என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    சுகாதாரமற்ற முறையில் செயல்படும் கடைகள் மீதும், உரிய பதிவுகள் இல்லாத கடைகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தெரிவித்தார்.
    காஞ்சிபுரம்:

    கேரளா மாநிலம் காசர் கோட்டில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய சாலைகளான காந்தி ரோடு, காமராஜர் சாலை, மேட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஷவர்மா கடைகள் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த கடைகளில் கோழி இறைச்சியை சுகாதாரமற்ற நிலையில் தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக புகார் எழுந்து உள்ளது.

    இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் காஞ்சிபுரத்தில் உள்ள ஷவர்மா கடைகளில் ஆய்வு செய்தனர். இது பற்றி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அனுராதாவிடம் கேட்டபோது, ஷவர்மா கடைகள் குறித்து நாங்கள் ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளோம். சுகாதாரமற்ற முறையில் செயல்படும் கடைகள் மீதும், உரிய பதிவுகள் இல்லாத கடைகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
    மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சித்தோடு:

    மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி அருகே உள்ள சித்தோடு கங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவரது மனைவி கிரு ஷ்ணவேணி (30). இவர் கங்காபுரம் பகுதியில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார்.

      சம்பவத்தன்று மாலை இவர் வேலை முடிந்து தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் நசியனூர் வாரச்சந்தைக்கு சென்றார்.

    அப்போது இவர்களை பின் தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஹெல்ெமட் அணிந்து கொண்டு 2 வாலிபர்கள் வந்தனர். பின்னர் திடீரென அவர்கள் கிருஷ்ணவேணி கழுத்தில் அணிந்திருந்த 3 அரை பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். 

    இது குறித்து அவர் சித்தோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி.கேமிரா காட்சிகளை ஆய்வுசெய்துமர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
    தரமான அரிசியினை நியாய விலை கடைகளுக்கு அனுப்பிடும் பணியினை மாவட்ட வழங்கல் அலுவலர் முழு பொறுப்பாக இருந்து செயல்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளேன்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகாவேரிப்பாக்கம் நியாயவிலை கடை, நுகர்பொருள் வாணிப கழகத்தின் சேமிப்பு கிடங்கு, கீழம்பி நியாய விலை கடை, தாமல் நெல் கொள்முதல் நிலையம், விஷார் நெல் கொள்முதல் நிலையம் ஆகியவற்றை அமைச்சர் சக்கரபாணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது:

    தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள 4000 காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாலாஜாபாத் வட்டத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 10 நபர்கள் மீண்டும் பணி அமர்த்தப்படுவார்கள். தரமான பொருட்களை நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்படுவதை ஆய்வு செய்ய கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளர், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர், மாவட்ட வழங்கல் அலுவலர், உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் அலுவலர் ஆகியோரை கொண்ட ஆய்வுக் குழு ஒன்று அமைக்கப்படுகிறது.

    இக்குழுவினர் ஆய்வு செய்த பின்னர் நியாய விலைக் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பப்படும். மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நுகர்பொருள் வாணிப கழகத்தில் அனுப்பப்படும் அரிசி தரமானதாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

    தரமான அரிசியினை நியாய விலை கடைகளுக்கு அனுப்பிடும் பணியினை மாவட்ட வழங்கல் அலுவலர் முழு பொறுப்பாக இருந்து செயல்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளேன்.

    286 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குகளை ரூ.96 கோடி செலவில் புனரமைப்பு செய்யப்படும். சிறுகாவேரிப்பாக்கத்தில் அமைந்துள்ள சேமிப்பு கிடங்கினை ரூ.2.5 கோடி செலவில் புனரமைப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

    அனைத்து நியாய விலைக் கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும். 800 முதல் 3000 வரை குடும்ப அட்டை கடைகளை கொண்ட நியாய விலை கடைகளை பிரித்து புதிய கடைகள் உருவாக்கப்படும். 6976 வாடகை கட்டிடங்களில் இயங்கும் நியாயவிலைக் கடைகளை சொந்த கட்டிடங்களுக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெல்டா மாவட்டங்களில் 500 மெட்ரிக் டன் நவீன அரிசி ஆலை அமைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 169 நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் பெறப்பட்ட நெல் மூட்டைகள் உடனடியாக அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது உணவுத்துறை வழங்கல் மற்றும் நுகர்வோர் ஆணையாளர் ராஜாராமன், கலெக்டர் ஆர்த்தி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம். நிர்வாக இயக்குநர் பிரபாகர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் லட்சுமி, நுகர்பொருள் வாணிப கழக மண்டல இயக்குநர் சத்தியவதி உடன் இருந்தனர்.

    காஞ்சிபுரத்தில் நள்ளிரவில் பெய்த திடீர் மழையின் காரணமாக கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

    காஞ்சிபுரம்:

    கோடை வெயில் தொடங்கி அதிக அளவு வெப்பத்தால் மக்கள் தவித்து வருகிறார்கள். காஞ்சிபுரத்தில் 111 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தியது

    இதனால் குழந்தைகள், முதியவர்கள், வாகன ஓட்டிகள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் இடி, மன்னலுடன் யாரும் எதிர்பாராத வகையில் கன மழை பெய்தது. பின்னர் சுமார் ஒரு மணி நேரம் விட்டு விட்டு சாரல் மழை நீடித்தது. இதேபோல் தாமல், பாலுசெட்டி சத்திரம், கீழ் அம்பி, சிறுகாவேரிபாக்கம், வெள்ளைகேட் பகுதியில் மழை பெய்தது.

    நள்ளிரவில் பெய்த திடீர் மழையின் காரணமாக கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர். எனினும் இன்று காலை முதல் மீண்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    கிராமசபைக் கூட்டங்களில் கூட்டப் பொருட்கள் ஊராட்சி மன்ற செயலர்களால் படிக்கப்பட்டு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
    காஞ்சிபுரம்:

    மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நடுவீரப்பட்டு மற்றும் சோமங்கலம் ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, கலந்து கொண்டார்.

    இந்தக் கூட்டங்களில், ஊராட்சிகளின் 2021-22 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், ஒன்றிய மற்றும் மாநில அரசுத் திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை, விவசாயம் மற்றும் உழவர் நலத்திட்டங்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் உதவி எண், ஊட்டச்சத்து இயக்கம் மற்றும் இளைஞர்களுக்கான திறன் பயிற்சித் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    மேலும், கிராம ஊராட்சிகள் தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட கடந்த நிதி ஆண்டுக்கான வரவு, செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்தி பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பெரிய பதாகை மூலம் வரவு, செலவு கணக்கு (படிவம் 30-இன் சுருக்கம்) வைக்கப்பட்டிருந்தது. கிராம சபைகளில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் போது உரிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டது. இச்சிறப்புக் கிராமசபைக் கூட்டங்களில் கூட்டப் பொருட்கள் ஊராட்சி மன்ற செயலர்களால் படிக்கப்பட்டு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன. 

    அதனைத் தொடர்ந்து, மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் ஆகியோரைச் சிறப்பிக்கும் வகையில் அவர்களுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மாவட்ட ஆட்சித் தலைவர் மா.ஆர்த்தி, திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர்  கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் சால்வை அணிவித்துக் கௌரவித்தனர்.

    இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  பி.ஸ்ரீதேவி, நடுவீரப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணி, துணைத் தலைவர்  ஞானமணி சகாயராஜ், சோமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆரிக்கியம் ஜெயபால், துணைத் தலைவர்  பவானி ஞானசேகர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
    பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் நடைபாதைகளில் தண்ணீர் தெளிக்க ஆங்காங்கே மழைச்சாரல் போன்று அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.

    வண்டலூர்:

    தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று மீனம்பாக்கம், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 17 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இதேபோல் விலங்குகளும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. வண்டலூர் பூங்காவில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குள், பறவைகள், பாம்புகள் உள்ளிட்டவை பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்து வரும் வெயிலுக்கு இந்த விலங்குகளும் தப்பவில்லை. இதைத்தொடர்ந்து பூங்காவில் வெப்பத்தில் இருந்து விலங்குகள், பறவைகளை காக்க சிறப்பு ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து அவற்றின் மீது தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.

    சிறுத்தைகள், புலிகள் மீது அவ்வப்போது டியூப் மூலம் தண்ணீரை ஊழியர்கள் தெளித்து வருகின்றனர். பறவைகளின் கூண்டு மேற்பகுதியில் முழுமையாக கோணிப்பைகளால் மூடி உள்ளனர். அதன் மீது குளிர்ச்சிக்காக தண்ணீர் தெளிக்கப்படுகிறது. இதனால் பறவைகள் வெப்பத்தில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.

    மேலும் விலங்குகள் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை குளிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. காண்டாமிருகம், நீர்யானை, வரிக்குதிரை போன்ற விலங்குகளின் பராமரிப்பு இடங்களிலும் அவ்வப்போது தண்ணீர் தெளிக்கப்படுகிறது.

    யானைகள் அங்கு அமைக்கப்பட்டு உள்ள ஷவரில் உல்லாச குளியல் போடுகின்றன. இதேபோல் கரடிகள் குரங்குகளுக்கு பழவகைகள், இளநீர் உள்ளிட்டவை அதிகமாக உணவாக வழங்கப்படுகிறது.

    பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் நடைபாதைகளில் தண்ணீர் தெளிக்க ஆங்காங்கே மழைச்சாரல் போன்று அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.

    பயிர் சாகுபடி, மீன் வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றுக்கு கிசான் அட்டைகளை பயன்படுத்தி இந்த கடன் தொகையை பெறலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் பலர் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்தனர்.

    இந்த கூட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.நேரு பேசும் போதுது:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் மையங்கள் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தினார். இந்த கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    காஞ்சிபுரம் மாவட்ட மரம் வளர்ப்போம் சங்க தலைவர் மரம் மாசிலாமணி பேசும்போது, நேரடி கொள்முதல் மையங்களுக்கு நெல்லை பாதுகாக்க தார்பாய்களை கூடுதலாக கொடுக்க வேண்டும்.

    தொழிலாளர் குறையை சரி செய்ய வேண்டும். நேரடி நெல்கொள்முதல் மையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை தீயணைப்புத் துறை உதவியுடன் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இந்த கூட்டத்தில் கலெக்டர் ஆர்த்தி பேசியதாவது: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெறும் விவசாயிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கடனை செலுத்தினால் அவர்களது 7 சதவீத வட்டியை மத்திய அரசு 3 சதவீதமும், மாநில அரசு 4 சதவீதமும் மானியமாக அளிக்க உள்ளனர.

    இதனால் வட்டி இல்லாமல் கடனை திருப்பி செலுத்தலாம். பயிர் சாகுபடி, மீன் வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றுக்கு கிசான் அட்டைகளை பயன்படுத்தி இந்த கடன் தொகையை பெறலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் வேளான் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுனர்கள், அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று வேளாண்மை தொடர்பான கோரிக்கைகளுக்கு விளக்கம் அளித்தனர்.

    சென்னை விமான நிலையத்தில் அடிக்கடி கம்ப்யூட்டர் வேகம் குறைந்து பயணிகள் பாதிக்கப்படுவது தொடா்ச்சியாக நடந்து வருகிறது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் நேற்று உள்நாட்டு விமானங்கள் புறப்பாடு கால தாமதமானது.காலையில் இருந்து மதியம் வரைக்கும் சுமாா் 20 க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டு சென்றன.

    ஒவ்வொரு விமானமும் 15 நிமிடத்திலிருந்து 30 நிமிடங்கள் வரை தாமதமாக புறப்பட்டு சென்றது.சில விமானங்கள் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றது.சனி, ஞாயிறு வார இறுதி்நாட்கள் என்பதாலும், ரம்ஜான் பண்டிகை வருகிற செவ்வாய்கிழமை வருவதாலும், வெளியூா் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

    இதனால் வழக்கத்தை விட நேற்று பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    உள்நாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை நடத்தும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் பணியில் குறைவாகவே இருந்தாகவும், அவா்கள் பொறுமையாக பணியாற்றுவதால், பாதுகாப்பு சோதனை நடந்து முடிவதில் தாமதம் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.

    அதனால் பயணிகள் விமானங்களில் தாமதமாக சென்று ஏறுவதால், விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

    மேலும் நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் கம்ப்யூட்டர் இயந்திரம் சரிவர இயங்காததால், பயணிகள் போா்டிங் பாஸ்கள் வாங்குவதில் தாமதமானது.

    இதே போன்று பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ள நேரங்களில், பயணிகள் பாதுகாப்பு சோதனைக்கு, கூடுதல் பாதுகாப்பு கவுண்டா்கள் ஏற்படுத்தி, கூடுதலாக பாதுகாப்பு வீரா்களை பணியமா்த்த வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கூறுகின்றனா்.

    மேலும் சென்னை விமான நிலையத்தில் அடிக்கடி கம்ப்யூட்டர் வேகம் குறைந்து பயணிகள் பாதிக்கப்படுவது தொடா்ச்சியாக நடந்து வருகிறது. அதற்கு விமானநிலைய நிா்வாகம் நிரந்தர தீா்வை ஏற்படுத்த வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கூறுகின்றனா்.

    புறப்பாடு விமானங்கள் தாமதமானாலும், வருகை விமானங்கள் அனைத்தும் குறிப்பிட்ட நேரங்களில் சரியாக வந்து சோ்ந்தன.

    அதேபோல் இன்றும் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நேற்று போல் இல்லாமல் பயணிகள் துரிதமாக செல்ல தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மதுரவாயல் சாலிகிராமத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    ஆவடி ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் நரேஷ்குமார் (19) பட்டதாரி வாலிபர்.

    இவர் நேற்று இரவு 9மணி அளவில் மோட்டார் சைக்கிளில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தார். மதுரவாயல் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த நரேஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக பறக்கும் சாலை அமைக்கும் பணிக்காக போடப்பட்டுள்ள பில்லர் மீது வேகமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட நரேஷ்குமார் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை, சாலிகிராமம் நாவலர் மெயின் ரோட்டில் கடந்த 23ந் தேதி நள்ளிரவு 12மணி அளவில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த வாலிபர் ஒருவர் திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் வந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த வாலிபர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது பற்றி விபரம் ஏதும் தெரியவில்லை.

    தொடுகாடு, செங்காடு வழியாக திருவள்ளூர் நோக்கி அரசு பஸ் சென்றது. அதில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயணம் செய்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. இங்கு ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்று வட்டார மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையதில் இருந்து ஆயகொளத்தூர், திருவள்ளூர், சுங்குவார் சத்திரம், மணிமங்கலம், படப்பை உள்ளிட்ட இடங்களுக்கு மாணவ, மாணவிகள் பஸ்சில் சென்று வருகின்றனர். இந்தநிலையில் வழக்கம் போல் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் இருந்து தொடுகாடு, செங்காடு வழியாக திருவள்ளூர் நோக்கி அரசு பஸ் சென்றது. அதில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயணம் செய்தனர்.

    அப்போது பள்ளி மாணவர்கள் பலர் பஸ் படியில் தொங்கியபடி வந்தனர். இதை பஸ் டிரைவர் சேது, கண்டக்டர் அமிர்தலிங்கம் ஆகியோர் கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் டிரைவர், கண்டக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே ஆயகொளத்தூர் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றதும் படியில் தொங்கிய படி பயணம் செய்த மாணவர்கள் சிலர் கோபத்தில் டிரைவர் சேது, கண்டக்டர் அமிர்தலிங்கம் ஆகிய இருவரையும் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை தேடி வருகிறார்.

    தஞ்சை அருகே தேர்த்திருவிழாவில் பலியான 11 பேரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ராஜகோபுரத்தில் மோட்சதீபம் ஏற்றப்பட்டது.
    காஞ்சிபுரம்:

    தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு தேர்த்திருவிழா நடைபெற்றது. அப்போது சுமார் 20 அடி உயரத்திற்கு மின் அலங்காரம் செய்யப்பட்டு இருந்த தேரை பொதுமக்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

    அப்போது ஒரு இடத்தில் தேரை திருப்பியபோது அருகே சென்ற மின்கம்பியில் தேர் தட்டி உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து தேர் தீப்பிடித்து எரிந்தது.

    மேலும் மின்சாரம் தாக்கியதில் அதே கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பிரதாப், மோகன், அன்பழகன் மற்றும் அவரது மகன் ராகவன் உட்பட மொத்தம் 11 பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் தேர்த்திருவிழாவில் பலியான 11 பேரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ராஜகோபுரத்தில் மோட்சதீபம் ஏற்றப்பட்டது.

    இதுகுறித்து காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மேலாளர் மற்றும் காமாட்சி அம்மன் கோவில் நிர்வாகியான ந.சுந்தரேச ஐயர் கூறியதாவது:

    தஞ்சாவூர் அருகே தேர்த்திருவிழாவின்போது மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட வார்த்தைகள் இல்லை.

    இந்த விபத்தில் பலியானவர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காக காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளாணைப்படி காமாட்சி அம்மன் கோயில் ராஜகோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டுள்ளது.

    இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடையவும் பிரார்த்திக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சாலவாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆர்த்தி திடீர் ஆய்வு செய்தார். டாக்டர்களின் வருகை மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சிபுரம் மாவட் டத்தில் மக்கள் நலத்திட்டங்கள் தடையின்றி பொதுமக்களுக்கு சென்றடைய மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மாவட்டம் முழுவதும் அவ்வபோது ஆய்வு பணியில் ஈடுபட்டு அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பித்து வருகிறார். மேலும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் உத்திரமேரூர் ஒன்றியம் பகுதியில் கலெக்டர் ஆர்த்தி ஆய்வு செய்தார். அப்போது சாலவாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் திடீர் ஆய்வு செய்தார். டாக்டர்களின் வருகை மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

    இதை தொடர்ந்து ரெட்டமங்கலத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஆர்த்தி பார்வையிட்டார். விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு உள்ள நெல் குறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
    ×