என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரத்தை அடுத்த சின்னையன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது 42). அத்திவாக்கம் கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் காஞ்சீபுரம் கோனேரிக்குப்பம் பகுதி வழியாக மோட்டார்சைக்கிளில் காஞ்சீபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை துறைமுகத்தில் இருந்து வந்த ஒரு லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் மோகன்தாஸ் படுகாயம் அடைந்து காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். உயிரிழந்த மோகன்தாசுக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்
தமிழகத்தில் கொரேனா வைரஸ் தாக்கம் உச்சத்தில் உள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் பலருக்கும் நோய் தொற்றி உள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனியின் மனைவி மற்றும் மகளுக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம். நெசவுத்தொழிலாளியான இவருக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். இவர்களது மகன்களில் ஒருவர் ஜெயச்சந்திரன் (வயது 13). 9-ம் வகுப்பு மாணவன்.
கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்து வந்த மாணவன் ஜெயச்சந்திரன், எந்நேரமும் டி.வி.யையே பார்த்துக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதனை அவனது பெற்றோர் கண்டித்தனர்.
இதனால் மனம் உடைந்த ஜெயச்சந்திரன், வீட்டில் தூக்குப்போட்டு கொண்டான். இதனால் அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர், ஜெயச்சந்திரனை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜெயச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
தமிழகத்தில் கொரேனா வைரஸ் தாக்கம் உச்சத்தில் உள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் பலருக்கும் நோய் தொற்றி உள்ளது.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் மரணம் அடைந்த நிலையில், மற்றொரு எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:-
காஞ்சிபுரம் நகரில் பொதுமக்கள் வெளியே வரும் போது கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் நகராட்சியில் முக கவசம் அணியாமல் வந்த ஒரு நபருக்கு ரூ.100 வீதம், இது வரை 892 பேருக்கு அபராதமாக ரூ.89 ஆயிரத்து 200 விதிக்கப்பட்டு அவர்களிடம் வசூலிக்கப்பட்டது. இந்த அபராத தொகை காஞ்சிபுரம் நகராட்சி கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
மேலும் இந்த அபராத தொகை செலுத்தியவர்களுக்கு துணிகளாலான 3 முக கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டு அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர். சமூக இடைவெளியை பின்பற்றாத மளிகை கடை, துணி கடை, பழக்கடை உள்ளிட்ட 15 கடைகள் மூடப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்த குணகரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகள் ரேணுகாதேவி (வயது 32). இவரது பெற்றோர் இவருக்கு பல இடங்களில் மாப்பிள்ளை பார்த்தும் திருமணம் நிச்சயம் ஆகவில்லை.
தனக்கு திருமணம் ஆகாததால் ரேணுகாதேவி கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்தார். இதனால் விரக்தி அடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார்.
உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் ரேணுகாதேவி உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரேணுகாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 36,841 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 19,333 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 326-ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 600 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 615 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 360 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரேனா நோய்த்தொற்று பரவுதலை தடுக்கும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டு உள்ளார்.
இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் பெரு நகராட்சி கமிஷனர் மகேஸ்வரி காஞ்சிபுரம் காந்தி சாலை, விளக்கடி கோயில் தெரு, மேட்டுத்தெரு, வள்ளல் பச்சையப்பன் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள நகைக்கடை, சைக்கிள் விற்பனை நிலையம், பழக் கடை, ஜியோ விற்பனை நிலையம் உள்ளிட்ட கடைகளில் ஆய்வு மேற் கொண்டார். அப்போது சமூக இடை வெளியை முறையாக பின் பற்றாத 11 கடைகளுக்கு சீல் வைத்து எச்சரித்தார்.
இதேபோல் காஞ்சிபுரம் வட்டாட்சியர் பவானி துணை வட்டாட்சியர் நடராஜன் மற்றும் பெரு நகராட்சி ஊழியர்கள் இணைந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நகர சாலைகளில் இருசக்கர வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.100 அபராதம் விதித்தனர்.
ஒரேநாளில் 750 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன்மூலம் ரூ. 75ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
மதுராந்தகம்:
செய்யூர் அருகே உள்ள பெருக்கரணை ஊராட்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சியில் கடந்த மூன்று நாட்களாக குடி தண்ணீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர். இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்று தெரிகிறது.
தொடர்ந்து குடிநீர் வழங்கப்படாததால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் குடிதண்ணீர் கேட்டு அப்பகுதியில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரணி மற்றும் நிர்மலன் ஆகியோர் விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். உடனடியாக குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர், ஒரு மணி நேரத்தில் மின் மோட்டார் சீரமைத்து பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது.






