என் மலர்
காஞ்சிபுரம்
மாமல்லபுரம்:
பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் வருகிற 12, 13-ந் தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகிறார்கள்.
அப்போது அவர்கள் புராதன சின்னங்கள் உள்ள பகுதிகளான அர்சுனன் தபசு, பட்டர்பால், கடற்கரை கோயில், ஐந்துரதம் ஆகியவற்றை சுற்றிப் பார்க்கிறார்கள்.
இதையடுத்து மாமல்லபுரத்தை அழகுப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மரக்கன்றுகள், புல்வெளிகள் அமைக்கப்படுகின்றன. அங்குள்ள சிலைகளுக்கு வர்ணம் பூசப்படுகின்றன.
மோடி -ஜி ஜின்பிங் பார்வையிடும் புராதன சின்னங்கள் உள்ள பகுதிகள் தற்போது வெடிகுண்டு நிபுணர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அங்கு ஒவ்வொரு பகுதிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் புரதான சின்னங்கள் பகுதி உள்ளே நுழையும் பணியாளர்கள், வழிகாட்டிகள், சுற்றுலா பயணிகள் என அனைவரையும் அவர்களது உடமைகளையும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள்.
அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பொதுப் பணித்துறை விருந்தினர் மாளிகையில் திறக்கப்பட்டுள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
மாமல்லபுரத்தில் வாகன சோதனையிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது ஒரு இடத்தில் மட்டுமே வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த சில தினங்களில் பல இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்படுகிறது.
மாமல்லபுரத்தையொட்டி உள்ள கிழக்கு கடற்கரை கடலோர பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
மாமல்லபுரம், கோவளம் கடலோர பகுதிகளில் முழுமையாக பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
கடற்படை வீரர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதே போல் விமானப்படையும் உஷார் படுத்தப்பட்டு இருக்கிறது. அவர்களும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.
இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு குறித்து மத்திய பாதுகாப்பு இயக்குனர் ஹரிகிருஷ்ண வர்மா, தமிழக பிரிவு கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், ஏ.எஸ்.பி. பத்திரிநாராயணன் ஆகியோர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் கன்னியம்மாள் (வயது 65). இவருக்கு நேற்று நள்ளிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்சு வந்ததும் அதில் கன்னி அம்மாளை ஏற்றி மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து கொண்டு இருந்தனர்.
ஆம்புலன்சை டிரைவர் ஜெயக்குமார் (38) ஓட்டினார். உதவியாளராக தினகரன் இருந்தார். கன்னியம்மாளுடன் உறவினர் ஒருவரும் அம்புலன்சில் வந்தார்.
செங்கல்பட்டு அருகே ஆத்தூர் பகுதியில் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலையில் வந்து கொண்டு இருந்த போது சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த தனியார் கம்பெனி பஸ்சின் பின் பகுதியில் பயங்கரமாக மோதியது.
இதில் ஆம்புலன்சின் முன் பகுதி முழுவதும் நொறுங்கியது. அதில் இருந்த டிரைவர் ஜெயக்குமார், நோயாளி கன்னியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
மேலும் ஆம்புலன்சில் இருந்த உதவியாளர் தினகரன் மற்றும் கன்னியம்மாளின் உறவினர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு டவுன் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
படுகாயம் அடைந்த 2 பேரும் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது பெண் நோயாளியும் ஆம்புலன்சு டிரைவரும் விபத்தில் பலியான சம்பவம் உறவினர்களை சோகம் அடையச் செய்து உள்ளது.
சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று காலை 9.40 மணிக்கு ஏர் இந்தியா அலையன்ஸ் விமானம் செல்ல தயாராக இருந்தது. ஆனால் இந்த விமானத்தில் பயணம் செய்ய போதுமான பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டது.
அதில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த 23 பயணிகள் 11.30 மணி விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்துவரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில், விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சவுதி அரேபியாவில் இருந்து மஸ்கட் வழியாக சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சதாம் உசேன் (வயது 25) என்பவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரை நிறுத்தி விசாரித்தனர்.
அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் முறுக்கு தயாரிக்கும் கருவி இருந்தது. சந்தேகத்தின்பேரில் அதை பிரித்து பார்த்தபோது அதன் உள்ளே 6 தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
அவரிடம் இருந்து ரூ.21 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 555 கிராம் தங்க பிஸ்கட்டுகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆந்திர வாலிபர் சதாம் உசேனை கைது செய்தனர். மேலும் அவரிடம், அந்த தங்கத்தை அவர் யாருக்காக சவுதி அரேபியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார்? என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் வருகிற 11-ந் தேதி மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது தலைவர்கள் இருவரும் புராதன சின்னங்கள் உள்ள பகுதிகளான அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோயில், பட்டர்பால், ஐந்துரதம் பகுதிகளை பார்வையிடுகிறார்கள்.

கடைகளை அகற்றிய பகுதிகளில் பூஞ்செடிகள் வைக்கப்பட்டு வருவதால் மாமல்லபுரம் நகரமே பளிச்சென காட்சி அளிக்கிறது.
அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் கடற்கரை கோயில் எதிரே புதிதாக கட்டப்பட்டுள்ள வரலாற்று காட்சிக் கூடத்துடன் கூடிய நுழைவு சீட்டு கட்டிடத்தை தலைவர்கள் இருவரும் சேர்ந்து திறந்து வைக்க உள்ளனர்.
இதையடுத்து அதன் அருகே இருநாட்டு நட்புறவையும் உணர்த்தும் வகையில் இரண்டு யானைகளுடன் கூடிய புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இருக்கிறது.
பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்கும் அதிக நேரம் சந்தித்து பேசும் இடமாகவும் கலை நிகழ்ச்சியை பார்த்து ரசிக்கும் இடமாகவும் கடற்கரை கோவில் உள்ளது.
இதைதொடர்ந்து அதன் அருகே கடற்கரை செல்லும் வழியில் இருந்த 120 கடைகளிலும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தங்குவதற்காக அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதற்கு வசதியாக பேரூராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கடைகளை காலி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இன்றுடன் கால அவகாசம் முடிந்ததால் கடைகளை வியாபாரிகள் காலி செய்து வருகிறார்கள்.
பாதுகாப்பு முன்னேற்பாடாக மாமல்லபுரம், கல்பாக்கம், தேவநேரி, கொக்கிலமேடு, சூலேரிக்காடு, நெம்மேலி, பட்டிபுலம் பகுதி மீனவர்கள் வருகிற 6-ந்தேதியில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் வருகிற 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை மீனவர்கள் அனைவரும் கடலுக்கு செல்லக்கூடாது எனவும், கடலோர பாதுகாப்பு படையினர் தடை விதித்துள்ளனர்.
இந்தநிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வெளியுறவு செயலர் விஜய் கேஷவ் கோகலே, மத்திய உயர் அதிகாரிகள் மற்றும் தலைமை செயலர் சண்முகம் ஆகியோர் நேற்று மாமல்லபுரம் வந்திருந்தனர்.
பணிகளை வேகப்படுத்தி மாமல்லபுரத்தை 10-ந் தேதிக்குள் பசுமை நகரமாகவும் மாற்றி குப்பைகள் இல்லாத தூய்மை நகரமாகவும், புதுப்பொலிவுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த பிள்ளையார் பாளையம் மடம் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (28). கடந்த 2 மாதத்துக்கு முன்பு அவர் செய்யாறு வேல் சோமசுந்தரம் நகர் பகுதிக்கு சென்று குடும்பத்துடன் வசித்து வந்தார்.
நேற்று காலை திருமணத் தடை நீங்குவதற்காக கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட்டார். பின்னர், செய்யாறு டவுன் புதிய காஞ்சிபுரம் சாலையில் உள்ள திரையரங்கம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு டீ குடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது காரில் வந்த 10 பேர் கும்பல் சதீஷ்குமாரை பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர். உடனே சதீஷ்குமார், அங்கு வந்த தனியார் பஸ்சில் ஏறினார்.
பின்னால் ஏறிய கொலை கும்பல் சதீஷ்குமாரை இருக்கையில் வைத்தே கொடூரமாக வெட்டிக் கொன்றனர். பின்னர் அவர்கள் காரில் தப்பிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து செய்யாறு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை கும்பல் தப்பிச் சென்ற காரின் பதிவு எண் அங்குள்ள பெட்ரோல் பங்கின் கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த கார் யாருடையது என்பது பற்றி விசாரணை நடக்கிறது.
இந்த நிலையில் கொல்லப்பட்ட சதீஷ்குமார் காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடியான ஸ்ரீதரின் கூட்டாளியாக இருந்தது தெரிய வந்துள்ளது.
வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த ரவுடி ஸ்ரீதர் கடந்த 2017-ம் ஆண்டு கம்போடியா நாட்டில் உள்ள ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீதரின் மறைவுக்கு பின்னர் அவருடன் நெருக்கமாக இருந்த தினேஷ், தணிகா ஆகியோர் தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டனர். அவர்களிடையே யார் பெரியவர்? என்பதில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.
இதில் தினேஷ் கோஷ்டியில் சதீஷ்குமார் இருந்தார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தணிகா கோஷ்டியை சேர்ந்த சிவா என்பவரை கொலை செய்ய முயற்சி நடந்தது.
இந்த கொலையில் சதீஷ்குமாருக்கு தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதனால் சதீஷ்குமாரை பழிக்குப்பழி வாங்க எதிர் கோஷ்டியினர் திட்டமிட்டு வந்தனர்.
இந்த நிலையில் செய்யாறில் பஸ்சுக்குள் வைத்து சதீஷ்குமாரை மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்து உள்ளது.
எனவே ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதற்கிடையே 3 பேரை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது.
ஆலந்தூர்:
திண்டுக்கல்லை சேர்ந்தவர் முகமது சாகிப். கால்டாக்சி டிரைவர். இவர் கிண்டியில் தங்கி தனியார் கால்டாக்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து காரை ஓட்டி வந்தார்.
கடந்த சில நாட்களுகு முன்பு சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்ல பயணி ஒருவர் காரை முன் பதிவு செய்தபோது அதனை டிரைவர் முகமது சாகிப் ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து முகமது சாகிப்பை கால்டாக்சி நிர்வாகத்தினர் அழைத்து விசாரித்தனர். அப்போது தகராறு ஏற்பட்டது. இதுபற்றி முகமது சாகிப் கிண்டி போலீசில் புகார் செய்தார். இதேபோல் கால்டாக்சி நிர்வாகத்தினரும், முகமது சாகிப் மீது புகார் செய்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று இரவு டிரைவர் முகமது சாகிப் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு வந்தார். திடீரென அவர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை மடக்கி பிடித்து தடுத்தனர். பின்னர் முகமது சாகிப்பை மீட்டு கிண்டி போலீசாரிடம் புகார் செய்து இருப்பதாக குற்றம்சாட்டினர்.
இதற்கிடையே கவர்னர் மாளிகை முன்பு தற்கொலைக்கு முயன்ற முகமது சாகிப் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மதுராந்தகம்:
மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி பஜனை கோவில் தெருவில் வசித்து வருபவர் லூர்து டேவிட். தாம்பரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி அந்தோணி அம்மாள் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியையாக உள்ளார். நேற்று மாலை லூர்து டேவிட் வேலைக்காக சென்று விட்டார். இரவு அந்தோணி அம்மாள் தனது மகன், மகளுடன் வீட்டை பூட்டிவிட்டு அறையில் தூங்கினார்.
நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த 75 பவுன் நகை, வெள்ளி பொருட்களை அள்ளி தப்பிச்சென்று விட்டனர்.
அறையில் தூங்கிய அந்தோணி அம்மாளுக்கு வீட்டில் கொள்ளை நடந்து இருப்பது தெரியவில்லை. அதிகாலை எழுந்த போது தான் கொள்ளையர்கள் நகையை எடுத்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம்- மேடவாக்கம் சாலை பகுதியில் ஒரு வாலிபர் சில தினங்களாக கலாட்டா செய்து வந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு கடையில் புகுந்து அந்த வாலிபர் ரகளை செய்தார். அதை தடுக்க முயன்றவர்களை உருட்டுக்கட்டையால் தாக்கினார். இதில்,முருகன், மூர்த்தி ஆகியோர் காயம் அடைந்தனர். உதய மூர்த்தி ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கலாட்டா செய்த வாலிபரை ஆதம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அவரது பெயர் குருநாயக் (30), ஒடிசாவை சேர்ந்தவர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
பிரதமர் மோடியும் சீன அதிபரும் அடுத்த மாதம் 12,13 தேதிகளில் மாமல்லபுரம் வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி காரில் பயணிக்க இருக்கும் அனைத்து சாலைகளும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கோவளம், திருவிடந்தை, மாமல்லபுரம் வரை உள்ள 3 மற்றும் 5 நட்சத்திர அந்தஸ்துடைய அனைத்து ஓட்டல்களுக்குள் நுழையும் கார் மற்றும் பைக்குகளை ஓட்டல் காவலர்கள் நவீன கருவிகள் வைத்து ஆயுதங்கள், வெடிகுண்டுகள் இருக்கிறதா என சோதனையிட்டு உள்ளே அனுப்பி வருகிறார்கள்.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சவுக்கு காட்டுப்பகுதி மற்றும் கடலோர பகுதிகளை கடலோரப்பாதுகாப்பு படையினர் இரவு நேரங்களில் நவீன தொலைஒளி விளக்குகள் வசதியுடன் மணல் ஜீப்பில் சென்று புதிய நபர்களின் நடமாட்டம் இருக்கிறதா எவரேனும் பதுங்கி இருக்கிறார்களா என கண்காணித்து வருகிறார்கள்.
மாமல்லபுரம், பூஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் புறவழிச்சாலை வழியாக மாமல்லபுரம் உள்ளே நுழையும் அனைத்து பைக், கார்களும் போலீசாரின் சோதனைக்கு பின்னர் சுயவிபரங்களை கூறி ஆதாரங்களை காண்பித்து பதிவு செய்த பின்னரே வாகனங்கள் உள்ளே அனுப்பப்பட்டு வருகிறது.
சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் சென்டர்மீடியனில் வைக்கப்பட்டிருந்த பேனர் சாலையில் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். அனுமதியின்றி பேனர் வைத்ததாக அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மாநகராட்சி உதவி பொறியாளர் கமல்ராஜ் பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தார். அதன்படி, அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தாமாகவே முன் வந்து அவசர வழக்காக எடுத்துக் கொண்டு விசாரித்தது.
இதனால் முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் தலைமறைவானார். ஒரு வாரத்திற்குப் பிறகு அவரை நேற்று கிருஷ்ணகிரியில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, பேனர் கட்டியதாக பழனி, சுப்பிரமணி, சங்கர், லட்சுமிகாந்த் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 4 பேரும் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரிடமும் நீதிபதி விசாரணை நடத்தினார். சாலையில் பேனர்கள் வைக்க அனுமதி பெறப்பட்டதா? என நீதிபதி கேட்டதற்கு, தங்களுக்கு எதுவும் தெரியாது என்று 4 பேரும் கூறினர்.
அவர்களை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கும்படி காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், சிறையிலடைக்கும்படி உத்தரவிட நீதிபதி மறுத்தார். எளிதில் ஜாமீனில் வெளிவரக்கூடிய வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் 4 பேரையும் காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்கும்படி பள்ளிக்கரணை போலீசாருக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.
சென்னையை அடுத்த குரோம் பேட்டை நெமிலிச் சேரி பவானி நகரை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் சுபஸ்ரீ (23).
கடந்த 12-ந்தேதி சுபஸ்ரீ துரைப்பாக்கத்தில் உள்ள கம்பெனியில் வேலை முடிந்து வீட்டுக்கு ஸ்கூட்டியில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது பள்ளிக்க ரணையில் சாலையின் நடுவில் இருந்த அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு பேனர் சுபஸ்ரீ மீது விழுந்தது.
இதில் ஸ்கூட்டியில் இருந்து நிலை தடுமாறி சாலையில் விழுந்த அவர் மீது பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி ஏறியது. இதில் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. சுபஸ்ரீ உயிர் இழப்புக்கு காரணமான அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெய கோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், முக்கிய பிரமுகர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ஜெயகோபாலை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். பள்ளிக்கரணை போலீசாரும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தேடுவதை அறிந்த ஜெயகோபால் தலைமறைவானார்.
அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில் உள்ள இஸ்லாம்பூர் என்ற இடத்தில் இருக்கும் தனியார்விடுதியை சுற்றிவளைத்து ஜெயகோபாலை கைது செய்தனர். பின்னர் அவரை சென்னைக்கு அழைத்து வந்தனர்.
கைதான முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் ஜெயகோபால் இன்று காலை 11 மணியளவில் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் நீதிபதி ஸ்டார்லி, ‘சட்டவிரோதமாக பேனர் வைத்தது உண்மையா?’ என்று கேட்டார்.

பின்னர் அவர் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அக்டோபர் 11-ந் தேதி ஜெயகோபால் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். இதுபோல் பேனர் கட்டியதாக கைது செய்யப்பட்ட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.






