என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஆளும் கட்சி சார்பில் ஊழியர்கள் கூட்டம் என்ற பெயரில் பணம் வினியோகம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என்று கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். #admk #kbalakrishnan

    ஈரோடு:

    ஈரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளா கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் கொடுமைகளை எதிர்த்து ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் கிளர்ந்து எழ வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஒரு பக்கம் காவல் துறையின் மெத்தனமும் தவறும் இருக்கிறது.

    சமூக வலைதளங்களில் ஏராளமான ஆபாச படங்கள் வருகின்றன. இது ஒட்டு மொத்த சமூகத்தையே பாழ்படுத்தி விடும் என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.

    விவசாயிகளை கைது செய்வதற்கு போலீசார் காட்டும் ஆர்வத்தை பொள்ளாச்சி பாலியல் வழக்கில்ஆர்வம் காட்டாதது ஏன்?. பொள்ளாச்சி சம்பவம் நடந்து தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான பெற்றோர்கள் மனதில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அது அடங்காத நிலையில் கோவையில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் அந்த வழக்கில் இன்னும் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வில்லை. பாலியல் வன்முறை, சமூக விரோத சக்திகளில் ஈடுபடும் குற்ற வாளிகளை அரசு பாதுகாக்கிறது.

    ஜனநாயக உரிமைக்காக போராட கூடியமக்களையும் விவசாயிகளையும் தொழி லாளர்களையும் அடக்கு முறைகளை ஏவி அடக்குகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். நியாயமான உரிமைக்காக போராட கூடிய விவசாயிகள் மீது வழக்குப் போடுகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளுக்கும், 18 சட்ட மன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. நாளை உச்ச நீதிமன்றத்தில் மீதமிருக்கும் 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது சம்பந்தமாக வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதில் 4வது தொகுதியாக சூலூர் தொகுதியையும் சேர்த்து மே மாதம் 13-ந் தேதிக்குள் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்தை கேட்டு கொள்கிறேன்.

    ஆளும் கட்சி சார்பில் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வாக்காளர்களுக்கு ஊழியர் கூட்டம் என்ற பெயரில் வழங்க ஆரம்பித்து விட்டார்கள். பல இடங்களில் பணம் வினியோகிப்பதை வாட்ஸ்- அப் மூலமாக படம் வந்திருக்கிறது.

    ஆனால் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ன தான் ஆளுங் கட்சியினர் பண விநியோகம் செய்தாலும், வரம்பு மீறி சலுகைகள் அளித்தாலும் இந்த முறை வாக்காளர்களை பொறுத்தவரை பாஜக- அதிமுக கூட்டணியை தோற்கடிப்பது என்ற உறுதியான நிலைப்பாட்டை மக்கள் எடுத்திருக்கிறார்கள்.

    முகிலன் காணாமல் போய் 1½ மாதங்கள் ஆகி இருக்கிறது. அவர் இருக்கிறாரா இல்லையா? என்பதே சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது. உடனடியாக முகிலனை கண்டுபிடித்து காவல் துறையினர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்ப டைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #admk #kbalakrishnan

    ஈரோடு காலிங்கராயன் வாய்க்காலில் தற்கொலை செய்து கொண்ட 3 பேர் யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு பவானி அருகே காலிங்கராயன் வாய்க்காலில் தற்போது பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் ஈரோடு கருங்கல்பாளையம், வளையல் கார வீதி, குப்பி பாலம் என்ற இடத்தில் காலிங்கராயன் வாய்க்காலில் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது வாய்க்காலில் ஒரு பெண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளின் சடலம் மிதந்து வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மூன்று பேரின் உடல்களையும் மீட்டனர். தற்கொலை செய்து கொண்ட பெண் தனது சேலையின் துப்பட்டவால் 2 குழந்தைகளின் உடம்பில் கட்டிருந்தார்.

    இறந்த பெண்ணிற்கு 35 வயது இருக்கும் ஒரு குழந்தைக்கு 12 வயது மற்றொரு குழந்தைக்கு 7 வயது இருக்கும். பின்னர் மூன்று பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அவர்கள் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு என்ன காரணம்? என்று உடனடியாக தெரியவில்லை.

    இறந்தவர்கள் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என்று முதலில் போலீசார் சந்தேகப்பட்டனர். இதையடுத்து ஈரோடு ஈரோடு டவுன் போலீசார் துரித நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஈரோடு கருங்கல்பாளையம், சூரம்பட்டி உள்பட போலீஸ் நிலைய பகுதிகளில் பெண்கள் யாராவது மாயமாகி இருக்கிறார்களா? என்று தீவிர விசாரணை நடத்தி வந்தனர் எனினும் அவரகள் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

    இறந்தவர்கள் வெளியூரை சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இறந்தவர்களின் போட்டோக்களை ஈரோடு, சேலம், கோவை, நாமக்கல் போன்ற போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக அவர்களது உடல் ஈரோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. #tamilnews
    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே இன்று அதிகாலை 1000 ரூபாய் பணத்தகராறில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள புது சூரிபாளையம் ஆண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 35). அதே பகுதியை சேர்ந்தவர் அம்மாசை (40).

    இருவரும் உறவினர்கள் ஆவர். 2 பேரும் எங்கே போனாலும் ஒன்றாகத்தான் செல்வார்கள்.

    இதற்கிடையே ஒரு ரிக் வண்டியில் கிருபாகரனுக்கு அம்மாசை வேலைக்கு சேர்த்து விட்டார். மேலும் கிருபாகரனுக்கு ரூ.1000 முன் பணமும் வாங்கி கொடுத்தார்.

    இந்த நிலையில் ரிக்வண்டி வேலை பிடிக்காததால் கிருபாகரன் வேலையை விட்டு விட்டு வீட்டுக்கு வந்து விட்டார். இதையொட்டி தான் முன் பணமாக வாங்கி கொடுத்த 1000 ரூபாயை அம்மாசை திருப்பி தரும்படி கேட்டார்.

    விரைவில் பணம் கொடுத்து விடுகிறேன் என்று கிருபாகரன் காலம் கடத்தி வந்தாராம்.

    இது தொடர்பாக அவர்களிடையே தகராறு இருந்து வந்தது.

    இன்று அதிகாலை 5 மணியளவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த கிருபாகரனின் கழுத்தில் அம்மாசை அரிவாளால் வெட்டினார். இதில் கழுத்தில் பலத்த வெட்டுபட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கிருபாகரன் பரிதாபமாக இறந்தார்.

    ரூ.1000 கடனுக்காக வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்த படுகொலை சம்பவம் குறித்து நம்பியூர் போலீசில் கொலை செய்யப்பட்ட கிருபாகரனின் தம்பி காமராஜ் (34) புகார் செய்தார். புகாரின் பேரில் நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆல்பர்ட் வழக்கு பதிவு செய்து கொலையாளி அம்மாசையை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் குண்டம் - தேர்த்திருவிழா விழாவை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு திருவிழா கொடியேற்றப்படுகிறது.
    ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் குண்டம்- தேர்த்திருவிழா கடந்த 18-ந்தேதி இரவு பூச்சாட்டுடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழாவை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு திருவிழா கொடியேற்றப்படுகிறது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடுகிறார்கள்.

    விழாவையொட்டி தினமும் 3 கோவில்களிலும் வைக்கப்பட்டுள்ள கம்பங்களுக்கு பெண்கள் மற்றும் பக்தர்கள் தொடர்ந்து புனிதநீர் ஊற்றி வழிபட்டு வருகிறார்கள்.

    வரும் ஏப்ரல் 2-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் விழா நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்துகிறார்கள்.

    அன்று இரவு 9 மணிக்கு மாவிளக்கும் கரகம் நிகழ்ச்சிகளும் நடக்கிறது. பெரிய மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    மறுநாள் 3-ந்தேதி பொங்கல் விழா நடக்கிறது.தொடர்ந்து சின்ன மாரியம்மன் கோவிலில் இருந்து தேர் வடம் பிடித்து இழுக்கும் தேரோட்டம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
    ஈரோடு பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 2 பேரிடம் ரூ.2 1/2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க கண்காணிப்பு குழுக்கள் பறக்கும் படைகள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஈரோடு பவானி பி.பி. அக்ரஹாரா சோதனை சாவடியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர் அதில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரொக்க பணமும் இருந்தது தெரிய வந்தது. காரை ஈரோட்டைச் சேர்ந்த தாவூத் (வயது 47) ஓட்டி வந்தார் இவர் தோல் ஷாப் உரிமையாளர் ஆவார்.

    வியாபாரத்துக்காக இந்த பணத்தை கொண்டுவததாக அவர் தெரிவித்தார். எனினும் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோவிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் இன்று அதிகாலை 4 மணியளவில் ஈரோடு சுண்ணாம்பு ஓடை பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது பவானியில் இருந்து ஒரு லோடு வேன் வந்தது. அந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ரூ1.40 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. அந்த வேனை பவானியை சேர்ந்த கந்தசாமி (56) ஓட்டி வந்தார். மிளகாய் வியாபாரத்திற்காக இந்த பணத்தை கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.

    எனினும் இந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்ததால அந்த பணத்தை பறிமுதல்செய்த பறக்கும் படை அதிகாரிகள் அதனை ஈரோடு கிழக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோவிடம் ஒப்படைத்தனர். #LSPolls

    பெருந்துறை அருகே ஆஸ்டலில் தங்கி படித்த கல்லூரி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அரசு மருத்துவகல்லூரியின் நர்சிங் படித்து வரும் மாணவி ஹாஸ்டலில் இருந்து மாயமான சம்பவம் தொடர்பாக முதல்வர் கொடுத்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், காசிபாளையம் பகுதியை சேர்ந்த  சிவராஜ் என்பவரது மகள் உமாதேவி (வயது 20). இவர் பெருந்துறை, சேனடோரியத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் மூன்றாமாண்டு நர்சிங் படித்து வருகிறார்.

    கல்லூரி வளாகத்தில் உள்ள ஹாஸ்டலிலேயே தங்கி படித்து வரும் இவர் நேற்று முன்தினம் காலை திங்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டிரெயினிங் சென்று விட்டு மதியம் ஹாஸ்டலுக்கு திரும்பி வந்துள்ளார்.

    பின்னர் அங்கிருந்து வார்டன் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோரிடம் அனுமதி பெறாமல் வெளியே சென்றாராம். அவர் மீண்டும் ஹாஸ்ட லுக்கு வராததால் கல்லூரி முதல்வர் மனோண்மணி பெருந்துறை போலீசில் புகார் செய்தார்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சுகவனம் காணாமல் போன மாணவியை தேடிவருகிறார்.

    சத்தியமங்கலத்தில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் வியாபாரிகளிடம் ரூ.4½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் பகல், இரவு என விடிய விடிய அதிரடி வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    சத்தியமங்கலம் அருகே உள்ள கள்ளிப்பட்டி செக் போஸ்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி முரளிதரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் நள்ளிரவில் அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அப்போது ஊட்டியில் இருந்து ஈரோடு வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். காரில் இருந்த மாட்டு வியாபாரி அப்துல் மஜித் என்பவரிடம் ரூ.2 லட்சத்து 68 ஆயிரம் இருந்தது.

    இந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால் அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் சத்தியமங்கலம் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

    சத்தியமங்கலம் அருகே செண்பகப்புதூர் மேடு என்ற இடத்தில் பறக்கும் படை அதிகாரி நாகேந்திரன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் தீனதயாளன் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது கோவையில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்த ஒரு காரில் வாழைக்காய் வியாபாரி மகேந்திரனிடம் (29) ரூ.95 ஆயிரம் இருந்தது.

    இவர் வாழைக்காய் விற்ற பணத்தை கொண்டு வருவதாக கூறினார். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அதே இடத்தில் மற்றொரு வேனை பறக்கும் படையினர் சோதனை நடத்திய போது அந்த வேனில் வந்த காய்கறி வியாபாரி புளியம்பட்டியை சேர்ந்த முகமது ஜக்காரியா (37) என்பவரிடம் ரூ.96 ஆயிரம் பணம் இருந்தது தெரிய வந்தது.

    அவர் காய்கறி விற்று வாங்கிய பணம் என கூறினார். எனினும் அந்த பணத்தையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தேர்தல் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். #LSPolls

    தமிழக கர்நாடக எல்லையில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் கர்நாடக வியாபாரியிடம் இருந்து ரூ.1 3/4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019
    ஈரோடு:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்த முறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி பகுதியில் பறக்கும் படை அலுவலர் செல்வன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நஞ்சுண்டன் கொண்ட குழுவினர் தமிழக கர்நாடக எல்லை பகுதியான பாரதிபுரம், அருள்வாடி பகுதிலும் அதே போல் தொட்டகாஜனூர், சூசைபுரம்,மெட்டல்வாடி, திகனாரை, மல்லன்குழி, பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    அந்த வழியாக வரும் கார், பஸ், வேன் வாகனங்களை சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வழியாக வரும் வாகன பதிவு எண், செல் நெம்பர் ஆகிய விபரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

    அப்போது தமிழக கர்நாடக எல்லை அருள்வாடி அருகே கர்நாடக பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரிய வந்தது.

    காரின் உரிமையாளர் சம்பத் கர்நாடக மாநிலம் ஆ‌ஷன் கிராமத்தை சேர்ந்தவர் என்பவர் அருள்வாடி பகுதியில் இருந்து தாளவாடி பகுதிக்கு விதை உருளைக்கிழங்கு பணம் பெற்று செல்வதாக தெரிவித்தார். ஆனால் அதற்கான உரிய ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    பணத்தை சத்தியமங்கலம் தாசில்தார் கார்த்திக்கிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர். உரிய ஆவணத்தை காட்டி பணத்தை பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவித்தனர்.  #LokSabhaElections2019
    கருங்கல்பாளையத்தில் திருமணமாகத ஏக்கத்தில் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27) இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக பணி புரிந்து வந்தார்.

    கடந்த 24-ந் தேதி வீட்டில் வந்து படுத்தவர் அங்கேயே இறந்து கிடந்தார் அவர் வி‌ஷம் குடித்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை அரசு ஆஸ்த்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? திருமண ஏக்கத்தில் தற்கொலை செய்தாரா? என்று கருங்கல் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ஈரோடு மாவட்டத்தில் முகவரி கேட்பது போல் மூதாட்டியிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி கொல்லம்பாளையம் சோலையப்பன் வீதியில் வசித்து வரும் லிங்கப்பன் மனைவி கண்ணம்மாள் (வயது 78) வீட்டு வாசலில் நின்றிருந்த போது முகவரி கேட்பது போல் வந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர். அப்போது இது பற்றி அவர் புகார் கொடுக்கவில்லை.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதியோர்களுக்கு உதவும் வகையில் சீனியர் சிட்டிசன் மொபைல் செயலியை ஈரோடு மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் அறிவித்திருந்தார்.

    இது குறித்து அறிந்த கண்ணம்மாள் சீனியர் சிட்டிசன் மொபைல் செயலி மூலம் தன்னுடைய நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றதாக தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

    பவானி அருகே பெண்கள் தாக்கியதாக வாலிபர் தற்கொலை செய்ததும், பெண்கள் இன்று கைது செய்யப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே காடையாம்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பானுமதி. இவரது மகன் சக்திவேல் (வயது 28).

    சாயப்பட்டறை தொழிலாளியான சக்திவேலுக்கு திருமணமாகி ஜோதிகா (22) என்ற மனைவி உள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஜோதிகா பிரிந்து சென்று விட்டார். சக்திவேல் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

    சக்திவேலின் தாயார் பானுமதிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் கடந்த ஆண்டு மகளிர் சுய உதவி குழுவில் சேர்ந்து கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. ஆனால் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தடுமாறினார்.

    மகளிர் சுய உதவி குழுவினரிடம் தனது தாயார் வாங்கிய கடனை நான் அடைக்கிறேன் என்று கூறினாராம். ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதிபடி அவராலும் பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் தடுமாறினார்.

    இந்த நிலையில் சக்திவேல் வீட்டுக்கு மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த அதே பகுதியை சேர்ந்த திலகவதி, அம்பிகா, கனகா ஆகிய 3 பேர் வந்தனர்.

    அவர்கள் சக்திவேலிடம் பணத்தை கொடுங்கள் என்று கேட்டனர். இது தொடர்பாக அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது. பிறகு அடி-தடியாகவும் மாறியது. ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

    3 பெண்களும் சக்தி வேலை தாக்கியதாக கூறப்படுகிறது. கட்டையாலும் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே அங்கு கூட்டம் கூடியது. பிறகு அங்கிருந்த 3 பெண்களும் சென்று விட்டனர். பெண்கள் தாக்கியதால் காயம் அடைந்த சக்திவேலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    தன்னை பெண்கள் அடித்து விட்டார்களே.. என்ற மன வேதனையில் இருந்த சக்திவேல் வி‌ஷம் குடித்தார்.

    உடனே அவரை பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக இறந்தார்.

    சக்திவேல் இறந்ததை தொடர்ந்து அவரது உறவினர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். காடையாம்பட்டி ரோட்டில் நேற்று மதியம் சாலை மறியல் நடத்தினர்.

    இவர்களுடன் பொதுமக்களும் சேர்ந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    சக்திவேல் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் கூறினர்.

    நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதால் சாலை மறியலை கைவிட்டனர்.

    இந்த நிலையில் பவானி போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

    சக்திவேலை தாக்கியதாக கூறப்படும் திலகவதி, அம்பிகா, கனகா ஆகிய 3 பேரையும் பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் இன்று அதிகாலை கைது செய்தார்.

    பிறகு 3 பேரும் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    பவானி அருகே பெண்கள் தாக்கியதாக வாலிபர் தற்கொலை செய்ததும், பெண்கள் இன்று கைது செய்யப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

    ஈரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் கேரளா ஜவுளி வியாபாரிகளிடம் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    ஈரோடு, மார்ச். 26-

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் ஈரோடு பகுதியில் பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தி அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா அருகே தேர்தல் பறக்கும் படையினர் அந்த பகுதியில் வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த காரில் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியை சேர்ந்த பிரவீன் தாஸ் (50) என்ற ஜவுளி வியாபாரி வந்தார். அவரிடம் ரூ.2 லட்சம் உரிய ஆவணமின்றி இருந்ததாக தெரிகிறது.

    தான் ஜவுளி வாங்க வந்ததாக பிரவீன்தாஸ் கூறினார். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    இதே போல் வில்லரசம் பட்டி நால் ரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

    அங்கு வந்த ஒரு காரை சோதனை நடத்திய போது காரில் வந்த கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரிடம் ஆவணமின்றி ரூ.1 லட்சம் இருந்தது. அவரும் ஜவுளி வாங்க இந்த பணத்தை கொண்டு வந்ததாக கூறினார்.

    அதே சமயம் அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பிறகு அந்த பணம் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. #LSPolls

    ×