என் மலர்tooltip icon

    ஈரோடு

    கொடுமுடியில் முககவசம் அணியாமல் வந்த 30 பேரிடம் இருந்து தலா ரூ.200 என மொத்தம் ரூ.6 ஆயிரத்தை போலீசார் அபராதமாக வசூலித்தனர்.
    கொடுமுடி:

    கொடுமுடி புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், பரமேஸ்வரன் ஆகியோர் கடந்த 2 நாட்களாக வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக முககவசம் அணியாமல் வந்த 30 பேரிடம் இருந்து தலா ரூ.200 என மொத்தம் ரூ.6 ஆயிரத்தை போலீசார் அபராதமாக வசூலித்தனர்.
    அந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்து நாசம் ஆனது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள புதுப்பாளையம், கெட்டிசமுத்திரம், ஜே.ஜே.நகர், தண்ணீர்பந்தல், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் வாழைகளை பயிரிட்டு உள்ளனர். இந்த நிலையில் அந்தியூர் பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது.

    இதில் சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் அடியோடு சாய்ந்து நாசம் ஆனது. மேலும் மக்காச்சோள பயிர்களும் சாய்ந்து நாசம் ஆனது.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘நாங்கள் பல்வேறு வங்கிகளில் நகைகளை அடகு வைத்து வாழை மற்றும் மக்காச்சோளத்தை பயிரிட்டு உள்ளோம். மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழைகளை வளர்த்து வந்தோம். இந்த நிலையில் சூறாவளிக்காற்று வீசி எங்களுடைய வாழை மற்றும் மக்காச்சோளத்தை சாய்த்து விட்டது. எனவே விவசாய துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சாய்ந்து விழுந்த வாழை மற்றும் மக்காச்சோள பயிர்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

    மேலும் சூறாவளிக்காற்றால் மரங்கள் முறிந்து விழுந்ததில் அந்தியூர் பகுதியில் பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதுபற்றி அறிந்ததும் மின்வாரிய துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று மரங்களை அப்புறப்படுத்தியதுடன், மின் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அதேபோல், கொடுமுடி, மொடக்குறிச்சி, பவானிசாகர், தாளவாடி பகுதிகளிலும் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
    ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று இரவு மழை வெளுத்து வாங்கியதில் மழைநீர் வெள்ளம் போல் பல்வேறு பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடியது.
    ஈரோடு:

    வெப்பச்சலனம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் அந்தமான் கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    அதன்படி ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. எனினும் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது.

    இதைத்தொடர்ந்து மாலை வானில் கருமேகங்கள் தோன்றின. இரவு 8.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சிறிது நேரத்தில் வலுப்பெற்று கன மழையாக வெளுத்து வாங்கியது.

    இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. அதைத்தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் ஈரோடு வீரப்பன்சத்திரம், பெரிய வலசு, கருங்கல்பாளையம், நாடார் மேடு, பன்னீர்செல்வம், பூங்கா உள்பட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

    சில இடங்களில் சாக்கடை கழிவு நீருடன் மழை நீர் சேர்ந்து ஓடியது. நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குட்டை போல் தேங்கி நின்றது.

    ஈரோடு மாநகர் பகுதியில் மின் கேபிள் பதிக்கும் பணி, பாதாள சாக்கடை பணி, ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட ரோடுகள் சீரமைக்கப்படாத இடத்தில் சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. இதனால் மக்கள் நடந்து மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்ல மிகவும் சிரமப்பட்டனர். மழை காரணமாக இரவில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.
    ஈரோட்டில் கடன் தொல்லையால் தொழில் அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    ஈரோடு வைராபாளையம் நேதாஜி வீதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 43). தொழில் அதிபரான இவர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் சொந்தமாக ஜவுளிக்கடை வைத்து நடத்தி வந்தார். இதற்காக சரவணன் பலரிடம் கடன் வாங்கி உள்ளதாக தெரிகிறது. கொரோனா ஊரடங்கால் ஜவுளி வியாபாரம் சரியாக இல்லாததால் சரவணனால் வாங்கிய கடனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் கடனை திரும்பி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் சரவணன் கடந்த சில நாட்களாக மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார்.

    இந்தநிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று முன்தினம் சரவணன் விஷம் குடித்து விட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி ரத்னா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சரவணனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சரவணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவருடைய உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கொரோனா ஊரடங்கு காரணமாக பிறந்த குழந்தையை 7 மாதங்களாக பார்க்க முடியாமல் சென்னிமலையை சேர்ந்த வங்கி மேலாளர் தவித்தார். ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் ஆந்திராவுக்கு சென்று குழந்தையை பார்த்து ஆசையுடன் கொஞ்சி மகிழ்ந்தார்.
    சென்னிமலை:

    ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் நவீன். இவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஒரு அரசு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரவந்தி. இவர்களுடைய மகன் பார்கவ் (வயது 3). நவீன் சென்னிமலையில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் ஸ்ரவந்தி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். இதைத்தொடர்ந்து பிரசவத்துக்காக ஸ்ரவந்தி கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆந்திர மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றார். வங்கி மேலாளர் நவீன் மட்டும் சென்னிமலையில் தனியாக தங்கியிருந்தார்.

    இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஸ்ரவந்திக்கு பெண் குழந்தை பிறந்தது. தனது குழந்தையை ஆசையுடன் பார்ப்பதற்காக நவீன் ஊருக்கு செல்ல இருந்த நிலையில் திடீரென கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

    மேலும் மாவட்டத்தை விட்டே வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் நவீனும் தனது ஆசை மகளை பார்க்க முடியாமல் தவித்தார்.

    எனினும் வீடியோ கால் மூலம் தனது மகளை பார்த்து ஏங்கினார். தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டதாலும், வங்கியில் விடுப்பு கிடைத்ததாலும் ஆந்திராவுக்கு செல்ல விரும்பினார். இதைத்தொடர்ந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றார்.

    அங்கு ஆசையுடன் தனது மகளை எடுத்து கொஞ்சி மகிழ்ந்தார். 7 மாதங்களுக்கு பிறகு தன்னுடைய மகளை பார்த்ததால் நவீன் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
    சத்தியமங்கலத்தில் தூக்குப்போட்டு போலீஸ் ஏட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் கோம்புபள்ளத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 45). இவர் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி பத்மா. இவர்களுக்கு சாஜிதா, மதுமிதா என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் சாஜிதா கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மதுமிதா, சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு வந்த ரமேஷ்குமார் அங்குள்ள தன்னுடைய அறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வராததால் அவருடைய மனைவி பத்மா சந்தேகப்பட்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு ரமேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதை கண்டதும் கதறி துடித்தார்.

    இந்த சம்பவம் பற்றி அறிய வந்ததும் சத்தியமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்பையா, இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ்குமார் பணி சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை நேரில் சென்று ரமேஷ்குமார் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.
    முன்விரோதம் காரணமாக பெண்கள் உள்பட 4 பேரை கத்தியால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மோசிக்கீரனார் வீதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 46). இவர் ஈரோடு வ.உ.சி. பூங்கா தற்காலிக மார்க்கெட்டில் கருவேப்பிலை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது அண்ணன் சரவணன் (50). இவரும் ரங்கசாமி கடையின் அருகிலேயே கருவேப்பிலை கடை வைத்துள்ளார்.

    ரங்கசாமி தனது தாய் வீராயி (65), மனைவி காவேரி (37), மகள் யோகேஸ்வரி (20) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். சரவணன் அவரது குடும்பத்தினருடன் கருங்கல்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். ரங்கசாமிக்கும், சரவணனுக்கும் இடையே தொழில்போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ரங்கசாமி, சரவணனை திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த சரவணனின் மகன் தமிழ்வாணன் (23), ரங்கசாமியின் வீட்டிற்கு சென்று, வீராயி, காவேரி, யோகேஸ்வரி ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தமிழ்வாணன் தான் பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து வீராயியையும், காவேரியையும் சரமாரியாக உடலில் குத்தினார். இதைப்பார்த்து தடுக்க வந்த யோகேஸ்வரி மற்றும் ரங்கசாமிக்கும் கத்தி குத்து விழுந்தது. பின்னர் தமிழ்வாணன் அனைவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில், காயம் அடைந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்வாணனை கைது செய்தனர்.

    ஈரோட்டில் தற்கொலை தடுப்பு ஆலோசனை மையத்தை போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
    ஈரோடு:

    ஈரோட்டில் தற்கொலை தடுப்பு ஆலோசனை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. ஈரோட்டில் உள்ள தன்னார்வ தொண்டு அமைப்புகள் மற்றும் மாவட்ட காவல்துறை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆகியவை இணைந்து ஈரோட்டில் இந்த மையத்தை தொடங்க உள்ளனர். இதன் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை கலந்து கொண்டு தற்கொலை தடுப்பு ஆலோசனை மையத்தை திறந்து வைத்தார்.

    அவர் பேசும்போது, ‘மாணவ- மாணவிகளுக்கு தேர்வு அச்சத்தை போக்கவும், எதிர்காலம் குறித்த நேர்மறையான நம்பிக்கை ஏற்படுத்தவும் வேண்டும். இதற்காக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தொலைபேசி சேவை பெறப்பட்டு, அந்த எண்கள் அனைத்து பகுதிகளிலும் சுவரொட்டிகள் மூலம் விளம்பரப்படுத்தப்படும்‘ என்றார்.
    ஈரோட்டில் மது விற்ற 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்சாமி மற்றும் போலீசார் வாய்க்கால்மேடு பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், ஈரோடு ரங்கம்பாளையம் இரணியன் வீதியை சேர்ந்த பாலுசாமி (வயது 33) என்பதும், அவர் அந்த பகுதியில் நின்று கொண்டு மது விற்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலுசாமியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 12 மதுபான பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல் ஈரோடு சென்னிமலை ரோடு பகுதியில் நின்று கொண்டு மது விற்ற, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியை சேர்ந்த சேகர் (45) என்பவரை சூரம்பட்டி போலீசாரும், ஈரோடு பவானி ரோடு பகுதியில் நின்று கொண்டு மது விற்ற, வீரப்பன்சத்திரம் முல்லை நகர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (26) என்பவரை கருங்கல்பாளையம் போலீசாரும் நேற்று கைது செய்தனர். இதில் சேகரிடம் இருந்து 7 மதுபான பாட்டில்களும், தினேஷ்குமாரிடம் இருந்து 5 மதுபான பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
    சொத்து தொடர்பாக ஏற்பட்ட தகராறில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி ஸ்டாலின் வீதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ஈஸ்வரி. சொத்து தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த ரமேஷ் தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்து விட்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ரமேஷ் நேற்று இறந்தார். இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு தலைமை தபால் அலுவலகத்தில் 2 ஊழியர்களுக்கு கொரோனா ஏற்பட்டதால் அலுவலகத்துக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு தலைமை தபால் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த ஜூலை மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் சுமார் 10 நாட்கள் தபால் அலுவலகத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்பிறகு வழக்கம்போல் தபால் அலுவலகம் செயல்பட தொடங்கியது. கிருமி நாசினி தெளித்தல், தபால் அலுவலகத்துக்கு வருபவர்களின் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வசதி, சமூக இடைவெளியை கடைபிடிக்க குறிப்பிட்ட நபர்களை மட்டுமே அலுவலகத்துக்குள் அனுமதிப்பது உள்ளிட்ட விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊழியர்கள் சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் 12 பேர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்கள். இதில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் தபால் பிரிப்பு பிரிவில் பணியாற்றி வருகிறார்கள். தற்போது அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதால் சுகாதார துறையின் அறிவுறுத்தலின் படி ஈரோடு தலைமை தபால் அலுவலகத்துக்கு நேற்று முதல் 3 நாட்கள் விடுமுறை அறிவித்து ஈரோடு கோட்ட முதுநிலை தபால் அதிகாரி உத்தரவிட்டு உள்ளார். அதன்படி நேற்று தபால் அலுவலகம் மூடப்பட்டது. அங்கு கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அலுவலகம் மூடப்பட்டதால் தபால் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த அலுவலகத்தில் நடந்து வந்த பணப்பரிமாற்றம், மற்ற பகுதிகளில் இருந்து வரும் தபால்களை பிரித்து அனுப்பி வைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடங்கியது. வருகிற 12-ந் தேதி முதல் தபால் அலுவலகம் திறக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    ஈரோடு அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி ஸ்டாலின் வீதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ஈஸ்வரி. சொத்து தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த ரமேஷ் தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்து விட்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ரமேஷ் நேற்று இறந்தார். இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×