என் மலர்
காஞ்சிபுரம்
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு பயணிகளுக்கு செக்-இன் நடைமுறையை பயணிகள் விரைவாக மேற்கொள்ள வசதியாக காமன் யூஸ் செல்ப் சர்வீஸ் என்ற புதிய திட்டம் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது. அதற்காக 8 புதிய எந்திரங்கள் சென்னை உள் நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தின் உள்நாடு, சர்வதேச முனையங்களில் பயணிகள் புறப்பாடு பகுதிகளில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் எந்திரங்கள் நிறுவப்பட உள்ளன. இதன்படி விமானங்களில் செல்ல வரும் பயணிகள், அவர்களின் போர்டிங் பாஸ்களை பெறும் போது, உடமைகளின் மேல் ஒட்டக்கூடிய “டேக்“ என்ற ஸ்டிக்கர்களை, விமானநிலையத்தில் உள்ள தானியங்கி எந்திரங்களில் பயணிகள் பெற்று அவர்களின் உடமைகளில் அவர்களே ஒட்டிக்கொள்ளலாம்.
இதனால் பயணிகள் செக்-இன் கவுண்டரில் வரிசையில் நிற்பது தவிர்க்கப்படும் பயணிகளின் நேரமும் சேமிக்கப்படும்.தங்களுடைய உடமைகளில், அந்தந்த பயணிகளே நேரடியாக ஸ்டிக்கரை ஒட்டுவதால், கவுண்டரில் தவறுதலாக மாற்றி ஒட்டுவது போன்றவைகள் தவிர்க்கப்படும்.
பயணிகளின் உடமைகளில் சுயமாக பயணிகளே ஸ்டிக்கரை ஒட்டி, உடமைகளை விமானத்திற்கு அனுப்பும், பயணிகளின் பயண அனுபவத்தை அதிகரிக்கும் வகையிலான இந்த புதிய திட்டம் சென்னை விமான நிலையத்தில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையம் நவீனமயமாகி, செயல்பாட்டிற்கு வரும் போது, பயணிகள் தங்கள் உடமைகளில் அவர்களே ஸ்டிக்கா ஒட்டும் வசதி, முழுமையாக அமலுக்கு வரும். இதற்காக சென்னை உள்நாடு முனையம், சர்வதேச முனையம் ஆகியவற்றில் தலா 4 எந்திரங்கள் வீதம், 8 எந்திரங்கள் நிறுவப்பட உள்ளன.
இந்த எந்திரங்களை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கைகள் அதிகரிப்பை பொறுத்து இந்த எந்திரங்கள் மேலும் அதிகரிக்கப்படும்.
இதனால் பயணிகள் செக்-இன் நடைமுறையை இடையூறு இல்லாமலும், குறுக்கீடுகள் இல்லாமலும், விரைவாகவும் மேற்கொள்ள முடியும் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி 384 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 218 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 பேரூராட்சிகளில் 69 வாக்கு சாவடிகளும், குன்றத்தூர், மாங்காடு நகராட்சிகளில் 97 வாக்குசாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குசாவடிகளுக்கு தேவையான மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு கருவிகள் ஒதுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு கருவிகளுக்கு முதல் சீரற்ற மயமாக்கல் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியால் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் நாராயணன், பேரூராட்சி உதவி இயக்குனர் வில்லியம் ஜெசுதாஸ் மற்றும் உள்ளாட்சி தேர்தல் பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போரூர்:
ராமாபுரம் ராயலா நகர் 1-வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பாலாஜி (28). சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு 9 மணி அளவில் டி.வி பார்த்து கொண்டே சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது திடீரென வாந்தி எடுத்த பாலாஜி மயங்கி கீழே விழுந்தார். அவரது மனைவி சுஜிதா மற்றும் பெற்றோர் பாலாஜியை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் பாலாஜி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பாலாஜிக்கு 4 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.
சென்னை:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா-ஒமைக்ரான் நோய்த் தொற்று பரவலை தடுக்கும் வகையில் அரசின் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
மேலும் கொரோனா - ஒமைக்ரான் நோய் தொற்று முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட கட்டுப்பாட்டு அறை ‘வார்ரூம்’ பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த கட்டுப்பாட்டு அறையில் அனைத்து துறை அலுவலர்களும் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். கொரோனா தொடர்புடைய சந்தேகங்கள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளுக்கு பொதுமக்கள் புகார்களை கண்காணிக்கும் எண்:- 044-27237107, 044-27237207, வீட்டில் தனிமைப்படுத்துபவர்களை கண்காணிக்கும் எண்:- 044- 2723 7784, மருத்துவ ஆலோசனை வழங்கும் எண்: 044-2723 7785, வாட்ஸ்- அப் எண்:- 9345440662 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, இன்றைய இளைய தலைமுறையினர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி, தவறான பாதைக்கு சென்று விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு சமூக அக்கறையுடன் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு குறும்பட போட்டியை மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு இடையே ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த நிலையில் இப்போட்டியில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் ‘மவுனம் கலைவோம்’ என்ற தலைப்பில் தயாரித்த குறும்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த படத்தில் போதைபொருட்களால் ஏற்படும் தீமைகளை விளக்கும் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார்.
4 நிமிடங்கள் 47 வினாடிகள் ஓடும் இந்த குறும்படத்தில், ‘போதை ஊசி விற்பனை கும்பலை பார்த்தும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் செல்லும் நபர், தன்னுடைய மகனே போதை ஊசிக்கு அடிமையாகி இருப்பதை கண்டு மனம் கதறுவது, கஞ்சா வாங்குவதற்காக கஞ்சா போதையில் 2 வாலிபர்கள் பெண்ணிடம் செயின் வழிப்பறியில் ஈடுபடும்போது, அந்த பெண் தலையில் அடிபட்டு உயிரிழப்பது, அபின் போதை பொருளை பயன்படுத்தும் 2 இளைஞர்கள் மாணவிகளை கடத்தி செல்வது போன்று தத்ரூபமாக காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
போதைப்பழக்கத்துக்கு அடிமையாவது ஒவ்வொரு மனிதனுக்குள் ஒரு மிருகத்தை உருவாக்குகிறது. இதுதான் பல குற்றங்களுக்கு அடிப்படை காரணமாக அமைகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கு போதைப்பொருள் முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே போதை பொருள்கள் விற்பனை தெரிந்திருந்தும் அமைதியாக இருந்தால், அவர்களும் துணை போவதாகத்தான் அர்த்தம். இப்போதும் அமைதியாக இருந்தால் நம் குடும்பத்துக்கும், சமுதாயத்துக்கும் செய்யும் துரோகம் ஆகும்.
எனவே போதைப்பொருட்களுக்கு எதிரான யுத்தத்தில் தமிழக போலீஸ்துறையை நண்பனாக ஏற்றுக்கொண்டு ஒத்துழைத்தால் தமிழகத்தில் போதையால் ஏற்படும் குற்றங்களை தடுக்கலாம் என்பது போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் படத்தில் உள்ளன.
போதைப்பொருள் நுண்ணறிவு குற்றப்புலனாய்வு பிரிவின் 94984 10581 என்ற ‘ வாட்ஸ்-அப்’ எண்ணில் யார் போதை பொருட்களை பயன்படுத்தினார்கள்?, எங்கே கைப்பற்றினார்கள்? எப்போது விற்பனை செய்தார்கள்? என்ற தகவலை கொடுக்கலாம்.
தகவல் கொடுப்பவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப்படும். நீங்கள் புகார் அனுப்பும் அதிகாரியாலே, உங்களுடைய பெயரையோ, போன் எண்ணையோ கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு பாதுகாப்பாக இந்த எண் உருவாக்கப்பட்டு உள்ளது. எனவே யாரும் பயப்படவோ, தயங்கவோ தேவையில்லை. அரசாங்கம் என்றைக்கும் உங்களுக்கு துணையாக நிற்கும். போதைப்பொருட்கள் விற்பனைக்கு எதிரான யுத்தத்தில் நாம் அனைவரும் கண்ணுக்கு தெரியாத போர் வீரர்கள்தான். எனவே இந்த போரை உடனடியாக தொடங்குவோம் என்று விழிப்புணர்வு தகவல்கள் அளிக்கப்பட்டு உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் தயாரித்துள்ள இந்த குறும்படம் இளைய சமுதாயத்துக்கு பாடமாக அமைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அருகே உள்ள சிறுகளத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி.
இவர் திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் பகுதியில் வாகனங்களுக்கு வாட்டர்சர்வீஸ் நிறுவனம் நடத்த திட்டமிட்டு இருந்தார். இதற்காக இடமும் பார்த்து இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் வாட்டர் சர்வீசுக்காக தேவைப்படும் பொருட்களை வாங்குவதற்காக நேற்று இரவு சுந்தரமூர்த்தி பொன்குடி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவருடன் தனது புதிய காரில் ஓரிக்கை பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார்.
பின்னர் அவர்கள் சென்னைக்கு சென்று பொருட்களை வாங்க திட்டமிட்டு இருந்தனர். இன்று அதிகாலை அவர்கள் ஓரிக்கையைச் சேர்ந்த டிரைவர் சரவணன் என்பவருடன் சென்னை நோக்கி காரில் புறப்பட்டு சென்றனர்.
மானாமதி அருகே காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் வந்தபோது எதிரே மேல்மருவத்தூர் கோவிலுக்கு பக்தர்கள் சென்ற வேன் மீது பயங்கரமாக கார் மோதியது.
இதில் வேன் முன் பகுதிக்குள் கார் சொருகிக் கொண்டது. இந்த விபத்தில் காரில் இருந்த சுந்தரமூர்த்தி, செல்வம், சரவணன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் வேனில் இருந்த பக்தர்கள் சிலருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
ஜே.சி.பி. எந்திரம் தகவல் அறிந்ததும் பெருநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் மற்றும் போலீசார் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
கார், வேனுக்குள் செருகி இருந்ததால் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஜே.சி.பி. எந்திரம் கொண்டுவரப்பட்டு கார் அப்புறப்படுத்தப்பட்டது.
மீட்கப்பட்ட 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அதிகாலை ஏற்பட்ட பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும், வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க கோரி காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே காவாலன் கேட் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சாரங்கன் தலைமையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய், கரும்பு மற்றும் காய்கறிகள் பாதிப்புக்கு ஏற்றவாறு நிவாரணம் வழங்க கோரியும், மழையின் போது வேலை, வருமானயின்றி உள்ள ஏழை குடும்பத்திற்கும் மற்றும் இருளர், இன மக்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பப்பட்டது.
இதில் மாவட்ட செயலாளர் நேரு, நிர்வாகிகள் பெருமாள், சங்கர், லிங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிபாக்கம் பகுதியில் நுகர்பொருள் வாணிப கிடங்கு உள்ளது.
இங்கு பல மாதங்களுக்கு தேவையான 7 ஆயிரம் டன் அரிசி மற்றும் நெல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.
இந்த கிடங்கில் வைக்கப்பட்டுள்ள சுமார் 2,700 டன் அரிசி மூட்டைகள் தரமற்று கருப்பு, மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்திற்கு மாறி சேதம் அடைந்து உள்ளன.
இதேபோல் இந்த கிடங்கில் திறந்தவெளியில் வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன. இதனால் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூட்டைகளில் நெல்கள் முளைத்து உள்ளன.
இதனால் காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளுக்கு அரிசி மூட்டைகளை விநியோகப்பதில் பிரச்சனை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
எனவே அதிகாரிகள் கிடங்கில் உள்ள அனைத்து அரிசி மூட்டைகளையும், நெல் மூட்டைகளையும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டத்துக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர், படப்பை, சுங்குவார்சத்திரம் பகுதிகளில் தொழிற் சாலைகளில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்தை தடுக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் மேற்பார்வையில் கட்டப்பஞ்சாயத்து ஒழிப்பு பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் கூடுதல் டி.எஸ்.பி. வெள்ளத்துரை நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பொறுப்பேற்ற பிறகு கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளை பிடிக்க அதிரடி வேட்டை நடைபெற்று வருகிறது. இதனால் ரவுடிகள பலர் தலைமறைவாக உள்ளனர்.
இந்தநிலையில் சுங்குவார்சத்திரத்தை சேர்ந்த பிரபல ரவுடியான குணாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஆயுதப்படை போலீஸ்காரர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏ பிளஸ் ரவுடியான குணாவுக்கு ஆதரவாக செயல்பட்டு கீரநல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை மிரட்டி நிலத்தை அபகரிக்க முயன்றதாக காவலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையிலேயே காவலர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதே குற்றச்சாட்டின் பேரில் மேலும் 2 காவலர்கள் மீதும் புகார் கூறப்பட்டுள்ளது. அவர்கள் மீதும் விரைவில் நடவடிக்கை பாயும் என தெரிகிறது.
காஞ்சிபுரம்:
கடந்த வருடம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் காஞ்சிபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அதில் பலர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆகியோர்கள் முன்கள பணியாளர்களாக கருதப்பட்டு அவர்களுக்கு ஊக்க ஊதியம் அளிக்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளராக வேலை செய்த 147 பேருக்கும் இதுவரை ஊக்க ஊதியம் கிடைக்கவில்லை. இதை கண்டித்தும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்று கோரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகளின் கூடுதல் இயக்குநர் அசோக்குமார் பேச்சுவார்ததை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தார்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சேந்தமங்கலம் கிராமம் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் சுந்தரராஜன். இவர் மூளையில் அறுவை சிகிச்சை செய்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவருடைய மருத்துவ செலவுக்காக வீட்டில் 3 லட்சம் பணம் வைத்து உள்ளனர். வீட்டில் உள்ள அனைவரும் சுந்தர்ராஜனை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் சுந்தர்ராஜன் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3.25 சவரன் மற்றும் 3 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
அதேபோல் சுந்தர்ராஜன் வீட்டின் பின்புறம் குளக்கரை தெருவில் ராமன் என்பவர் வீட்டில் வெள்ளி கொலுசு மற்றும் அவர் வீட்டில் அருகிலுள்ள மணி என்பவர் வீட்டில் 4 ஆடுகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் செய்தனர்.
தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






