என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    கல்பாக்கம் கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 45). மீனவர். இவர் அதே பகுதியை சேர்ந்த 2 மீனவர்களுடன் படகில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றார். அப்போது ராட்ச அலை மோதியதில் படகு கவிழ்ந்தது. இதில் ஸ்டாலின் கடலில் மூழ்கினார். மற்ற 2 பேரும் நீந்தி கரை சேர்ந்தனர்.

    மாயமான ஸ்டாலினை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை கூவத்துரை அடுத்த கடலூர் சின்னக்குப்பம் முகத்துவாரத்தில் ஸ்டாலின் உடல் கரை ஒதுங்கியது. சதுரங்கப்பட்டினம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னையில் இருந்து விமானம் மூலம் பாங்காக் கடத்த முயன்ற 210 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேரிடமும் வேளச்சேரி வனச்சரக அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்குக்கு நட்சத்திர ஆமைகள் கடத்த இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து பாங்காக் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது பயணிகள் உடைமைகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டன. இந்த நிலையில் சென்னையை சேர்ந்த ஜாபர் அலி (33), முகமது தமீம் அன்சாரி (32) ஆகியோர் அதிகாரிகளிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

    எனவே, அவர்கள் கொண்டுவந்த பார்சல் பிரித்து பார்க்கப்பட்டது. அதில் ‘சுவீட்பாக்ஸ்’கள் இருந்தன. அவற்றில் சுவீட் தவிர வேறு எதுவும் இல்லை. இருந்தாலும் சந்தேகத்தின் பேரில் அனைத்து பெட்டிகளும் பிரித்து பரிசோதிக்கப்பட்டது.

    அடியில் இருந்த பெட்டிகளில் நட்சத்திர ஆமைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவை பாங்காக்குக்கு கடத்தப்பட இருந்தது. ஆகவே அவர்களிடம் இருந்து 210 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜாபர் அலி, முகமது தமீம் அன்சாரி ஆகிய 2 பேரும் வேளச்சேரி வனச்சரக அதிகாரி முருகேசனிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் அவர் விசாரணை நடத்தி வருகிறார்.

    நட்சத்திர ஆமைகள் மருத்துவ குணம் உடையவை. வீட்டில் அவை செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. எனவே இவை தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகின்றன.


    108 ஆம்புலன்ஸ் வர 7 மணி நேர தாமதம் ஆனதால் மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த நசரத்பேட்டையை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகள் சரிகா (வயது 16). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சரிகாவுக்கு ஒரு வருடத்துக்கு முன்பு 2 சிறுநீரகமும் செயல் இழந்தது. உடல் நிலை பாதிக்கப்பட்ட அவர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு டயாலிசிஸ் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சரிகா அனுமதிக்கப்பட்டார். நேற்று மதியம் திடீரென அவருக்கு உடல்நிலை மோசம் அடைந்தது.

    உடனடியாக சரிகாவை சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லும்படி டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.

    உடனடியாக ‘108’ ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தும் நீண்ட நேரம் வரை ஆம்புலன்ஸ் வேன் வரவில்லை. இதனால் தவித்த சரிகாவின் பெற்றோர் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் புகார் தெரிவித்தனர்.

    கலெக்டரின் நடவடிக்கையை அடுத்து சுமார் 7 மணி நேர காத்திருப்புக்கு பின்னர் ஆம்புலன்ஸ் வேன் சரிகாவை அழைத்து செல்ல வந்தது. ஆனால் சென்னைக்கு செல்லும் வழியிலேயே மாணவி சரிகா பரிதாபமாக இறந்தார்.

    இது அவரது பெற்றோரையும், உறவினர்களையும் அதிர்ச்சி அடையச் செய்து உள்ளது. சரியான நேரத்துக்கு ஆம்புலன்சு வராததே மகள் உயிரிழப்புக்கு காரணம் என்று அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மாணவி சரிகாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    மாணவி சரிகாவின் தந்தை ஆனந்தன் நெசவு தொழில் செய்து வருகிறார். அவரது மனைவியும் நெசவு தொழிலுக்கு ஆதரவாக உள்ளார். இவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பம்.

    இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளன. 3-வது மகள்தான் சரிகா. சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்ட அவரை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அப்போது மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வரதாமதத்தால் அவர் பலியாகி விட்டார்.

    இந்த நிலையில் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சு வர தாமதம் ஏன்? என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊரக பணிகள் இயக்குனர் இன்பசேகரன் இன்று ஆய்வு செய்தார்.

    அப்போது மாணவி சரிகாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மாணவியின் அப்போதைய உடல் நிலை, ஆம்புலன்சுக்கு எப்போது தகவல் தெரிவிக்கப்பட்டது என்பது குறித்து கேட்டறிந்தார்.

    விசாரணைக்கு பின்னர் சரியான நேரத்திற்கு வராத 108 ஆம்புலன்சு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    காஞ்சீபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் குறித்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.
    காஞ்சீபுரம்:

    ஒவ்வொரு ஆண்டும் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பொருட்டு ஆண்டு இறுதியில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெறுகிறது. இந்த பணியை செம்மையாக செய்யும் பொருட்டு வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலருமான அனில்மேஷ்ராம் காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த மனுக்களை பரிசீலனை செய்யும் நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் பணிகள் முறைப்படி நடைபெறுகிறதா என உறுதிப்படுத்துவது குறித்து சப்-கலெக்டர்கள் மற்றும் கோட்டாட்சியர்களின் பணிகளை ஆய்வு செய்தார்.

    மேலும் திடீர் தணிக்கையாக காஞ்சீபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் வாக்காளர்களுக்கு உரிய அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கும் போது உரிய அறிவிப்பு செய்து மேல்முறையீட்டிற்கான கால அவகாசம் முடிந்த பின்னரே பெயர் நீக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா, மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி அ.நூர்முகமது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஆகியோர் உடனிருந்தனர்.
    ஆதம்பாக்கத்தில் பெண் என்ஜினீயர் இந்துஜாவை எரித்துக்கொன்ற வழக்கில் வாலிபர் ஆகாஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
    ஆலந்தூர்:

    வேளச்சேரி காமராஜர் புரத்தை சேர்ந்தவர் ஆகாஷ் (29). இவரும், ஆதம்பாக்கம் சரசுவதி நகரை சேர்ந்த இந்துஜா (23) என்பவரும் காதலித்தனர். இவர் கம்ப்யூட்டர் என்ஜினீயராக இருந்தார்.

    இந்த நிலையில் ஆகாசை காதலிக்க இந்துஜா மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆகாஷ் இந்துஜா வீட்டுக்கு சென்று அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். இதில் உடல்கருகி அதே இடத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். அதை தடுக்க வந்த இந்துஜாவின் தாயார் ரேணுகா, தங்கை நிவேதிதாவுக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.


    இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இந்துஜாவின் தாயார் ரேணுகா உயிரிழந்தார். தங்கை நிவேதிதா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாசை கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் ஆகாசை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதனுக்கு ஆதம்பாக்கம் இன்ஸ்பெக்டர் முரளி சிபாரிசு செய்தார். இதை ஏற்றுக்கொண்ட அவர் ஆகாசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
    கூடுவாஞ்சேரியில் சொகுசு பஸ் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தை சேர்ந்தவர் முத்து. இவர் கூடுவாஞ்சேரியை அடுத்த வல்லாஞ்சேரியில் உள்ள இரும்பு கடையில் வேலை பார்த்து வந்தார். இன்று காலை மோட்டார் சைக்கிளில் ஊரப்பாக்கம் நோக்கி முத்து சென்று கொண்டிருந்தார். கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் அருகே சென்ற போது சொகுசு பஸ் மோதியதில் கீழே விழுந்த அவர் பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குபதிவு செய்து பஸ் டிரைவரை தேடி வருகிறார்கள்.

    மதுராந்தகம் அருகே நகைக்கடை சுவரில் துளைபோட்டு 20 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    மதுராந்தகம்:

    மதுராந்தகத்தை அடுத்த மாமண்டூரை சேர்ந்தவர் ஆனந்த். அதே பகுதியில் “கணேஷ் ஜூவல்லர்ஸ்” என்ற பெயரில் நகைக் கடையும், அடகு கடையும், நடத்தி வருகிறார்.

    இன்று காலை அவர் கடையை திறந்த போது சுவரில் துளை போடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையில் இருந்த 20 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போய் இருந்தது.

    அங்கிருந்த லாக்கரை கொள்ளையர்களால் உடைக்க முடியாததால் அதில் இருந்த பல லட்சம் மதிப்பிலான நகைகள், அடகு நகைகள் தப்பியது.

    இது குறித்து படாளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கடையில் இருந்து கண்காணிப்பு கேமிராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவு 12.30 மணியளவில் முகமூடி அணிந்த 2 வாலிபர்கள் சுவரில் துளை போட்டு கடைக்குள் நுழைவதும், பின்னர் சிறிது நேரத்தில் நகை-பணத்துடன் தப்பிச் செல்வதும் பதிவாகி இருந்தது.

    கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சியை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மாதவரத்தை அடுத்த ரெட்டேரி, கடப்பா சாலையில் உள்ள நகைக்கடையில் இதே போல் அருகில் உள்ள கடையின் வழியாக துளை போட்டு புகுந்த கொள்ளையர்கள் ரூ.1 கோடி மதிப்பிலான நகை, 3 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.3 லட்சம் ரொக்கத்தை அள்ளிச் சென்றனர். இந்த வழக்கில் இதுவரை கொள்ளையர்கள் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    ×