search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    ஈரோடு மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை

    சித்தோடு பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் கடுமையாக நிலவி வந்தது. கோடைகாலம் முடிந்து விட்டாலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. நேற்று முன்தினம் வெயில் காரணமாக வெப்பக்காற்று வீசியது. இரவு நேரத்தில் தூங்க முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டியது.

    மாவட்டத்தில் ஆங்காங்கே அவ்வப்போது மழை பெய்தாலும், ஈரோட்டில் மழை பெய்யும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் ஈரோட்டில் திடீர் என்று வானம் கருமேக கூட்டமாக மாறியது. சிறிது நேரத்தில் மழை கொட்டத்தொடங்கியது.

    இந்த திடீர் மழையால் அனைத்து வீதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அகில்மேடு வீதி, நாச்சியப்பா வீதி, மணிக்கூண்டு உள்பட நகரின் அனைத்து பகுதிகளிலும் வீதிகளில் வெள்ளம் ஆறுபோல ஓடியது. இதனால் வாகன போக்குவரத்து குறைந்தது.

    இதேப்போல் பவானி சாகர், கவுந்தப்பாடி, கோபி, கொடுமுடி, சென்னிமலை, மொடக்குறிச்சி, அம்மாபேட்டை, குண்டேரி பள்ளம் உள்ளிட்ட பகுதியிலும் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் அதிக பட்சமாக கவுந்தப் பாடியில் 65 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    கவுந்தப்பாடியில் கடந்த 4 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் நேற்று மாலை கருமேகம் சூழ்ந்தது. பின்னர் லேசாக பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல இடி-மின்னலுடன் பலத்த மழையாக கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சந்தைப்பேட்டை சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் மழைநீர் தேங்கி நின்றது.

    சித்தோடு பகுதியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ஈரோடு-சத்தியமங்கலம் ரோட்டில் உள்ள புளிய மரம் வேரோடு ரோட்டில் சாய்ந்து விழுந்தது. இதுகுறித்து பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    நெடுஞ்சாலைத் துறையினர் ஜே.சி.பி எந்திரம் மூலம் ரோட்டில் விழுந்து கிடந்த புளியமரத்தை அப்புறப்படுத்தினர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நல்ல வேளையாக மரம் விழுந்த போது யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏற்படவில்லை. மழை காரணமாக மாவட்டம் முழுவதும் இரவில் கடுமையான குளிர் நிலவியது.

    ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கவுந்தப்பாடி-65, பவானிசாகர்-62.8, கோபி-29, ஈரோடு-24, கொடுமுடி-22.4, எலந்தகுட்டைமேடு-19.8, நம்பியூர்-10, மொடக்குறிச்சி -8, குண்டேரிபள்ளம்-7, சென்னிமலை-3, அம்மாபேட்டை-2.8, பவானி-2.8.

    Next Story
    ×