என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுகவினர் காஞ்சீபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    காஞ்சீபுரம்:

    தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக காஞ்சீபுரம் காந்தி ரோடு தேரடி பகுதியில் காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. நகர இளைஞரணி சார்பில் இளைஞரணி அமைப்பாளர் அர்ஜுன், வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் திரளான தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையில் போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    உத்திரமேரூரில் தி.மு.க. இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் மணி தலைமையில் தி.மு.க.வினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த பழவந்தாங்கல் பி.வி.நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவருடைய மனைவி ரமணி (வயது 72). இவர், மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருக்கு ராம்பிரபு (32) என்ற மகனும், பிரியா என்ற மகளும் உள்ளனர்.

    தட்சிணாமூர்த்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ரமணி, திருமணம் ஆகாத தனது மகன் ராம்பிரபுவுடன் வசித்து வந்தார்.

    சாப்ட்வேர் என்ஜினீயரான ராம்பிரபு, சென்னையில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த ஓராண்டுக்கு முன்பு ராம்பிரபு, தென் அமெரிக்காவில் பணியாற்றினார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதன்பிறகு சென்னை திரும்பி வந்த அவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். வேளச்சேரியில் உள்ள ஆஸ்பத்திரியில் இருதயத்தில் இருந்த கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த ராம்பிரபு, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக இறந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ரமணி, தனது மகன் இறந்த துக்கம் தாங்காமல் வீட்டில் உள்ள தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்த ரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பழவந்தாங்கல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    காஞ்சிபுரத்தில் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த உடற்கல்வி ஆசிரியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ரெட்டிபேட்டை தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 40). இவர் காஞ்சீபுரத்தை அடுத்த ஒரு பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. 

    இதில் மனமுடைந்த பாஸ்கர் வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த பாஸ்கருக்கு மனைவியும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    இதுகுறித்து உயிரிழந்த பாஸ்கரின் தந்தை தேவராஜன் சின்ன காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அருண் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    தலை தீபாவளி கொண்டாடிவிட்டு சென்னை வந்த 2 நாளில், வீட்டின் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.
    ஆலந்தூர்:

    சென்னை மடிப்பாக்கம் அடுத்த புழுதிவாக்கம் ராம்நகர் 11-வது தெருவில் வசித்து வந்தவர் வேங்கை ராஜன் (வயது 27). இவரது சொந்த ஊர் மதுரை தெப்பக்குளம் ஆகும். இவர், ஆஸ்பத்திரிக்கு தேவையான உபகரணங்களை தயாரித்து வினியோகம் செய்யும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இவருடன் மதுரையைச் சேர்ந்த நண்பர்கள் 13 பேர் ஒன்றாக ஒரே வீட்டில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். வேங்கைராஜனுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணமானது. மனைவியுடன் தலை தீபாவளியை கொண்டாடிவிட்டு மதுரையில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார்.

    நேற்று அதிகாலை தன்னுடன் தங்கியிருக்கும் அருண் என்ற நண்பர் கதவை தட்டினார். இதனால் தூக்க கலக்கத்தில் வெளியே வந்த வேங்கைராஜன் கதவை திறந்து விட்டார். அதன்பிறகு காலையில் மற்றொரு நண்பரான குமரேசன், ஊரில் இருந்து திரும்பி வந்தார்.

    அப்போது வீட்டின் அருகில் உள்ள காலி மைதானத்தில் வேங்கை ராஜன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மடிப்பாக்கம் போலீசார், வேங்கை ராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில், தூக்க கலக்கத்தில் வந்து கதவை திறந்த வேங்கை ராஜன், வீட்டின் 2-வது மாடியில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தது தெரிந்தது. இதுபற்றி மடிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆன்லைன் சூதாட்டத்தை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நவீன தொழில் நுட்பத்தின் வளர்ச்சியை பல்வேறு மக்கள் தங்களது வாழ்க்கையின் வளர்ச்சி பாதைக்கு பயன்படுத்திக்கொள்கின்றனர்.

    ஆனால் சிலரது அதீத ஆசையால் திரைப்படங்களைப் பார்த்து உடனடியாக பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆன்லைன் சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.

    இதன் விளைவாக பல்வேறு தற்கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன. பெற்றோர்கள் பலர் தங்களது குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்துவிட்டால் அமைதியாக இருக்கிறார்கள் என்ற நோக்கத்தில் கொடுக்கிறார்கள். அவர்கள் அதை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை கவனிப்பதில்லை. காஞ்சீபுரம் போலீஸ் துறை சார்பில் ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே பொதுமக்கள் ஆன்லைன் சூதாட்டங்களை தவிர்க்கவேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஒரகடம் அருகே பெய்து வரும் தொடர் மழையால் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் வல்லக்கோட்டை எறையூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த எறையூர் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தேவனேரி ஏரி உள்ளது. அந்த பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் இந்த ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் எறையூர் பகுதியில் இருந்து வல்லக்கோட்டை பகுதிக்கு செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லம் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

    மேலும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்து விடுமோ என்ற அச்சத்தில் அந்த பகுதி மக்கள் உள்ளனர். பொதுப் பணித்துறை அதிகாரிகள் தேவனேரி ஏரி பகுதியில் கரைகள் பலமாக உள்ளனவா என்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மோசமான வானிலை காரணமாக மைசூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் திடீரென ஏற்பட்ட கோளாறால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    ஆலந்தூர்:

    கர்நாடக மாநிலம் பெல்காமில் இருந்து மைசூருக்கு நேற்று இரவு தனியார் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் மைசூரில் இறங்க முடியவில்லை. எனவே, சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.

    அதைதொடர்ந்து, அந்த விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதிகாரிகள் தரை இறங்க அனுமதி அளித்தனர்.

    இந்தநிலையில், விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. எனவே, அவசரமாக தரை இறங்க ஏற்பாடு செய்யப்பட்டது. பாதுகாப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன.

    உடனே தரை இறங்கி ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்த அந்த விமானம் திடீர் என்று பாதி வழியில் நின்றது. இதனால் முதலாவது ஓடு தளத்தில் தரை இறங்க வேண்டிய சென்னை விமானங்கள் 2-வது ஓடு தளத்தில் தரை இறக்கப்பட்டன.

    இந்த விமானத்தில், 47 பயணிகள், 5 ஊழியர்கள் உள்பட 52 பேர் இருந்தனர். சரியான நேரத்தில் விமானி கோளாறை கண்டு பிடித்து அவசரமாக விமானத்தை தரை இறக்கியதால் 52 பேரும் உயிர் தப்பினார்கள்.

    ‘ஓடு தளத்தில் நின்ற விமானத்தில், சற்று நேரத்துக்கு முன்பு இது நிகழ்ந்திருந்தால், பெரிய விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. விமானியின் சாமார்த்தியத்தால் 52 பேர் உயிர் பாதுகாக்கப்பட்டு உள்ளது’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஓடுதளத்தில் நின்ற விமானம் இழுவை வாகனம் மூலம் அங்கிருந்து கொண்டு போகப்பட்டு எந்திரம் சரி செய்யப்பட்டது. பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு பயணிகள் தங்குமிடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வந்த ரூ.98 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 900 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

    அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது தரீக் (வயது 36), சையத் முகமது பாரீஸ் (34), தஸ்தகீர் (34), சென்னையை சேர்ந்த சிக்கந்தர் மஸ்தான் (34), ரகுமான்கான் (31) ஆகிய 5 பேரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை.

    பின்னர் 5 பேரையும் தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அதில் அவர்கள் கால் சட்டை மற்றும் உள்ளாடைகளுக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து 5 பேரிடம் இருந்தும் ரூ.98 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 900 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 5 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சீபுரம் அருகே விஷம் குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் சீயாட்டி கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 53). கூலித்தொழிலாளி. மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வலி தாங்க முடியாமல் மனம் உடைந்த வெங்கடேசன், வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து ஆபத்தான நிலையில் கிடந்தார். 

    அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    தாம்பரம் அருகே 18 வயதுடைய கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
    தாம்பரம்:

    சென்னை தாம்பரம் அடுத்த மகாலட்சுமி நகர் மசூதி காலனியைச் சேர்ந்தவர் ஷேக் முகமது (வயது 20). இவர், மேடவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை முதலாமாண்டு பட்டபடிப்பு படித்து வருகிறார்.

    இவர், 18 வயதுடைய கல்லூரி மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் நெருங்கி பழகியதால் மாணவி கர்ப்பமானார். அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாணவி வற்புறுத்தினார்.

    ஆனால் ஷேக் முகமது, மாணவியை திருமணம் செய்ய மறுத்தார். இதுபற்றி மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் தாம்பரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷேக் முகமதுவை கைது செய்தனர்.
    தீபாவளி பண்டிகையை கொண்டாட புத்தாடை வாங்கி கொடுக்காததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கரிக்கலவாக்கம் கிராமம், விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவருடைய மகன் சுனில் (வயது 19). இவர், 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு கூலி வேலை செய்து வந்தார்.

    இவர், தனது தந்தை பாலாஜியிடம் தீபாவளி பண்டிகையை கொண்டாட புத்தாடை வாங்கி தரும்படி கேட்டார். அதற்கு அவர், தீபாவளிக்கு முந்தைய நாள் வாங்கி தருகிறேன் என்று கூறினார்.

    ஆனால் சுனில், உடனடியாக தனக்கு புத்தாடை வாங்கி தரும்படி தந்தையை வலியுறுத்தினார். மேலும் தனது தந்தை உடனடியாக புத்தாடை வாங்கி கொடுக்காததால மனமுடைந்த சுனில் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவலறிந்த வெங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுனிலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்நாட்டு விமானங்களில் பயண கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. திருச்சி, தூத்துக்குடிக்கு செல்ல ரூ.3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    ஆலந்தூர்:

    நாடு முழுவதும் வருகின்ற 14-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அனைவரும் சொந்த ஊர் செல்ல ஆர்வமாக உள்ளனர். இதனால் கொரோனா ஊரடங்கு காலத்திலும், பொதுமக்கள் வெளிமாவட்ட மற்றும் மாநிலங்களில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு செல்ல பஸ், ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முண்டியடித்தனர். பஸ், ரெயிலில் டிக்கெட் கிடைக்காத பலர் கடைசி நேரத்தில் விமானங்களில் சென்று குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாட தயாராகி கொண்டிருக்கின்றனா். இதன் காரணமாக சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கிற்கு பின்பு கடந்த மே 25-ந் தேதியில் இருந்து உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கியது முதல் இதுவரை அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 180 உள்நாட்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.

    தற்போது தீபாவளி பண்டிகை காரணமாக பயணிகள் வரத்து அதிகமானதால் நேற்று முதல் 200 விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து வெளிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு 100 விமானங்கள் செல்வதற்கும், பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து 100 விமானங்கள் வரவும் உள்ளன. மத்திய அரசு அதிகபட்சமாக 60 சதவீத உள்நாட்டு விமானங்களை இயக்க அனுமதியளித்து உள்ளது.

    இந்த அடிப்படையில் விமான சேவை எண்ணிக்கை தற்போது 240 ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தீபாவளி நெருங்குவதையொட்டி, முந்தைய நாட்களான குறிப்பாக வரும் 13-ந் தேதி வரை பயண டிக்கெட்களின் கட்டணங்கள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து மதுரை செல்ல வழக்கமாக ரூ.3,500 இருந்த கட்டணம் தற்போது ரூ.6 ஆயிரத்தையும் கடந்துள்ளது. அதுவே உயர் வகுப்பாக இருந்தால் கட்டணம் ரூ.20 ஆயிரமாக அதிகரித்துள்ளது. தூத்துக்குடிக்கு சாதாரண நாட்களில் ரூ.3 ஆயிரமாக டிக்கெட் கட்டணம் இருக்கும். ஆனால் தற்போது ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.7 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. திருச்சிக்கு வழக்கமாக ரூ.2,500 டிக்கெட் கட்டணம் தற்போது ரூ.7 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. சேலத்திற்கு ரூ.2,300 குறைந்த பட்ச கட்டணம் தற்போது ரூ.3,900 வரை வசூலிக்கப்படுகிறது. அதுபோல் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பாட்னா, மும்பை, ஐதராபாத் ஆகிய வழித்தடங்களிலும் விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    தீபாவளிக்கு முந்தைய தினமான 13-ந் தேதி வரைதான் இந்த கூடுதல் கட்டணம் இணையதளத்தில் காட்டுகிறது. தீபாவளி தினமான 14-ந் தேதியில் இருந்து மீண்டும் பழைய குறைந்த கட்டணமே இணையதளத்தில் காட்டுகிறது.

    இதுபற்றி விமான நிறுவன வட்டாரங்களில் கேட்டதற்கு, விமானங்களில் தீபாவளி கூட்டம் காரணமாக குறைந்த கட்டண டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவாகிவிட்டன. தற்போது அதிக கட்டண டிக்கெட்டுகள் மற்றும் உயர் வகுப்பு டிக்கெட்டுகள் தான் கிடைக்கப்பெறுகிறது. இது வழக்கமான நடைமுறை தான் என்று தெரிவித்தனர். இந்த திடீா் கட்டண உயர்வால் தீபாவளி கொண்டாட விமானத்தில் சொந்த ஊர் செல்ல இருந்த பயணிகள் கவலையடைந்து உள்ளனர்.
    ×