search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜேஷ்-மொகரின் பாத்திமா
    X
    ராஜேஷ்-மொகரின் பாத்திமா

    வண்டலூர், ஸ்ரீபெரும்புதூரில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன்-சிறுமி பலி

    வண்டலூர், ஸ்ரீபெரும்புதூரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்கு சிறுவனும், சிறுமியும் பலியாகியுள்ள சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    செங்கல்பட்டு:

    தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிரட்டி வருகிறது. காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனினும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.

    இதே போல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து உள்ளது. தினந்தோறும் அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களை தனி வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களின் ரத்தமாதிரி பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் வண்டலூர், ஸ்ரீபெரும்புதூரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்கு சிறுவனும், சிறுமியும் பலியாகி உள்ளனர்.

    வண்டலூர் அருகே உள்ள ஓட்டேரி விரிவு, 2-வது தெருவை சேர்ந்தவர் அரிபாபு. இவரது மகன் ராஜேஷ் (வயது 14). மாற்றுத்திறனாளியான இவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ராஜேஷ், அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது.

    இதையடுத்து ராஜேசை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக இறந்தார். அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததாக தெரிகிறது.

    ஸ்ரீபெரும்புதூர், நுஷ்ரத் நகரை சேர்ந்தவர் இக்பால். இவரது மகள் மொகரின் பாத்திமா (வயது 7). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் சிறுமி மொகரின் பாத்திமாவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது.

    இதையடுத்து சிறுமியை ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி சிறுமி மொகரின் பாத்திமா பரிதாபமாக பலியானார். சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததா? என்று விசாரித்து வருகிறார்கள்.

    சிறுமி மர்ம காய்ச்சலுக்கு பலியானதை தொடர்ந்து அப்பகுதியில் வட்டார சுகாதார மருத்துவர் அருண்குமார் தலைமையில் 9 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் முகாம் அமைத்து வீடு வீடாக சென்று ரத்த பரிசோதனை செய்து வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் சுகாதார பணிகள் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கி வருகின்றனர்.
    Next Story
    ×