search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் எ.வ.வேலு
    X
    அமைச்சர் எ.வ.வேலு

    தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி நடத்துகிறார்- அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

    தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார். மக்களுக்கு என்ன தேவையோ அதனை பார்த்து, பார்த்து செய்து கொண்டிருக்கிறோம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை மற்றும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிப்பு பொது கூட்டம் நடைபெற்றது. தியாகதுருகம் சாலையில் கலைஞர் திடலில் நடைபெற்ற கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு,.க. பொறுப்பாளரும், சங்கராபுரம் சட்ட மன்ற உறுப்பினருமான உதயசூரியன், மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி ஒன்றிய தி.மு.க. செயலாளர் வெங்கடாசலம் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் எழும்பூர் கோபி தொடக்க உரை ஆற்றினார்.

    சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரும், திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. செயலாளருமான எ.வ. வேலு கலந்து கொண்டு பேசியதாவது:-

    கடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 83 சதவீதம் தி.மு.க வெற்றி பெற்றது. ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்ற மாவட்டமாக உள்ளது. இந்த வெற்றி 10 மாத கால ஆட்சியில் நமது முதல்வருக்கு கிடைத்த வெற்றி.

    தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார். மக்களுக்கு என்ன தேவையோ அதனை பார்த்து, பார்த்து செய்து கொண்டிருக்கிறோம். மகளிருக்கு இலவச பஸ் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

    மேலும் கோவில்களில் கடகால் போடுவது முதல் கருவறை வரை வேலை பார்த்தவர்களை வெளியே போ என்பதை திராவிட மாடல் ஆட்சி எதிர்க்கிறது. இதனால் தான் கோவில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தோம்.

    திருமண உதவி தொகை திட்டத்தை தொடங்கியது முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். ஆனால் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் 3 லட்சத்து 53 ஆயிரம் மனுக்கள் கிடப்பில் இருந்தது. இதனால் தாலிக்கு தங்கத்திற்கு பதிலாக பெண் பிள்ளைகள் படிப்பதற்கு மாதம் ஆயிரம் வழங்க முதல்வர் உத்தரவிட்டார். மேலும் ஒரு ஆண்டில் 1 லட்சம் விவசாயிக்கு இலவச மின்சாரம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

    இதில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் வாணியந்தல் ஆறுமுகம், மலையரசன், எத்திராசு, பெருமாள், மணிமாறன், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் புவனேஸ்வரி பெருமாள், யூனியன் தலைவர் அலமேலு ஆறுமுகம், பேரூராட்சி தலைவர் வீராசாமி, துணை தலைவர் சங்கர் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் நகர தி.மு.க. செயலாளர் சுப்ராயலு நன்றி கூறினார்.

    Next Story
    ×