என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோட்டில் கடந்த 2 மாதமாக 12 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாணிக்கம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார் என்கிற சரவணன் (37). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு திருமணமாகிவிட்டது.

    இவர் தான் குடியிருக்கும் பகுதியில் அருகில் வசிக்கும் 12 வயது சிறுமியை மிரட்டி கடந்த 2 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் இது குறித்து கூறினார்.

    இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தவுலத்நிஷா விசாரணை நடத்தினார்.

    அப்போது கட்டிட தொழிலாளி சரவணன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ஈரோடு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சுங்க கட்டண பிரச்சனை தொடர்பாக ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதா காய்கறி மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி., திடலில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் 800-க்கும் மேற்பட்ட கடைகளில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் இங்கிருந்துதான் அனைத்து இடங்களுக்கும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மார்க்கெட்டில் வியாபாரிகளிடம் சுங்கம் வசூலிக்கும் குத்தகைதாரர் அதிக கட்டணம் வசூலித்து வருவதாக வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

    ஆனால், அந்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால், கடந்த 5-ந் தேதி மார்க்கெட் வியாபாரிகள் சாலையில் காய்கறிகளை கொட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வியாபாரிகளுக்கு மாநகராட்சி விதித்த சுங்க கட்டணத்தை மட்டுமே செலுத்தவும், ரசீது வழங்கினால் மட்டுமே கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தப்பட்டு, சுங்க கட்டண விபரம் அடங்கிய பிளக்ஸ் போர்டும் மார்க்கெட் வளாகத்தில் வைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, சுங்கம் வசூலிக்கும் குத்தகைதாரரின் ஊழியர்கள் மார்க்கெட்டிற்குள் வியாபாரிகளின் வாகனங்களையும், காய்கறிகளை ஏற்றி வரும் 4 சக்கர வாகனங்களையும் உள்ளே அனுமதி இல்லை எனவும், நுழைவு வாயிலில் சரக்குகளை இறக்கி கடைக்குக் கொண்டு செல்லுங்கள் என கூறினர்.

    இதனால் அதிருப்தி அடைந்த காய்கறி வியாபாரிகள், சரக்கு வாகன டிரைவர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் சுங்க வசூலிக்கும் குத்தகை ஊழியர்களையும், குத்தகைதாரரையும் கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சுங்க கட்டண பிரச்சனை தொடர்பாக ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதா காய்கறி மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வியாபாரிகள் ஆர்.டி.ஓ., பிரேமலதாவிடம் குறைகளை தெரிவித்தனர். இதையடுத்து கலெக்டர், ஒப்பந்தாரர், வியாபாரிகள் உள்ளிட்டோர், பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம், அதுவரை அமைதியாக இருங்கள் என வியாபாரிகளிடம் கூறினார்.

    இந்நிலையில் ஈரோடு மார்க்கெட்டில் காய்கறி விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சார்பில் சுங்க குத்தகைதாரரை கண்டித்து இன்று கடையடைப்பு போராட்டம் அறிவித்திருந்தனர். இது தொடர்பாக துண்டு பிரசுரமும் வழங்கினர்.

    அதன்படி இன்று வ.உ.சி. பூங்கா பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் அனைத்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனுக்களை வழங்கினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து கடையடைப்பு அறிவித்த வியாரிபாரிகளின் ஒருங்கிணைப்பாளர் மோகன் கூறியதாவது:-

    ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டில் அனைத்து வகையான வியாபாரிகளிடமும், மக்களிடமும் அதிக சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. சுங்க குத்தகை நிர்வாகம் ஈரோடு மாநகராட்சி நிர்ணயித்துள்ள கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகம், விவசாயிகள், வியாபாரிகள், மக்கள் ஆகியோர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் சுங்க வசூல் சரியான முறையில் செயல்படுகிறதா? என ஆய்வு செய்ய வேண்டும்.

    அதில், தவறுகள் நடந்தது கண்டறியப்பட்டால் குத்தகைதாரர் உரிமைத்தை ரத்து செய்து, மாநகராட்சியே நேரடியாக சுங்க வசூலை ஏற்று நடத்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், எங்களது பிரச்சனைக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு எங்களுக்கு விடியல் தர வேண்டும். அதற்காக முதல்வரின் கவனத்தை ஈர்ப்பதற்காக இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    சென்னிமலையில் நூல் மில்லில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாயின.

    சென்னிமலை:

    சென்னிமலையில் உள்ள அம்மாபாளையத்தில் வசிப்பவர் சண்முகசுந்தரம். இவர் சென்னிமலையை அடுத்த ஈங்கூர் பகுதியில் சிப்காட் செல்லும் வழியில் வெள்ளியங்காடு தோட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடோனை வாடகைக்கு பிடித்து நூல் மில் தொடங்கினார்.

    இங்கு பனியன் வேஸ்ட் காட்டன் பஞ்சிலிருந்து நூல் தயாரித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் கடந்த ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த இந்த மில்லில் தற்போது வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலையில் வழக்கம்போல் மில்லில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது ஸ்பின்னிங் எந்திரத்தில் இருந்து தீப்பொறி வந்ததை தொழிலாளர்கள் பார்த்தனர். உடனே அது அருகிலிருந்த பஞ்சில் பற்றி எரிய தொடங்கியது. பின்னர் எல்லா இடங்களிலும் பரவியது. இதைப்பார்த்த தொழிலாளர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால், தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியதால் அவர்களால் அணைக்க முடியவில்லை.

    இது குறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனே அங்கிருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்க போராடினர். இரவு வரை போரடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான பஞ்சு பேல்களும், நூல் கோன்களும், எந்திரங்களும் எரிந்து நாசமானது. மின் கசிவால் இந்த தீ விபத்து நடந்தது தெரியவந்தது. மேலும் இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ஈரோடு அருகே பட்டப்பகலில் மின் வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 12½ பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.
    மொடக்குறிச்சி:

    ஈரோட்டை அடுத்த வெண்டிபாளையம் மணலி கந்தசாமி வீதியை சேர்ந்தவர் கணபதி (வயது 66). ஓய்வுபெற்ற மின்சார வாரிய ஊழியர். இவருடைய மனைவி ஜோதி (53). இவர்களுடைய மகன் அருண் ஆதித்யா (36).

    இந்த நிலையில் தர்மபுரியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு கணபதி நேற்று சென்றுவிட்டார். காங்கேயத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு மனைவி ஜோதி சென்றுவிட்டார். பள்ளிபாளையத்தில் உள்ள தனியார் பேப்பர் மில்லுக்கு மகன் அருண் ஆதித்யா வேலைக்கு சென்றுவிட்டார்.

    மாலையில் வேலை முடிந்ததும் அருண் ஆதித்யா வீட்டுக்கு வந்து உள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 12½ பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சத்தை காணவில்லை.

    யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே ெசன்று அங்கிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் துணிகரமாக வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கொரோனாவால் இறந்தார் என வதந்தி பரவியதால் ஆம்புலன்சில் கொண்டுவரப்பட்ட ஓட்டல் தொழிலாளியின் உடலை மயானத்தில் புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    அந்தியூர்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 60). இவர் ஈரோடு மாவட்டம் பவானி அருகே சித்தாரில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இதற்காக அவர் அந்த பகுதியில் தனியாக தங்கி இருந்து ஓட்டலுக்கு சென்று வேலை செய்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை சின்னப்பனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவருடன் சேர்ந்து வேலை செய்த சக தொழிலாளர்கள் சின்னப்பனை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாலையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அந்தியூர் அருகே கண்டியனூர் மேட்டூர் மயானத்தில் அடக்கம் செய்வதற்காக சின்னப்பனின் உடலை பவானி போலீசார் ஆம்புலன்சில் கொண்டு சென்றனர்.

    இதற்கிடையே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு சின்னப்பன் கொரோனாவால்தான் இறந்தார் என வதந்தி பரவியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு வந்து சின்னப்பனின் உடலை எடுத்து சென்ற ஆம்புலன்சை தடுத்து நிறுத்தினர்.

    அப்போது பொதுமக்களிடம் போலீசார் கூறுகையில், ‘கொரோனா காரணமாக சின்னப்பன் இறக்கவில்லை. உடல்நலக்குறைவு காரணமாகவே இறந்தார். எனவே அவருடைய உடலை புதைக்க விடுங்கள்,’ என்றனர்.

    ஆனால் போலீசாரின் சமாதானத்தை பொதுமக்கள் ஏற்கவில்லை.

    இதனால் சின்னப்பனின் உடலை புதைக்காமல் மீண்டும் ஆம்புலன்சிலேயே போலீசார் பவானிக்கு எடுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    அந்தியூர் அருகே உணவு பாதுகாப்பு அதிகாரிபோல் நடித்து மளிகை கடைக்காரர் வீட்டில் 6½ பவுன் நகையை அபேஸ் செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    அந்தியூர்:

    அந்தியூர் அருகே ஆலம்பாளையம் எழுதியமருதையன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 65). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் ஒருவர் டிப்டாப்பாக உடை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் மளிகை கடைக்கு வந்தார்.

    அப்போது அவர் தன்னை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்தி கொண்டார். மேலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடையில் விற்பனை செய்வதாக வந்த புகாரை தொடர்ந்து சோதனை நடத்த வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    பின்னர் மளிகை கடையில் சோதனையும் நடத்தினார். கடையில் எந்த புகையிலை பொருட்களும் கிடைக்கவில்லை. எனவே வீட்டில் பதுக்கி வைத்திருக்க வாய்ப்புள்ளதால் வீட்டையும் சோதனை நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அதன்பிறகு சிறிது தூரத்தில் உள்ள வீட்டுக்கு ஆறுமுகத்தை அந்த நபர் தனது மோட்டார் சைக்கிளிலேயே அழைத்து சென்றார்.

    அங்கு வீட்டிற்குள் உள்ள பீரோவை திறந்து சோதனை நடத்தி கொண்டு இருந்தார். அப்போது அந்த மர்மநபர் தன்னை தேடி மற்ற அதிகாரிகள் வந்து கொண்டிருப்பதாகவும், அவர்களிடம் நான் வீட்டுக்குள் இருப்பதாக தெரியபடுத்தவும் என்றும் அவர் சொல்லியுள்ளார். அவர் கூறியதை நம்பிய ஆறுமுகம் வீட்டில் இருந்து வெளியே வந்து, மற்ற அதிகாரிகள் வருகிறார்களா என்று பார்த்து கொண்டிருந்தார்.

    இதற்கிடையே அந்த நபர் வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவர், உங்களது வீட்டிலும் எந்தவொரு புகையிலை பொருட்களும் கிடைக்கவில்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மேலும், ஆறுமுகத்தை மீண்டும் மளிகைக்கடையிலேயே இறக்கிவிட்டு அவர் சென்றுவிட்டார்.

    இந்தநிலையில் சந்தேகம் அடைந்த ஆறுமுகம் வீட்டுக்கு சென்று பீரோவை திறந்து பார்த்தார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 6½ பவுன் நகையை காணவில்லை. அப்போதுதான் ஆறுமுகம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், வெள்ளித்திருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும், ஆலாம்பாளையம் செல்லும் வழியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் நகையை அபேஸ் செய்த மர்மநபரின் உருவம் பதிந்து உள்ளதா? என்றும் போலீசார் பார்வையிட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    உணவு பாதுகாப்பு அதிகாரிபோல் நடித்து கடைக்காரரின் வீட்டில் நகையை நூதன முறையில் ஒருவர் திருடிச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது.
    ஈரோடு:

    ஈரோடு அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முகாமை தொடங்கி வைத்தார்.

    அப்போது கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் 19,996 கர்ப்பிணி பெண்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் குறுகிய காலத்தில், குறிப்பிட்டுள்ள நேரத்தில் தடுப்பூசியினை செலுத்தி பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கர்ப்பிணி பெண்கள் தங்களது கர்ப்பத்தினை பதிவு செய்யும் நாளில் இருந்தே தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகதார நிலையங்களில் நேரடியாக சென்று தடுப்பூசி போட்டு கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்திற்கு தடுப்பூசிகள் வருவதை பொறுத்து முறையான திட்டம் வகுக்கப்பட்டு செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஊராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் அடங்கும் வகையில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளிலும் வார்டு வாரியாக செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது தான் அரசின் நோக்கமாக உள்ளது. அதனை கருத்தில் கொண்டு ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. எனவே தங்களது குறைகள் மற்றும் புகார்களை 1077 மற்றும் 0424- 2260211 மற்றும் 9791788852, 8870812220 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். புகார்கள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஈரோடு அரசு மருத்துவமனையை பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தும் வகையில், ரூ.64 கோடி மதிப்பீட்டில் 10 மாடிகள் கொண்ட மருத்துவமனை கட்டிடப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் இணை இயக்குநர் (குடும்ப நலம்) டாக்டர் ராஜசேரன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர் சவுண்டம்மாள், மருத்துவ அலுவலர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ஈரோட்டில் 9-ம் வகுப்பு மாணவியை மிரட்டி கற்பழித்து கர்ப்பமாக்கிய சிறுவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி அரசு மருத்துவமனையில் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி சிகிச்சைக்காக கடந்த 3-ந்தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது, அச்சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியா தேவி மற்றும் அலுவலர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதில், சிறுமியின் மாமா முறையான கோபியை சேர்ந்த கார்த்தி (23), சிறுமியின் சகோதரர்கள் முறையான 17வயது சிறுவர்கள் 2 பேர் சிறுமியை மிரட்டி, கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியை கர்ப்பமாக்கியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, கார்த்தி மற்றும் 2 சிறுவர்கள் என 3 பேர் மீதும் போக்சோ சட்டம் உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி கார்த்தியை ஈரோடு சிறையிலும், சிறுவர்கள் இருவரையும் கோவையில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்தனர்.

    பலத்த மழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் குளம், குட்டைகள், ஏரி, அணைக்கட்டுகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று 3-வது நாளாகவும் மாவட்டம் முழுவதும் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகரம், பெருந்துறை, கோபி, தாளவாடி, சத்தியமங்கலம், பவானிசாகர், பவானி, கொடுமுடி, நம்பியூர், சென்னிமலை, மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி உள்பட பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் விடிய, விடிய மழை பெய்தது.

    இந்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது.

    சென்னிமலை பகுதியில் இரவு 10 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரம் விடாமல் கொட்டியது. 94 மி.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சென்னிமலை பொறையன்காடு அருகே உள்ள முகாசிபிடாரியூர் ஊராட்சிக்குட்பட்ட தியாகி குமரன் நகர் பகுதியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

    அந்த பகுதியில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் தண்ணீரில் சிக்கி தவித்தனர். இதுகுறித்து சென்னிமலை தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்ததும் இரவு 11.30 மணி அளவில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீடுகளில் மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த 150 பேரை பாதுகாப்பாக மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இந்த பலத்த மழை காரணமாக சென்னிமலை- ஈங்கூர் ரோட்டில் உள்ள அரசு நிதி உதவி பெறும் கொமரப்பா செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. மேலும் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. தாழ்வான பல இடங்களில் வெள்ளம் தேங்கி நின்றது.

    பலத்த மழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் குளம், குட்டைகள், ஏரி, அணைக்கட்டுகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஈரோடு-26, பெருந்துறை-19, கோபி-11.80, தாளவாடி-12.40, சத்திய மங்கலம்-13, பவானி சாகர்-4.80, பவானி-11.40, கொடுமுடி-10.20, நம்பியூர்-8, சென்னிமலை-94, மொடக்குறிச்சி-92, கவுந்தப்பாடி-12.20, எலந்தகுட்டைமேடு-10.80, அம்மாபேட்டை-19.80, கொடிவேரி-29, குண்டேரிபள்ளம்-17.80, வரட்டுபள்ளம்-34.80 என மாவட்டம் முழுவதும் 427 மி.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

    கவுந்தப்பாடி அருகே வட்டிக்கு பணம் கொடுப்பதாக கூறி வறுமையில் உள்ள பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த தொழிலாளியை போலீசார் கைது செய்தார்கள்.
    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள தயிர்பாளையத்தை சேர்ந்தவர் பானுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருடைய கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். அதனால் வாடகை வீட்டில் வசித்து கொண்டு விசைத்தறி கூடத்தில் வேலை செய்து வருகிறார்.

    இந்தநிலையில் கடந்த வாரம் பானுமதி தனது பக்கத்து வீட்டில் உள்ள பெண்களுடன் வீட்டின் முன்பு பேசிக்கொண்டு இருந்தார்.

    அப்போது மோட்டார்சைக்கிளில் டிப்-டாப்பாக அங்கு வந்த நபர் ஒருவர் இந்தபகுதியில் வீடு வாடகைக்கு கிடைக்குமா? என்று கேட்டுள்ளார்.

    அதற்கு பெண்கள் இந்த பகுதியில் வீடு எதுவும் வாடகைக்கு இல்லை. நீங்கள் யார்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் என் பெயர் குமார், வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறேன். குறிப்பாக பெண்களுக்கு மட்டும் பணம் தருகிறேன் என்று கூறினார். உடனே அங்கிருந்த பெண்கள் தங்களுக்கும் வட்டிக்கு பணம் வேண்டும் என்று கேட்டனர். அதற்கு குமார் தன்னுடைய முகவரி அட்டையை கொடுத்து, அந்த பெண்களின் செல்போன் எண்களையும் பெற்றுக்கொண்டு, உங்களுக்கு பணம் கொண்டு வந்து கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

    அதன்பின்னர் அன்று மாலை பானுமதியை செல்போனில் தொடர்புகொண்ட குமார் உங்களுக்கு பணம் வேண்டுமா? கொண்டு வருகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் தேர்தலின்போது என்னிடம் அரசியல்வாதிகள் சிலர் கருப்பு பணம் கொடுத்து வைத்துள்ளார்கள். அந்த பணத்தைத்தான் வட்டிக்கு விட்டு வருகிறேன்.

    என்னுடைய நிதி நிறுவனத்துக்கு அழகான இளம்பெண்கள் வேலைக்கு வேண்டும் இருந்தால் சொல்லு, அதற்கும் பணம் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

    குமார் பேசுவதை கேட்ட பானுமதிக்கு அவர் மேல் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் மற்ற பெண்களிடம் இதுபற்றி கூறினார். உடனே அனைவரும் சேர்ந்து இதுபற்றி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்கள்.

    இந்த புகார் கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கவுந்தப்பாடி போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து கவுந்தப்பாடி போலீசார் குமாரை பிடித்து விசாரிக்க, அவரை பானுமதி வீட்டுக்கு வரவழைக்க முடிவு செய்தார்கள். அதனால் பானுமதியின் வீட்டில் ஒரு பெண் போலீசை வைத்து குமாருக்கு போன் செய்தார்கள். பானுமதியின் வீட்டுக்கு அருகிலேயே போலீசாரும் மறைந்திருந்தார்கள்.

    சிறிது நேரத்தில் பானுமதியின் வீட்டுக்கு குமார் மோட்டார்சைக்கிளில் வந்தார். ஆனால் வீட்டு வாசலில் நின்றுகொண்டு இருந்த போலீசாரின் மோட்டார் சைக்கிள்களை பார்த்துவிட்டு திரும்பி சென்றுவிட்டார். போலீசாரும் அவரை பிடிக்க முடியவில்லை. இதையடுத்து குமாரின் செல்போனை ஆய்வு செய்தார்கள்.

    அப்போது குமாரின் செல்போன் சிக்னல் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ளதை உறுதி செய்தனர். ஆனால் அந்த பகுதியில் குமார் கிடைக்கவில்லை.

    இந்தநிலையில் 2 நாட்களுக்கு முன்பு குமார் மீண்டும் பானுமதிக்கு போன் செய்து நான் உன் வீட்டுக்கு வருகிறேன். இளம்பெண் ஒருவர் இருக்கிறார் என்று சொன்னாயே அவரையும் வீட்டில் இருக்க சொல் என்று கூறியுள்ளார்.

    பானுமதி ஏற்கனவே போலீசார் கூறியபடி குமாரிடம் எதுவும் காட்டிக்கொள்ளாமல் சரி வாருங்கள் என்று கூறினார். அதன்படி நேற்று காைல குமார் தயிர்பாளையத்தில் உள்ள பானுமதியின் வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்தார். அதேநேரம் பானுமதி போலீசாருக்கு இந்த தகவலை கூறியிருந்தார். உஷாரான போலீசார் குமாரை பிடிக்க தயிர்பாளையத்தில் காத்திருந்தார்கள்.

    பானுமதியின் வீட்டை நெருங்கும்போது போலீஸ் ஜீப் நிற்பதை குமார் பார்த்துவிட்டார். உடனே வீட்டு வாசலில் நின்றுகொண்டு இருந்த பானுமதியிடம் என்னை பிடித்து கொடுக்கிறாயா? உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறி விட்டு மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றார். போலீசாரும் விடாமல் துரத்தி சென்றார்கள்.

    சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று குமாரை மடக்கிப்பிடித்து கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்துக்கு போலீசார் கொண்டு சென்றார்கள்.

    போலீஸ் நிலையத்தில் குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. பிடிபட்டவர் கவுந்தப்பாடி அருகே உள்ள கவுந்தப்பாடிபுதூர் வையாபுரி வீதியை சேர்ந்த செல்வன் (வயது 42) என்பதும், தறிப்பட்டறை தொழிலாளியான செல்வத்துக்கு 2 மனைவிகள் மற்றும் குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.

    மேலும் செல்வன் வேலைக்கு செல்லாமல் டிப்-டாப்பாக உடையணிந்து தன்னை ஒரு நிதிநிறுவன அதிபர் என்று கூறிக்கொண்டு பெண்களிடம் அறிமுகப்படுத்திக்கொள்வார். பின்னர் அவர்களில் யார் வறுமையில் உள்ளார்கள் என்பதை தெரிந்துகொண்டு அவர்களுக்கு வட்டிக்கு பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறி அவர்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

    செல்வனிடம் ஏமாந்த பெண்கள் பலர் இதை வெளியில் சொல்லாமல் விட்டதால் செல்வம் பல பெண்களிடம் தன் லீலையை அரங்கேற்றியுள்ளார். முடிவில் பானுமதியிடம் தன் வலையை வீசியபோது அவர் உஷார் ஆகி போலீசில் கூறியதால் செல்வன் பிடிபட்டுவிட்டார்.

    இதையடுத்து கவுந்தப்பாடி போலீசார் செல்வனை கைது செய்து, கோபி மாவட்ட சிறையில் அடைத்தார்கள்.

    செல்வன் இதுவரை எத்தனை பெண்களை ஏமாற்றி உள்ளார். வேறு ஏதாவது குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்று போலீசார் தெரிவித்தார்கள்.

    வறுமையில் உள்ள பெண்களிடம் சென்று பணம் தருவதாக அவர்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த தொழிலாளி கைது செய்யப்பட்ட சம்பவம் கவுந்தப்பாடி பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஈரோடு மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் இயங்க உள்ளதால் பஸ்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்தது.
    ஈரோடு:

    தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகளால் கடந்த வாரம் முதல் அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு உள்பட 11 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு கொடுக்கப்பட்டு இருப்பதால் நாளை (திங்கட்கிழமை) முதல் அரசுபோக்குவரத்துக்கழக பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதை முன்னிட்டு நேற்று அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் நிறுத்தப்பட்டு உள்ள பஸ்களை தூய்மை செய்யும் பணிகள் தொடங்கின. ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் தூய்மை பணியாளர்கள் பஸ்களை சுத்தம் செய்தனர். அதைத்தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஈரோடு மண்டல துணைப்பொது மேலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் பணியாளர்கள் இந்த வேலைகளில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி துணைப்பொது மேலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

    ஈரோடு மண்டலத்தில் 13 பணிமனைகளில் இருந்து 728 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து 60 சதவீதம் பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதாவது சுமார் 400 பஸ்கள் வரை ஈரோடு மாவட்டத்தில் இருந்து இயங்கும். அரசு வழிகாட்டுதலின்படி பிற மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படும். ஆனால் பிற மாநிலங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட மாட்டாது.

    பஸ் பயணிகள் அரசின் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பஸ்சில் 50 சதவீதம் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது. பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சானிடைசர் பயன்படுத்த வேண்டும். அத்தியாவசிய தேவை இன்றி யாரும் பஸ்களில் பயணிக்க வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அரசு போக்குவரத்துக்கழக நகர பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு இலவச பயணத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள்தான் பஸ்கள் இயங்கின.

    மீண்டும் நாளை (திங்கட்கிழமை) முதல் பஸ்கள் ஓடத்தொடங்குவதால் இலவச பயணச்சீட்டு அனுமதிக்கப்பட்ட பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்யும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக குறைந்த ஊதியத்தில் பல்வேறு வேலைகளுக்கும் சென்று வரும் பெண்கள் உற்சாகமாக நாளை மீண்டும் பயணத்தை தொடங்குவார்கள்.
    ஈரோடு மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன.
    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது. எனவே இதுவரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத பகுதிகளிலும் நாளை (திங்கட்கிழமை) மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன.

    ஈரோடு மாவட்டத்தில் 213 டாஸ்மாக் கடைகள் நாளை (திங்கட்கிழமை) முதல் திறக்கப்படும். காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை இந்த கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

    மதுவாங்க வரும் குடிமகன்கள் இடைவெளியை கடைபிடிக்கும் வகையிலும் நெரிசல் இன்றி மது வாங்கி செல்லவும் வசதியாக தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் நேற்று நடந்தன. ஈரோடு வி.சி.டி.வி. வீதியில் உள்ள டாஸ்மாக் கடையில் சவுக்கு கம்புகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டதுடன், இடைவெளியுடன் நிற்க வெள்ளை வட்டங்களும் போடப்பட்டன.

    இதுபோல அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மதுக்கடைகள் திறந்தாலும் பார்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மது வாங்க வருபவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த 2 மாதங்கள் மதுக்கடைகள் இல்லாததால் பெரும்பாலான குடிமகன்கள் தங்கள் குடும்பங்களை நல்ல முறையில் பார்த்துக்கொண்டனர். வேலை இல்லை, வருவாய் இல்லை என்ற நிலையிலும் கணவன், மகன், தந்தை என ஆண்கள் மதுபோதையை மறந்து வீட்டில் இருந்ததால் பெண்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.

    ஆனால் நாளை முதல் மீண்டும் குடிமகன்கள் மதுக்கடைகளை நாடி செல்லும் நிலையும், குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழலும் ஏற்படும். இது பல குடும்பங்களில் கவலையை ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
    ×