என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்- குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வற்புறுத்தல்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் பலர் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.நேரு பேசும் போதுது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் மையங்கள் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தினார். இந்த கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட மரம் வளர்ப்போம் சங்க தலைவர் மரம் மாசிலாமணி பேசும்போது, நேரடி கொள்முதல் மையங்களுக்கு நெல்லை பாதுகாக்க தார்பாய்களை கூடுதலாக கொடுக்க வேண்டும்.
தொழிலாளர் குறையை சரி செய்ய வேண்டும். நேரடி நெல்கொள்முதல் மையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை தீயணைப்புத் துறை உதவியுடன் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் கலெக்டர் ஆர்த்தி பேசியதாவது: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெறும் விவசாயிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கடனை செலுத்தினால் அவர்களது 7 சதவீத வட்டியை மத்திய அரசு 3 சதவீதமும், மாநில அரசு 4 சதவீதமும் மானியமாக அளிக்க உள்ளனர.
இதனால் வட்டி இல்லாமல் கடனை திருப்பி செலுத்தலாம். பயிர் சாகுபடி, மீன் வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றுக்கு கிசான் அட்டைகளை பயன்படுத்தி இந்த கடன் தொகையை பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் வேளான் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுனர்கள், அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று வேளாண்மை தொடர்பான கோரிக்கைகளுக்கு விளக்கம் அளித்தனர்.






