search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலத்த மழை காரணமாக தியாகி குமரன் நகர் பகுதியில் மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்து நின்ற காட்சி
    X
    பலத்த மழை காரணமாக தியாகி குமரன் நகர் பகுதியில் மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்து நின்ற காட்சி

    ஈரோட்டில் விடிய, விடிய கனமழை- சென்னிமலையில் வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம்

    பலத்த மழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் குளம், குட்டைகள், ஏரி, அணைக்கட்டுகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று 3-வது நாளாகவும் மாவட்டம் முழுவதும் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகரம், பெருந்துறை, கோபி, தாளவாடி, சத்தியமங்கலம், பவானிசாகர், பவானி, கொடுமுடி, நம்பியூர், சென்னிமலை, மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி உள்பட பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் விடிய, விடிய மழை பெய்தது.

    இந்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது.

    சென்னிமலை பகுதியில் இரவு 10 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரம் விடாமல் கொட்டியது. 94 மி.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சென்னிமலை பொறையன்காடு அருகே உள்ள முகாசிபிடாரியூர் ஊராட்சிக்குட்பட்ட தியாகி குமரன் நகர் பகுதியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

    அந்த பகுதியில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் தண்ணீரில் சிக்கி தவித்தனர். இதுகுறித்து சென்னிமலை தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்ததும் இரவு 11.30 மணி அளவில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீடுகளில் மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த 150 பேரை பாதுகாப்பாக மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இந்த பலத்த மழை காரணமாக சென்னிமலை- ஈங்கூர் ரோட்டில் உள்ள அரசு நிதி உதவி பெறும் கொமரப்பா செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. மேலும் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. தாழ்வான பல இடங்களில் வெள்ளம் தேங்கி நின்றது.

    பலத்த மழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் குளம், குட்டைகள், ஏரி, அணைக்கட்டுகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஈரோடு-26, பெருந்துறை-19, கோபி-11.80, தாளவாடி-12.40, சத்திய மங்கலம்-13, பவானி சாகர்-4.80, பவானி-11.40, கொடுமுடி-10.20, நம்பியூர்-8, சென்னிமலை-94, மொடக்குறிச்சி-92, கவுந்தப்பாடி-12.20, எலந்தகுட்டைமேடு-10.80, அம்மாபேட்டை-19.80, கொடிவேரி-29, குண்டேரிபள்ளம்-17.80, வரட்டுபள்ளம்-34.80 என மாவட்டம் முழுவதும் 427 மி.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

    Next Story
    ×