என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    மாங்காடு அருகே சினிமா படத்தொகுப்பு உதவியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பூந்தமல்லி:

    மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 23). வடபழனியில் உள்ள சினிமா கம்பெனியில் படத்தொகுப்பு உதவியாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி வர்ஷா. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வர்ஷா தனது கணவரிடம் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் மன உளைச்சலில் இருந்து வந்த பாலாஜி நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டின் மேல் அறைக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. அவரது பெற்றோர் சென்று பார்த்தபோது பாலாஜி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

    இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாலாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார்ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    நீர்வரத்து கால்வாய் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள 9 வீடுகளுக்கு உடனடியாக நோட்டீஸ் வழங்கி அந்த ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதற்கு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மீனாட்சி நகர் வழியாக கூடுவாஞ்சேரி ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து அங்குள்ள தனியார் பள்ளி ஒன்று சுற்றுச்சுவர் மற்றும் சில கட்டிடங்களை கட்டி இருந்தது. இதனால் மழைக்காலங்களில் மீனாட்சி நகர் பகுதி மக்கள் மழை பாதிப்புகளால் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

    இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த புகாரின் பேரில் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் தாம்பரம் வருவாய் ஆர்.டி.ஓ. அறிவுடைநம்பி, வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் சென்று கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த பள்ளி சுற்றுச்சுவர் மற்றும் சில கட்டிடங்களை இடித்து அகற்றினார்கள்.

    இதையடுத்து அகற்றப்பட்ட இடத்தில் கால்வாய் அமைக்கும் பணியும் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் நேற்று கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றபட்ட இடத்தை ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா நேரில் சென்று ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார். மேலும் இதே நீர்வரத்து கால்வாய் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள 9 வீடுகளுக்கு உடனடியாக நோட்டீஸ் வழங்கி அந்த ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதற்கு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
    மாங்காடு அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பூந்தமல்லி:

    மாங்காடு அடுத்த நெல்லிதோப்பு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 24), இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கவுசல்யா (20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தியாகராஜன் வீட்டில் இருந்த அறையில் தூக்கில் தொங்குவதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்துபோன தியாகராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீஸ் விசாரணையில் தியாகராஜன் கடந்த மாதம் அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தாக்கியதில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தவர் என்பதும் மாங்காடு போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

    மேலும் இறந்துபோன தியாகராஜனுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாகவும் சமீபகாலமாக இருவரும் பார்க்கும் போதெல்லாம் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் இருவரும் எதிரெதிராக வேட்பாளர்களுக்கு வேலை செய்ததாகவும் அதன் காரணமாக பிரச்சினை ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் ஏற்படுத்திய மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் மற்றும் நண்பர்கள் மாங்காடு போலீசில் புகார் அளிக்க வந்தனர். போலீசார் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து மாங்காடு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
    வேலகவுண்டம்பட்டி அருகே மின்மோட்டார் திருடிய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பரமத்திவேலூர்:

    வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அத்தியப்பன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 40). விவசாயி. இவர் தனது வீட்டின் அருகே தண்ணீர் இரைப்பதற்காக கம்பரசர் மின்மோட்டார் வைத்திருந்தார். இந்த நிலையில் சதீஷ்குமார் வெளியூர் சென்றுவிட்டு கடந்த 15-ந் தேதி வீட்டிற்கு வந்தபோது கம்பரசர் மின் மோட்டார் காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டார். பின்னர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் மின்மோட்டார் கிடைக்காததால் இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மின்மோட்டாரை திருடிய நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் நாமக்கல் மேட்டுத்தெருவில் உள்ள ஒரு கடையில் கம்பரசர் மின் மோட்டாரை விற்பனை செய்வதற்காக ஒருவர் கொண்டு வந்தது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் மின்மோட்டாரை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதில் அவர் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள தத்தாதிரிபுரம் பப்புல் நாய்க்கன்காடு பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் லாரி டிரைவர் பொன்மணி (32) என்பதும், இவர் அத்தியப்பன்பாளையத்தில் சதீஷ்குமார் வீட்டில் கம்பரசர் மின் மோட்டார் திருடியதும் தெரியவந்தது. பின்னர் லாரி டிரைவர் பொன்மணியை போலீசார் கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வீட்டுமனைகளாக பிரித்து அனுமதி வழங்க ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
    பூந்தமல்லி:

    சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் குன்றத்தூரில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து அனுமதி வழங்க குன்றத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். சம்பந்தப்பட்ட நபரின் நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து அனுமதி வழங்குவதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் தன்ராஜ்க்கு ரூ.25 ஆயிரமும், தனக்கு ரூ.10 ஆயிரமும் லஞ்சமாக தர வேண்டும் என பேரூராட்சி கிளார்க் செல்வராஜ் கேட்டதாக தெரிகிறது.

    தான் தொடர்ந்து அலக்கழிக்கப்பட்டதால் இதுகுறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சென்னை - 3 பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினார்கள். பூந்தமல்லியில் உள்ள அரசு கருவூலம் அருகே வைத்து பேரூராட்சி கிளார்க் செல்வராஜ் பணத்தை வாங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக அவரை கைது செய்து அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் செங்கல்பட்டு அடுத்த கருங்குழியில் உள்ள அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
    கோவை அருகே மடிக்கணினி திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 40). தனியார் நிறுவன மேலாளர். சம்பவத்தன்று இவர் கோவை-திருச்சி ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகே தனது காரை நிறுத்தி இருந்தார். காரில் இவரது மடிக்கணினி இருந்தது. இதனை மர்ம நபர் காரை திறந்து மடிக்கணினியை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில்சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரத்தில் ரவுடிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட பின்னர் ஆதரவாளர்களான தினேஷ் ஒரு கோஷ்டி ஆகவும் தணிகா ஒரு கோஷ்டி ஆகவும் செயல்பட்டு வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக எம்.சுதாகர் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்தார். பல ரவுடிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே ரவுடிகளுக்கிடையேயான மோதலில் காஞ்சிபுரம், இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பிரபு என்பவரின் வீட்டுக்கு சென்று நேற்று இரவு மர்ம கும்பல் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டனர்.

    இதனை தடுக்க முயன்ற பிரபுவின் மகன்கள் கமலேஷ், ஜெகன்நாதன் ஆகிய 2 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இவர்களில் கமலேஷ் கல்லூரி மாணவர் ஆவார். அவருக்கு தலையிலும், இடது கையிலும் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து ரவுடி கும்பல் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை நொறுக்கி விட்டு தப்பி சென்று விட்டனர். பலத்த வெட்டு காயம் அடைந்த கமலேசும், ஜெகன்நாதனும் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல் அதேபகுதி சாலை தெருவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த கும்பல் கடையின் முன்பகுதியை அடித்து நொறுக்கி விட்டு பொருட்களை சேதப்படுத்தி தப்பினர்.

    சிறுவாக்கம் பகுதியில் ஏரிக்கரை அருகே மீன் ஏலம் விடுவதில் ஏற்பட்ட மோதலில் ராஜமன்னார் மற்றும் வெங்கடேசன் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

    இதில் ராஜமன்னார் ஆபத்தான நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த 3 சம்பவத்திலும் ஒரே கும்பல் ஈடுபட்டதாக தெரிகிறது. ரவுடிகளை ஒழிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். ரவுடி கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாட்டறம்பள்ளி அருகே கல்லூரிக்கு சென்ற மாணவர் மாயமானது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் மேல்மல்லப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் கோபி (வயது 21). இவர் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள தனியார் கலை கல்லூரியில் பிகாம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் கடந்த 15-ம் தேதி தனது வீட்டில் இருந்து கிருஷ்ணகிரி கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இதனால் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து தாயார் சின்ன பாப்பா நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவரை தேடி வருகிறனர்.
    தொடர்மழை காரணமாக காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் குளம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முழுமையாக நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாட்கள் அத்தி வரதர் வைபவ திருவிழா நடைபெறுவது வழக்கம் கடைசியாக 2019-ம் ஆண்டு நடைபெற்றது.

    2019-ம் ஆண்டுக்கு பிறகு அத்தி வரதர் வைக்கப்பட்டுள்ள ஆனந்தசரஸ் குளத்தில் தற்போது தண்ணீர் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

    வழக்கமாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு தமிழகம் மட்டும் இல்லாமல் குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா என பல்வேறு வெளி மாநில, வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். தற்போது அத்தி வரதர் கோவில் குளம் நிரம்பியதால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் கோவிலுக்கு தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து குளத்தில் நின்று புகைப்படம் எடுத்து சென்று மகிழ்ந்து வருகின்றனர்.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த அத்தி வரதர் திருவிழாவின் போது ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    நமது நதிகள் அனைத்தும் இதேபோன்று சுத்தமாக இருக்க வேண்டும் என என ஜல் சக்தி அமைச்சகம் கூறி உள்ளது.
    புதுடெல்லி:

    நதிநீரை மாசுபடுத்தாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், பெரும்பாலான நதிகளில் கழிவுகளை கலந்து அசுத்தமாக்குவது தொடர்கிறது. நகரங்களின் கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் நதிகளில் கலப்பதால் இந்தியாவில் நதிகள் மாசுபடுவதற்கு முக்கிய காரணம். நதிகளை தூய்மைப்படுத்துவதற்காக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், மேகாலயாவில் உள்ள ஒரு நதியின் தூய்மையை பிரதிபலிக்கும் வகையிலான ஒரு புகைப்படத்தை ஜல் சக்தி அமைச்சகம் டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. 

    அதில், ‘உலகின் தூய்மையான நதிகளில் இதுவும் ஒன்று. இது இந்தியாவில் உள்ளது. மேகாலயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங்கிலிருந்து 100 கிமீ தொலைவில் உள்ள உம்ங்கோட் நதி. படகு காற்றில் மிதப்பது போல் தெரிகிறது; தண்ணீர் மிகவும் சுத்தமாக உள்ளது. நமது நதிகள் அனைத்தும் இதேபோன்று சுத்தமாக இருக்க வேண்டும். மேகாலயா மக்களுக்கு நன்றி’ என ஜல் சக்தி அமைச்சகம் கூறி உள்ளது.

    நதியில் செல்லும் படகு

    இந்த புகைப்படம் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. நேற்று காலை இந்த புகைப்படம் வெளியிடப்பட்டது. இன்று காலை நிலவரப்படி 19000க்கும் மேற்பட்ட லைக்குகளையும், 3000க்கும் மேற்பட்ட ரீட்வீட்டுகளையும் பெற்றுள்ளது. 

    புகைப்படத்தில் உள்ள அந்த நதியின் தண்ணீர் மிகவும் சுத்தமாகவும், வெளிப்படையாகவும் இருப்பதால், கீழே உள்ள பசுமை மற்றும் கூழாங்கற்கள், சிறிய பாறைகள் தெளிவாகத் தெரிகின்றன. புகைப்படத்தைப் பார்த்த பலர் ஆச்சரியம் அடைந்ததுடன், தங்களால் இதை நம்ப முடியவில்லை என கருத்து பதிவிட்டுள்ளனர். 

    இப்போது உம்ங்கோட் நதியைப் பற்றி ஏராளமான மக்கள் அறிந்திருப்பதால், அதையும் மாசுபடுத்துவதற்கு விரைந்து செல்வார்கள் என்று சிலர் எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளனர்.

    இதுபோன்று யமுனை நதி எப்போது சுத்தமாகும்? என ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார். மக்கள்தொகை மிகவும்  குறைவு என்பதால் இந்த அளவுக்கு நதி சுத்தமாக இருப்பதாக ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான நதிகள் தூய்மையாக இருப்பதாக ஒருவர் கூறி உள்ளார்.  இது போட்டோஷாப் செய்யப்பட்ட படமாக இருக்கலாம் என்றும் ஒரு நபர் சந்தேகம் எழுப்பியிருக்கிறார். 
    உத்திரமேரூர் அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்திரமேரூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த காவனூர் புதுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 65). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். மழையின் காரணமாக கடந்த 2 நாட்களாக இவரது வீட்டில் மின்சாரம் இல்லாமல் இருந்தது. இதுகுறித்து அவர் புகார் செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் யாரும் சரி செய்யாததால் நேற்று பகல் 12 மணி அளவில் பழனி வீட்டின் அருகே இருந்த மின்கம்பத்தில் ஏறி சரி செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது.

    அப்போது திடீரென அவர் மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பழனி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக இருக்கும் பாக்யராஜ், தனது மகனுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார்.
    தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் பாக்யராஜ். பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். திரைக்கதை எழுதுவதில் திறமையானவர் என்ற பாராட்டுகளையும் பெற்றவர். தற்போது பல படங்களில் குணச்சித்திரம் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

    பாக்யராஜ்

    இவரது மகன் சாந்தனு தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், பாக்யராஜ் புதிய போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார். அந்த போட்டோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. மேலும் ரசிகர்கள் பலர் சாந்தனுக்கு டஃப் கொடுக்கும் பாக்யராஜ் என்று மீம்ஸ் கிரியேட் செய்து பகிர்ந்து இருக்கிறார்கள்.

    பாக்யராஜ்
    ×