என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை (கோப்புப்படம்)
    X
    கொள்ளை (கோப்புப்படம்)

    ஈரோடு அருகே மில் மேலாளர் வீட்டில் 26 பவுன் நகை கொள்ளை

    ஈரோடு அருகே மில் மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு கனிராவுத்தர் குளம் அடுத்த தட்டான்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முக சுந்தரம் (வயது 44). இவரது மனைவி ஜெயசித்ரா.

    இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சண்முக சுந்தரம் பள்ளி பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஸ்பின்னிங் மில்லில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை சண்முக சுந்தரம் குமாரபாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு விஷேசத்திற்காக தனது குடும்பத்தினருடன் சென்று விட்டார். உறவினர் வீட்டு விசே‌ஷத்தை முடித்து கொண்டு இன்று காலை மீண்டும் வீட்டுக்கு வந்தார்.

    அப்போது வீட்டின் முன் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டின் மெயின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் பொருட்கள் யாவும் சிதறிக்கிடந்தன.

    வீட்டில் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 26 பவுன் நகை மற்றும் 40 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மர்மநபர்கள் யாரோ வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு தெரிந்துக் கொண்டு கைவரிசை காட்டி உள்ளது தெரிய வந்தது.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கொள்ளை நடந்த பக்கத்து தெருவில் தான் நேற்று இதே போல் சாயப்பட்டறை அதிபர் வீட்டில் 13 பவுன் நகையும் ரூ.9 லட்சம் ரொக்க பணத்தையும் கொள்ளையர்கள் அள்ளிச் சென்றனர்.

    இந்த 2 சம்பவங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி உள்ளதால் ஒரே கொள்ளையர்கள் இந்த 2 கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அடுத்தடுத்து நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    Next Story
    ×