என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஈரோட்டில் நாளை முதல் 400 பஸ்கள் இயக்க முடிவு

    ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து 60 சதவீதம் பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதாவது சுமார் 400 பஸ்கள் வரை ஈரோடு மாவட்டத்தில் இருந்து இயங்கும்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக பொதுபோக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொற்று குறையத்தொடங்கியதால் முதலில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    இதையடுத்து தொற்று குறைந்த மேலும் 23 மாவட்டங்களில் கடந்த வாரம் முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தொற்று குறையாமல் இருந்து வந்த ஈரோடு உள்பட 11 மாவட்டங்களில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் 11 மாவட்டங்களிலும் தற்போது தொற்று குறையத் தொடங்கி இருக்கிறது. இதையடுத்து இந்த மாவட்டங்களிலும் நாளை முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 50 சதவீத பயணிகளுடன் சமூக இடைவெளி விட்டு பஸ்களை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதனையடுத்து ஈரோடு மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் நிறுத்தப்பட்டு உள்ள பஸ்களை தூய்மை செய்யும் பணிகள் தொடங்கியது. போக்குவரத்துக்கழக பணிமனையில் தூய்மை பணியாளர்கள் பஸ்களை தூய்மை செய்தனர். அதைத்தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    ஈரோடு மண்டல துணைப் பொதுமேலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் பணியாளர்கள் இந்த வேலைகளில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி துணைப்பொது மேலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

    ஈரோடு மண்டலத்தில் 13 பணிமனைகளில் இருந்து 728 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து 60 சதவீதம் பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதாவது சுமார் 400 பஸ்கள் வரை ஈரோடு மாவட்டத்தில் இருந்து இயங்கும். அரசு வழிகாட்டுதலின்படி பிற மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படும். ஆனால் பிற மாநிலங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட மாட்டாது.

    பஸ் பயணிகள் அரசின் வழிகாட்டு நடை முறைகளை பின்பற்றி போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பஸ்சில் 50 சதவீதம் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது. பயணிகள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சானிடைசர் பயன்படுத்த வேண்டும். அத்தியாவசிய தேவை இன்றியாரும் பஸ்களில் பயணிக்க வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அரசு போக்குவரத்துக் கழக நகர பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்ககைளுக்கு இலவச பயணத்தை தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

    இந்த திட்டம் அறிவிக்க ப்பட்டு ஓரிரு நாட்கள்தான் பஸ்கள் இயங்கின. மீண்டும் நாளை முதல் பஸ்கள் ஓடத்தொடங்குவதால் இலவச பயணச்சீட்டு அனு மதிக்கப்பட்ட பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்யும் வாய்ப்பு உள்ளது. * * * கோபி அரசு போக்குவரத்து பணிமனையில் பஸ்கள் தண்ணீரால் சுத்தப்படுத்தப்பட்ட காட்சி.

    Next Story
    ×