என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும், வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க கோரி காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே காவாலன் கேட் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சாரங்கன் தலைமையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய், கரும்பு மற்றும் காய்கறிகள் பாதிப்புக்கு ஏற்றவாறு நிவாரணம் வழங்க கோரியும், மழையின் போது வேலை, வருமானயின்றி உள்ள ஏழை குடும்பத்திற்கும் மற்றும் இருளர், இன மக்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பப்பட்டது.
இதில் மாவட்ட செயலாளர் நேரு, நிர்வாகிகள் பெருமாள், சங்கர், லிங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிபாக்கம் பகுதியில் நுகர்பொருள் வாணிப கிடங்கு உள்ளது.
இங்கு பல மாதங்களுக்கு தேவையான 7 ஆயிரம் டன் அரிசி மற்றும் நெல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.
இந்த கிடங்கில் வைக்கப்பட்டுள்ள சுமார் 2,700 டன் அரிசி மூட்டைகள் தரமற்று கருப்பு, மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்திற்கு மாறி சேதம் அடைந்து உள்ளன.
இதேபோல் இந்த கிடங்கில் திறந்தவெளியில் வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன. இதனால் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூட்டைகளில் நெல்கள் முளைத்து உள்ளன.
இதனால் காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளுக்கு அரிசி மூட்டைகளை விநியோகப்பதில் பிரச்சனை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
எனவே அதிகாரிகள் கிடங்கில் உள்ள அனைத்து அரிசி மூட்டைகளையும், நெல் மூட்டைகளையும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டத்துக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர், படப்பை, சுங்குவார்சத்திரம் பகுதிகளில் தொழிற் சாலைகளில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்தை தடுக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் மேற்பார்வையில் கட்டப்பஞ்சாயத்து ஒழிப்பு பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் கூடுதல் டி.எஸ்.பி. வெள்ளத்துரை நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பொறுப்பேற்ற பிறகு கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளை பிடிக்க அதிரடி வேட்டை நடைபெற்று வருகிறது. இதனால் ரவுடிகள பலர் தலைமறைவாக உள்ளனர்.
இந்தநிலையில் சுங்குவார்சத்திரத்தை சேர்ந்த பிரபல ரவுடியான குணாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஆயுதப்படை போலீஸ்காரர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏ பிளஸ் ரவுடியான குணாவுக்கு ஆதரவாக செயல்பட்டு கீரநல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை மிரட்டி நிலத்தை அபகரிக்க முயன்றதாக காவலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையிலேயே காவலர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதே குற்றச்சாட்டின் பேரில் மேலும் 2 காவலர்கள் மீதும் புகார் கூறப்பட்டுள்ளது. அவர்கள் மீதும் விரைவில் நடவடிக்கை பாயும் என தெரிகிறது.
காஞ்சிபுரம்:
கடந்த வருடம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் காஞ்சிபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அதில் பலர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆகியோர்கள் முன்கள பணியாளர்களாக கருதப்பட்டு அவர்களுக்கு ஊக்க ஊதியம் அளிக்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளராக வேலை செய்த 147 பேருக்கும் இதுவரை ஊக்க ஊதியம் கிடைக்கவில்லை. இதை கண்டித்தும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்று கோரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகளின் கூடுதல் இயக்குநர் அசோக்குமார் பேச்சுவார்ததை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தார்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சேந்தமங்கலம் கிராமம் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் சுந்தரராஜன். இவர் மூளையில் அறுவை சிகிச்சை செய்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவருடைய மருத்துவ செலவுக்காக வீட்டில் 3 லட்சம் பணம் வைத்து உள்ளனர். வீட்டில் உள்ள அனைவரும் சுந்தர்ராஜனை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் சுந்தர்ராஜன் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3.25 சவரன் மற்றும் 3 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
அதேபோல் சுந்தர்ராஜன் வீட்டின் பின்புறம் குளக்கரை தெருவில் ராமன் என்பவர் வீட்டில் வெள்ளி கொலுசு மற்றும் அவர் வீட்டில் அருகிலுள்ள மணி என்பவர் வீட்டில் 4 ஆடுகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் செய்தனர்.
தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் துணைமின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் வருகிற 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த நேரத்தில் காஞ்சிபுரம் நகரம் மற்றும் நகரத்தை ஒட்டியுள்ள பாலியர்மேடு, திருகாலிமேடு, வெள்ளைகேட், காரைப்பேட்டை, கூரம், கீழம்பி, திம்மசமுத்திரம், கே.வி.வேளியூர் துணை மின் நிலையங்களைச் சேர்ந்த கிராமங்களிலும் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும். இந்த தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் காஞ்சிபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் சரவணதங்கம் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மதியம் முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து கனமழை கொட்டிதீர்த்தது. இதன் காரணமாக அனைத்து சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன.
இதனால் விமான பயணம் மேற்கொள்ள வேண்டியவர்கள் சரியான நேரத்திற்கு விமான நிலையம் வர முடியவில்லை. பயணிகள் மட்டுமின்றி விமானிகள், விமான பணிப்பெண்கள், விமான பொறியாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் சரியான நேரத்திற்கு விமான நிலையத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
நேற்று இரவு 7 மணிமுதல் இன்று அதிகாலை 1.30 மணி வரை 20 விமானங்கள் சுமார் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றது.
சென்னையில் இருந்து இலங்கை செல்லும் 4 விமானங்கள், துபாய், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய 7 சர்வதேச விமானங்களும், டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், புவனேஸ்வர், கோவை உள்ளிட்ட 13 உள்நாட்டு விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
ஆனால் சென்னைக்கு வரவேண்டிய விமானங்கள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வழக்கம்போல் வந்தன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மாபெரும் மரம் வளர்ப்பு மூலம் ஊரக பகுதிகளில் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளக் கூடிய வகையில் பசுமை பகுதியினை மேம்படுத்தும் நோக்கிலும், பழம்தரும் மரங்கள், தீவனம் சார்ந்த மரங்கள் மற்றும் பொருளாதார அடிப்படையில் பயன் தரும் மரங்கள் ஆகியவற்றை நட திட்டமிடப்பட்டது.
அதன்படி ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கன்று நட திட்டமிடப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கீழ்கதிர்ப்பூர் ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மரக்கன்று நட்டு இதனை தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 23 ஆயிரத்து 210 மரக்கன்றுகளும், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 20 ஆயிரத்து 26 மரக்கன்றுகளும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒனறியத்திற்குட்பட்ட பகுதிகளில் 15 ஆயிரத்து 493 மரக்கன்றுகளும், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட பகுதிகளில் 10 ஆயிரத்து 797 மரக்கன்றுகளும் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகிளில் 30 ஆயிரத்து 240 மரக்கன்றுகளும் நடப்பட்டது.
இதில் நாவல் 20 ஆயிரத்து 430, புளியன் 15 ஆயிரத்து 250, வேம்பு 8 ஆயிரத்து 680, பூவரசன் 8 ஆயிரத்து 560, நெல்லி 6 ஆயிரத்து 140, புங்கன் 6 ஆயிரத்து 100, கொய்யா 3 ஆயிரத்து 500, பொன்னாரை 3 ஆயிரம், இலுப்பை 2 ஆயிரத்து 160, மாதுளை 2 ஆயிரத்து 90, குலமோகர் 1,580, நொச்சி 1,250, காட்டுவா 1,100, பாதாம் 1,090, வாகை 1,010, பலா 1000, தகரை 1,000 எண்ணிக்கையில் நடப்பட்டு உள்ளது.
நிகழ்ச்சியில் எழிலரசன் எம்.எல்.ஏ, காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவர் மலர்க்கொடி குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






