என் மலர்
செய்திகள்

செங்கல்பட்டு அருகே பஸ் மீது ஆம்புலன்சு மோதல்: டிரைவர்-பெண் நோயாளி பலி
செங்கல்பட்டு:
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் கன்னியம்மாள் (வயது 65). இவருக்கு நேற்று நள்ளிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்சு வந்ததும் அதில் கன்னி அம்மாளை ஏற்றி மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து கொண்டு இருந்தனர்.
ஆம்புலன்சை டிரைவர் ஜெயக்குமார் (38) ஓட்டினார். உதவியாளராக தினகரன் இருந்தார். கன்னியம்மாளுடன் உறவினர் ஒருவரும் அம்புலன்சில் வந்தார்.
செங்கல்பட்டு அருகே ஆத்தூர் பகுதியில் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலையில் வந்து கொண்டு இருந்த போது சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த தனியார் கம்பெனி பஸ்சின் பின் பகுதியில் பயங்கரமாக மோதியது.
இதில் ஆம்புலன்சின் முன் பகுதி முழுவதும் நொறுங்கியது. அதில் இருந்த டிரைவர் ஜெயக்குமார், நோயாளி கன்னியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
மேலும் ஆம்புலன்சில் இருந்த உதவியாளர் தினகரன் மற்றும் கன்னியம்மாளின் உறவினர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு டவுன் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
படுகாயம் அடைந்த 2 பேரும் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது பெண் நோயாளியும் ஆம்புலன்சு டிரைவரும் விபத்தில் பலியான சம்பவம் உறவினர்களை சோகம் அடையச் செய்து உள்ளது.






