என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • அஞ்சுகம் திருமண மண்டபத்தில் வேறு நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது.
    • ஆதார் அட்டை, குடும்ப அட்டையின் அசல் மற்றும் நகல்கள் 4 பாஸ்போர்ட் புகைப்படம் கொண்டு வரவேண்டும்

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது செவ்வாய்க்கிழமைகளில் அரசு மருத்துவமனை எதிரில் அமைந்துள்ள அஞ்சுகம் திருமண மண்டபத்தில் இதுவரை நடைபெற்று வந்தது.

    23.05.2023 அன்று அஞ்சுகம் திருமண மண்டபத்தில் வேறு நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் அன்றைய முகாம் மட்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் மையம் கூட்ட அரங்கில் (GDP HALL) நடைபெற உள்ளது.

    இம்முகாமில் தேசிய அடையாள டை பெறாத மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் 4 ஆகியவற்றுடன் முகாமில் கலந்துகொண்டு தேசிய அடையாள அட்டை பெற்று பயனடைந்திடுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

    • நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டனர்.
    • கொள்ளையன் வரும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    கோடை விடுமுறையையொட்டி பெரும்பாலானோர் வீடுகளை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூரில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இதனை நோட்டமிடும் மர்ம கும்பல் வீடு புகுந்து நகை-பணத்தை சுருட்டி செல்லும் சம்பவம் அதிகரித்து உள்ளது.

    காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து 5 வீடுகளில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளை கும்பல் அள்ளி சென்றுவிட்டனர்.

    காஞ்சிபுரம் பெரியார் நகர் அருகே சுதர்ஷன் நகர் பகுதியில் வசித்து வருபவர் டேனியல். இவர் கோடை விடுமுறையையொட்டி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நாகர்கோவிலுக்கு கடந்த சனிக்கிழமை சென்றார்.

    இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டனர். மற்றொரு அறையில் இருந்த 30 பவுன் நகை தப்பியது.

    சுதர்சன் நகர் விரிவாக்க பகுதியை சேர்ந்த நாடி ஜோதிடர் வைத்தியநாதன் வீட்டில் 8 பவுன் நகை, லேப்டாப்பை சுருட்டினர். ஆசிரியர் தமிழரசு வீட்டில் கொள்ளை முயற்சி நடந்து இருந்தது.

    இதேபோல் மேலும் 2 வீடுகளில் நகை-பணம் கொள்ளை போய் உள்ளது. அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று இருப்பதால் எவ்வளவு நகை-பணம் கொள்ளை போனது என்று உடனடியாக தெரியவில்லை.

    நாடி ஜோதிடர் வைத்தியநாதன் வீட்டில் நள்ளிரவு 1.30 மணியளில் கையுறை அணிந்தபடி கொள்ளையன் வரும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. அனைத்து வீடு களிலும் ஒரே கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

    • காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விப்பேடு பகுதியை சேர்ந்த தென்னரசு உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • குற்றவாளி தென்னரசுவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த இளம் பெண்ணை மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விப்பேடு பகுதியை சேர்ந்த தென்னரசு உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில் ஏற்கனவே 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் இந்த கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியான தென்னரசுவை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதைத்தொடர்ந்து குற்றவாளி தென்னரசுவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை சிறைத்துறை அதிகாரிகளுக்கு காஞ்சிபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழங்கினர்.

    • பஸ் நிறுத்தம் அருகே இருந்த ராட்சத பேனர் மின் கம்பிகள் மீது விழுந்தது.
    • மின்துறை ஊழியர்கள் மின் கம்பிகளை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த கரசங்கால் பஸ் நிறுத்தம் பகுதியில் சுமார் 40 அடி உயரமுள்ள 20 அடி அகலமுள்ள ராட்சத விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை படப்பை கரசங்கால் உள்ளிட்ட பகுதியில் காற்று வீசி மழை பெய்ய தொடங்கியது.

    பின்னர் திடீரென சூறாவளி காற்று வீசியது. இதில் பஸ் நிறுத்தம் அருகே இருந்த ராட்சத பேனர் மின் கம்பிகள் மீது விழுந்தது. இதில் மின்கம்பி அறுந்து விழுந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் அங்கு சேதம் ஏற்படவில்லை.

    அங்கு 5 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். மின்துறை ஊழியர்கள் மின் கம்பிகளை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    • கூவத்தூர் அருகே 2 பேரிடம் 1 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    • 2 பேரை கூவத்தூர் போலீசார் கைது செய்தனர்.

    கூவத்தூர் அடுத்த முகையூர், கோலாவாஞ்சி காட்டுப்பகுதியில் கஞ்சா விற்ற புதுப்பட்டினத்தை சேர்ந்த முபாரக் அலி,தென்பட்டினத்தை சேர்ந்த தனுஷ் ஆகிய 2 பேரை கூவத்தூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • மறைமலைநகரை அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது.
    • தேர் செல்லும் பாதையில் சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பு உள்ளதால் தேரோட்டத்தின் போது சிரமம் ஏற்படும் நிலை இருந்தது.

    வண்டலூர்:

    மறைமலைநகரை அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் தேரோட்டம் வருகிற 30-ந்தேதி நடைபெற இருக்கிறது. அப்போது தேர் அனுமந்தபுரம் சாலையில் சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தடையும்.

    தற்போது தேர் செல்லும் பாதையில் சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பு உள்ளதால் தேரோட்டத்தின் போது சிரமம் ஏற்படும் நிலை இருந்தது.

    இதையடுத்து சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கோவில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் வெங்கடேசன் புகார் அளித்தார். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடைகளுக்கு ஏற்கனவே நோட்டீசும் வழங்கப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வில்லை என்று தெரிகிறது. இதைத்தொடர்ந்து இன்று காலை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கோமதி தலைமையில் அதிகாரிகள் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை ஜே.சி.பி.எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

    இதுபற்றி அறிந்ததும் ஏராளமான வியாபாரிகள் குவிந்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற 2 நாட்கள் அவகாசம் கேட்டனர். இதனால் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகி்றது.
    • மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பித்து பயனடையுங்கள்.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உடலியக்க குறைபாடுடைய நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள் (ஆக்சிலரி/எல்போ கிரட்சஸ்) போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு காலிப்பர்கள், விபத்தினாலோ அல்லது நோயாலோ கை மற்றும் கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்களும், 18 முதல் 60 வயது வரை உள்ள தையல் பயிற்சி முடித்து தையல் சான்று பெற்றுள்ள உடலியக்க குறைபாடுடையோர், பார்வை திறன் பாதிக்கப்பட்டோர் மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் எந்திரம், 75 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் தையல் பயிற்சி முடித்த தாய்மார்களுக்கு தையல் எந்திரம், மூளை மூடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலிகளும், நடக்க முடியாத மூளை மூடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு ரொலேட்டர் எனப்படும் நடைப்பயிற்சி சாதனங்களும், காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலிக்கருவிகள், பார்வையற்றோருக்கான ஒளிரும் மடக்கு ஊன்றுகோல்கள் மற்றும் பிரெய்லி கைக்கடிகாரங்கள், 9-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் கல்வி பயிலும் பார்வை குறைபாடுடைய மாணவ-மாணவியர்களுக்கு சிறிய எழுத்துகளை பெரிதாக்கி காட்டக்கூடிய உருப்பெருக்கி, இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு மற்றும் டெட், டி.என்.பி.எஸ்.சி. போன்ற போட்டித்தேர்வுகளுக்கு பயிலும் பார்வை குறைபாடுடையோருக்கு பிரெய்லி எழுத்துக்களை மின்னனு முறையில் வாசிக்கும் கருவி பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான திறன்பேசி சாதனங்கள் போன்ற உதவி உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் இலவசமாக வழங்கப்பட்டு வருகி்றது.

    மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உதவி உபகரணங்கள் பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை (அனைத்து பக்கங்களும் மருத்துவர் சான்று உட்பட), ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பித்து பயனடையுங்கள். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்: 044-29998040-இல் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிறப்பு பூஜையுடன் பந்தக்கால் நடப்பட்டது
    • கருடசேவை ஜூன் 2-ந் தேதி நடக்கிறது.

    108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும் உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவிருமான காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக வைகாசி பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    30 அடி உயர பந்தக்காலுக்கு மஞ்சள், குங்குமம் மாவிலை தோரணம் கட்டி கோவில் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க கற்பூர ஆரத்தி காட்டி பந்தக்கால் கள் நட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை தொடங்கி வைத்தனர்.

    பிரம்மோற்சவ விழா வருகிற 31-ந் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய உற்சவங்களான கருடசேவை உற்சவம் ஜூன் மாதம் 2-ந் தேதியும், திருத்தேர் உற்சவம் ஜூன் மாதம் 6-ந் தேதியும், தீர்த்தவாரி உற்சவம் ஜூன் மாதம் 8-ந் தேதியும் என 10 நாள் உற்சவம் காலை, மாலை என இரு வேளையும் நடைபெறுகிறது.

    உற்சவத்தில் காலை, மாலை என இரு வேளை களிலும் அம்ச வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், யாளி வாகனம், சந்திர பிரபை, சூரிய பிரபை, தங்க பல்லக்கு, தங்க சப்பரம், யானை வாகனம் உன்ளிட்ட வாகனங்களில் காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் காஞ்சீபுரம் ராஜ வீதிகளில் வீதி உலா வர உள்ளார்.

    • மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் ஏற்பாட்டில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை மற்றும் அம்மன் ஆலய கிழக்கு கோபுர வாசலில் அன்னதானம் வழங்கப்பட்டது.
    • எஸ். எஸ். ஆர். சத்யா ஏற்பாட்டில் தேரடி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து 501 தேங்காய் உடைக்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    அ. தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் தலைமையில் காஞ்சிபுரம் மாநகரில் காஞ்சி பன்னீர்செல்வம் ஏற்பாட்டில் குமரகோட்டம் முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது,

    இதனை தொடர்ந்து காமாட்சி அம்மன் கோவிலில் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் ஏற்பாட்டில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை மற்றும் அம்மன் ஆலய கிழக்கு கோபுர வாசலில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம் அண்ணா பஸ் நிலையம் அருகே அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட பொருளாளர் வள்ளி நாயகம் ஆகியோர் ஏற்பாட் டில் வழக்க றுத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    மாவட்ட பொருளாளர் வள்ளி நாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம் ஏற்பாட்டில் பிரமாண்ட கேக் வெட்டப்பட்டது. எஸ். எஸ். ஆர். சத்யா ஏற்பாட்டில் தேரடி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து 501 தேங்காய் உடைக்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

    இரவு 8மணிக்கு கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன் ஏற்பாட்டில் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் தங்கத் தேர் பவனி நடைபெற்றது.

    இதில் அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட அவை தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஆர்.டி.சேகர், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.ஆர்.மணி வண்ணன், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார், ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜி, அத்திவாக்கம் ரமேஷ், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் விஸ்வநாதன், பகுதி செயலாளர் என். பி. ஸ்டாலின், பாலாஜி, கோல்ட் ரவி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் படுநல்லி தயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தமிழகத்தில் பல்வேறு திட்டங்களும் கொண்டு வரப்பட்டன.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் திருட்டுத்தனமாக விற்கப்படுவதை தடுக்க அதிகாரிகள் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி, தடையை மீறி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை விற்பவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

    மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தமிழகத்தில் பல்வேறு திட்டங்களும் கொண்டு வரப்பட்டன. அதில் முக்கியமானது மஞ்சப்பை திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சப்பை போன்ற துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்று பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக பெரும்பாலானோர் மஞ்சப் பைகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மஞ்சப்பை பயன்படுத்தபவர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில்களில் தானியங்கி மஞ்சப்பை எந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தானியங்கி மஞ்சப்பை எந்திரத்தை மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி திறந்து வைத்து அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கினார்.

    தற்பொழுது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் தானியங்கி மஞ்சப்பை எந்திரம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள் நெகிழியை பயன்படுத்தாதவாறு மஞ்சப்பையை பயன்படுத்தும் விதமாக மக்கள் அதிகம் கூடும் இடமான மார்க்கெட் பகுதிகளில் மேலும் தானியங்கி மஞ்சப்பை எந்திரம் நிறுவப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பிரகாஷ், அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்தன்பாரதி, அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெகநாதன் கலந்து கொண்டனர்.

    • குன்றத்தூர் வட்டத்தில் மே 16 முதல் 19 வரை மற்றும் மே 23, 24 ஆகிய 6 நாட்கள் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.
    • மே 16 முதல் முதல் 26-ந்தேதி வரை நடைபெற உள்ள தீர்வாய நிகழ்ச்சியை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 1432-ம் பசலி ஆண்டுக்கு வருவாய் தீர்வாயம் நடத்திடவும், கிராம கணக்குகளை தணிக்கை செய்திடவும் கீழ்கண்டவாறு வருவாய் தீர்வாய அலுவலர்களை நியமனம் செய்து மாவட்ட கலெக்டரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டத்தில் வருகிற 16, 17, 18, 19, 23,24 ஆகிய 6 நாட்கள் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் வருவாய் தீர்வாயம் நடைபெற உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 16, 17, 18,19, 23 ஆகிய 5 நாட்கள் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

    உத்திரமேரூர் வட்டத்தில் வருகிற 16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை, மே 23 முதல் 26 வரை ஆகிய 8 நாட்கள் காஞ்சிபுரம் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் வருவாய் தீர்வாயம் நடைபெற உள்ளது.

    குன்றத்தூர் வட்டத்தில் மே 16 முதல் 19 வரை மற்றும் மே 23, 24 ஆகிய 6 நாட்கள் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

    வாலாஜாபாத் வட்டத்தில் வருகிற 16 -ந்தேதி முதல் 19-ந்தேதி வரை மற்றும் மே 23-ந்தேதி ஆகிய 5 நாட்கள் காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

    முன்னதாகவே, சம்பந்தப்பட்டதாசில்தாரிடம் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.

    அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது, வருவாய் தீர்வாய மனு என குறிப்பிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாகவும் முன்கூட்டியே கள ஆய்வு ஏதும் தேவைப்படின் அதனை மேற்கொண்டு, வருவாய் தீர்வாய அலுவலருக்கு அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    எனவே, மே 16 முதல் முதல் 26-ந்தேதி வரை நடைபெற உள்ள தீர்வாய நிகழ்ச்சியை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டாலும் அதன் எல்லைகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
    • கடந்த 10 ஆண்டுகளில் மழைப்பொழிவு, வெள்ளம், நிலத்தடி நீர் தன்மை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    காஞ்சிபுரம்:

    சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து சென்னையின் 2-வது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

    ரூ.20 ஆயிரம் கோடி செலவில் சுமார் 4700 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய விமான நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 13 கிராமங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. இதற்கு கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    புதிய விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள் முதல் இந்த திட்டத்தை கைவிடக்கோரி ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள இடங்களில் நீர் நிலைத் தன்மை குறித்து அறிய அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதைத் தெடர்ந்து பரந்தூரை சுற்றி உள்ள பகுதிகளில் மழைப்பொழிவு, நிலத்தடி நீர், பருவமழையின் போது வெள்ளம் மற்றும் புவியியல் நிலைத்தன்மை பற்றிய விரிவான ஆய்வறிக்கையை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) நீர்வளத்துறையிடம் கேட்டு வந்தது. இதனை 6 மாதத்தில் முடிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    எனவே பரந்தூரை சுற்றி உள்ள பகுதிகளில் நீர்நிலை தன்மை தொடர்பாக விரைவில் ஆய்வு செய்யப்படும் என்று தெரிகிறது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, "பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டாலும் அதன் எல்லைகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் நீர்நிலைத்தன்மை குறித்து ஆய்வறிக்கையை நீர்வளத்துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர். இது 6 மாதத்தில் முடிவடையும். கடந்த 10 ஆண்டுகளில் மழைப்பொழிவு, வெள்ளம், நிலத்தடி நீர் தன்மை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    புதிய விமானநிலைய திட்டத்திற்கான பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்க டிட்கோ விரைவில் ஒரு ஆலோசகரை நியமிக்கும் என்றார்.

    ×