என் மலர்
செய்திகள்

மாமியார் கழுத்தை அறுத்து கொன்ற மருமகன்
செங்கல்பட்டு:
கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (39). கொத்தனார். இவருடைய மனைவி சுஷ்மிதா (24). இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.
சதீஷ்குமார் குடித்துவிட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்வதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சுஷ்மிதா தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு வண்டலூர் அருகே மண்ணி வாக்கத்தில் இருக்கும் தனது தாய் வீட்டுக்கு குழந்தையுடன் சென்றுவிட்டார். கணவன் அழைத்தும் வரவில்லை.
இந்த நிலையில், சதீஷ் குமார் தனது மாமியார் ஜெயசித்ரா (42) வுக்கு போன் செய்து மனைவியை அனுப்பி வைக்கும்படி கேட்டார். ஆனால் அவர், குடித்து விட்டு கலாட்டா செய்வதை நிறுத்தினால்தான் மகளை அனுப்பி வைப்பேன் என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் நேற்று இரவு 11 மணி அளவில் மண்ணிவாக்கம் சென்று மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்கும்படி மாமியார் ஜெயசித்ராவிடம் தகராறு செய்தார். கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து மாமியார் ஜெயசித்ராவின் கழுத்தை அறுத்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.
சிறிது நேரத்தில் அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
தாயாரின் உடலை கண்டு சுஷ்மிதா கதறி அழுதார். சதீஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சதீஷ்குமாரை தேடி வருகிறார்கள்.






