என் மலர்
ஈரோடு
ஈரோடு:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக பொதுபோக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொற்று குறையத்தொடங்கியதால் முதலில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து தொற்று குறைந்த மேலும் 23 மாவட்டங்களில் கடந்த வாரம் முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தொற்று குறையாமல் இருந்து வந்த ஈரோடு உள்பட 11 மாவட்டங்களில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் 11 மாவட்டங்களிலும் தற்போது தொற்று குறையத் தொடங்கி இருக்கிறது. இதையடுத்து இந்த மாவட்டங்களிலும் நாளை முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 50 சதவீத பயணிகளுடன் சமூக இடைவெளி விட்டு பஸ்களை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஈரோடு மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் நிறுத்தப்பட்டு உள்ள பஸ்களை தூய்மை செய்யும் பணிகள் தொடங்கியது. போக்குவரத்துக்கழக பணிமனையில் தூய்மை பணியாளர்கள் பஸ்களை தூய்மை செய்தனர். அதைத்தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
ஈரோடு மண்டல துணைப் பொதுமேலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் பணியாளர்கள் இந்த வேலைகளில் ஈடுபட்டனர்.
இதுபற்றி துணைப்பொது மேலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:-
ஈரோடு மண்டலத்தில் 13 பணிமனைகளில் இருந்து 728 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து 60 சதவீதம் பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதாவது சுமார் 400 பஸ்கள் வரை ஈரோடு மாவட்டத்தில் இருந்து இயங்கும். அரசு வழிகாட்டுதலின்படி பிற மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படும். ஆனால் பிற மாநிலங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட மாட்டாது.
பஸ் பயணிகள் அரசின் வழிகாட்டு நடை முறைகளை பின்பற்றி போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பஸ்சில் 50 சதவீதம் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது. பயணிகள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சானிடைசர் பயன்படுத்த வேண்டும். அத்தியாவசிய தேவை இன்றியாரும் பஸ்களில் பயணிக்க வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசு போக்குவரத்துக் கழக நகர பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்ககைளுக்கு இலவச பயணத்தை தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
இந்த திட்டம் அறிவிக்க ப்பட்டு ஓரிரு நாட்கள்தான் பஸ்கள் இயங்கின. மீண்டும் நாளை முதல் பஸ்கள் ஓடத்தொடங்குவதால் இலவச பயணச்சீட்டு அனு மதிக்கப்பட்ட பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்யும் வாய்ப்பு உள்ளது. * * * கோபி அரசு போக்குவரத்து பணிமனையில் பஸ்கள் தண்ணீரால் சுத்தப்படுத்தப்பட்ட காட்சி.
ஈரோடு:
ஈரோட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். தடுப்பூசி போடும் முகாம்களில் நள்ளிரவு முதலே குவிய தொடங்கி விடுகின்றனர். நள்ளிரவு ஒரு மணி முதல் வரிசையில் இடம் பிடித்து விடுகின்றனர்.
இதனால், மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையிலும், சிரமமின்றி தடுப்பூசி போடுவதற்காகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 24-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. தடுப்பூசிகள் கையிருப்பு தகுந்தார் போல் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் 113 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடந்தது. முன்னதாக வழக்கம்போல் நேற்று இரவு முதலே தடுப்பூசி போடும் மையங்களில் மக்கள் குவியத் தொடங்கிவிட்டனர். தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக முந்தையநாள் இரவில் இருந்தே மக்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள்.
இன்று மாவட்டம் முழுவதும் 113 இடங்களில் டோக்கன் அடிப்படையில் முதலில் வந்த 150 முதல் 200 பேருக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது.
இன்று மட்டும் மாவட்டம் முழுவதும் 15,170 கோவிஷீல்டு, 1500 கோவேக்சின் என மொத்தம் 16 ஆயிரத்து 670 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. இதில் கோவேக்சின் தடுப்பூசி மட்டும் 2-ம் டோஸ் போடப்பட்டது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே உள்ள அங்கனங்கவுண்டன் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி சவுமியா.
நிறைமாத கர்ப்பிணியான சவுமியாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது தாய் மற்றும் குழந்தை ஆகியோர் நலமுடன் இருந்தனர்.
இந்த நிலையில் குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தையின் இதயதுடிப்பு சரியாக இயங்கவில்லை என்றும் எனவே குழந்தையை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
பிறந்து 3 நாட்களே ஆன நிலையில் குழந்தையின் உயிரை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என கண்ணீருடன் பெற்றோர் இருந்தனர்.
இந்த நிலையில் மருத்துவமனையின் உதவியுடன் சத்தியமங்கலம் ரீலீப் டிரஸ்ட் ஆம்புலன்சு நிர்வாகத்தை குழந்தையின் பெற்றோர் தொடர்பு கொண்டனர். அவர்கள் குழந்தையை கோவைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தனர்.
ஆம்புலன்ஸ் டிரைவராக நவீன் என்பவர் நியமிக்கப்பட்டார். ஆம்புலன்ஸ் டிரைவர் நவீன் குழந்தை மற்றும் அவர்களின் பெற்றோரை ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு கோவை புறப்பட்டார். டிரைவர் தனது உயிரை பணயம் வைத்து சத்தியமங்கலத்தில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் உள்ள கோவை தனியார் மருத்துவமனைக்கு அதிவேகமாக ஆம்புலன்சை ஓட்டி சென்றார்.
சுமார் 40 நிமிடங்களில் குழந்தையை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தார்.
அங்கு அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உரிய நேரத்தில் குழந்தை மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டததால் தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 70 கிலோ மீட்டர் தூரத்தை 40 நிமிடங்களில் கடந்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் கடுமையாக நிலவி வந்தது. கோடைகாலம் முடிந்து விட்டாலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. நேற்று முன்தினம் வெயில் காரணமாக வெப்பக்காற்று வீசியது. இரவு நேரத்தில் தூங்க முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டியது.
மாவட்டத்தில் ஆங்காங்கே அவ்வப்போது மழை பெய்தாலும், ஈரோட்டில் மழை பெய்யும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் ஈரோட்டில் திடீர் என்று வானம் கருமேக கூட்டமாக மாறியது. சிறிது நேரத்தில் மழை கொட்டத்தொடங்கியது.
இந்த திடீர் மழையால் அனைத்து வீதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அகில்மேடு வீதி, நாச்சியப்பா வீதி, மணிக்கூண்டு உள்பட நகரின் அனைத்து பகுதிகளிலும் வீதிகளில் வெள்ளம் ஆறுபோல ஓடியது. இதனால் வாகன போக்குவரத்து குறைந்தது.
இதேப்போல் பவானி சாகர், கவுந்தப்பாடி, கோபி, கொடுமுடி, சென்னிமலை, மொடக்குறிச்சி, அம்மாபேட்டை, குண்டேரி பள்ளம் உள்ளிட்ட பகுதியிலும் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் அதிக பட்சமாக கவுந்தப் பாடியில் 65 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
கவுந்தப்பாடியில் கடந்த 4 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் நேற்று மாலை கருமேகம் சூழ்ந்தது. பின்னர் லேசாக பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல இடி-மின்னலுடன் பலத்த மழையாக கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சந்தைப்பேட்டை சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் மழைநீர் தேங்கி நின்றது.
சித்தோடு பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ஈரோடு-சத்தியமங்கலம் ரோட்டில் உள்ள புளிய மரம் வேரோடு ரோட்டில் சாய்ந்து விழுந்தது. இதுகுறித்து பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
நெடுஞ்சாலைத் துறையினர் ஜே.சி.பி எந்திரம் மூலம் ரோட்டில் விழுந்து கிடந்த புளியமரத்தை அப்புறப்படுத்தினர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நல்ல வேளையாக மரம் விழுந்த போது யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏற்படவில்லை. மழை காரணமாக மாவட்டம் முழுவதும் இரவில் கடுமையான குளிர் நிலவியது.
ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கவுந்தப்பாடி-65, பவானிசாகர்-62.8, கோபி-29, ஈரோடு-24, கொடுமுடி-22.4, எலந்தகுட்டைமேடு-19.8, நம்பியூர்-10, மொடக்குறிச்சி -8, குண்டேரிபள்ளம்-7, சென்னிமலை-3, அம்மாபேட்டை-2.8, பவானி-2.8.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த தொப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி சில நாட்களுக்கு முன் திடீரென மாயமானார். இதையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் மாயமான தனது மகளை மீட்ககோரி சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் அந்தியூர் அருகே உள்ள பூனாச்சி பகுதியில் சிறுமி இருப்பதை கண்டறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். அப்போது சிறுமியுடன் இருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த வாலிபர் பெயர் சூசைராஜ் (36) கட்டிட தொழிலாளி என்பதும், அவருக்கு திருமணமாகி விட்டதும் தெரியவந்தது. சூசைராஜ் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அவரை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சூசைராஜை சத்தியமங்கலம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோவில்களாக பெரியமாரியம்மன், சின்ன (நடு) மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. அதைத்தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் மற்றும் முழு ஊரடங்கு காரணமாக பெரியமாரியம்மன் வகையறா கோவில்களின் உண்டியல் எண்ணும் பணி நடைபெறவில்லை. தற்போது கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், பெரியமாரியம்மன் வகையறா கோவில்களின் உண்டியல்களையும் திறந்து காணிக்கையை எண்ணும் பணியை செய்ய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதைத்தொடர்ந்து நேற்று 3 கோவில்களிலும் வைக்கப்பட்டிருந்த 11 உண்டியல்களும் பெரியமாரியம்மன் கோவில் வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சரவணன், அறநிலையத்துறை ஆய்வாளர் தினேஷ் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது.
இதில் பெரியமாரியம்மன் கோவில் உண்டியல்களில் ரூ.6 லட்சத்து 66ஆயிரத்து 40 ரொக்கம், 55 கிராம் தங்கம், 155 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்து இருந்தது. சின்னமாரியம்மன் கோவில் உண்டியல்களில் ரூ.78 ஆயிரத்து 460 ரொக்கம், 2 கிராம் தங்கம், 18 கிராம் வெள்ளி பக்தர்களின் காணிக்கையாக கிடைத்தது. காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களில் ரூ.46ஆயிரத்து 760 ரொக்கம், ஒன்றரை கிராம் தங்கம், 14 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது.
மொத்தம் 3 கோவில்களிலும் சேர்த்து ரூ.7 லட்சத்து 31 ஆயிரத்து 860 ரொக்கம் மற்றும் 58.5 கிராம் தங்கம், 187 கிராம் வெள்ளி பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இந்த பணியின்போது, பெரியமாரியம்மன் வகையறா கோவில்களின் செயல்அலுவலர் ரமணிகாந்தன் உடன் இருந்தார்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க காய்ச்சல் முகாம்கள், கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது.
மாவட்டத்தில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக அரசு மருத்துவக்கல்லூரி, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கோவிட் கேர் சென்டர்கள் என 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நோய் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பானது சராசரியாக 550 என்ற நிலையில் இருந்து வருகின்றது. ஆனால் அதே வேளையில் குணமடைந்து வீடு திரும்பவர்களின் எண்ணிக்கை சராசரியாக 700 தாண்டி உள்ளது. எனவே காலி படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகளில் 1762 படுக்கைகளில் 1033 படுக்கைள் காலியாக உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 3977 படுக்கைகளில் 2535 காலியாக உள்ளது. இதே போல கோவிட் கேர் சென்டர்களில் 7038 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதில் ஏறக்குறைய 5 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்தமுள்ள 38 கோவிட் கேர் சென்டர்களில் 15-க்கும் மேற்பட்ட சென்டர்களில் கடந்த சில நாட்களாக ஒருவர் கூட சிகிச்சை பெறாமல் காலியாகவே உள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொற்று பாதிப்பு குறைந்து வருவதாலும், பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதாலும் கல்வி நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கேர் சென்டர்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
மேலும் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் புதியதாக 400 படுக்கைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு தயார்நிலையில் உள்ளதால் 3-வது அலை வந்தாலும் சமாளிக்கும் அளவுக்கு படுக்கை வசதிகள் உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
கோபி அருகே உள்ள கெட்டிசெவியூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பன் (வயது 50) கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகத்திற்கு முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ஒருவர் அவருடைய இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றார்.
உடனே சத்தம் போட அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று கையும் களவுமாக அவரை பிடித்து அவரிடம் இருந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிறுவலூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் விசாரணையில் மோட்டார் சைக்கிள் திருடியது குள்ளம் பாளையத்தை சேர்ந்த முருகேசன் என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் பி.பி.அக்ரஹாரம் பூம்புகார் நகர் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டு மது விற்ற அதே பகுதியை சேர்ந்த நேரு (வயது 51) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் ஈரோடு சாஸ்திரி நகர் பகுதியில் நின்று கொண்டு மது விற்ற, முத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் (23) என்பவரை சூரம்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து 8 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






