என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டதையடுத்து கலெக்டர் அலுவலக சாலையில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டு இருந்தது.
    • போலீசார் நாகர்கோவில் நகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில்:

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். சட்டமன்ற தொகுதி வாரியாக மக்களை சந்தித்து அண்ணாமலை குறைகளை கேட்டு வருகிறார்.

    குமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிகளில் அண்ணாமலை 2-நாள் பாதயாத்திரை மேற்கொண்டார். இன்று 3-வது நாளாக நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அண்ணாமலை பாத யாத்திரை சென்றார்.

    நாகர்கோவில் பார்வதிபுரத்தில் இருந்து தனது பாதயாத்திரையை அண்ணாமலை தொடங்கினார். அண்ணாமலை பாதயாத்திரையில் ஏராளமான பெண்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். கையில் கட்சிக்கொடியை ஏந்தியவாறு அண்ணாமலையுடன் ஆயிரக்கணக்கானோர் பாதயாத்திரையாக வந்தனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டார். வழி நெடுகிலும் தொண்டர்கள் அண்ணாமலையை பூக்கள் தூவி வரவேற்றனர். அப்போது குழந்தைகள், பெண்கள், கட்சி நிர்வாகிகள் அண்ணாமலையுடன் செல்போனில் செல்பி எடுத்துக்கொண்டனர்.

    பார்வதிபுரத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்கிய அண்ணாமலை டெரிக் சந்திப்பு, கலெக்டர் அலுவலக சந்திப்பு, செட்டிகுளம் வழியாக வேப்பமூட்டில் உள்ள காமராஜர் சிலையை வந்தடைந்தார். அங்கே தொண்டர்கள் மத்தியில் அண்ணாமலை பேசினார்.

    இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., மாநில செயலாளர் மீனாதேவ், மாநில மகளிர் அணி தலைவி உமாரதி ராஜன், மாவட்ட தலைவர் தர்மராஜ், பொருளாளர் முத்துராமன், பொருளாதார பிரிவு தலைவர் ஐயப்பன், நாகர்கோவில் கிழக்கு மாநகர் முன்னாள் பொருளாளர் திருமால், தொழிலதிபர் நாஞ்சில் ஜெயக்குமார், கவுன்சிலர்கள் ரோஸிட்டா, ரமேஷ், ஆச்சியம்மாள், ஆன்றோனை ட்ஸ்னைடா, தினகரன், சதீஷ், வீர சூர பெருமாள், முன்னாள் கவுன்சிலர் முருகன், நகர முன்னாள் துணைத் தலைவர் மாரியப்பன், தெற்கு மாநகர் முன்னாள் செயலாளர் ஸ்ரீதர், நாகர்கோவில் வடக்கு பகுதி செயலாளர் திவ்யா சிவராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டதையடுத்து கலெக்டர் அலுவலக சாலையில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டு இருந்தது. போலீசார் நாகர்கோவில் நகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அண்ணாமலை வருகையடுத்து நாகர்கோவில் நகரில் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. பிளக்ஸ் போர்டுகளை அகற்ற அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் அதற்கு பாரதிய ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பிளக்ஸ் போர்டுகள் அகற்றப்படவில்லை. நேற்று நள்ளிரவு புதிதாக பிளக்ஸ் போர்டு வைக்கவும் அனுமதிக்கவில்லை.

    பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட பகுதியில் இன்று மாலை பாதயாத்திரை மேற்கொள்கிறார். கன்னியாகுமரி ரவுண்டானாவில் இருந்து மாலை 4 மணிக்கு பாதயாத்திரை தொடங்கும் அவர், மகாதானபுரம் வழியாக கொட்டாரத்தில் பாதயாத்திரை நிறைவு செய்கிறார்.

    • வடகிழக்கு என 2 பருவ காலங்களில் மழை பெய்து வருகிறது
    • கன்னி பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை ஜூன் 1-ந்தேதி திறக்கப்பட்டது

    நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு என 2 பருவ காலங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெய்யும்.

    ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்ய வில்லை. இதனால் அணைகளின் நீர்மட்டம், பாசன குளங்களிலும் தண்ணீர் குறைவாகவே காணப்படுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் நாளுக்கு நாள் நீர்மட்டம் சரிந்து வருகிறது. ஏற்கனவே கன்னி பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை ஜூன் 1-ந்தேதி திறக்கப்பட்டது.

    தொடர்ந்து பாசனத்திற்காக தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டமும் சரிந்து காணப்படுகிறது. அணை தண்ணீர் இன்றி வறண்டு உள்ளது. நாகர்கோவில் நகருக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையும் கடந்த 2 மாதங்களாக மைனஸ் அடியில் இருந்து வருகிறது. இதனால் அணை குளம் போல் காட்சிய ளிக்கிறது.

    அணைகளின் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். குடிநீர் பஞ்சமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தலை விரித்து ஆடுகிறது. குமரி மாவட்டத்தில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை 332 மில்லி மீட்டர் பெய்யும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை 103.9 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. வழக்கத்தை விட 69 சதவீதம் மழை குறைவாகவே பெய்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையை தண்ணீரை நம்பி விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடி பணியில் ஈடுபட்டனர்.

    மாவட்டம் முழுவதும் 6000 ஹெக்டேரில் சாகுபடி பணி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்பொழுது 3000 ஹெக்டேரில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது.

    பறக்கை, சுசீந்திரம் பகுதிகளில் அறுவடைப் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் கடைமடை பகுதிகளில் இன்னும் நெற்பயிர் கள் தண்ணீர் இன்றிவாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே பொதுப் பணித்துறை அதிகாரிகள் கடைமடை கால்வாய்களில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 21.75 அடியாக உள்ளது. அணைக்கு 236 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 706 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. அணை யில் இருந்து வெளி யேற்றப்படும் தண்ணீர் தோவாளை சானல், அனந்தனார் புத்தனார் சானல் மற்றும் பாசன சானல்களில் ஷிப்டுமுறை யில் திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 25.90 அடியாக உள்ளது. அணைக்கு 30 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 11.28 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 11.38 அடியாகவும் உள்ளது. பொய்கை அணையின் நீர்மட்டம் 10.70 அடியாகவும், மாம் பழத்துறையாறு அணை நீர்மட்டம் 3.28 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் மைனஸ் 12.60 அடியாக உள்ளது.

    தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் குமரி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் கடுமையாக சரிந்தது. மாம்பழத்துறையாறு அணை குறைந்த அளவு தண்ணீருடன் வறண்டு காணப்படுகிறது.

    • விஜய் வசந்த்துக்கு கோவில் சார்பாக மரியாதை செலுத்தினர்.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    மருங்கூர்:

    கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கோவில் கொடை விழாவில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.

    பின்பு பத்மநாபபுரம் அருள்மிகு இசக்கியம்மன் கோவில் விஜய் வசந்த் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சார்பாக மரியாதை வழங்கப்பட்டது.

    பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை விஜய் வசந்த் தொடங்கி வைத்தார்.

    • இன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • திருவிழா நாட்களில் காலை, மதியம், இரவு நேரங்களில் தலைமை பதி முன்பு அன்னதானம் நடை பெறுகிறது.

    சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முதல் நாள் நிகழ்ச்சியான கொடியேற்று விழா நிகழ்ச்சியையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், 5.30 மணிக்கு கொடிபட்டம் தயாரிக்கப் பட்டு பதியை சுற்றி வலம் வந்து 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு பூஜித குரு சுவாமி தலைமை தாங்கினார். திருக்கொடியை பூஜிதகுரு ராஜசேகரன் ஏற்றி வைத்தார். பூஜிதகுரு தங்க பாண்டியன், வக்கீல் ஆனந்த், பொறியாளர் அரவிந்த், வக்கீல் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்து, பள்ளியறை பணி விடைகளை செய்திருந்தனர்.

    பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது.

    வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 8-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்ட சுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரிகிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சி அளிக்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. 9-ம் திருவிழா அன்று அனுமன் வாகனத்திலும், 10-ம் நாள் திருவிழா அன்று இந்திர வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    வருகிற 28-ந்தேதி 11-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை, பணிவிடையும் மதியம் உச்சி படிப்பும், இரவு வாகன பவனியும், அன்னதானமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறு கிறது.

    திருவிழா நாட்களில் காலை, மதியம், இரவு நேரங்களில் தலைமை பதி முன்பு அன்னதானம் நடை பெறுகிறது.

    • வாழை இலைகள் வெட்டுவதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்துக்கு சென்றுள்ளார்.
    • புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    புதுக்கடை அருகே கிள்ளியூர் பகுதி வாறுவிளையை சேர்ந்தவர் ஜாண்றோஸ். இவரது மனைவி சாரதா (65).

    இவர் வீட்டில் வாத்துகள் வளர்த்து வருகிறார். சம்பவ தினம் சாரதா வாத்துகளின் தீவனத்துக்காக வாழை இலைகள் வெட்டுவதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்துக்கு சென்றுள்ளார்.

    அங்கு இலைகளை வெட்டும் போது, வாழை மரத்தில் விஷ வண்டுகள் (கடந்தை) கூடு கட்டி யிருந்துள்ளது. இதை கவனிக்காமல் சாரதா இலை வெட்டிய போது, விஷ வண்டுகள் அவரை கொட்டியதில் படுகாய மடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, குலசேக ரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சாரதா உயிரிழந்தார். இது தொடர்பாக சாரதா மகன் ஜாண் ஜெயசிங் என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.]

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • பேரணி ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர். சிலை அருகே தொடங்கி காமராஜர் பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது

    கன்னியாகுமரி :

    மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க. எழுச்சி பொன்விழா மாநாடு நடைபெற உள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆரல்வாய்மொழியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பேரணி நடத்தினர்.

    ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவரும், பேரூர் செயலாளருமான முத்துக்குமார் தலைமை தாங்கினார். பேரணியை தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இதில் தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், ஒன்றிய செயலாளர் மகாராஜன், தாழக்குடி ரோகினி அய்யப்பன், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன், வடக்கு ஒன்றிய பொருளாளர் வெங்கடேஷ், தாழக்குடி நகர செயலாளர் பிரம்ம நாயகம் பிள்ளை, நகர அவைத்தலைவர் முத்துசாமி, கவுன்சிலர்கள் நவமணி, வளர்மதி, சுடலலையாண்டி, மோகன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை நிர்வாகி சங்கரலிங்கம், பேரவை சுந்தரம் பிள்ளை, நகர இணை செயலாளர் பேச்சியம்மாள், கச்சேரி நாகராஜன், சிவசங்கரன், மல்லிகா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    பேரணி ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர். சிலை அருகே தொடங்கி காமராஜர் பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியில் கலந்துகொண்டவர்கள் கையில் மாநாடு குறித்து விழிப்புணர்வு பதாகையை கையில் ஏந்தி சென்றனர்.

    • ஆவணி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பணிகள் நடைபெறுகிறது
    • கேரளா மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    நாகர்கோவில் :

    தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நாகராஜா வுக்கு என தனி சன்னதி நாகர்கோவிலில் உள்ளது. இந்த கோவில் நாகதோஷ பரிகார தலங்களில் ஒன்றாக விளங்கு கிறது.

    இங்குள்ள நாகர் சிலைகளுக்கு பெண்கள் பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு செய்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். சர்ப்ப தோஷ பரிகாரம், கால சர்ப்ப தோஷ பரிகாரம், ராகு-கேது பரிகாரம், தொழில் காரியம், திருமண காரியம், குழந்தை பாக்கியம் பெற இத்தலத்திற்கு வந்து வழிபடலாம்.ஜாதகப்படி கல்நாகர் பிரதிஷ்டை செய்ய விரும்பும் பக்தர்கள், இத்திருத்தலத்தில் உள்ள நாகர் பீடத்தில் ஒற்றைக்கல் நாகரை பிரதிஷ்டை செய்யலாம்.

    நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும், கேரளா மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    ஒவ்வொரு கோவிலுக்கும் குறிப்பிட்ட சிறப்பு நாட்கள் இருக்கும். அப்படி, நாகராஜா 'ஆயில்யம்' நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், ஒவ்வொரு மாதமும் ஆயில்ய நட்சத்திரத்தன்று வந்து பகவானை வழிபடுவது சிறப்பு. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு. முக்கியமாக, ஆவணி மாதத்தின் ஒவ்வொரு ஞாயிறும் மிகச்சிறப்பு.

    பல ஆண்டுகளுக்கு முன்பு வேணாட்டை ஆண்ட பூதளவீர ஸ்ரீவீரஉதயமார்த்தாண்டவர்மா என்ற களகாட்டை தலைநகராக கொண்ட மன்னர் தொழுநோயால் பாதிக்கப்பட்டார். இந்த கோவில் பற்றி கேள்வியுற்று ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் இங்கு வந்து வழிபட்டார். இதனால் அவர் பூரண குணம் அடைந்தார். இதனால் இந்த ஆலயத்தின் புகழ் எல்லா இடங்களிலும் பரவியது. இதையடுத்து மன்னர் ஆவணிமாத ஞாயிற்றுக்கிழமைகளில் பூஜைகளை நடத்தி காணிக்கைகளை செலுத்தினார் என கோவிலில் உள்ள கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலை சுற்றி 1 மைல் தூரத்திற்கு பாம்பு கடித்து யாரும் இறந்ததாக சான்று கள் இல்லை என கூறப்படுகிறது.

    நாகராஜா கோவிலில் குறிப்பாக ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாகவே ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. குடும்பம் குடும்பமாக ஏராளமானோர் வந்து நாகராஜரை வழிபட்டு செல்கிறார்கள்.

    இந்த ஆண்டு ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்டு மாதம் 20-ந்தேதியும், 2-வது ஞாயிற்றுக் கிழமை 27-ந்தேதி, 3-வது ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 3-ந்தேதியும், 4-வது ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 10-ந்தேதியும், 5-வது ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 17-ந்தேதியும் வருகிறது. 5 ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவு 8 மணிக்கு சுவாமி வாகனத்தில் எழுந்தருளி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அதற்கான முன்னேற் பாடு பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளது.

    கோவிலுக்குள் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பக்தர்கள் ஒரு வழியாக சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மறுபாதை வழியாக வெளியே வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் அபிஷேக அர்ச்சனை டிக்கெட் வழங்கப்படுகிறது. டிக்கெட் வாங்கியவர்கள் தனி வரிசையில் அனுமதிக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவர் களுக்கு பிரசாதமாக சில்வர் பாத்திரத்தில் பால் பாயாசம் மற்றும் தேங்காய் பழம் வழங்கப்படுகிறது.

    தற்போது வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகளை கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

    இந்த ஆண்டு ஆவணி ஞாயிற்றுக் கிழமைகளில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து அவர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 5 ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக கோவிலில் வளாகத்தில் கூடுதல் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • சின்னமுட்டத்தில் கடை அடைப்பு
    • கருப்பு கொடிகளும் ஏற்றப்பட்டன

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்கு தளமாககொண்டு 350-க்கு மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடி தொழி லில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த நிலையில் சின்ன முட்டம் துறைமுக வளாகத்தில் பெட்ரோல் பங்கு அமைக்கும் பணி தொடங்கியது. இதற்கு சின்னமுட்டம் பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    சின்னமுட்டம் துறை முகத்தில் பெட்ரோல் பங்கு அமைக்க எதிர்ப்பு தெரி வித்து கடந்த 9-ந்தேதி முதல் சின்னமுட்டம் புனிததோமையார் ஆலயம் முன்பு மீனவர்கள் போராட் டம் நடத்தி வருகிறார்கள்.

    இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக ஏராள மான போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். போலீசார் நடத்திய சமரச பேச்சு வார்த்தையில் இதுவரை சமரசம் ஏற்பட வில்லை. இதைத்தொடர்ந்து இன்று 8-வது நாளாக சின்ன முட்டம் புனித தோமையார் ஆலயம் முன்பு பெட்ரோல் பங்க் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தக்கோரி மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    மேலும் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர். இதனால் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் சின்ன முட்டம் மீனவர்க ளுக்கு சொந்தமான 94 விசைப்படகுகள் மட்டும் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. அதுமட்டுமின்றி சின்னமுட்டத்தில் பெட்ரோல் பங்க் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகள், விசைப்படகுகள் மற்றும் தெருக்களில் கருப்புக்கொடி கட்டப்பட்டுள்ளன.

    மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்ன முட்டத்தில் முழு கடை யடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டுள்ளன. தெருக்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. இதனால் அங்கு பெரும்பரபரப்பும் பதட்டமும் நிலவுகிறது. இதைத்தொடர்ந்து அங்கு இன்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுடன் போலீசார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • வேலைக்கு செல்லாமல் இருந்ததால் உறவினர்கள், நண்பர்கள் கண்டித்துள்ளனர்
    • சிகிச்சை பலனின்றி தாணுதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி இடமருவத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தாணுதாஸ் (வயது 49), விவசாயி. குடிப்பழக்கம் உள்ள தாணுதாஸ் சரியாகவேலைக்கு செல்லாமல் இருந்ததால் உறவினர்கள், நண்பர்கள் கண்டித்துள்ளனர்.

    இந்த நிலையில் சம்ப வத்தன்று இரவு வீட்டில் வைத்திருந்த களைக் கொல்லி மருந்தை தாணு தாஸ் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

    உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு ஆசா ரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தாணுதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி மதிகுமாரி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 5 பேருக்கு வலைவீச்சு
    • சிறிது நேரத்தில் 2 பைக்குகளில் வந்த 4 பேர் வில்சனுடன் சேர்ந்து தங்கராஜை கையால் தாக்கினர்.

    கன்னியாகுமரி :

    குளச்சல் மரமடியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 58). இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் வில்சன். தற்போது இவர் ரீத்தாபுரம் பேரூராட்சி ஒற்றப்பனவிளையில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தங்கராஜ் குளச்சல் துறைமுக பழைய பாலம் பகுதியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வில்சன், தங்கராஜிடம் பேசுவதற்கு செல்போன் கேட்டார். செல்போனில் காசு தீர்ந்து போச்சு பேச முடியாது என தங்கராஜ் கூறினார். இதனால் வில்சனுக்கு தங்கராஜ் மீது முன் விரோதம் ஏற்பட்டது. நேற்று மதியம் தங்கராஜ் வழக்கம்போல் துறைமுக பழைய பாலம் பகுதியில் நண்பர் மரிய ஜாணுவுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மீண்டும் வந்த வில்சன் போனில்,அவரது நண்பர்களை செல்போனில் அழைத்தார். பின்னர் சிறிது நேரத்தில் 2 பைக்குகளில் வந்த 4 பேர் வில்சனுடன் சேர்ந்து தங்கராஜை கையால் தாக்கினர்.

    இதை தடுத்த மரிய ஜாணையும் தாக்கி மிரட்டல் விடுத்து சென்றனர். இதில் தங்கராஜிக்கு கன்னங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. தங்கராஜ் குளச்சல் அரசு மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மரிய ஜாண் புற நோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்து குளச்சல் போலீசார் வில்சன் 2 பைக்குகளில் வந்த கண்டால் தெரியும் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது
    • கையில் கட்சிக்கொடியுடன் தொண்டர்கள் அண்ணாமலையுடன் பாதயாத்திரை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில் :

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரையை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு உள்ளார். ராமேஸ்வரத்தில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கிய அவர் பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் பாதயாத்திரையை நிறைவு செய்துள்ளார்.

    குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.

    நேற்று முன்தினம் விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாதயாத்திரை மேற்கொண்டார்.

    பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டார். சாமியார் மடத்திலிருந்து தனது பாதயாத்திரையை இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கினார். தொண்டர்கள் புடைசூழ அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டார்.காட்டாத்துறையில் அண்ணாமலைக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்த பாரத மாதா சிலைக்கும் அண்ணாமலை மரியாதை செலுத்தினார்.

    பாதயாத்திரையில் தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. கையில் கட்சிக்கொடியுடன் தொண்டர்கள் அண்ணாமலையுடன் பாதயாத்திரை மேற்கொண்டனர்.

    பாதயாத்திரையின் போது இளம்பெண்கள், சிறுவர், சிறுமிகள் அண்ணாமலையுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். செண்டை மேளம், சிங்காரி மேளம் முழங்க அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டார். மணலி சந்திப்பில் இன்று மதியம் தனது பாதயாத்திரை நிறைவு செய்தார்.

    பாதயாத்திரையில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட தலைவர் தர்மராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டதையடுத்து தக்கலை சாமியார்மடம் சாலையில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டிருந்தது. இன்று மாலையில் குளச்சல் தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    நாளை (18-ந்தேதி) காலை நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட பார்வதிபுரம் பகுதியில் இருந்து பாதயாத்திரையை தொடங்கும் அண்ணாமலை வேப்பமூடு காமராஜர் சிலை முன்பு நிறைவு செய்கிறார். நாளை மதியம் கன்னியாகுமரி ரவுண்டானாவில் இருந்து தொடங்கி கொட்டாரத்தில் பாதயாத்திரை நிறைவு செய்கிறார்.

    • மீன்கள் நடுரோட்டில் சிதறின
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மினி டெம்போ தலைகீழாக கவிழ்ந்தது தெரியவந்தது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பகுதியில் இன்று காலை மீன் ஏற்றி வந்த மினி டெம்போ ஒன்று தலைகீழாக கவிழ்ந்து கிடந்தது. ரோட்டில் மீன்களும் சிதறி கிடந்தன.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதுபற்றி நெடுஞ்சாலை ரோந்து படை போலீசாருக்கும், இரணியல் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் கன்னியாகுமரியில் இருந்து தக்கலை நோக்கி மீன் ஏற்றி வந்தபோது மினி டெம்போவின் முன் டயர் வெடித்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மினி டெம்போ தலைகீழாக கவிழ்ந்தது தெரியவந்தது.

    மேலும் இந்த விபத்தில் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டிருந்தது. விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்து நெருக்கடியை சீர் செய்ததுடன் நடுரோட்டில் கிடந்த மினி டெம்போவை அப்புறப்படுத்தினார்கள்.

    இதுதொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×