என் மலர்
காஞ்சிபுரம்
ஆலந்தூர்:
மடிப்பாக்கம் - மூவரசன் பேட்டை மெயின் ரோட்டில் கங்கை அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் உள்ள உண்டியலை மர்ம ஆசாமிகள் நேற்று உடைத்து, அதிலிருந்த பணத்தை திருடிச்சென்று விட்டனர். இந்த கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமரா வயரை துண்டித்து விட்டு இந்த கொள்ளை நடந்துள்ளது.
இதன் பின்புறம் வல்ல விநாயகர் கோவில் இருக்கிறது. இந்த கோவில் உண்டியல் நேற்று இரவு உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து மேடவாக்கம் மெயின் ரோட்டில் உள்ள பாதாள விநாயகர் கோவிலில் நேற்று இரவு உண்டியலை உடைத்து கொள்ளயடிக்க முயற்சி நடந்தது. அப்போது, அபாயமணி ஒலித்தது.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். இதற்குள் கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
காஞ்சீபுரம் செங்கழு நீரோடை வீதி பகுதியைச் சேர்ந்தவர் மோகன்லால் பா.ஜ.க. கட்சி பிரமுகரான இவர் அந்த பகுதியில் நகைக்கடை நடத்தி வருகின்றார்.
நேற்று இவர் கடைக்கு ஒரு போன் வந்தது. மோகன்லாலின் மகன் தினேஷ்குமார் போனை எடுத்து பேசினார். மறுமுனையில் பேசியவர், ‘‘காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோயில் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து டாக்டர் பேசுகிறேன். எனக்கு அவசரமாக 3 சவரனில் 5 தங்க சங்கிலிகள் தேவைப்படுகிறது. அவசரமாக ஆபரேஷன் செய்ய ஆபரேஷன் தியேட்டருக்கு செல்லவிருப்பதால் நகைகளை எடுத்து வந்து கொடுத்து விட்டு பணம் வாங்கிச் செல்லுங்கள்’’ என்று கூறினார்.
இதை நம்பிய தினேஷ் குமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகளை எடுத்துக் கொண்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆஸ்பத்திரியின் வரவேற்பரை பகுதியில் நின்றிருந்த ஒருவர், ‘‘ஏன் தாமதமாக வருகிறீர்கள் டாக்டர் இவ்வளவு நேரம் காத்திருந்து இப்போதுதான் ஆபரேஷன் தியேட்டரில் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார். நகைகளை என்னை வாங்கி வரச் சொன்னார். பணத்தை என்னிடமே கொடுப்பார். நீங்கள் இங்கேயே காத்திருங்கள்’’ என்று கூறினர்.
இதை நம்பிய தினேஷ்குமார் நகைகளை அவரிடம் கொடுத்தார். நகைகளை வாங்கிய அவர் நைசாக நழுவி வெளியே சென்று விட்டார்.
நீண்ட நேரம் காத்திருந்த தினேஷ்குமார் ஆஸ்பத்திரியில் விசாரித்த போது எந்த டாக்டரும் நகைக்கடைக்கு போன் செய்யவில்லை என்பது தெரிய வந்தது. அதிர்ச்சிடைந்த அவர் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகையை கொடுத்து ஏமாந்தது தெரிய வந்தது.
இது குறித்து சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினியிடம் புகார் செய்தார். ஆஸ்பத்தரி கண்காணிப்புக் கேமரா பதிவுகளை போலீசார் ஆராய்ந்த போது சந்தேகப்படும்படியான ஒருவர் இருப்பதை கண்டறிந்தனர்.
ஆனால் நபரின் முகம் தெளிவாகத் தெரியவில்லை. எனவே, அக்கம்பக்க பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் நகைகளை கொள்ளையடித்தவர் காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள டெலிபோன் பூத்திலிருந்து பேசியது தெரிய வந்துள்ளது. டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு நூதன நகைக் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
நூதன முறையில் நகைக்கொள்ளை நடந்த சம்பவம் காஞ்சீபுரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலத்தை சேர்ந்த ரகுராம். இவர் துபாயில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் இளம்பரிதி (18). இவர் துபாயில் பிளஸ்-2 தேர்வு எழுதிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விமானம் மூலம் சென்னை வந்தார்.
மீனம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய உறவினரான சரோஜா என்பவர் வீட்டில் தங்கி இருந்தார். நேற்று துபாயில் 12-ம் வகுப்பு தேர்வுக்கான முடிவு வந்தது. அதில் இளம்பரிதி பெயில் ஆகி விட்டதாக தெரிகிறது. இதையடுத்து இளம்பருதியின் பெற்றோர் அவரை மீண்டும் துபாய்க்கு வரும்படி அழைத்தனர்.
இதற்காக நேற்று சென்னை விமான நிலையம் சென்ற இளம்பரிதி திடீரென மாயமானார். இது குறித்து சரோஜாவின் புகாரின் அடிப்படையில் விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பரிதியை தேடி வருகிறார்கள். அவர் தேர்வில் தோல்வி அடைந்ததால் எங்கேயாவது சென்று விட்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
மாமல்லபுரத்தை அடுத்த பட்டிபுலம் பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு மது விருந்து கொண்டாட்டம் நடந்தது.
இதனை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி (பொறுப்பு) தலைமையிலான போலீசார் சொகுசு விடுதியை சுற்றி வளைத்து அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஆடல், பாடலுடன் மது அருந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 160 பேரை போலீசார் அதிரடியாக மடக்கினர். இதில் கல்லூரி மாணவ-மாணவிகள், ஐ.டி. ஊழியர்களும் அடங்குவர். அனைவரும் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர்.
இணைய தளம் மூலம் ஒன்று சேர்ந்த அவர்கள் ரூ.1500 வரை கட்டணம் செலுத்தி இந்த மது விருந்தில் கலந்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பிடிபட்ட அனைவரையும் போலீசார் மாமல்லபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களை வரவழைத்தனர்.
பின்னர் அவர்களிடம் உரிய ஆவணங்கள் பெற்று எழுதி வாங்கிக் கொண்டு சிக்கிய அனைவருக்கும் அறிவுரை கூறி போலீசார் விடுவித்தனர்.
இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் சொகுசு விடுதியில் ஆய்வு செய்தனர். அப்போது சட்டவிரோதமாக வருவாய்த்துறை அனுமதி இல்லாமல் கட்டணம் வசூலித்து கேளிக்கை நிகழ்ச்சி நடத்தியதும், நீச்சல் குளத்தின் சுகாதார வருடாந்திர பராமரிப்பு சான்றிதழ் இல்லாததும் தெரிந்தது.
மேலும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிகமான அறைகள் விடுதியில் கட்டப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு கோட்டாட்சியர் முத்துவடிவேல் மற்றும் அதிகாரிகள் சொகுசு விடுதிக்கு சீல் வைத்தனர்.
இது தொடர்பாக விடுதி உரிமையாளர் தங்க ராஜ், மானேஜர் ஜார்ஜ், வரவேற்பாளர் சரவணகுமார், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பிரபு, கஞ்சா, போதை பயன்படுத்திய சிவ்சரன், ஹரி, ரிக்சாடா நெல்சன், மதுபானம் பதுக்கி வைத்திருந்த அருள், கார்த்தி, இர்பான், அனீஷ், வேலு, லிக்கி, தேவதயா ஆகிய 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேபோல் திருக்கழுக்குன்றம், திருப்போரூர் தாலுகா பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட், விடுதிகளின் ஆவணங்களை ஆய்வு செய்து அங்கு மது விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறதா என்பதை அறிய அதிகாரிகள் ‘திடீர்’ சோதனை நடத்த முடிவு செய்து உள்ளனர்.
மதுராந்தகம்:
மதுராந்தகத்தை அடுத்த கள்ளபிரான்புரத்தை சேர்ந்தவர் ஸ்ரீராமுலு. நெல் மொத்த வியாபாரி. நேற்று இரவு அவர் வீட்டை பூட்டிவிட்டு மாடியில் உள்ள அறையில் குடும்பத்துடன் தூங்கினார்.
நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 46 பவுன் நகை, 1½ கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை சுருட்டி தப்பி சென்றுவிட்டனர்.
இன்று அதிகாலை ஸ்ரீராமுலு எழுந்து வந்த போது தான் வீட்டில் நகை-பணம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.
இது குறித்து படாளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (39). கொத்தனார். இவருடைய மனைவி சுஷ்மிதா (24). இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.
சதீஷ்குமார் குடித்துவிட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்வதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சுஷ்மிதா தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு வண்டலூர் அருகே மண்ணி வாக்கத்தில் இருக்கும் தனது தாய் வீட்டுக்கு குழந்தையுடன் சென்றுவிட்டார். கணவன் அழைத்தும் வரவில்லை.
இந்த நிலையில், சதீஷ் குமார் தனது மாமியார் ஜெயசித்ரா (42) வுக்கு போன் செய்து மனைவியை அனுப்பி வைக்கும்படி கேட்டார். ஆனால் அவர், குடித்து விட்டு கலாட்டா செய்வதை நிறுத்தினால்தான் மகளை அனுப்பி வைப்பேன் என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் நேற்று இரவு 11 மணி அளவில் மண்ணிவாக்கம் சென்று மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்கும்படி மாமியார் ஜெயசித்ராவிடம் தகராறு செய்தார். கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து மாமியார் ஜெயசித்ராவின் கழுத்தை அறுத்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.
சிறிது நேரத்தில் அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
தாயாரின் உடலை கண்டு சுஷ்மிதா கதறி அழுதார். சதீஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சதீஷ்குமாரை தேடி வருகிறார்கள்.
தமிழகத்தில் போதை, மது விருந்து கலாச்சாரம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி அருகே தென்னந்தோப்புக்குள் மது விருந்து போதையில் ஆட்டம் போட்ட கேரள கல்லூரி மாணவர்கள் 150 பேரை போலீசார் மடக்கினர்.
இதே போல் தற்போது மாமல்லபுரம் அருகே தனியார் சொகுசு விடுதியில் மதுவிருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஐ.டி. ஊழியர்கள், மாணவர்கள் உள்பட 160 பேர் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னிக்கு நேற்று இரவு மாமல்லபுரம் அருகே உள்ள ஒரு விடுதியில் ரவுடிகள் சிலர் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது தலைமையில் ஏராளமான போலீசார் நள்ளிரவு 12 மணி அளவில் மாமல்லபுரத்தை அடுத்த பட்டிபுலத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியை சுற்றி வளைத்தனர்.
அப்போது விடுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் ஏராளமான வாலிபர்களும், பெண்களும் போதையில் நடனமாடி கொண்டிருந்தனர்.
போலீசாரை கண்டதும் அவர்கள் அரைகுறை உடையுடன் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். அவர்களை சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர்.

வார விடுமுறை நாட்களில் அவர்கள் மொத்தமாக மது அருந்தி கும்மாளமிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். தற்போது போலீசாரின் அதிரடி சோதனையில் சிக்கி கொண்டனர்.

மதுவிருந்து நடந்த விடுதியில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரில் கஞ்சா பொட்டலங்களும் இருந்துள்ளன. அவர்களுக்கு கஞ்சா கிடைத்தது எப்படி? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. விருந்து நடந்த விடுதியில் இருந்து பெட்டி பெட்டியாக வெளிநாட்டு மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கு ஏற்பாடு செய்தவர்கள் யார்? கஞ்சா கிடைத்தது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விடுதியில் நடந்த மது விருந்தில் பங்கேற்று 160 பேர் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் மாமல்லபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஒரகடம், ராஜா தெருவை சேர்ந்தவர் எல்லப்பன். இவரது மகன் பொற் செல்வன் (வயது22). இவர் ஒரகடம் அருகில் உள்ள பிரபல மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் திரும்பிவரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு சென்னக்குப்பம் அருகே உள்ள வயல் வெளியில் பொற்செல்வன் பிணமாக கிடந்தார். அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. அவரது கழுத்தில் கொலைக்கு பயன்படுத்திய டவல் இருந்தது.
இதுகுறித்து ஒரகடம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொற் செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பொற்செல்வனை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
அவருடன் கடைசியாக சென்றவர்கள் யார்? அவருக்கு யாருடனும் மோதல் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது செல்போன் எண்ணையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
பள்ளிக்கரணை:
பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். தே.மு.தி.க. ஒன்றிய இளைஞர் அணி செயலாளர். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த கிளைச் செயலாளர் கலைதாசன் மற்றும் நண்பர்கள் வெற்றி, பாலகிருஷ்ணன், சிட்டிபாபு ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள சமூகநல கூடத்தில் அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த 10 பேர் கும்பல் சுரேஷ் உள்பட 5 பேரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத், அருண் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
வேளச்சேரி:
சென்னை பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம், மேட்டு தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (36). இவர் தே.மு.தி.க. ஒன்றிய இளைஞரணி செயலாளராக உள்ளார். இவர் நேற்று இரவு வீட்டின் அருகே தனது நண்பர்களும் கட்சியினருமான வெற்றி (22),பாலா (32), கலைதாசன் (32) சிட்டிபாபு (32) ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு பின்னர் அவர்கள் வைத்திருந்த கத்தியால் 5 பேரையும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்
இதில் சுரேஷ், வெற்றி ஆகியோருக்கு கைகளில் வெட்டு விழுந்தது இருவரும் அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாலா, சிட்டிபாபு, கலைதாசன் ஆகியோர் அதே பகுதியில் உள்ள வேறொரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போரூர்:
திருவேற்காடு செல்லியம்மன் நகரைச் சேர்ந்தவர் குமரேசன். மெக்கானிக். இவரது மனைவி கீதா.
இவர்களுக்கு தர்ஷன்(5), தியா(3) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். தர்ஷன் தனியார் பள்ளியில் யூகேஜி வகுப்பு படித்து வந்தான்.
கீதா இன்று காலை மதுரவாயலில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக பைக்கில் தர்ஷன், தியா ஆகிய இருவரையும் ஏற்றிக்கொண்டு சென்றார்.
வானகரம் சிக்னல் அருகே வந்தபோது போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் கீதா தனது பைக்கை இடதுபுறம் சாலையை விட்டு இறங்கி ஓரமாக சென்றார். மீண்டும் சாலையில் ஏற முயன்றார் .
அப்போது மணலில் சறுக்கியதால் எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து மூவரும் ரோட்டில் விழுந்தனர். இதில் சிறுவன் தர்ஷன் வலதுபுறம் ரோட்டில் விழுந்தான்.
அப்போது அவ்வழியே மதுரவாயல் நோக்கி வேகமாக வந்த தண்ணீர் லாரி சிறுவன் மீது ஏறி இறங்கியது இதில் சம்பவ இடத்திலேயே அவன் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான். கீதா, மகள் தியா ஆகியோர் லேசான காயத்துடன் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் லாரி டிரைவர் ஜெய்சிங் என்பவரை கைது செய்தனர்.
காஞ்சீபுரம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.ரவிஜெயராம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
காஞ்சீபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.ரவிஜெயராம் தலைமையில் பரங்கிமலை துணை ஆய்வாளர் மனோஜ் சியாம்சுந்தர், உதவி ஆய்வாளர்கள் பா.மாலா (காஞ்சீபுரம்), த.பொன்னிவளவன் (செங்கல்பட்டு), பிரபாகரன் (மதுராந்தகம்), நாகராஜன் (தாம்பரம்), ப.செந்தில்குமார் (பரங்கிமலை) ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கடைகள், தொழில் நிறுவனங்கள், ஓட்டல்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களில் மேதினத்தன்று விடுமுறை விடப்பட்டுள்ளதா? பணியாளர்கள் பணிபுரிய அனுமதிக்கும் பட்சத்தில் முன் அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் 29 கடைகள், 86 ஓட்டல்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்பட 125 நிறுவனங்களில் விடுமுறை வழங்கப்படவில்லை. எனவே இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






