என் மலர்
செய்திகள்

சீன அதிபருக்காக சென்னை வந்த குண்டு துளைக்காத 4 கார்கள்
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் பயணம் செய்வதற்காக விலை உயர்ந்த சொகுசு கார்கள் சீனாவில் இருந்து சென்னை கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று மாலை சீனாவில் இருந்து ‘ஏர்- சீனா 747’ விமானம் மூலம் 4 குண்டு துளைக்காத சொகுசு கார்கள் சென்னை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. கருப்பு வண்ணம் கொண்ட அந்த சொகுசு கார்கள் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.
பாதுகாப்பு வசதிகள் கொண்ட இந்த சொகுசு கார்கள் மிகவும் விலை உயர்ந்தவை ஆகும். புறப்பட்ட 8 வினாடியில் 100 கிலோ மீட்டர் வேகத்தை தொட்டு விடும்.
ஒவ்வொரு காரும் 18 அடி நீளமும், 6.5 அடி அகலமும், 5 அடி உயரமும், 3152 கிலோ எடையும் கொண்டது. 11-ந்தேதி மதியம் சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கும் சீன அதிபர் அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் ஓட்டலுக்கு செல்கிறார். அவருடன் 200 பேர் கொண்ட குழுவினரும் வருகிறார்கள்.
சீன அதிபர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சமீபத்தில் சீன அதிகாரிகள், மாநில அரசு பிரதிநிதிகள், போலீசாருடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது தங்களுக்கு என்னென்ன தேவைகள் குறித்து அவர்கள் தெரிவித்து உள்ளனர். அதன்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.






