என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    20 ஆயிரம் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி- மாவட்ட கலெக்டர் தகவல்

    பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது.
    ஈரோடு:

    ஈரோடு அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முகாமை தொடங்கி வைத்தார்.

    அப்போது கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் 19,996 கர்ப்பிணி பெண்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் குறுகிய காலத்தில், குறிப்பிட்டுள்ள நேரத்தில் தடுப்பூசியினை செலுத்தி பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கர்ப்பிணி பெண்கள் தங்களது கர்ப்பத்தினை பதிவு செய்யும் நாளில் இருந்தே தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகதார நிலையங்களில் நேரடியாக சென்று தடுப்பூசி போட்டு கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்திற்கு தடுப்பூசிகள் வருவதை பொறுத்து முறையான திட்டம் வகுக்கப்பட்டு செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஊராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் அடங்கும் வகையில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளிலும் வார்டு வாரியாக செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது தான் அரசின் நோக்கமாக உள்ளது. அதனை கருத்தில் கொண்டு ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. எனவே தங்களது குறைகள் மற்றும் புகார்களை 1077 மற்றும் 0424- 2260211 மற்றும் 9791788852, 8870812220 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். புகார்கள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஈரோடு அரசு மருத்துவமனையை பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தும் வகையில், ரூ.64 கோடி மதிப்பீட்டில் 10 மாடிகள் கொண்ட மருத்துவமனை கட்டிடப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் இணை இயக்குநர் (குடும்ப நலம்) டாக்டர் ராஜசேரன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர் சவுண்டம்மாள், மருத்துவ அலுவலர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×