search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு
    X
    நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு

    ரேசன் கடைகளுக்கு தரமான உணவு பொருட்களை அனுப்புவதை ஆய்வு செய்ய தனிக்குழு- அமைச்சர் சக்கரபாணி பேட்டி

    தரமான அரிசியினை நியாய விலை கடைகளுக்கு அனுப்பிடும் பணியினை மாவட்ட வழங்கல் அலுவலர் முழு பொறுப்பாக இருந்து செயல்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளேன்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகாவேரிப்பாக்கம் நியாயவிலை கடை, நுகர்பொருள் வாணிப கழகத்தின் சேமிப்பு கிடங்கு, கீழம்பி நியாய விலை கடை, தாமல் நெல் கொள்முதல் நிலையம், விஷார் நெல் கொள்முதல் நிலையம் ஆகியவற்றை அமைச்சர் சக்கரபாணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது:

    தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள 4000 காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாலாஜாபாத் வட்டத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 10 நபர்கள் மீண்டும் பணி அமர்த்தப்படுவார்கள். தரமான பொருட்களை நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்படுவதை ஆய்வு செய்ய கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளர், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர், மாவட்ட வழங்கல் அலுவலர், உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் அலுவலர் ஆகியோரை கொண்ட ஆய்வுக் குழு ஒன்று அமைக்கப்படுகிறது.

    இக்குழுவினர் ஆய்வு செய்த பின்னர் நியாய விலைக் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பப்படும். மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நுகர்பொருள் வாணிப கழகத்தில் அனுப்பப்படும் அரிசி தரமானதாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

    தரமான அரிசியினை நியாய விலை கடைகளுக்கு அனுப்பிடும் பணியினை மாவட்ட வழங்கல் அலுவலர் முழு பொறுப்பாக இருந்து செயல்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளேன்.

    286 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குகளை ரூ.96 கோடி செலவில் புனரமைப்பு செய்யப்படும். சிறுகாவேரிப்பாக்கத்தில் அமைந்துள்ள சேமிப்பு கிடங்கினை ரூ.2.5 கோடி செலவில் புனரமைப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

    அனைத்து நியாய விலைக் கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும். 800 முதல் 3000 வரை குடும்ப அட்டை கடைகளை கொண்ட நியாய விலை கடைகளை பிரித்து புதிய கடைகள் உருவாக்கப்படும். 6976 வாடகை கட்டிடங்களில் இயங்கும் நியாயவிலைக் கடைகளை சொந்த கட்டிடங்களுக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெல்டா மாவட்டங்களில் 500 மெட்ரிக் டன் நவீன அரிசி ஆலை அமைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 169 நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் பெறப்பட்ட நெல் மூட்டைகள் உடனடியாக அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது உணவுத்துறை வழங்கல் மற்றும் நுகர்வோர் ஆணையாளர் ராஜாராமன், கலெக்டர் ஆர்த்தி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம். நிர்வாக இயக்குநர் பிரபாகர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் லட்சுமி, நுகர்பொருள் வாணிப கழக மண்டல இயக்குநர் சத்தியவதி உடன் இருந்தனர்.

    Next Story
    ×