என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்தித்து பேச உள்ளதை அடுத்து, மாமல்லபுரத்தில் பாதுகாப்புக்காக கடலோர பாதுகாப்பு படையின் கப்பல்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
    மாமல்லபுரம்:

    சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்திற்கு பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் நாளை (வெள்ளிக்கிழமை) வருகை தருவதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் மர்மநபர்கள் கடல் வழியாக ஊடுருவுவதை தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு படையின் 2 கப்பல்கள், ஒரு நீர்மூழ்கி கப்பல் என 3 கப்பல்கள் மாமல்லபுரம் வந்துள்ளன. இவை கடற்கரை கோவிலுக்கு கிழக்கே ஒரு கி.மீ. கடல் மைல் தொலைவில் கடலில் நங்கூரமிட்டு பாதுகாப்புக்காக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன.

    மேலும் மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் இரு நாட்டு தலைவர்களும் ஓய்வு எடுக்கும் குளிர்சாதன வசதியுடன் கூடிய அறைகள், சந்தித்து பேசும் அறைகள், கலைநிகழ்ச்சி நடைபெறும் மேடைகள் நவீன முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன. மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்திற்குள் யாரும் நுழையாத வண்ணம் கடற்கரை முழுவதும் சவுக்கு கம்புகளால் தடுப்பு அமைக்கப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே ஐந்துரதம் பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் மாமல்லபுரத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தினர். புராதன சின்னங்களை கண்டுகளிக்க தடை விதித்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் இல்லாமல் மாமல்லபுரம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

    மேலும் மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன. பின்னர் அபராதம் வசூலிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் மாடுகள் ஒப்படைக்கப்பட்டன.

    இந்த நிலையில் மோடி-ஜின்பிங்கை வரவேற்கும் விதமாக தேச ஒற்றுமை பேரணி மாமல்லபுரத்தில் நேற்று நடந்தது. ஆயிரம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட பேரணியை முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

    பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் மோடி, ஜின்பிங் படம் தாங்கிய பதாகைகளையும், இரு நாட்டு கொடிகளையும் கையில் ஏந்திச்சென்றனர்.

    சேலையூர் அருகே மாடியில் இருந்து வீசி சிறுமியை கொலை செய்த சித்தியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளிக்கரணை:

    சேலையூர் அருகே செம்பாக்கம் திருமலைநகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் 2-வது மாடியில் வசித்து வருபவர் பார்த்தீபன். சாப்ட்வேர் என்ஜினீயர்.

    இவரது முதல் மனைவி உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். இவர்களது மகள் ராகவி (வயது6). அருகில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    இந்த நிலையில் பார்த்தீபன் 2-வதாக சூரியகலா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 1½ வயதில் மகன் உள்ளான்.

    நேற்று காலை பார்த்தீபன் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். சிறிது நேரத்தில் அவரது செல்போனில் தொடர்பு கொண்ட சூரியகலா, மகள் ராகவியை காணவில்லை என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே சிறுமி ராகவி வீட்டின் அருகே உள்ள புதரில் காயத்துடன் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து சேலையூர் போலீசார் விசாரணை நடத்தினர். முதலில் 2-வது மாடியில் இருந்து விழுந்து சிறுமி இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் வீட்டின் மாடியில் இருந்து சில அடி தூரத்தில் உள்ள முட்புதரில் சிறுமியின் உடல் கிடந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மாடியில் இருந்து விழுந்தால் இவ்வளவு தூரத்துக்கு சிறுமியின் உடல் கிடக்க வாய்ப்பில்லை என்று போலீசார் கருதினர்.

    எனவே சிறுமி ராகவியை மாடியில் இருந்து யாரேனும் வீசி கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தொடங்கினர்.

    இது தொடர்பாக சிறுமியின் சித்தியான சூரியகலாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சிறுமி ராகவியை தாக்கி மாடியில் இருந்து வீசி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து சூரியகலாவை போலீசார் கைது செய்தனர்.

    பார்த்தீபன் 2-வதாக சூரியகலாவை திருமணம் செய்தபோது சிறுமி ராகவியை நல்லமுறையில் பார்த்து வந்துள்ளார். பின்னர் சூரியகலாவுக்கு மகன் பிறந்ததும் ராகவி மீதான பாசம் சிறிது சிறிதாக குறைய தொடங்கி உள்ளது. இந்த நிலையில் சூரியகலா 2-வதாக கர்ப்பம் அடைந்தார். இதனை பார்த்தீபன் கலைக்க கூறியதாக தெரிகிறது.

    மேலும் 2 குழந்தைகள் உள்ளனர். அவர்களை பார்த்தால் போதும் என்று சூரியகலாவிடம் கூறி இருக்கிறார். கர்ப்பத்தை கலைக்க கூறியதால் சூரியகலாவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    நேற்று காலை பார்த்தீபன் வேலைக்கு சென்றதும் சிறுமி ராகவியை தாக்கி 2-வது மாடியில் இருந்து தூக்கி வீசி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்து ராகவி இறந்து விட்டார்.

    பின்னர் இதுபற்றி தெரியாதது போல் சூரியகலா கணவரிடம் நாடகமாடினார். ராகவியை காணாமல் தேடியபோது சூரியகலாவும் ஒன்றும் தெரியாதது போல் தேடி இருக்கிறார்.

    ராகவியின் உடலை பார்த்தீபன் பதட்டத்துடன் தூக்கி செல்லும்போதும் கதறியபடியே சூரியகலா சென்றார். இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

    கர்ப்பத்தை கலைக்க கூறியதால் கணவரின் முதல் மனைவியின் மகளை 2-வதுமனைவி மாடியில் இருந்து வீசி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சீனாவில் இருந்து ‘ஏர்- சீனா 747’ விமானம் மூலம் 4 குண்டு துளைக்காத சொகுசு கார்கள் சென்னை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் பயணம் செய்வதற்காக விலை உயர்ந்த சொகுசு கார்கள் சீனாவில் இருந்து சென்னை கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி நேற்று மாலை சீனாவில் இருந்து ‘ஏர்- சீனா 747’ விமானம் மூலம் 4 குண்டு துளைக்காத சொகுசு கார்கள் சென்னை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. கருப்பு வண்ணம் கொண்ட அந்த சொகுசு கார்கள் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.

    பாதுகாப்பு வசதிகள் கொண்ட இந்த சொகுசு கார்கள் மிகவும் விலை உயர்ந்தவை ஆகும். புறப்பட்ட 8 வினாடியில் 100 கிலோ மீட்டர் வேகத்தை தொட்டு விடும்.

    ஒவ்வொரு காரும் 18 அடி நீளமும், 6.5 அடி அகலமும், 5 அடி உயரமும், 3152 கிலோ எடையும் கொண்டது. 11-ந்தேதி மதியம் சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கும் சீன அதிபர் அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் ஓட்டலுக்கு செல்கிறார். அவருடன் 200 பேர் கொண்ட குழுவினரும் வருகிறார்கள்.

    சீன அதிபர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சமீபத்தில் சீன அதிகாரிகள், மாநில அரசு பிரதிநிதிகள், போலீசாருடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது தங்களுக்கு என்னென்ன தேவைகள் குறித்து அவர்கள் தெரிவித்து உள்ளனர். அதன்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    நீலாங்கரையில் துப்பாக்கி முனையில் கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழிங்கநல்லூர்:

    சிவகங்கையை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவரது நண்பர் முத்துச்செல்வன். இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை. இருவரும் என்ஜினீயர்கள்.

    கடந்த 3-ந் தேதி இரண்டு பேரும் பள்ளிக்கரணையில் நடந்து வரும் கட்டிட பணியை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    பாலவாக்கம் அருகே சென்ற போது மர்ம கும்பல் அவர்களை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி செல்போன்கள் மற்றும் பணத்தை பறித்தனர். இதனை தடுக்க முயன்ற முத்துச்செல்வனின் கையில் கத்தி வெட்டும விழுந்தது.

    இதுகுறித்து நீலாங்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    வழிப்பறியில் ஈடுபட்டது பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய கோபி என்கிற கோபாலகிருஷ்ணன் என்பது தெரிந்தது.

    இந்த நிலையில் அக்கரை டோல்கேட் அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று அவனை துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்தனர்.

    அப்போது கோபி தப்பிப்பதற்காக அருகில் உள்ள பாலத்தில் தாவி குதித்தார். இதில் அவரது கை முறிந்தது. இதையடுத்து கோபியை போலீசார் கைது செய்தனர். அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அவரிடம் இருந்து 2 பட்டா கத்திகள், மோட்டார் சைக்கிள், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அவரது கூட்டாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூஞ்சேரி என்ற இடத்தில் அரசு பஸ்கள் நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    காஞ்சிபுரம்:

    பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி மாமல்லபுரம் நகரம் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் மாமல்லபுரம் நகரத்துக்குள் அரசு பஸ்கள் வர தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாமல்லபுரத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூஞ்சேரி என்ற இடத்தில் அரசு பஸ்கள் நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுச்சேரிக்கு 147 பஸ் சேவைகள் இயக்கப்படுகின்றன. அதே போல் தாம்பரம், செங்கல்பட்டில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    மேலும் புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் சார்பில் 90 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த அரசு பஸ்கள் இ.சி.ஆர். சாலையில் சென்று வருகின்றன.

    அரசு பஸ்கள் அனைத்தும் பூஞ்சேரியிலேயே நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்படுவார்கள். இதற்காக அங்கு தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது.

    இதனால் மாமல்லபுரம் நகரத்துக்குள் அரசு பஸ்கள் செல்ல முடியாது. இந்த தடை சீன அதிபர் மாமல்லபுரத்தில் இருந்து செல்லும் வரை அமலில் இருக்கும்.

    புதுச்சேரிக்கு இயக்கப்படும் தனியார் பஸ்கள் மாமல்லபுரம் அருகே இ.சி.ஆர். சாலையை தவிர்த்து மாற்று பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் மாற்று பாதையில் செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

    மாமல்லபுரம் நகருக்குள் வராமல் மாற்று பாதையில் செல்லுமாறு வாகன ஓட்டிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    மாமல்லபுரம் வரும் சீன அதிபருக்கு பல்வேறு பயங்கரவாத அமைப்பினர் மிரட்டல் விடுத்து கடிதம் எழுதி இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
    சென்னை:

    சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசு முறை பயணமாக நாளை மறுநாள் (11-ந்தேதி) சென்னை வருகிறார். பிரதமர் மோடியும் அன்று சென்னை வருகிறார்.

    சென்னை விமான நிலையத்தில் சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இதன் பின்னர் சீன அதிபர் கிண்டியில் உள்ள சோழா கிராண்ட் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று தங்குகிறார். பிரதமர் மோடி கோவளத்தில் உள்ள தாஜ் ஓட்டலில் தங்க உள்ளார்.

    11-ந்தேதி பிற்பகலில் 2 தலைவர்களும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகிறார்கள். அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, ஐந்து ரதம் ஆகிய இடங்களை பார்வையிடுகிறார்கள். பின்னர் கடற்கரை கோவில் அருகே நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். இதற்காக மாமல்லபுரத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சீன அதிபரின் வருகைக்கு நாளை ஒருநாள் மட்டுமே இருப்பதால், சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சீனாவில் இருந்து வந்துள்ள அந்நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகளும், டெல்லியில் இருந்து வருகை தந்துள்ள மத்திய பாதுகாப்பு குழுவினரும் மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். கடலோர பகுதிகள் முழுவதிலும் கடலோர பாதுகாப்பு படையினரும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.

    கிண்டியில் இருந்து மாமல்லபுரத்துக்கு சுமார் 50 கி.மீ. தூரம் காரிலேயே சீன அதிபர் பயணம் செய்கிறார். இதற்காக அவர் செல்லும் சாலைகளில் வழி நெடுக போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    சீன அதிபரின் பாதுகாப்புக்காக தனித்தனியே போலீஸ் அதிகாரிகள் அடங்கிய குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் சீன அதிபருக்கு பல்வேறு பயங்கரவாத அமைப்பினர் மிரட்டல் விடுத்து கடிதம் எழுதி இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கு இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

    சீன பாதுகாப்பு அதிகாரிகளும், மத்திய பாதுகாப்பு குழுவினரும் தங்களது கண்காணிப்பை பல மடங்கு அதிகரித்துள்ளனர். இதையடுத்து மாமல்லபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகள், லாட்ஜுகளில் சோதனை நடத்த கூடுதல் போலீசார் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

    சீன அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னையில் தங்கியுள்ள திபெத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக 2 நாட்களுக்கு முன்னர் சேலையூரில் 8 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று திபெத் பேராசிரியர் ஒருவரும் கைதானார்.

    திபெத்தியர்களின் எதிர்ப்பால் சீன அதிபரின் வருகையின் போது எந்தவிதமான பிரச்சனைகளும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் போலீசார் மிகுந்த கவனமுடன் செயல்படுகின்றனர். இந்த நிலையில் பயங்கரவாதிகள் பெயரில் வந்துள்ள மிரட்டல் கடிதம் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குறிப்பிட்ட பயங்கரவாத அமைப்பின் பெயரில் இந்த கடிதம் எழுதப்படவில்லை. இருப்பினும் பாதுகாப்பு அதிகாரிகள் இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. சீன அதிபரின் பாதுகாப்பு வி‌ஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    மாமல்லபுரத்தில் பாதுகாப்பு பணி

    இதற்காக மாமல்லபுரத்தில் 800 கேமராக்களை நிறுவி அதன் மூலமும் கண்காணித்து வருகிறார்கள். காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மிரட்டல் கடிதத்தை எழுதிய நபர்கள் திபெத்தியர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்களை பிடிப்பதற்கும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    மாமல்லபுரத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் வெளி மாவட்டங்களில் இருந்து வந்துள்ளனர்.

    இவர்களுடன் 200-க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். 24 மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டுள்ளன.

    பிரபல சிற்பக்கூடங்கள், பூங்கா, குடவரை கோயில்கள் இருக்கும் மலைப்பகுதி, கடற்கரை, மேம்பாலம் மற்றும் புலிக்குகை, பிடார ரதம் என அனைத்து பகுதிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதணை நடத்தி வருகிறார்கள்.

    மாமல்லபுரம் நகரின் உள்ளே வரும் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்களும் விசாரணைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.
    ஆலந்தூரில் ரெயிலில் அடிபட்டு மருத்துவ கல்லூரி மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்: 

    ஆதம்பாக்கம் ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்தவர் ஜோதி டாக்டராக இருக்கிறார். அவரது மகள் அனுசயா (17). இவர் இந்தோனேசியாவில் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார். நேற்று மாலை ஆலந்தூர் நிதிமேல்நிலைப்பள்ளி அருகே தண்டவாளத்தை கடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக வேகமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதனால் பலத்த காயம் அடைந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.  

    பரங்கிமலை ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
    லாரி மீது கார் மோதிய விபத்தில் சென்னை புதுமணத் தம்பதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்மாறன் (வயது21).

    இவரது மனைவி சுவேதா (20). இவர்களுக்கு திருமணமாகி சில மாதங்களே ஆகிறது.

    இவர்கள் சொந்த ஊரான சூலேரிக்காடு கிராமத்திற்கு நேற்று மாலை காரில் சென்று கொண்டிருந்தனர்.

    திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்ற லாரி மீது பயங்கரமாக மோதியது.

    போலீசார் அவர்களை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழ்மாறனும், சுவேதாவும் பரிதாபமாக உயரிழந்தனர்.

    இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வண்டலூர், ஸ்ரீபெரும்புதூரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்கு சிறுவனும், சிறுமியும் பலியாகியுள்ள சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிரட்டி வருகிறது. காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனினும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.

    இதே போல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து உள்ளது. தினந்தோறும் அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களை தனி வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களின் ரத்தமாதிரி பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் வண்டலூர், ஸ்ரீபெரும்புதூரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்கு சிறுவனும், சிறுமியும் பலியாகி உள்ளனர்.

    வண்டலூர் அருகே உள்ள ஓட்டேரி விரிவு, 2-வது தெருவை சேர்ந்தவர் அரிபாபு. இவரது மகன் ராஜேஷ் (வயது 14). மாற்றுத்திறனாளியான இவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ராஜேஷ், அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது.

    இதையடுத்து ராஜேசை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக இறந்தார். அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததாக தெரிகிறது.

    ஸ்ரீபெரும்புதூர், நுஷ்ரத் நகரை சேர்ந்தவர் இக்பால். இவரது மகள் மொகரின் பாத்திமா (வயது 7). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் சிறுமி மொகரின் பாத்திமாவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது.

    இதையடுத்து சிறுமியை ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி சிறுமி மொகரின் பாத்திமா பரிதாபமாக பலியானார். சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததா? என்று விசாரித்து வருகிறார்கள்.

    சிறுமி மர்ம காய்ச்சலுக்கு பலியானதை தொடர்ந்து அப்பகுதியில் வட்டார சுகாதார மருத்துவர் அருண்குமார் தலைமையில் 9 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் முகாம் அமைத்து வீடு வீடாக சென்று ரத்த பரிசோதனை செய்து வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் சுகாதார பணிகள் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கி வருகின்றனர்.
    மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபரும் சந்தித்து பேசுவதால் அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    மாமல்லபுரம்:

    சீன அதிபர் ஜி ஜின் பிங்க் அரசு முறை பயணமாக வருகிற 11-ந் தேதி சென்னை வருகிறார். அன்று பிற்பகல் விமானத்தில் வந்து இறங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் தங்கும் சீன அதிபர் மறுநாள் மாமல்லபுரம் செல்கிறார். அங்கு பிரதமர் மோடியும், சீன அதிபரும் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகிறது.

    வெண்ணெய் உருண்டை பாறை

    மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபரும் உலக புகழ்பெற்ற சுற்றுலா இடங்களான அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோவில், வெண்ணெய் உருண்டை பாறை ஆகியவற்றை பார்வையிடுகிறார்கள். இருவரும் நடந்து சென்றபடியே உரையாடும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக கொரியன் புல்வெளி அமைக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மாமல்லபுரம் முழுவதும் புதுப்பொலிவு பெற்றுள்ளது. இந்த பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாகவும் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் நுழைவதற்கு இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது.

    மாவட்ட கலெக்டர் பொன்னையா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி இன்று காலையில் இருந்து சுற்றுலா பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இது தொடர்பாக கலெக்டர் பொன்னையா கூறும்போது, “சீன அதிபரும், பிரதமரும் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் முடிவடைந்த பின்னர் வழக்கம் போல மீண்டும் சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தை சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்” என்றார்.

    இதன் மூலம் இன்று முதல் வருகிற 12-ந் தேதி வரையில் 5 நாட்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சீன அதிபர் ஜி ஜின் பிங்க் முதலில் மாமல்லபுரம் அருகே உள்ள கோவளத்தில் தங்குவதாகவே இருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் தங்கும் இடத்தில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டது. சீன அதிபருடன் அந்நாட்டின் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் 150 பேர் வரையில் வருகிறார்கள்.

    இவர்கள் அனைவரும் தங்குவதற்கு சென்னை கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலே வசதியாக இருக்கும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் கருதினார்கள். இதையடுத்தே அந்த ஓட்டல் தேர்வு செய்யப்பட்டது.

    கடந்த ஒருவாரத்துக்கு மேலாக ஓட்டலில் சீன பாதுகாப்பு அதிகாரிகளும், சென்னை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். சென்னை மாநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    கிண்டியில் இருந்து 12-ந் தேதி காலையில் சீன அதிபர் ஜி ஜின் பிங்க் காரிலேயே மாமல்லபுரம் செல்கிறார். அங்கு பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பிறகு காரிலேயே சென்னை திரும்பும் அவர் அன்று மாலையிலேயே சீனாவுக்கு புறப்பட்டு செல்கிறார்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் 55 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. இவ்வளவு தூரத்தையும் சீன அதிபர் காரிலேயே கடந்து செல்ல வேண்டி இருப்பதால் போலீசார் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட்டு வருகிறார்கள்.

    விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரையில் அங்குலம் அங்குலமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஒரு இன்ஸ்பெக்டர் வீதம் 55 இன்ஸ்பெக்டர்கள் வழிநெடுகிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 3 கிலோ மீட்டருக்கு ஒரு உதவி கமி‌ஷனர், 9 கிலோ மீட்டருக்கு ஒரு துணை கமி‌ஷனர் என பாதுகாப்பு பணிகள் தனித்தனியாக பிரித்து கொடுக்கப்பட்டுள்ளன.

    வடசென்னை கூடுதல் கமி‌ஷனர் தினகரன் தலைமையிலான போலீசார் சீன அதிபர் காரில் செல்லும் வழிப்பாதைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னையில் உள்ள அனைத்து லாட்ஜ்கள், தங்கும் விடுதிகளிலும் போலீசார் இரவு, பகலாக சோதனை நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த தனிப்படையில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசார் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் பகலில் 3 ஷிப்டுகளாக பணிபுரிந்து வருகிறார்கள். இரவில் இன்னொரு தனிப்படையினர் தனியாக சோதனை நடத்துகிறார்கள்.

    இந்த சோதனையின்போது லாட்ஜூகளில் தங்கியுள்ள சந்தேக நபர்களை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். சென்னையில் உள்ள லாட்ஜ் உரிமையாளர்களுக்கு இது தொடர்பாக உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அடையாள அட்டையின்றி யாருக்கும் அறைகளை ஒதுக்க கூடாது. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கினால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    சென்னை மற்றும் காஞ்சிபுரம் போலீசார் கூட்டாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    கமி‌ஷனர் ஏ.கே.விசுவநாதன் தலைமையில் கூடுதல் கமி‌ஷனர்கள் பிரேமானந்த் சின்ஹா, தினகரன் மற்றும் உயர் அதிகாரிகள் பாதுகாப்பு தொடர்பாக அடிக்கடி கூட்டங்கள் நடத்தி போலீசாருக்கு அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்கள்.

    வெளிமாவட்டங்களில் இருந்தும் உயர் அதிகாரிகள் பாதுகாப்புக்காக சென்னை வந்துள்ளனர்.

    பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் வருவதால் சென்னை மற்றும் மாமல்லபுரம் பகுதிகள் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    சீன அதிபர் வருகைக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் நாளையும், நாளை மறுநாளும் போலீசாரின் கெடுபிடி மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மாமல்லபுரம் சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
    மாமல்லபுரம்:

    பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் வருகிற 12, 13-ந் தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது அவர்கள் புராதன சின்னங்கள் உள்ள பகுதிகளான அர்சுனன் தபசு, பட்டர்பால், கடற்கரை கோயில், ஐந்துரதம் ஆகியவற்றை சுற்றிப் பார்க்கிறார்கள்.

    இதையடுத்து மாமல்லபுரத்தை அழகுப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. மரக்கன்றுகள், புல்வெளிகள் அமைக்கப்படுகின்றன. அங்குள்ள சிலைகளுக்கு வர்ணம் பூசப்படுகின்றன. மேலும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    அர்ஜூனன் தபசு

    இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக மாமல்லபுரம் சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். ஐந்துரதம், கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட இடங்கள் மூடப்பட்டுள்ளன.

    மோடி -ஜி ஜின்பிங் பார்வையிடும் புராதன சின்னங்கள் உள்ள பகுதிகள் அனைத்தும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. 
    காற்று வெளியேற முடியாத வகையில் வீட்டின் வாசல் கதவுகள் மற்றும் ஜன்னல் கதவுகளை பூட்டி வைத்து இருந்ததால் அழுத்தம் காரணமாக வீட்டின் கதவுகள் வெடித்து சிதறியது.
    ஆலந்தூர்:

    சென்னை கிண்டி நேருநகர் வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 60). நேற்று மாலை இவர், தனது வீட்டின் கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டு மருமகள், பேரன் ஆகியோருடன் வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தார். உள்அறையில் ஏ.சி. போட்டு இருந்ததால் அந்த அறை கதவும் மூடி இருந்தது.

    இந்த நிலையில் திடீரென வீட்டின் முன்பக்க வாசல் கதவு, படுக்கை அறை கதவு மற்றும் சமையல் அறை கதவுகள் வெடித்து சிதறின. இதை கண்டதும் மாரிமுத்து, அவருடைய மருமகள் மற்றும் பேரன் ஆகியோர் அலறியடித்து கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்து ஆசுவாசப்படுத்தினர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் கிண்டி உதவி கமிஷனர் சுப்புராயன், இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் வந்து விசாரித்தனர். நல்லவேளையாக இதில் வீட்டில் இருந்த 3 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் கதவுகள் மட்டும் வெடித்து இருப்பது தெரிந்தது. இதற்கான காரணம் குறித்து அறிவதற்காக தடயவியல் துறை துணை இயக்குனர் ஷோபியா ஜோசப் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.

    அதில், ஆவி பிடிப்பதற்காக கியாஸ் அடுப்பில் பாத்திரத்தில் வெந்நீர் சுட வைத்து உள்ளனர். 20 நிமிடங்களுக்கு மேலாக தண்ணீர் கொதித்து கொண்டே இருந்ததால் தண்ணீர் பொங்கி பாத்திரத்தில் இருந்து வெளியே வந்து விழுந்ததால் கியாஸ் அடுப்பு அணைந்துவிட்டது.

    இதனால் அடுப்பில் இருந்து கியாஸ் வெளியேறி சமையல் அறை முழுவதும் பரவியது. வீட்டின் சமையல் அறை, படுக்கை அறை, வாசல் கதவுகள் மற்றும் ஜன்னல் கதவுகள் அனைத்தும் காற்று வெளியேற முடியாத அளவுக்கு பூட்டி இருந்ததால் கியாஸ் வெளியேற முடியாமல், கொதிக்கும் வெந்நீரால் ஏற்பட்ட நீராவியுடன் கலந்து அழுத்தம் காரணமாக இந்த கதவுகள் வெடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ×