என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வரும் 22ந் தேதி வரை நடக்கிறது.
    காஞ்சீபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்து பெற்றது. இந்த கோவிலில் கொரோனோ தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வைகாசி மாத பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற வில்லை.

    இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கி உள்ள நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது.

    இந்த ஆண்டுக்கான வைகாசி பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி அதிகாலையில் வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவில் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தங்கக் கொடிமரத்தில் கருடாழ்வார் சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றி வைத்தனர்.

    பின்னர் தங்க சப்பரம் வாகனத்தில் வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி கோவில் பிரகாரம், முக்கிய வீதிகளில் வீதி உலா வந்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று தொடங்கும் பிரம்மோற்சவ விழா வருகிற 22ந் தேதி வரை பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. விழாவை யொட்டி காலை, மாலை என இருவேளைகளிலும் வரதராஜப்பெருமாள், தங்க சப்பரம்,சிம்மம், ஹம்சம்,சூரிய பிரபை, சந்திர பிரபை, யாளி, யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார்.

    முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை விழா வருகிற 15ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஸ்ர திருத்தேர் உற்சவம் 19ந் தேதி விமரிசையாக நடைபெறுகிறது.

    கொடியேற்ற விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் முத்து ரத்தினவேலு, கோவில் நிர்வாக அறங்காவலர் ந.தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி கோவில் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.வாண வேடிக்கைகளும் நடைபெற்றது.

    காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி. வினோத் சாந்தாராம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைபேசி பதிவு, மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 14ந் தேதி காலை 10 மணிக்கு, காஞ்சிபுரம் வட்டத்தில் மேல் ஒட்டிவாக்கம், உத்திரமேரூர் வட்டத்தில் ஆதவபாக்கம், வாலாஜாபாத் வட்டத்தில் அவளூர், திருப்பெரும்புதூர் வட்டத்தில் சோகண்டி, குன்றத்தூர் வட்டத்தில் வடக்குப்பட்டு ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

    மேற்கண்ட கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைபேசி பதிவு, மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

    மேற்படி மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்.

    மேற்படி, முகாம் நடைபெறும் இடங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், மற்றும் கிருமி நாசினியை பயன்படுத்திடவும் கேட்டுக் கொள்ளபடுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    உரிய ஆவணங்கள் இன்றி விதிமுறை மீறி இயக்கப்பட்ட 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதன் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.84 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் காஞ்சிபுரம் காமராஜர் சாலை, காந்தி ரோடு, மேட்டு தெரு ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது உரிய ஆவணங்கள் இன்றி விதிமுறை மீறி இயக்கப்பட்ட 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதன் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.84 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
    வெங்கம்பாக்கம் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்பாக்கம்:

    கல்பாக்கம் அடுத்த வெங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால்.கார் மெக்கானிக். இவரது மனைவி ஷோபனா(வயது25). இருவரும் காதலித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். நந்தகோபாலுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ஷோபனா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர் பகுதியில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வந்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.89ஆயிரத்து 100 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

    ஆலந்தூர்:

    ஆலந்தூர் மண்டலத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து ஆலந்தூர் மண்டல துப்புரவு அலுவலர்கள் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள் மணப்பாக்கம், நந்தம்பாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருக்கும் கடையின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 2 வாரத்தில் 888 கடைகளில் சோதனை நடத்தி சுமார் 196 கிலோ பிளாஸ்டிக் பைகள், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வந்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.89ஆயிரத்து 100 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

    சென்னை மயிலாப்பூரில் இரட்டை கொலை வழக்கில் கார் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் துவாரகா காலனியில் வசித்து வந்தவர் ஸ்ரீகாந்த் (60). இவரது மனைவி அனுராதா (55).

    தொழில் அதிபரான ஸ்ரீகாந்த்தும், அனுராதாவும் அமெரிக்காவில் உள்ள தங்களது மகளின் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று காலையில் சென்னை திரும்பினர்.

    இந்த நிலையில் இருவரும் கொடூரமாக தங்களது கார் டிரைவரால் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் மயிலாப்பூர் பகுதியை மட்டுமின்றி சென்னை மாநகரையே அதிர வைத்துள்ளது.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக பரபரப்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    தொழில் அதிபர் ஸ்ரீகாந்தும், அவரது மனைவி அனுராதாவும், அமெரிக்காவில் உள்ள தங்களது மகள் சுனந்தாவை பார்ப்பதற்காக கடந்த மார்ச் மாதம் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

    கர்ப்பிணியாக இருந்த மகளுக்கு குழந்தை பிறந்ததும் 3 மாதங்கள் அமெரிக்காவிேலயே தங்கி இருந்த கணவன்-மனைவி இருவரும் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தனர். இருவரையும் அவர்களது டிரைவர் கிருஷ்ணா மயிலாப்பூரில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்றார்.

    அங்கு வைத்து தனது நண்பர் ரவி என்பவருடன் சேர்ந்து ஸ்ரீகாந்தையும், அனுராதாவையும் திடீரென தாக்கிய டிரைவர் கிருஷ்ணா இருவரையும் வீட்டில் வைத்தே துடிக்க துடிக்க கொலை செய்து உள்ளார். ஏற்கனவே வீட்டில் இருந்த நகைகளை மூட்டை கட்டி வைத்திருந்த டிரைவர் கிருஷ்ணாவும், அவரது நண்பர் ரவியும், தொழில் அதிபரையும் அவரது மனைவியையும் விடியும் முன்னர் ஒன்றாக புதைப்பதற்கு முடிவு செய்தனர். தொழில் அதிபர் ஸ்ரீகாந்துக்கு கிழக்கு கடற்கரை சாலையில் நெமிலிச்சேரி பகுதியில் உள்ள சூலேரி காட்டில் பிரமாண்ட பண்ணை வீடு உள்ளது. அந்த வீட்டுக்கு உடலை கொண்டு சென்று புதைப்பதற்கு முடிவு செய்தனர். இதன்படி ஸ்ரீகாந்தின் காரிலேயே 2 பேரின் உடல்களையும் மூட்டை கட்டி தூக்கி போட்டனர். பின்னர் மயிலாப்பூரில் இருந்து மின்னல் வேகத்தில் காரை எடுத்துக் கொண்டு நெமிலிச்சேரி பண்ணை வீட்டுக்கு சென்றனர்.

    அங்கு ஸ்ரீகாந்த், அனுராதா இருவரின் உடல்களையும் பெரிய குழி தோண்டி புதைத்தனர்.

    பின்னர் கொள்ளை அடித்த நகைகளுடன் தப்பிச் சென்ற கிருஷ்ணா அவரது நண்பர் ரவி இருவரும் ஆந்திர மாநிலம் ஓங்கோலில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

    கொலையாளிகளை கைது செய்து விசாரணை நடத்திய பிறகே இருவரும் கொன்று புதைக்கப்பட்டது தெரிய வந்தது. இருவரும் நேற்று மாலை 6.30 மணி அளவில்தான் பிடிபட்டனர். இதன் பின்னர் உடனடியாக உடல்களை தோண்டி எடுக்க முடியவில்லை.

    இதைத் தொடர்ந்து இன்று காலையில் இருவரின் உடல்களும் புதைக்கப்பட்ட பண்ணை தோட்டத்துக்கு போலீசார் கொலையாளிகளை அழைத்துச் சென்றனர். அங்கு உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தை கொலையாளிகள் அடையாளம் காட்டினர். இதைத் தொடர்ந்து போலீசார் வருவாய் துறையினர் முன்னிலையில் தொழில் அதிபர் ஸ்ரீகாந்த், அவரது மனைவி அனுராதா ஆகியோரின் உடல்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன. பின்னர் பிரேத பரிசோதனைக்காக இருவரின் உடல்களும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    தொழில் அதிபர் ஸ்ரீகாந்த் மிகவும் வசதி படைத்தவர் ஆவார். ஸ்ரீகாந்தும் அவரது மனைவி அனுராதாவும் தங்களது மகள் சுனந்தாவை அமெரிக்க மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தனர். மகளுக்கு குழந்தை பிறந்த சந்தோஷத்தில் 3 மாதங்கள் அமெரிக்காவில் பொழுது போக்கி விட்டு இருவரும் சென்னை திரும்பி இருந்தனர்.

    இந்த சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடங்கும் முன்னரே இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் மகள் சுனந்தாவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரும், ஸ்ரீகாந்த்-அனுராதாவின் உறவினர்களும் கண்ணீரில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    சென்னை விமான நிலையத்தில் வாலிபர் மர்ம மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    சென்னை சர்வதேச விமான நிலையத்தின் வருகை பகுதிக்கு முன்னால் உள்ள கார் பார்கிங் பகுதியில் இன்று காலை 9 மணி அளவில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் தலைகீழாக கவிழ்ந்த நிலையில் இறந்து கிடந்தார்.

    இதை பார்த்த விமான பயணிகளும், விமான நிலைய ஊழியர்களும் சென்னை விமான நிலைய போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசாா் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா். அவர் முகத்தில், கையில் பலத்த காயம் இருந்தது.

    அவரை சோதனையிட்ட போது அவருடைய பாக்கெட்டில் இருந்த ஆதார் கார்டில் சபரி கணேஷ் (வயது 26) கள்ளக்குறிச்சி என்ற முகவரி இருந்தது.

    இவர் வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வந்த, விமான பயணியா?அல்லது வெளிநாடு செல்பவர்கள் யாரையாவது வழியனுப்ப வந்தாரா? என்பது தெரியவில்லை. இதை அடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    அவர் எப்படி உயிரிழந்தாா் என்பது மர்மமாக இருக்கிறது. இவா் கொலை செய்யப்பட்டாரா? அல்லது எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. இது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.விமானநிலைய வளாகத்திற்குள் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளையும் போலீசாா் ஆய்வு செய்கின்றனர்.

    சென்னை விமானநிலையத்தில் மா்மமான முறையில் வாலிபா் ஒருவா் உயிரிழந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே சென்னை விமான நிலைய கார் பார்க்கிங்கில் டீ விற்பனை போட்டியில் ஒருவர் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    26 மாதங்களுக்கு பின்பு இந்த விமானம் மீண்டும் இயங்க தொடங்கியது, சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    ஆலந்தூர்:

    கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த 2020 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் பெரும்பாலான வெளிநாட்டு விமானங்கள் ரத்து ஆகின.

    அதில் முக்கியமானது சர்வதேச அளவில் பிரபலமான சுற்றுலாத் தளமான ரீ யூனியன் என்ற குட்டி தீவிவான செயிண்ட் டெனிஸ் என்ற இடத்திலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஏா்ஆஸ்ட்ரல் விமானம். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சென்னை வந்துவிட்டு, மறுநாள் சனிக்கிழமை மீண்டும் செயிண்ட் டெனிஸ் புறப்பட்டு செல்லும்.

    இந்த குட்டி தீவில் மொத்த மக்கள் தொகையே 1.5 லட்சம் தான். ஆனால் இது சர்வதேச அளவில் பிரபலமான சுற்றுலாத் தளம். இங்கு புகழ்பெற்ற கோவில்கள், மியூசியம், மற்றும் கோடை வாசஸ்தளங்கள் இருப்பதால், பல்வேறு நாடுகளை சோ்ந்த சுற்றுலா பயணிகள் பெருமளவு இங்கு வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக இது வா்த்தக தளமாகவும் உள்ளது.

    அங்கு உள்ளவா்களில் கணிசமாக தென்இந்தியா்கள், தமிழ்நாட்டை சோ்ந்தவா்களும் உள்ளனா்.

    எனவே சென்னைக்கு இயக்கப்பட்ட இந்த வாராந்திர விமான சேவைக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல், 26 மாதங்களாக இந்த விமான சேவை ரத்தாகி இருந்தது.

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருமளவு குறைந்து இயல்புநிலை திரும்பியதால் மீண்டும் இந்த விமான சேவையை ஏா் ஆஸ்ட்ரல் விமான நிறுவனம் தொடங்கியது. இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகமும் அதற்கு அனுமதி அளித்தது.

    அதன் பேரில் 26 மாதங்களுக்கு பின்பு, முதல் விமானம் நேற்று இரவு 7 மணிக்கு 47 பயணிகள், 6 விமான ஊழியா்களுடன் செயிண்ட் டெனிஸ்சிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானம் சென்னையில் தரையிறங்கி ஓடுபாதையில் ஓடத்தொடங்கியதும், ஓடுபாதையின் இரண்டு பகுதியிலும், 2 தீயணைப்பு வண்டிகள் நின்று தண்ணீரை பீச்சி அடித்து, “வாட்டர் சல்யூட்”கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அதேபோல் விமானத்தில் வந்த பயணிகளையும் சென்னை விமானநிலைய அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனா்.

    26 மாதங்களுக்கு பின்பு இந்த விமானம் மீண்டும் இயங்க தொடங்கியது, சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    இந்த விமானம் வழக்கம் போல், இன்று காலை 7.10 மணி அளவில் மீண்டும் சென்னையில் இருந்து ரீ யூனியன் தீவில் உள்ள செயிண்ட் டெனிஸ்க்கு 62 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. இந்த விமான சேவை இனிமேல் வழக்கம்போல் வாராந்திர விமான சேவையாக தொடா்ந்து இயங்கும் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் கூறினா்.

    சென்னை விமான நிலையத்தில் சர்வதேச போதை கும்பலை சேர்ந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    மலேசிய நாட்டைச் சேர்ந்தவர் மஹதரன் (வயது 51). இவர் சர்வதேச போதை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

    இவா் கா்நாடகா மாநிலத்தில் பதுங்கியிருந்து, போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டு வந்தார். கா்நாடகா மாநிலத்தின் மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசார், மஹதரனை கைது செய்ய தீவிரமாக தேடினா். ஆனால் அவா் வெளிநாடுகளில் தொடா்ந்து தலைமறைவாக இருந்துகொண்டு, போதை கடத்தலில் ஈடுபட்டாா்.

    கடந்த 2019ம் ஆண்டு மஹதரனை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தனா்.

    இந்த நிலையில் மலேசியாவில் இருந்து வந்த மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட், ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனா். அந்த விமானத்தில் மஹதரனும் சென்னை வந்தாா். அவருடைய பாஸ்போா்ட்டை சோதனை செய்த அதிகாரிகள், இவா் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும், தேடப்படும் கடத்தல் குற்றவாளி என்பதை கண்டறிந்தனர்.

    இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும் பெங்களூரில் உள்ள மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கும் தகவல் கொடுத்தனா். இதையடுத்து பெங்களூர் போலீசாா் சென்னை விமானநிலையத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    பஸ்சை சுத்தம் செய்தபோது மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் கணேசன்(வயது27).ஆம்னி பஸ் டிரைவர். இவர் நேற்று மாலை வானகரம் பஸ் நிறுத்தம் அருகே ஆம்னி பஸ்சை நிறுத்தி விட்டு மோட்டார் எந்திரம் மூலம் பஸ்சை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது எந்திரத்தில் மின்கசிவு ஏற்பட்டு கணேசன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெங்கச்சேரியில் புதிதாக மேம்பாலம் அமைக்க ஆரம்ப கட்ட பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
    காஞ்சிபுரம்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையின் காரணமாக செய்யாற்றில் சுமார் 15ஆயிரம்  கனஅடி வரை உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனால் செய்யாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

    இதன் காரணமாக காஞ்சிபுரம் அருகே உள்ள வெங்கச்சேரியில் செய்யாற்றின் குறுக்கே இருந்த  தரைப்பாலம் முழுவதுமாக அடித்து செல்லப்பட்டது. தரைப்பாலம் இல்லாததால் காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் ஒன்றியங்கள் முழுவதுமாக துண்டிக்கப்பட்டு  சுமார் 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் வெங்கச்சேரியில் புதிதாக மேம்பாலம் அமைக்க ஆரம்ப கட்ட பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

    மாற்றுப்பாதை சரியாக அமைக்கப்படாமல் மணல் மேடாகவும், பல இடங்களில் பள்ளங்களாகவும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு காட்சி அளிக்கிறது.

    காஞ்சிபுரம், உத்திரமேரூர் சென்று வரும் இருசக்கர வாகனங்கள், கார், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அவ்வழியாக மெதுவாக ஊர்ந்து தடுமாறி செல்கின்றன. மேலும் பள்ளத்தில் கனரக வாகனங்கள் அவ்வப்போது சிக்கியும் வருகிறது.

    எனவே தற்போது வாகனங்கள் செல்லும் மாற்றுப்பாதையில் தற்காலிகமாக சீரான சாலை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    ஆதம்பாக்கத்தில் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம், அம்பேத்கார் நகரில் வசித்து வந்தவர் சாரங்கபாணி (வயது75). வந்தவாசியை சேர்ந்த இவர் வயது மூப்பு காரணமாகவும், உடல்நிலை சரி இல்லாததாலும் மகன் வீட்டில் தங்கி இருந்தார்.

    கடந்த இரண்டு மாதங்களாக சாரங்க பாணிக்கும், அவருடைய மகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் வீட்டின் மாடிப்படிக்கட்டின் கீழ் உள்ள கழிவுநீர் குழாயில் சாரங்கபாணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகன், ஆதம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சாரங்கபாணி, தன்னுடைய மகன் துன்புறுத்துவதாக ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சாரங்கபாணி தற்கொலை செய்து உள்ளார்.

    இது தொடர்பாக அவரது மகனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    ×