என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு அருகே மில் மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு கனிராவுத்தர் குளம் அடுத்த தட்டான்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முக சுந்தரம் (வயது 44). இவரது மனைவி ஜெயசித்ரா.

    இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சண்முக சுந்தரம் பள்ளி பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஸ்பின்னிங் மில்லில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை சண்முக சுந்தரம் குமாரபாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு விஷேசத்திற்காக தனது குடும்பத்தினருடன் சென்று விட்டார். உறவினர் வீட்டு விசே‌ஷத்தை முடித்து கொண்டு இன்று காலை மீண்டும் வீட்டுக்கு வந்தார்.

    அப்போது வீட்டின் முன் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டின் மெயின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் பொருட்கள் யாவும் சிதறிக்கிடந்தன.

    வீட்டில் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 26 பவுன் நகை மற்றும் 40 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மர்மநபர்கள் யாரோ வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு தெரிந்துக் கொண்டு கைவரிசை காட்டி உள்ளது தெரிய வந்தது.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கொள்ளை நடந்த பக்கத்து தெருவில் தான் நேற்று இதே போல் சாயப்பட்டறை அதிபர் வீட்டில் 13 பவுன் நகையும் ரூ.9 லட்சம் ரொக்க பணத்தையும் கொள்ளையர்கள் அள்ளிச் சென்றனர்.

    இந்த 2 சம்பவங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி உள்ளதால் ஒரே கொள்ளையர்கள் இந்த 2 கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அடுத்தடுத்து நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    பவானிசாகர் அருகே ஜவுளி தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த பகுத்தம் பாளையம் குமரன் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55). ஆறுமுகம் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் ஆறுமுகம் திடீரென வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் இது குறித்து அவரிடம் கேட்டனர். அப்போது தான் வி‌ஷம் குடித்து விட்டதாக தெரிவித்தார்.

    இதனையடுத்து ஆறுமுகம் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆறுமுகம் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    சத்தியமங்கலம்- கோபி பகுதியில் கனமழையால் தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

    சத்தியமங்கலம், கோபி மற்றும் அந்தியூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை கன மழை கொட்டியது. தொடர்ந்து 1 மணி நேரமாக கொட்டி தீர்த்த மழையால் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டி கணக்கம்பாளையம் கொண்டையம் பாளையம் அத்தாணி டி.என். பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை 4 மணி முதல் தொடர் கன மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது. பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லமுடியாமல் தவித்தனர்.

    தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக பெய்துவரும் கன மழையினால் வேதாறை ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கொண்டையன்பாளையம் தரைப்பாலம் மூழ்கியது.

    சத்தியமங்கலம் அந்தியூர் தேசியநெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கணக்கம்பாளையம் பகுதிகளிலும் 2-க்கும் மேற்பட்ட தரைப்பாலங்கள் மூழ்கின. கணக்கப்பாளையம் கிராமத்தினுள் வெள்ள நீர் புகும் அபாயத்தில் மக்கள் பரிதவித்து வருகிறார்கள்.

    ஈரோடு அருகே மகள் திருமணத்துக்காக வைத்திருந்த 13 பவுன் நகைகளும் 9 லட்சம் ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதி எல்லப்பாளையம் அருகே உள்ள தட்டாங்காடு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 55). அப்பகுதியில் பிளீச்சிங் (சாய)பட்டறை நடத்தி வருகிறார்.இவரது மனைவி பெயர் அன்னக்கொடி (48). 3 மகள்கள் உள்ளன.

    தங்களது மகள் கோகுல பிரியாவுக்கு திருமணம் நடத்த 13 பவுன் நகைகள் மற்றும் 9 லட்சம் ரூபாயை வீட்டில் வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் சென்னிமலை அருகே உள்ள மைலாடியில் உள்ள மற்றொரு மகள் வீட்டுக்கு மணி தனது குடும்பத்தினருடன் சென்று விட்டார்.

    இன்று காலை 11 மணியளவில் அவர்கள் மகள் வீட்டிலிருந்து திரும்பி ஈரோட்டுக்கு வந்தனர். வீட்டுக்கு சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது.

    வீட்டின் உள்ளே அறைகளில் இருந்த 3 பீரோக்களும் திறக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.

    மகள் திருமணத்துக்காக வைத்திருந்த 13 பவுன் நகைகளும் 9 லட்சம் ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர்.

    வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டு கதவை உடைத்து துணிகர கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் கைரேகை நிபுணர் வந்து கொள்ளையர்களின் கைரேகையை பதிவு செய்தார். மேலும் போலீஸ் மோப்ப நாயும் துப்புதுலக்கியது.

    இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பெருந்துறை அருகே விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த சீனாபுரம் ஆயிக்கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 42).

    அதே பகுதியில் தறிப்பட்டறை வைத்து நடத்தி வரும் அவரது தறிப்பட்டறையில் சீனாபுரம் சூரநாய்க்கனூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார்(37) வேலை பார்த்து வந்தார்.

    நேற்று காலை ஜனார்த்தனன் தறிப்பட்டறைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக தனது பட்டறையில் வேலை பார்க்கும் விஜயகுமாருடன் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    இவர்களுடன் விஜயகுமாரின் மனைவி மேனகா (34)வும் சென்றார். பைக்கை விஜயகுமார் ஓட்டினார்.ஜனார்த்தனன் மற்றும் மேனகா ஆகிய இருவரும் பின்னால் அமர்ந்து கொண்டு சென்றனர். இவர்கள் பெருந்துறை பெத்தாம்பாளையம் ரோடு பைபாஸ் பகுதியில் ரோட்டை கடந்தார்.

    அப்போது கோவையில் இருந்து சேலம் நோக்கி சென்ற மினிஆட்டோ எதிர்பாராதவிதமாக இவர்களது மீது மோதியது.

    இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 பேரும் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜனார்த்தனன் மற்றும் விஜயகுமார் இருவரும் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேனகா படுகாயத்துடன் ஆஸ்த்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அயோத்தி வழக்கின் தீர்ப்பு மூலம் இந்து-இஸ்லாமியர்களின் உறவு மேலும் வலுப்பெறும் என்று ஈரோட்டில் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று மதியம் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    30 ஆண்டு காலமாக அயோத்தியில் ஏற்பட்ட பிரச்சனைக்கு வரலாற்று சிறப்புமிக்க ஏகமனதான தீர்ப்பு இன்றைக்கு வெளிவந்திருக்கிறது.

    அயோத்தியை மையமாக வைத்து இதுவரை இருந்த மனக்கசப்புகள் இன்றோடு முடிவடைந்து, இன்று முதல் புதிய தொடக்கமாக நல்லுறவு தொடர வேண்டும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அங்கே அதே இடத்தில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

    அயோத்தியில் மசூதி கட்ட 5 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய சிறந்த வழிமுறை என்பதை இங்கே குறிப்பிடுகிறேன். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக ஏற்கனவே பல பொது அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் அளித்திருந்த வாக்குறுதியை ஒருமனதாக ஒத்த கருத்தோடு நிறைவேற்றவேண்டும்.

    இந்து இஸ்லாமிய மக்களின் சகோதரர் நல்லுணர்வு இந்த தீர்ப்பின் அடிப்படையில் மேலும் உறுதிப்பட வேண்டும். இந்துக் கோயில்கள் இஸ்லாமிய மசூதிகளில் கிறிஸ்தவ ஆலயங்கள் இவைகளுக்கு மத பேதமின்றி மக்கள் இந்தியாவில் சென்று வருவது நம்முடைய பழம் பெரும் கலாச்சாரமாக இருந்து வருகிறது.

    இது தொடரவேண்டும் இந்த நல்லிணக்கம் பண்பு ஒற்றுமை உணர்வு மேலும் வளர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    நாட்டில் உள்ள அனைவரும் இத்தீர்ப்பை ஒருமனதாக ஏற்றுக்கொண்டு அமைதியை பின்பற்றக் கூடிய உயர்ந்த சூழலை ஏற்படுத்த வேண்டும் தேசப்பிதா இந்தியாவிற்கு விடுதலை பெற்றுத் தந்த அண்ணல் காந்தியடிகளின் 150 வது பிறந்த நாள் விழாக்களை கொண்டாடுகின்ற இந்தியாவில் இஸ்லாமியர்கள் இந்துக்களின் ஒற்றுமைக்காக இறுதி மூச்சுவரை பாடுபட்டவர் காந்தியடிகள். அவைகளை மனதில் கொண்டு ஒற்றுமையை எல்லோரும் இணைந்து செயல்படுத்தக் கூடிய உயர்ந்த நிலையை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கடந்த சில வாரங்களாக நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வந்த மழையால் நேற்று 104.74 அடியாக இருந்த பவானிசாகர் அணை நள்ளிரவில் முழு கொள்ளளவான 105 அடியை எட்டியது.
    சத்தியமங்கலம்:

    மேட்டூர் அணைக்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் 2-வது பெரிய அணையாக பவானிசாகர் அணை  உள்ளது. 120 அடி கொண்ட இந்த அணையில் 105 அடி வரை தண்ணீரை சேமிக்க முடியும்.

    கடந்த சில வாரங்களாக நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வந்த மழையால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. 13 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் நீர் மட்டம் 102 அடியை தாண்டியது.

    இதனால் முழு கொள்ளளவான 105 அடியை எட்டும் நிலையில் இருந்தது. இந்த நிலையில் நேற்று 104.74 அடியாக இருந்த பவானிசாகர் அணை நள்ளிரவில் முழு கொள்ளளவான 105 அடியை தொட்டது.

    இதனால் அணையின் பாதுகாப்பு கருதி நேற்று நள்ளிரவு முதல் அணை திறக்கப்பட்டது. அணைக்கு வரும் 2300 கனஅடி தண்ணீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

    தற்போது உபரி நீர் திறப்பு குறைவாக இருந்தாலும் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனால் பவானி ஆற்று கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
    அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படுவதையொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் 1700 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
    ஈரோடு:

    பரபரப்பாக பேசப்பட்டு வரும் அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படுவதையொட்டி நாடு முதுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டு உள்ளது.

    ஈரோடு மாவட்டத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மேற்பார்வையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், ரெயில் நிலையம், பஸ் நிலையம், மார்க்கெட் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலையில் இருந்தே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள் ஆகிய வழிப்பாட்டு தலங்கள் முன்பும் பாதுகாப்பு நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ரெயில் நிலையம் உள்ளே போகும் பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டு மெட்டல் டிடெக்டர் கருவி மலம் சோதனை செயயப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் ஈரோடு ரெயில் நிலையம் வரும் ரெயில்களிலும் போலீசார் ஏறி தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் ஈரோடு ரெயில் நிலையம் பரபரப்பாக உள்ளது.

    ஈரோடு, பெருந்துறை, கோபி, அந்தியூர், சத்தியமங்கலம், பவானி, கவுந்தப்பாடி, கொடுமுடி, மொடக்குறிச்சி, சிவகிரி, ப.புளியம்பட்டி, தாளவாடி என மாவட்டம் முழுவதும் 1700 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
    கோபி அருகே வாய்க்காலில் குளித்த அரசு போக்குவரத்து ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    கோபி அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 55). நம்பியூர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணி புரிந்து வந்தார். இவரது மனைவி காயத்ரி, மகன் பிரேம்குமார். இவர்கள் 3 பேரும் கீழ்பவானி வாய்க்கால் இரட்டை பாலம் என்ற இடத்துக்கு குளிக்க சென்றனர்.

    வாய்க்காலில் காயத்ரி துணி துவைத்து கொண்டிருந்தார். மகன் வாய்க்கால் கரையோரம் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது ராமசாமி வாய்க்காலில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டார் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அவரது உடலை பார்த்து மனைவி, மகன் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி மிகவும் உருக்கமாக இருந்தது.

    இந்த சம்பவம் குறித்து கடத்தூர் போலீசர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இந்த திடீர் மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வறட்சி நிலையே காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று சத்தியமங்கலம் மற்றும் புஞ்சைபுளியம்பட்டி பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது.

    சத்தியமங்கலத்தில் நேற்று மாலை 5 மணிக்கு ஆரம்பித்த மழை 6 மணி வரை ஒரு மணி நேரம் கொட்டியது. இதனால் ரோட்டின் இருபுறமும் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இந்த திடீர் மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதேபோல் புஞ்சைபுளியம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் நேற்று இரவு 7 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை 1 மணி நேரம் பெய்தது. இதனால் அப்பகுதியில் குளிர்ச்சியான நிலை நிலவியது. மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இந்த நிலையில் நீலகிரி மலையில் மழை நின்றதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று குறைந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு 2293 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 104.50 அடியாக உள்ளது. (கொள்ளளவு 105 அடி).

    அணையிலிருந்து வாய்க்கால்களுக்கு பாசனத்துக்கு வினாடிக்கு 2900 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    கோபி அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    கோபி அடுத்த பெரிய மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் கூலி தொழிலாளி. இவரது மகள் சத்யபாமா (வயது 20).

    சத்யபாமா கோபியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த சில மாதமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது மாணவி சத்தியபாமா தனது சுடிதார் துணி மூலம் தூக்குப்போட்டு தொங்கினார்.

    சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த உறவினர்கள் கதவை உடைத்து மாணவியை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    உடல் நலக்குறைவு காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டரா? அல்லது வேறு காரணம் ஏதும் உண்டா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கல்லூரி மாணவி திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சிவகிரி-குலவிளக்கில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    ஈரோடு:

    சிவகிரி துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    சிவகிரி, வேட்டுவ பாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம், கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மோளப் பாளையம், பாரப்பாளையம், விளக்கேத்தி, குட்டப்பாளையம். அம்மன் கோயில், தொப்பபாளையம், பெரும்பரப்பு, வடுகபட்டி, 24 வேலம்பாளையம், பண்ணைக்கிணறு, கரட்டுப்புதூர், காட்டுப்பாளையம் மற்றும் ராக்கம்மா புதூர், இச்சிப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

    இத்தகவலை ஈரோடு தெற்கு செயற்பொறியாளர் முத்துவேல் தெரிவித்துள்ளார்.

    ×