர். அவர்களுடன் வாக்குவாதம் செய்த வியாபாரிகள், தோண்டப்பட்ட குழிகளில் இறங்கி நின்று கோஷம் எழுப்பினர். தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

    இதனை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட வியாபாரிகள், மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் துறை அதிகாரிகளை சந்திக்கப் போவதாக கூறினர். அதன்படி அவர்கள் அதிகாரிகளை சந்தித்து பேசினர். இதில் இருளப்பபுரம் சந்தை தற்காலிகமாக செயல்பட அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது. அதன்பேரில் இன்று சில வியாபாரிகள் சந்தைக்கு வந்து கடை அமைத்தனர். இருப்பினும் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    கடை அமைத்துள்ள வியாபாரிகள் கூறுகையில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக சந்தை செயல்பட்டு வருகிறது. தற்காலிக அனுமதியை நிரந்தரமாக பெற முயன்று வருகிறோம். அரசு எங்கள் விசயத்தில் நல்ல முடிவை எடுக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

    ×