என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    செய்யாறில் பஸ்சில் கொல்லப்பட்டவர் பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளி - பரபரப்பு தகவல்

    கொலை செய்யப்பட்ட சதீஷ்குமார் காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடியான ஸ்ரீதரின் கூட்டாளியாக இருந்தார் என்று தெரிய வந்துள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த பிள்ளையார் பாளையம் மடம் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (28). கடந்த 2 மாதத்துக்கு முன்பு அவர் செய்யாறு வேல் சோமசுந்தரம் நகர் பகுதிக்கு சென்று குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    நேற்று காலை திருமணத் தடை நீங்குவதற்காக கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட்டார். பின்னர், செய்யாறு டவுன் புதிய காஞ்சிபுரம் சாலையில் உள்ள திரையரங்கம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு டீ குடித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது காரில் வந்த 10 பேர் கும்பல் சதீஷ்குமாரை பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர். உடனே சதீஷ்குமார், அங்கு வந்த தனியார் பஸ்சில் ஏறினார்.

    பின்னால் ஏறிய கொலை கும்பல் சதீஷ்குமாரை இருக்கையில் வைத்தே கொடூரமாக வெட்டிக் கொன்றனர். பின்னர் அவர்கள் காரில் தப்பிச் சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து செய்யாறு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை கும்பல் தப்பிச் சென்ற காரின் பதிவு எண் அங்குள்ள பெட்ரோல் பங்கின் கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த கார் யாருடையது என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

    இந்த நிலையில் கொல்லப்பட்ட சதீஷ்குமார் காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடியான ஸ்ரீதரின் கூட்டாளியாக இருந்தது தெரிய வந்துள்ளது.

    வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த ரவுடி ஸ்ரீதர் கடந்த 2017-ம் ஆண்டு கம்போடியா நாட்டில் உள்ள ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார்.

    ஸ்ரீதரின் மறைவுக்கு பின்னர் அவருடன் நெருக்கமாக இருந்த தினேஷ், தணிகா ஆகியோர் தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டனர். அவர்களிடையே யார் பெரியவர்? என்பதில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.

    இதில் தினேஷ் கோஷ்டியில் சதீஷ்குமார் இருந்தார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தணிகா கோஷ்டியை சேர்ந்த சிவா என்பவரை கொலை செய்ய முயற்சி நடந்தது.

    இந்த கொலையில் சதீஷ்குமாருக்கு தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதனால் சதீஷ்குமாரை பழிக்குப்பழி வாங்க எதிர் கோஷ்டியினர் திட்டமிட்டு வந்தனர்.

    இந்த நிலையில் செய்யாறில் பஸ்சுக்குள் வைத்து சதீஷ்குமாரை மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்து உள்ளது.

    எனவே ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதற்கிடையே 3 பேரை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது.

    Next Story
    ×