என் மலர்tooltip icon

    ஈரோடு

    அந்தியூர் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    அந்தியூர் அருகே ஆப்பக்கூடல் ஒரிச்சேரி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் ஒருவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்ததை பார்த்தனர். அவரை பிடித்து விசாரித்தபோது ஒரிச்சேரி பகுதியை சேர்ந்த அழகுராஜா (வயது 50) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற கொத்தமங்கலம் அருகே உள்ள இந்திரா நகர் மேற்கு பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் கைது செய்தார். அவரிடம் இருந்து 71 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஐகோர்ட்டு தீர்ப்புக்கு பிறகே சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள சாவக்கட்டுபாளையத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு காப்பீடு திட்ட அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு செய்து சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த சட்டத்துக்கான ஒப்புதலை பெற கவர்னரிடம் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார். ஆசிரியர்கள் இடமாறுதல் குறித்து மதுரை மற்றும் சென்னை ஐகோர்ட்டுகள் தீர்ப்புகளை வழங்கி உள்ளன. இந்த தீர்ப்புகளை ஒருங்கிணைத்து பின்னர் கலந்தாய்வு நடத்தப்படும். சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே தீர்ப்புக்கு பிறகே பணி நியமன ஆணை வழங்கப்படும். 2-ம் பருவத்துக்கான புத்தகங்கள் தேவையான அளவு உள்ளது. தற்போது கூடுதலாக சேர்ந்த மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பள்ளிக்கூடம் திறப்பது குறித்து ஆராய தனிக்குழு அமைக்கப்படவில்லை. பாடத்திட்டத்தை குறைப்பது குறித்து ஆய்வு செய்யவே குழு அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது அந்த குழுவின் பரிந்துரைப்படி மாணவர்கள் எந்தெந்த பாடங்களை படிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.
    ஈரோடு சேனாதிபதிபாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு சேனாதிபதிபாளையம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது வட்டமாக அமர்ந்து சிலர் சூதாடிக்கொண்டு இருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் ஈரோடு ரங்கம்பாளையம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பூபதி (வயது 25), சக்திவேல் என்கிற லிங்கேஸ்வரன் (25) மற்றும் 19 வயது வாலிபர், திண்டல் தெற்கு பள்ளம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.300 மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வயலில் இறங்கி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், மொடக்குறிச்சி அடுத்த நாத கவுண்டம்பாளையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி முன்னிலை வகித்தார். விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்களுடன் காங்கிரஸ் கட்சியினர் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களிடம் கையெழுத்து பெற்றனர்.

    இதுகுறித்து தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் கூறும்போது, ‘மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஒரு லட்சம் விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளிகளிடம் கையெழுத்து வாங்க உள்ளோம். இந்த கையெழுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி மற்றும் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் ஆகியோரிடம் வழங்கப்படும். பின்னர் இந்த கையெழுத்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்’ என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், மாவட்ட பொருளாளர் ரவி, மொடக்குறிச்சி வட்டார தலைவர் முத்துக்குமார், இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் ஆரிப் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
    ஈரோடு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1.65 லட்சம் சிக்கியது.
    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கருவூல அலுவலக கட்டிடத்தின் 3-வது தளத்தில் பொதுப்பணித்துறையின் முதுநிலை கொதிகலன்கள் (பாய்லர்) உதவி இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது.

    இந்த அலுவலகத்தில் உதவி இயக்குனராக மகேஷ்பாண்டி பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வித தொழிற்சாலைகளில் உள்ள கொதிகலன்களை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை பராமரிப்பு குறித்து ஆய்வு செய்து அதற்கு உறுதி சான்று வழங்கப்படும்.

    இந்த சான்று வாங்குவதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்டு வருவதாக ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. திவ்யா தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை திடீரென முதுநிலை கொதிகலன்கள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த அலுவலகத்தில் உதவி இயக்குனர் மகேஷ்பாண்டி, அலுவலக உதவியாளர் ஒருவர், டிரைவர், வெளி நபர் என 4 பேர் இருந்தனர். அலுவலகத்தின் கதவை மூடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். மேலும் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் சுமார் ரூ.1.65 லட்சம் சிக்கியது.

    இதைத்தொடர்ந்து அந்த பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் உதவி இயக்குனர் மகேஷ்பாண்டி அவரது உதவியாளர், கார் டிரைவர் என 3 பேரிடம் விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறியதாவது:-

    இந்த சோதனை தொடர் புகாரின் பேரில் திடீரென நடத்தப்பட்டது. இதில் ரூ.1.65 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த பணத்தில் சில ஆயிரத்திற்கு மட்டும் உதவி இயக்குனர் கணக்கு கொடுத்துள்ளார். அந்த பணத்தை தவிர மீது உள்ள பணத்தை கைப்பற்றி உள்ளோம். கணக்கில் வராத பணத்தை கைப்பற்றியது தொடர்பாக அறிக்கை தயார் செய்து அரசுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரி பணியாற்றும் தலைமை பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்படும்.

    அதன்பிறகு அத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் எங்களது அறிக்கையின்படி சம்பந்தப்பட்ட அதிகாரி மீது துறைவாரியான நடவடிக்கை எடுப்பார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    கவுந்தப்பாடி அருகே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அருகே உள்ள குருச்சான்வலசு காலணி பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரி (வயது 53). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மாலை 6.30 மணி அளவில் அருகே உள்ள காட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஊர்ந்து சென்ற பாம்பு மாதேஸ்வரியை கடித்தது.

    இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனே மாதேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அதன்பின்னா அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் சுமார் ரூ.1.65 லட்சம் சிக்கியது.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கருவூல அலுவலக கட்டிடத்தின் 3-வது தளத்தில் பொதுப்பணித்துறையின் முதுநிலை கொதிகலன்கள் (பாய்லர்) உதவி இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது.

    இந்த அலுவலகத்தில் உதவி இயக்குனராக மகேஷ்பாண்டி பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வித தொழிற்சாலைகளில் உள்ள கொதிகலன்களை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை பராமரிப்பு குறித்து ஆய்வு செய்து அதற்கு உறுதி சான்று வழங்கப்படும்.

    இந்த சான்று வாங்குவதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்டு வருவதாக ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப் புத்துறை போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. திவ்யா தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை திடீரென முதுநிலை கொதிகலன்கள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த அலுவலகத்தில் உதவி இயக்குனர் மகேஷ்பாண்டி, அலுவலக உதவியாளர் ஒருவர், டிரைவர், வெளி நபர் என 4 பேர் இருந்தனர். அலுவலகத்தின் கதவை மூடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். மேலும் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் சுமார் ரூ.1.65 லட்சம் சிக்கியது.

    இதைத்தொடர்ந்து அந்த பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் உதவி இயக்குனர் மகேஷ்பாண்டி அவரது உதவியாளர், கார் டிரைவர் என 3 பேரிடம் விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறியதாவது:-

    இந்த சோதனை தொடர் புகாரின் பேரில் திடீரென நடத்தப்பட்டது. இதில் ரூ.1.65 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த பணத்தில் சில ஆயிரத்திற்கு மட்டும் உதவி இயக்குனர் கணக்கு கொடுத்துள்ளார். அந்த பணத்தை தவிர மீது உள்ள பணத்தை கைப்பற்றி உள்ளோம். கணக்கில் வராத பணத்தை கைப்பற்றியது தொடர்பாக அறிக்கை தயார் செய்து அரசுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரி பணியாற்றும் தலைமை பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்படும்.

    அதன்பிறகு அத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் எங்களது அறிக்கையின்படி சம்பந்தப்பட்ட அதிகாரி மீது துறைவாரியான நடவடிக்கை எடுப்பார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்நிலையில் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் உதவி இயக்குனர் மகேஸ்பாண்டி மற்றும் எலவமலையை சேர்ந்த இடைத்தரகர் ராம்குமார் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகிறார்கள்.

    எம்எஸ் டோனி மீதான மோகத்தால் தனது வீட்டையே மஞ்சள் கலராக மாற்றி, ‘ஹோம் ஆப் டோனி’ என எழுதியுள்ளார் அரங்கூர் கிராம ரசிகர்.
    கிரிக்கெட் மற்றும் சினிமா மீது கொண்டுள்ள அதிக மோகத்தால் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த வீரர்கள், நடிகர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர் பொறித்த சட்டைகள், டீ-சர்ட்டுகள் அணிந்து வலம் வருவதை பார்த்திருப்பீர்கள்.

    சிலர் தங்களுக்கு பிடித்தவர்களின் பெயர்களை உடலில் பச்சை குத்தியிருப்பதையும் பார்த்திருப்பீர்கள். ஆனால் தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரருக்காக, ரசிகர் ஒருவர் தனது வீட்டையே வர்ணம் தீட்டி மாற்றியுள்ளதை பார்த்திருக்கிறீர்களா?, 
    ஆம் அது போன்ற ஒரு ருசிகர சம்பவம் கடலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-



    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தை சேர்ந்த ரெங்கசாமி- விஜயா தம்பதியரின் மகன் கோபிகிருஷ்ணன். இவர் சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்டுள்ளார். டோனியின் தீவிர ரசிகரான இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு துபாய் சென்றார்.

    வெளிநாடு சென்றாலும் கிரிக்கெட் மீது இருந்த ஆர்வம் துளிக்கூட குறையவில்லை.

     கோபிகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்தார்.

    இந்நிலையில் ஐ.பி.எல். தொடர் நடைபெறுவதால், டோனிக்கு புகழ் சேர்க்கும் வகையில் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைத்தார். அதன்படி தனது வீட்டை டோனி கேப்டனாக உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அணியும் ஆடை நிறத்திலும், அதில் டோனியின் படத்தையும் வரைய முடிவு செய்தார். இதையடுத்து கோபிகிருஷ்ணன், ரூ.1½ லட்சம் செலவில் தனது வீடு முழுவதும் மஞ்சள் நிறத்தில் வர்ணம் பூசி, வீட்டின் முன்புறம் டோனி படமும், பக்கவாட்டில் சென்னை சூப்பர்கிங்ஸ் சிங்க படத்தையும் வரைந்து, ‘ஹோம் ஆப் டோனி’ என எழுதியுள்ளார்.

    கிரிக்கெட் வீரருக்காக தனது வீட்டையே மாற்றியுள்ள ரசிகரையும், அவர் வரைந்துள்ள தோனி மற்றும் சென்னை சூப்பர்கிங்ஸ் சிங்க படத்தையும் சுற்று வட்டார கிராம மக்கள் வந்து பார்த்து விட்டு, கோபிகிருஷ்ணனை பாராட்டி செல்கின்றனர்.
    ஈரோடு அருகே தள்ளுவண்டி கடையில் மது அருந்த அனுமதித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லதுரை மற்றும் போலீசார் வைராபாளையம் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் தள்ளுவண்டி கடையில் வைத்து சிலர் மது அருந்திக்கொண்டு இருந்தனர். உடனே போலீசார் கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் திருப்பத்தூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 29) என்பதும், அவர் தனது கடையில் சிலரை மது அருந்த அனுமதித்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.
    ஈரோடு அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் அரசு பஸ் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    சென்னிமலை மேற்கு தலவுமலை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 44). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் ஈரோடு கிளையில் டவுன் பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் வேலை முடிந்த பிறகு ரமேஷ் ஈரோட்டில் இருந்து தலவுமலை செல்வதற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    அவர் கஸ்பாபேட்டை வாய்க்கால் பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவல்பூந்துறையில் இருந்து ஈரோடு நோக்கி கார் ஒன்று வந்தது. அந்த கார், ரமேஷ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. மேலும், கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய அந்த கார் சாலையோரமாக இருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ரமேஷ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ரமேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
    ஊஞ்சலூர் அருகே சுற்றுலா வந்த கார் டிரைவர் தடுப்பணையில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
    ஊஞ்சலூர்:

    திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர் கென்னடி. அவருடைய மகன் ஸ்டீபன் (வயது 28). இவர் அதே பகுதியை சேர்ந்த ஜோதிடர் முகேசுக்கு கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர்கள் 2 பேரும் தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு காரில் சுற்றுலாவாக நேற்று காலை ஈரோடு மாவட்டம் கொடுமுடி வந்துள்ளார்கள். பின்னர் அவர்கள் மகுடேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, ஊஞ்சலூர் அருகே உள்ள காரணம்பாளையம் பகுதி காவிரியாற்றுக்கு (தடுப்பணை) சென்றனர்.

    தடுப்பணையை பார்த்ததும் அனைவருக்கும் குளிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. உடனே அனைவரும் தடுப்பணையில் இறங்கி குளித்துள்ளனர். இதில் ஸ்டீபன் மட்டும் ஆழமான பகுதியில் குளித்துள்ளார். இதனால் அவர் சுழலில் சிக்கினார்.

    உடனே அவர், “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்று அபயக்குரல் எழுப்பினார். இதை பார்த்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. அதற்குள் ஸ்டீபன் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மீனவர்கள் அங்கு சென்று தண்ணீரில் நீந்தி ஸ்டீபனை தேடி பார்த்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு ஸ்டீபன் பிணமாக மீட்கப்பட்டார்.

    இதுபற்றி அறிந்ததும் மலையம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஸ்டீபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ஸ்டீபனுக்கு திருமணமாகி பார்த்தி (24) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 101 ஆக உயர்ந்தது. மேலும் நேற்று ஒரே நாளில் 163 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணியவேண்டும்.

    அடிக்கடி கைகளை சுத்தப்படுத்த வேண்டும். தனித மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. எனினும் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை.

    இதற்கிடையில் அந்தியூர் பகுதியை சேர்ந்த 53 வயது ஆண் ஒருவர் காய்ச்சல் மற்றும் சளி தொல்லை காரணமாக சிகிச்சைக்காக கடந்த 6-ந்தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 9-ந்தேதி அவர் இறந்தார்.

    இதேபோல் ஈரோடு நாடார் மேடு பகுதியை சேர்ந்த 64 வயது முதியவர் ஒருவர் காய்ச்சல் மற்றும் சளி தொல்லை காரணமாக சிகிச்சைக்காக கடந்த 6-ந்தேதி ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 9-ந்தேதி உறுதி செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி முதியவர் இறந்தார். இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்து உள்ளது.

    மேலும் ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 163 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 276 ஆக உயர்ந்தது.

    அதேநேரத்தில் நேற்று மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த 130 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இதுவரை மொத்தம் 7 ஆயிரத்து 76 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து உள்ளனர். தற்போது மாவட்டத்தில் 1,099 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    ×