என் மலர்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில், கச்சிராபாளையம் சாலையில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைந்துள்ளது.
இந்த விற்பனை கூடத்திற்கு கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சங்கராபுரம், கச்சிராயப்பாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த நெல், எள் மக்காச்சோளம், உளுந்து, மணிலா, உள்ளிட்ட பல்வேறு தானியங்களை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.
அதன்படி பல்வேறு பகுதிகளை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட விவசாயிகள் கள்ளக்குறிச்சி வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு எள், மக்காச் சோளம், கம்பு, உளுந்து என ஆயிரத்துக்கும் அதிகமான தானிய மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் எடை போடும் போது ஒழுங்கு முறை விற்பனை கூட சாக்குகளில் பொருட்களை மாற்றி எடை போடுவது வழக்கம்.
ஆனால் கடந்த சில மாதங்களாக ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் சாக்குகளை மாற்றி எடை போடாமல் விவசாயிகள் எடுத்து வந்த சாக்குப் பைகளில் எடையை போடுகின்றனர். மீண்டும் அந்த விளை பொருட்களை கொள்முதல் செய்த வியாபாரிகள் விளை பொருட்களை கலத்தில் கொட்டிக்கொண்டு சாக்குகளை வழங்கும் வரை விவசாயிகள் காத்துக்கிடக்கும் அவல நிலை உள்ளது.
மேலும் பல விவசாயிகளுக்கு சாக்குகள் மீண்டும் கிடைப்பதில்லை என கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களை ஒழுங்கு முறை விற்பனை கூட சாக்குகளில் மாற்றி எடை போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பொதுப்பணித்துறை , ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுத்தல் தூர்வாருதல் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்க்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள நீர்நிலைகளான ஏரி மற்றும் குளங்களில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை விவசாயத்திற்கு பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள விவசாயிகள் வண்டல் மண் தேவைப்படுமாயின் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்திட வேண்டும். இம்மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர்களால் செயல்முறை ஆணைகள் வழங்கப்படும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட விவசாயிகளின் விண்ணப்பங்கள் பொதுப்பணித்துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வண்டல் மண் எடுப்பதற்கான துறை ரீதியான வாகன எண் அனுமதியுடன் விவசாயிகளுக்கு வழங்கப்படும். விவசாயிகள் வருவாய் கிராமம், புல எண், வாகன விபரங்கள் உள்ளிட்டவைகளை முறையாக அளித்து வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதி பெற்று பயனடையளாம்.
இவ்வாறு அவர் கூயினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், வேளாண்மை துணை இயக்குநர் (திட்டம்) சுந்தரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) விஜயராகவன், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் சரவணன், திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் யோகஜோதி மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்ட இணைச்செயலாளர் ரஷிதா தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், தயாபரன், ஒன்றிய செயலாளர் முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் மனோன்மணி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் சத்துணவு பொறுப்பாளர்கள், உதவியாளர்கள், சமையலர்கள் ஆகியோருக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி, வரையறுக்கப்பட்ட ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு பாதுகாப்புடன் கூடிய ஓய்வு ஊதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும்.
சமையல் உதவியாளர்ககளுக்கு தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு வழங்கிட வேண்டும். பேறுகால விடுப்பு பணி 12 மாதமாக வழங்கிட வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண் டனர். முடிவில் ஒன்றிய தலைவர் பழனிவேல் நன்றி கூறினார்.
திருநாவலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கந்தசாமிபுரம் கிராமத்தில் சக்தி விநாயகர் கோவில் உள்ளது.
இங்கு நேற்று இரவு பூஜைகள் முடிந்ததும் கோவில் நடை சாத்தப்பட்டது. அதன் பின்னர் பக்தர்கள் அனைவரும் வீடுகளுக்கு சென்று விட்டனர்.
நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்தனர். பின்னர் அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து கொண்டு தலைமறைவாகி விட்டனர்.
இன்று காலை வழக்கம் போல் கோவிலை திறக்க அர்ச்சகர் வந்தார். அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிச் செல்வம் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கோவில் உண்டியல் கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் கோண்டூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகள் ராகபிரியா (வயது 24). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் பி.எட்., 2ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் அதே கல்லூரி வளாகத்தில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி உள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று ராகபிரியா வீட்டுக்கு செல்வதாக விடுதியில் கடிதம் கொடுத்து விட்டு சென்றார். ஆனால் அவர் வீட்டிற்கு செல்லவில்லை. இது குறித்து தகவல் அறிந்த அவரது தந்தை சிவக்குமார் மகளை கண்டுபிடித்து தருமாறு கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் புகார் மனுவில் கடந்த 2020-ம் ஆண்டு தனது மகள் கடலூரில் இருந்தபோது சுயநினைவு இல்லாமல் காணாமல் சென்று விட்டதாகவும் இது குறித்து அப்போது கடலூர் என்.டி. போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கண்டு பிடித்ததாகவும் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வடசிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாவனா (வயது31). இவர் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாவனா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாவனா உடல்நலக்கோளாறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அருகே நிறைமதி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி மகேஸ்வரி (வயது 29). இவர் சம்பவத்தன்று வழக்கம்போல் தனது வீட்டில் படுத்து தூங்கியுள்ளார். அதிகாலை 3 மணியளவில் இயற்கை உபாதைக்காக வீட்டில் இருந்து வெளியே வந்தார்.
அப்போது அருகில் இருந்த முட்புதரில் பதுங்கியிருந்த மர்மநபர் மகேஸ்வரியின் கழுத்தில் இருந்த தங்க செயினை திடீரென பறித்துள்ளார். சுதாரித்துக் கொண்ட மகேஸ்வரி தாலி செயினை பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு இவரது கணவர் ராஜா வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தார். அதற்குள் மர்மநபர் தாலி செயினை பறித்துச் சென்றார்.
அப்போது தாலியில் இருந்த குண்டு, நாணல்கள் ஆகியவை கீழே சிதறி கிடந்தன. இதுகுறித்து மகேஸ்வரி கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி அருகே சந்தேகப்படும்படியான நபர் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தார்.
விசாரணையில் தியாகதுருகம் அருகே சித்தலூர் கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி (வயது 39) என்பதும், நிறைமதி மகேஸ்வரியிடம் இருந்து தாலி செயின் பறித்து சென்றதும் தெரிய வந்தது. அவரிடமிருந்து ஐந்தரை பவுன் தாலி செயினை மீட்ட போலீசார் அவரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் நாராயணசாமி கள்ளக்குறிச்சி, வரஞ்சரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை மற்றும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிப்பு பொது கூட்டம் நடைபெற்றது. தியாகதுருகம் சாலையில் கலைஞர் திடலில் நடைபெற்ற கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு,.க. பொறுப்பாளரும், சங்கராபுரம் சட்ட மன்ற உறுப்பினருமான உதயசூரியன், மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி ஒன்றிய தி.மு.க. செயலாளர் வெங்கடாசலம் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் எழும்பூர் கோபி தொடக்க உரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரும், திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. செயலாளருமான எ.வ. வேலு கலந்து கொண்டு பேசியதாவது:-
கடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 83 சதவீதம் தி.மு.க வெற்றி பெற்றது. ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்ற மாவட்டமாக உள்ளது. இந்த வெற்றி 10 மாத கால ஆட்சியில் நமது முதல்வருக்கு கிடைத்த வெற்றி.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார். மக்களுக்கு என்ன தேவையோ அதனை பார்த்து, பார்த்து செய்து கொண்டிருக்கிறோம். மகளிருக்கு இலவச பஸ் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
மேலும் கோவில்களில் கடகால் போடுவது முதல் கருவறை வரை வேலை பார்த்தவர்களை வெளியே போ என்பதை திராவிட மாடல் ஆட்சி எதிர்க்கிறது. இதனால் தான் கோவில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தோம்.
திருமண உதவி தொகை திட்டத்தை தொடங்கியது முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். ஆனால் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் 3 லட்சத்து 53 ஆயிரம் மனுக்கள் கிடப்பில் இருந்தது. இதனால் தாலிக்கு தங்கத்திற்கு பதிலாக பெண் பிள்ளைகள் படிப்பதற்கு மாதம் ஆயிரம் வழங்க முதல்வர் உத்தரவிட்டார். மேலும் ஒரு ஆண்டில் 1 லட்சம் விவசாயிக்கு இலவச மின்சாரம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் வாணியந்தல் ஆறுமுகம், மலையரசன், எத்திராசு, பெருமாள், மணிமாறன், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் புவனேஸ்வரி பெருமாள், யூனியன் தலைவர் அலமேலு ஆறுமுகம், பேரூராட்சி தலைவர் வீராசாமி, துணை தலைவர் சங்கர் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் நகர தி.மு.க. செயலாளர் சுப்ராயலு நன்றி கூறினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன்.கெளதமசிகாமணி நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் பேசும்போது, இந்தியாவில் உயர்கல்வி சேரும் மாணவர்களின் தேசிய எண்ணிக்கை 25 சதவீதமாக இருக்கிறது. ஆனால் இதில் தமிழ் நாட்டில் உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் 52 சதவீதம் நபராக உள்ளனர். இந்த கூடுதல் சதவீதத்தால் மாநில கல்வி தொகையின் செலவுகள் கூடுதலாக உள்ளது.
இந்த கூடுதல் எண்ணிக்கையானது தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மாணவ- மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகை வழங்க கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? என கேட்டார். இதற்கு பதிலளித்த கல்வித் துறையின் இணை அமைச்சர் அன்ன பூர்ணாதேவி அதற்கான நேரடியான பதில் அளிக்காமல் தற்போதைக்கு கற்றுதலை கைவிடுபவர்களுக்கு மட்டுமே இத்திட்டத்தில் இருக்கின்றது, அதற்கே முன்னுரிமை தருகின்றோம் என்று பதில் அளித்தார்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அருகே தானம் கிராமத்திலிருந்து இருந்து குன்னியூர் வழியாக அரசு பஸ் தியாகதுருகம் வரை செல்வது வழக்கம்.
அதன்படி நேற்று அரசு பஸ் தானத்தில் இருந்து தியாகதுருகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது உதயமாம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. எனவே டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
இவ்வாறு பஸ் நிற்காமல் சென்றதால் ஆத்திரம் அடைந்த மாணவன் ஒருவர் கற்களை எடுத்து பஸ்சின் மீது வீசினார். இதில் பஸ்சின் பின்புற கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
இதுகுறித்து கண்டக்டர் குருநாதன் தியாகதுருகம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் உதயமாம்பட்டு பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்த மாணவர்களை அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் கல்வீசி தாக்கியது தெரிய வந்தது.
எனவே அந்த மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பஸ்நிற்காமல் சென்றதால் அரசு பள்ளி மாணவன் ஒருவர் பேருந்தின் மீது கல் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






