என் மலர்tooltip icon

    ஈரோடு

    தாளவாடியில் காட்டுபன்றி தாக்கி விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள ஊர் தாளவாடி. இங்குள்ள பூஜைகவுடர் வீதியை சேர்ந்தவர் சித்தராஜ் (வயது 30). தொழிலாளி.

    இவரது மனைவி பெயர் லாவண்யா (28). திருமணம் ஆகி 2 ஆண்டே ஆகிறது. 1½ வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது.

    இன்று காலை 7 மணி அளவில் சித்தராஜ் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டில் இருந்து அருகே உள்ள பகுதிக்கு சென்றார்.

    அப்போது மறைந்து இருந்த ஒரு காட்டு பன்றி திடீரென ஆவேசமாக ஓடிவந்து அவரது தொடை பகுதியில் கடித்துதூக்கி வீசியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயத்துடன் சத்தம் போட்டபடி துடித்துக் கொண்டிருந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சித்தராஜை மீட்டு தாளவாடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாளவாடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். வனத்துறையினரும் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

    காட்டு பகுதிக்குள் திரியும் காட்டு பன்றிகள் தற்போது தாளவாடி ஊருக்குள்ளேயே புகுந்துவிடுகிறது. ஏற்கனவே பலபேரை விரட்டி கடித்துள்ள காட்டுபன்றியால் இன்று ஒரு உயிர் பறிபோய் உள்ளது எனவே ஊருக்குள் காட்டு பன்றிகளை வரவிடாமல் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என தாளவாடி பகுதி மக்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

    ஆசை வார்த்தை கூறி சிறுமியிடம் உல்லாசமாக இருந்த சிவகிரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த 2 தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அந்த சிறுமியை டாக்டர்கள் பரிசோதித்த போது அந்த பெண் கர்ப்பம் தரித்திருந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் ஈரோடு மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

    இது குறித்து மகளிர் போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்திய போத அந்த சிறுமி கூறியதாவது:-

    சிவகிரி பகுதியை சேர்ந்த வாழை தோட்டம் கார வலசு ஜே.ஜே. நகரை சேர்ந்த சண்முகம் என்பவர் என்னிடம் பழகி ஆசை வார்த்தை கூறி என்னிடம் நெருங்கி பழகினார். திருமணம் செய்வதாக கூறி என்னிடம் உல்லாசமாக இருந்தார். இதில் நான் கர்ப்பமாகி இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்த போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்தனர். சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து சிறுமி கர்ப்பத்துக்கு காரணமான வாலிபர் சண்முகத்தை கைது செய்தனர்.

    அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்தியூரில் இன்று காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    அந்தியூர்:

    அந்தியூர் 7-வது வார்டில் உள்ள சிவசக்தி நகரில் சுமார் 100 குடும்பங்கள் உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களாக குடிநீர் வரவில்லையாம். இதனால் அப்பகுதி மக்கள் இன்று காலை திடீரென அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காலிகுடங்களுடன் பெண்கள் நடுரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். மறியல் நடத்திய பெண்ணிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும் அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் வில்லியம் ஏசுதாசும் அங்கு வந்தார்.

    “வெள்ளம் காரணமாக பம்ப்பிங் தொட்டி (கிணறு) பகுதியில் சேறும் சகதியும் அடைத்து உள்ளது. இதனால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இவை சரிசெய்யப்பட்டு விரைவில் குடிநீர் வழங்கப்படும்” என்று வில்லியம் ஏசுதாஸ் கூறினார். இதையொட்டி பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    அந்தியூர் அருகே மலைப்பாதையில் அரசு பஸ்சை வழிமறித்த ஒற்றையானையால் பயணிகள் அச்சமடைந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வரட்டுப்பள்ளம் அணை வழியாக பர்கூர் கிழக்கு மலைப்பாதையில் கர்நாடக மாநிலம் மைசூர் செல்லும் சாலை உள்ளது.

    இன்று காலை காலை 5.30 மணி இந்த வழியாக அந்தியூரில் இருந்து தேவர்மலை, மடம் ஆகிய ஊர்களுக்கு செல்லம் அரசு பஸ் சென்றது. அந்த பஸ்சின் டிரைவராக திருநாவுக்கரசு, கண்டக்டராக குணசேகரன் ஆகியோர் இருந்தனர். பஸ்சில் 10 பயணிகள் இருந்தனர்.

    மலைப் பாதையின் முதல் வளைவில் சென்றபோது அங்கு ஒற்றை யானை ஒன்று நின்றது.

    நடுரோட்டில் அந்த யானை நின்றதால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை சற்று தூரத்தில் நிறுத்தினார். ஆனால் யானை அங்கிருந்து செல்வதாக இல்லை.

    வெகுநேரமாக நடுரோட்டில் அந்த யானை வாலை ஆட்டிக்கொண்டே நின்றது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    அரசு பஸ்சுக்கு பின்னால் பால் வாகனம், டிராவல்ஸ் வாகனம் உள்பட 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    காலை 6.45 மணி வரை வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பஸ்சில் இருந்த பயணிகளும், மற்ற வாகனங்களில் இருந்தவர்களும் யானை வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தனர்.

    ஆனால் ஒரு வழியாக 6.45 மணி அளவில் அந்த யானை தானாகவே நடுரோட்டில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து அரசு பஸ் உள்ளிட்ட வாகனங்கள் புறப்பட்டு சென்றன. பஸ் பயணிகளும், வாகன ஓட்டிகளும் நிம்மதி அடைந்தனர். 

    மொடக்குறிச்சி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மாணவ-மாணவிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

    மொடக்குறிச்சி:

    எழுமாத்தூரில் பாரதியார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் கொடுமுடி நடுப்பாளையம் அருகே உள்ள சாணாம்புதூரை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 20) என்பவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரியில் மாணவர்கள் 2 பிரிவாக பிரிந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்கள். இது சம்பந்தமாக தினேஷ்குமார் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளார். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி அறிந்ததும் கல்லூரி மாணவ-மாணவிகள் ஆத்திரம் அடைந்தனர். வகுப்புகளை புறக்கணித்துவிட்டு வந்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

    ஈரோடு-முத்தூர் ரோட்டில் உள்ள எழுமாத்தூர் பஸ் நிறுத்தம் அருகே ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.

    தினேஷ்குமார் மீது பொய்யான புகார் கூறி இடைநீக்கம் செய்துள்ளார்கள் என்றும் தினேஷ்குமார் சாவுக்கு காரணமான கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவ-மாணவிகள் கூறினர்.

    அவர்களிடம் முழுமையாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என போலீசார் தெரிவித்தனர். இதனால் மாணவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் இன்றும் மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரியை புறக்கணித்த அவர்கள் எழுமாத்தூரில் கூடினர். அவர்களை போலீசார் கலைந்து போகச்செய்தனர்.

    இதையடுத்து அவர்கள் 2 வேன்கள் பிடித்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு புறப்பட்டனர். கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர். அங்கு சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் தினேஷ் குமார் சாவுக்கு காரணமான முதல்வர் மற்றும் 4 பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை சஸ்பெண்டு செய்ய வேண்டும்.

    தினேஷ்குமார் இறுதி சடங்குக்கு சென்ற 10 மாணவர்களை சஸ்பெண்டு செய்துள்ளனர். அந்த சஸ்பெண்டு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.

    எழுமாத்தூரில் இருந்து கல்லூரிக்கு 2 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டி யுள்ளது. இதனால் கல்லூ ரிக்கு செல்ல தாமதம் ஏற்படுகிறது. ஆனால் பேராசிரியர்கள் அவதூறாக பேசுகிறார்கள் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் எங்களது மாற்று சான்றிதழ்களை திரும்ப பெற்றுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

    அம்மாபேட்டையில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    அம்மாபேட்டை:

    இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

    போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகன சேதனையில் ஈடுபட்டு ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

    தற்போது இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வருபவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    அம்மாபேட்டையில் இன்று காலை பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் மாலதி தலைமையில் வாகன சோதனை நடந்தது.

    இதில் லைசென்சு இல்லாமல், வாகன உரிமம் இல்லாமல், ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் எப்.சி. புதுப்பிக்கப்படாத ஆட்டோக்களும் சோதனையிடப்பட்டன. இதில் 2 ஆடடோக்கள் எப்.சி. புதுப்பிக்காமல் இயக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்ட அபராதம் விதிக்கப்பட்டது.

    மொத்தம் ரூ.32 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டது. #Helmet #tamilnadu
    தமிழகத்தில் காலியாக உள்ள 1932 பணியிடங்களை பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழகம் மூலம் நிரப்பப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #TNMinister #Sengottaiyan
    ஈரோடு:

    வருவாய்த்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை ஈரோடு நகர நிலவரி திட்டத்தின் கீழ் பட்டா வழங்கும் விழா மற்றும் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு பிரசார துவக்க விழா ஈரோடு கருங்கல்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, செல்வகுமார் சின்னையன் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் நகர நிலவரி திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி மதிப்பில் 200 பயனாளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பட்டா வழங்கினார். அமைச்சர் தங்கமணி பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு பிரசாரத்தை தொடங்கி வைத்தார். அமைச்சர் கருப்பணன் பயனாளிகளுக்கு துணிப்பை மற்றும் சணல் பை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஜெயலலிதா வழியில் நடைபெறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொண்டு வருகிறது. பள்ளிகளில் காலியாக உள்ள 1932 பணியிடங்களை பெற்றோர்- ஆசிரியர் கழகம் மூலம் நிரப்ப உத்தரவு போடப்பட்டுள்ளது

    அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஊதியத்தை நிர்ணயிக்க தணிக்கைத் துறை இயக்குனர் பரிந்துரைப்படி ஒரு பள்ளியில் இத்தனை மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்ற விதிமுறையை கணக்கில் கொண்டு நீதித்துறை பரிந்துரை ஆகிய விவரங்கள் தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #TNMinister #Sengottaiyan
    அம்மாபேட்டை அருகே வீடு புகுந்து திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை, காட்டையராஜாநகரை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 58).

    அரிவாள் அடிக்கும் பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி ருக்மணி. நேற்று மதியம் கணவரும், மனைவியும் வீட்டை பூட்டி விட்டு சேலத்துக்கு சென்றனர்.

    மாலையில் அவர்கள் வீடு திரும்பியனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    அதில் இருந்த பிரேஸ் லெட், தோடு, செயின் உள்பட 5 பவுன் நகை திருட்டு போயிருந்தது. வீட்டின் பின் பக்க கதவு நெம்பி திறக்கப்பட்டு கிடந்தது.

    யாரோ மர்ம நபர்கள் பின் பக்க கதவு வழியாக உள்ளே நுழைந்து பீரோவை திறந்து அதில் இருந்த நகைகளை திருடி சென்று உள்ளனர்.

    இது குறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தமிழகத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் 4,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஈரோட்டில் அமைச்சர் தங்கமணி கூறினார். #MinisterThangamani
    ஈரோடு:

    ஈரோடு மாநகரின் முக்கிய சாலைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்லும் மேல்நிலை கம்பிகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக நிலத்தடியில் மின் கேபிள் பதிக்கும் பணிக்கு ரூ 58.96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலத்தடி மின் கேபிள் பதிக்கும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி இன்று ஈரோடு மின்வாரிய அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார்.

    எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணி, எம்.பி. செல்வ குமாரசின்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன், தங்கமணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிலத்தடியில் மின் கேபிள் பதிக்கும் பணியை தொடங்கி வைத்தனர்.

    பின்னர் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னைக்கு அடுத்தபடியாக ஈரோட்டில்தான் ரூ 58.96 கோடி மதிப்பில் பூமிக்கடியில் மின் கேபிள் பதிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சாதாரணமாக நிலத்திற்கு மேல் மின்கம்பிகள் அமைப்பதை விட நிலத்தடியில் மின் கேபிள் பதிக்கும் பணிக்கு கூடுதலாக 10 சதவீதம் செலவாகும்.

    எனினும் நிதி நிலைமை பொறுத்து ஒவ்வொரு பகுதியாக இந்த பணி நடக்க உள்ளது. 2011-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழகம் மின் மிகை மாநிலமாக மாற்றப்படும் என்று அறிவித்தார்.

    அதன்படி 2015-ம் ஆண்டு மின் மிகை மாநிலமாக அவர் மாற்றிக் காட்டினார். அவரது வழியில் நாங்களும் தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றி வருகிறோம். 2005-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது 3 நாட்களில் மின் விநியோகம் செய்யப்பட்டது.

    அதற்கு முக்கிய காரணம் இந்த நிலத்தடியில் மின் கேபிள் பதிக்கும் முறைதான். மின்வாரிய ஊழியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து வருகிறார்கள். போலீஸ் துறைக்கு அடுத்து 24 மணி நேரமும் மின் துறை ஊழியர்கள் தான் வேலை செய்து வருகிறார்கள்.

    தமிழகத்தில் 6 லட்சம் கிலோ மீட்டர் தூரம் மின் கம்பங்கள் கொண்டு செல்லப்படும். தயாரிக்கப்படும் மின்சாரத்தை அனைத்து பகுதிக்கும் கொண்டு செல்ல மின் டவர் அவசியம். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் அவர்களுக்கு மாற்று ஏற்பாடு, நஷ்டஈடு அதிகமாக கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தட்கல் முறை கடந்த 2017-ம் ஆண்டுதான் அறிமுகப்படுத்தப்பட்டது. இது விவசாயிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை 9 ஆயிரத்து 865 பேர் தட்கல் முறையில் மின் வினியோகம் பெற்று வருகின்றனர்.

    இதன் மூலம் 1,000 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் 4,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு செய்யப்பட்டுள்ளது.

    காவிரி ஆற்றின் 7 பேரேஜ் மூலம் 210 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக தயாரிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வெள்ளம் பாதித்த மக்களுக்காக 256 டிரான்ஸ்பார்மர்கள் 40 ஆயிரம் மின் மீட்டர்கள் வழங்கப்படும்.
     
    இவ்வாறு அவர் கூறினார். #MinisterThangamani

    சிவகிரி அருகே வாய்க்காலில் அடித்து வரப்பட்ட மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சிவகிரி:

    சிவகிரி அருகே உள்ள கந்தசாமி பாளையத்தில் கீழ் பவானி வாய்க்காலில் உள்ளது. தற்போது கீழ் பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் விடப்பட்டு உள்ளது.

    இதனால் வாய்க்காலில் அதிக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் கந்தசாமிபாளையம் ஓலக்கரை பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி பிணம் அடித்துவரப்பட்ட ஓரமாக ஒதுங்கி கிடந்தது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சிவிகிரி போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.

    அங்கு இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வாய்க்காலில் அடித்து வரப்பட்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? வாய்க்காலில் குளிக்கும் போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    பு.புளியம்பட்டி பகுதியில் நாட்டு வெடிகுண்டு கடித்ததில் மாடு பலியான சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் வெடிகுண்டு பதுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அடுத்த பாச்சாமல்லனூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் 5 மாடுகளை வளர்த்து வந்தார்.

    இந்த மாடுகள் அப்பகுதியில் தினமும் மேய்ச்சலுக்கு செல்லும். மாடுகள் மேய்வதை பார்க்க சென்ற வெங்கடேசுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு 4 மாடுகள் மட்டும் மேய்ந்து கொண்டிருந்தது. சற்று தூரத்தில் ஒரு மாடு இறந்து கிடந்தது.

    அவர் அதிர்ச்சி அடைந்ததற்கு காரணம் இறந்து கிடந்த மாடு தலை சிதறி இறந்து கிடந்தது. உடனே அவர் இதுகுறித்து பு.புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தலை சிதறி மாடு இறந்து கிடக்கிறதா? என்ற அதிர்ச்சி கலந்த குழப்பத்தில் புஞ்சை புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு ஆஜர் ஆனார்கள். இறந்து கிடந்த மாட்டை ஆய்வு செய்தபோது அது நாட்டு வெடிகுண்டை கடித்ததால் தலை சிதறி இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதியில் எப்படி நாட்டு வெடிகுண்டு வந்தது? இங்கு கொண்டு போட்டு சென்றது யார்? என்று போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    சம்பவம் நடந்த பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் விளாமுண்டி வனப்பகுதி உள்ளது. இங்கு சில மர்ம ஆசாமிகள் வனவிலங்குகளை வேட்டையாடி வருகிறார்கள். வனத்துறையினர் இந்த வேட்டை கும்பலை கண்காணித்து வந்தாலும் அந்த கும்பல் அவர்களையும் ஏமாற்றி முயல், மான், உடும்பு போன்ற வனவிலங்குகளை வேட்டையாடி செல்கிறார்கள்.

    மேலும் இவர்கள் காட்டுக்குள் சென்று வனவிலங்குகளை வேட்டையாடினால் வனத்துறையினரிடம் மாட்டிக் கொள்வோம் என எண்ணி விலங்குகள் தண்ணீர் மட்டும் இரை தேடி வெளியே வரும் தடத்தில் ஒதுக்குப்புறமான பகுதியில் நாட்டு வெடிகுண்டை வைத்து விடுகிறார்கள். இந்த நாட்டு வெடிகுண்டை ஏதோ ஒரு உணவு என கருதி அந்த விலங்கு கடிக்க உடனே அது வெடித்து விலங்கும் இறந்து விடுகிறது. அதன் பிறகு இறந்த விலங்கை வேட்டை கும்பல் எடுத்து சென்று விடும்.

    அப்படிதான் மர்ம ஆசாமிகள் இந்த நாட்டு வெடிகுண்டை வைத்து உள்ளனர். இதை அறியாத வாயில்லா ஜீவனான மாடு கடிக்க அது தலை சிதறி இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தை பார்க்கும்போது அந்த பகுதியில்தான் நாட்டு வெடிகுண்டுகளை முக்கிய புள்ளிகள் பதுக்கி வைத்திருக்க கூடும் என தெரிகிறது.

    அந்த முக்கிய புள்ளிகள் யார்? பிடிக்க புளியம்பட்டி போலீசார் வலை விரித்துள்ளனர்.
    பெருந்துறை அருகே மதிப்பெண் குறைவாக எடுத்ததால் மனவேதனையில் இருந்த 10-ம் வகுப்பு மாணவன் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜய மங்கலத்தில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் கோவிந்தசாமி.

    இவரது சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அண்ணா நகர் புத்தூர் ஆகும். விஜயமங்கலத்தில் தங்கி கிரேன் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

    மகன் கோகுல கிருஷ்ணன் (வயது 15) விஜயமங்கலத்தில் தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். பரீட்சையில் இவன் மதிப்பெண் குறைவாக எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவன் கோகுல கிருஷ்ணன் வேதனையில் இருந்துள்ளான்.

    இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி இரவு 10 மணிக்கு மாணவன் கோகுல கிருஷ்ணன் தனது வீட்டில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து விட்டான்.

    உடல் முழுவதும் கருகிய அவனை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு கோவிந்தசாமி தனது சொந்த மாவட்டமான கிருஷ்ணகிரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக மகனை சேர்த்தார்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மாணவன் கோகுல கிருஷ்ணன் இறந்து விட்டான்.

    இந்த பரிதாப சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×