search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    காஞ்சீபுரம் வரதராஜபெருமாள்
    X
    காஞ்சீபுரம் வரதராஜபெருமாள்

    காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வரும் 22ந் தேதி வரை நடக்கிறது.
    காஞ்சீபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்து பெற்றது. இந்த கோவிலில் கொரோனோ தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வைகாசி மாத பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற வில்லை.

    இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கி உள்ள நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது.

    இந்த ஆண்டுக்கான வைகாசி பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி அதிகாலையில் வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவில் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தங்கக் கொடிமரத்தில் கருடாழ்வார் சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றி வைத்தனர்.

    பின்னர் தங்க சப்பரம் வாகனத்தில் வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி கோவில் பிரகாரம், முக்கிய வீதிகளில் வீதி உலா வந்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று தொடங்கும் பிரம்மோற்சவ விழா வருகிற 22ந் தேதி வரை பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. விழாவை யொட்டி காலை, மாலை என இருவேளைகளிலும் வரதராஜப்பெருமாள், தங்க சப்பரம்,சிம்மம், ஹம்சம்,சூரிய பிரபை, சந்திர பிரபை, யாளி, யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார்.

    முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை விழா வருகிற 15ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஸ்ர திருத்தேர் உற்சவம் 19ந் தேதி விமரிசையாக நடைபெறுகிறது.

    கொடியேற்ற விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் முத்து ரத்தினவேலு, கோவில் நிர்வாக அறங்காவலர் ந.தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி கோவில் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.வாண வேடிக்கைகளும் நடைபெற்றது.

    காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி. வினோத் சாந்தாராம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×