என் மலர்
ஈரோடு
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் இன்று 107 இடங்களில் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு 10 ஆயிரத்து 700 பேருக்கு செலுத்தப்பட்டது. ஒவ்வொரு மையங்களிலும் முதலில் வந்த 100 பேருக்கு டோக்கன் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஈரோடு மாநகர் பகுதியில் இன்று 20 இடங்களில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. முதலில் வந்த 100 பேருக்கு டோக்கன் அடிப்படையில் செலுத்தப்பட்டது. இதனால் நீண்ட வரிசையில் காத்து நின்ற மற்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஒரு சில மையங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட உடையாம்பாளையம் பகுதி 7,8-வது வார்டுகளில் 400-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பாரபட்சம் காட்டுவதாக கூறி கோபி- ஈரோடு மெயின்ரோடு குள்ளம்பாளையம் பிரிவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 40 பேர் திடீரென இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் கிடைத்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் அங்கு வந்து சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாரபட்சமில்லாமல் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம், பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு காலை ஒரு காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டு பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சேலம் மாவட்டம், காவேரிப்பட்டி அக்ரஹாரம் பன்னிமடை குடியை சேர்ந்த வடிவேல் என்பவரின் மகன் அஜித் (21) என்பதும், திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடையாமல் இருப்பது தெரியவந்தது.
மேலும் அந்த சிறுமியின் பெற்றோர், பவானி அடுத்த காடப்பநல்லூர் கோவில் பாளையத்தை சேர்ந்த அப்புசாமி (48). இவரது மனைவி நாகமணி (34) ஆகியோரை அழைத்து விசாரித்ததில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு 12-ம் வகுப்பு மட்டுமே படித்துள்ள இந்த சிறுமியை கட்டாயப்படுத்தி சேலம் மாவட்டம், காவேரிபுரம் புதுப்பட்டி பகுதியை சேர்ந்த குப்புசாமி (60). இவரது மனைவி கோவிந்தம்மாள் (55) ஆகியோரின் மகனான காமராஜுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். கடந்த 6 மாதங்களாக குடும்பம் நடத்தி வந்த இவர்கள் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு கோவில் பாளையம் கிராமத்திற்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த சிறுமிக்கு ஏற்கனவே அறிமுகமான அஜித், ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று, சங்ககிரி அருகே உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கண்டு பவானி மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்துள்ளார். இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
அதன்படி பவானி அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை திருமணம் செய்து வைத்த பெற்றோர், கட்டாய திருமணம் செய்த காமராஜ் மற்றும் அவரது பெற்றோர், சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்த அஜீத் உள்பட 6 பேரை போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி மற்றும் வனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அங்கு குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் நேற்று 3-வது நாளாக ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. சத்தியமங்கலம் அதன் சுற்று வட்டார பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. குண்டேரிபள்ளம், வரட்டுப்பள்ளம் போன்ற அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
இதேப்போல் அம்மாபேட்டை, கோபி, மொடக்குறிச்சி, பவானி, பவானி சாகர் பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. மாநகர் பகுதியில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் கொளுத்தியது. பின்னர் திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தன. மாலை 5 மணி முதல் ஒரு மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்தது. பின்னர் இரவு முதல் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
சென்னிமலையில் மாலை 5 மணிக்கு மேல் லேசாக பெய்ய தொடங்கிய மழை சிறிது நேரத்தில் கனமழையாக பெய்தது. இரவு 7 மணி வரை மழை நீடித்தது. சென்னிமலை சுற்று வட்டார கிராமங்களிலும் மழை பெய்ததால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், விவசாய நிலங்களில் மழை வெள்ளம் தேங்கி நின்றது.
சென்னிமலை டவுனில் பெய்த மழையால் மேலப்பாளையம், குமராபுரி, காட்டூர், அம்மாபாளையம், பிடாரியூர், ஈங்கூர் ரோடு, ஊத்துக்குளி ரோடு, காங்கயம் ரோடு, அரச்சலூர் ரோடு, வெள்ளோடு ரோடு உட்பட அனைத்து பகுதிகளிலும் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழையால் குளிர் காற்று வீசியது. இன்று காலையிலும் வானம் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது.
ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ஈரோடு-15, சென்னிமலை-8.6, தாளவாடி-8, வரட்டுபள்ளம்-6.4, அம்மாபேட்டை-5.2, குண்டேரிபள்ளம்-5, சத்தியமங்கலம்-4, கோபி-3.2, மொடக்குறிச்சி-3, பவானிசாகர்-1.8, பவானி-1.8.
சித்தோடு:
ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள கொங்கம்பாளையம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கருப்பன், மினி ஆட்டோ டிரைவர் (30). இவரது மனைவி ரேவதி (26). இவர் கொங்கம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் சத்துணவு ஆயாவுக்கு உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ரோகித், யஷ்வந்த் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் ரேவதியின் நடத்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டு கருப்பன் அடிக்கடி தகராறு செய்து வந்து உள்ளார். இதையடுத்து ரேவதியின் பெற்றோர் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். ஆனாலும் அவ்வப்போது தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து ரேவதி தூங்கச் சென்று விட்டார். ஆத்திரமடைந்த கருப்பன் ரேவதியை கொலை செய்ய திட்டமிட்டார்.
இதையடுத்து கருப்பன் தூங்கிக்கொண்டிருந்த ரேவதியின் கழுத்தை கையால் இறுக்கி கொலை செய்ய முயன்றார். சுதாரித்துக் கொண்ட ரேவதி அவரிடமிருந்து தப்பிக்க போராடி உள்ளார். அந்த நேரத்தில் வீட்டில் இருந்த துண்டால் கருப்பன் ரேவதியின் கழுத்தை இறுக்கினார்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியானார். இதையடுத்து கருப்பன் ரேவதியின் அண்ணன் சோமசுந்தரம் என்பவருக்கு போன் செய்து உன் தங்கச்சி நடத்தை சரியில்லாததால் நான் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. இதனால் நான் அவளை கொன்று விட்டேன். இப்போது தான் எனக்கு நிம்மதி என்று கூறி உள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ரேவதியின் அண்ணன் அவரது பெற்றோர் மற்றும் உறவினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் ரேவதியின் வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அவர் கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொலை செய்யப்பட்ட ரேவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான அவரது கணவர் கருப்பனை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் பல லட்சம் விவசாய விளை நிலங்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணைக்கு நீர்ப்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி மாவட்ட மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை நேர நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 94.78 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4,322 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 650 கனஅடி நீரும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடி வீதம் மொத்தம் 850 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் இன்று மாலைக்குள் பவானிசாகர் அணை 95 அடியை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பொருட்டு, காக்கும் கரங்கள் என்ற குழு தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தற்போது வரை 10 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளன. 6 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் 7 ஏழை குழந்தைகளுக்கு தங்கும் இடவசதி செய்து தரப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தற்போது மாணவ-மாணவிகள் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவற்றில் தகவல்களை பரிமாறுவதும், யூடியூப் பயன்பாடும் அதிகரித்து உள்ளது. இதனால் மாணவ-மாணவிகளுக்கு, சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படும் இடர்பாடுகள் குறித்தும், இதுகுறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் தேவையில்லாத, விரும்பத்தகாத தகவல்கள் பெறப்படுவதை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவ -மாணவிகள் காவலன் எஸ்.ஓ.எஸ். செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும், அதன் பயன்பாடு குறித்தும், மாவட்ட போலீஸ் துறை வாட்ஸ்அப் எண் 9655220100 மற்றும் 1098 என்ற சைல்டு லைன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் முன் எச்சரிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஈரோடு மாநகராட்சி அலுவலர்கள் கடந்த சில மாதங்களாக கொரோனா தடுப்பு பணியில் கவனம் செலுத்தி வந்தனர். தற்போது தொற்று குறைய தொடங்கி உள்ளதால் மற்ற பணிகளிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்க உள்ளதால் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர். ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் கடந்த சில நாட்களாக சாக்கடை கால்வாய்கள் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து நேற்று முதல் டெங்கு தடுப்பு பணி நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு வீடாக சென்று ஆய்வு செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டு 300 வீட்டுக்கு, ஒரு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர் நியமிக்கப்பட்டு அந்த நபர் ஒரு நாளைக்கு 50 வீடுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
ஆய்வின்போது வீட்டில் எங்கேனும் தண்ணீர் தேங்கி உள்ளதா?, கழிவுநீர் தொட்டி, சுற்றுப்புற பகுதி தூய்மையாக உள்ளதா? என்று பார்வையிடுவார். அப்போது கொசு உற்பத்தியாகும் சூழ்நிலை இருந்தால் அங்கு மருந்து தெளிப்பார்கள். ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 50 வீடுகள் வீதம் ஒரு வாரத்திற்கு 300 வீடுகளை கண்காணிப்பார்.
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-
பருவமழை காலம் தொடங்க உள்ளதால் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே சாக்கடைகள் தூர்வாரப்பட்டு, குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இன்று முதல் வீடு வீடாக மாநகராட்சி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் சென்று ஆய்வு செய்வார்கள். இவர்களுடன் அந்தந்த மண்டல உதவி ஆணையாளர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் செல்வார்கள்.
முடிந்த அளவுக்கு வீட்டில் தண்ணீர் தேங்கி கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசு உற்பத்தியாகும் சூழல் இருக்கும் இடங்களில் மருந்து தெளிக்கப்படும். மேலும் ஈரோடு மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் ஒவ்வொரு வார்டு வாரியாக சென்று கள ஆய்வில் ஈடுபடுவார்கள்.
ஈரோடு:
ஈரோடு வி.மேட்டுப்பாளையம் ஐஸ்வர்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன்(42). மெடிக்கல் ஏஜென்சி உரிமையாளர். இவரது மனைவி சிவகாமசுந்தரி (38). இவர் திண்டல் அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
இந்நிலையில் கணவன் -மனைவி இருவரும் சொந்த வேலையாக மோட்டார் சைக்கிளில் சென்னிமலை ரோட்டில் ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தனர். முத்தம்பாளையம் பால் பண்ணை அருகே வந்தபோது, சாலையோரம் கட்டப்பட்டிருந்த எருமை மாடு திடீரென சாலையின் குறுக்கே வந்து முத்துக்கிருஷ்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் முத்துக் கிருஷ்ணனும், சிவகாமசுந்தரியும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில், முத்துக்கிருஷ்ணனுக்கு லேசான காயமும், சிவகாமசுந்திரிக்கு தலை, தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் சிவகாமசுந்தரியை 108 ஆம்புலன்சு மூலம் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவகாமசுந்தரி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி, விபத்து ஏற்படும் வகையில் எருமை மாட்டினை சாலையோரம் கட்டிய அதன் உரிமையாளர் மணியாளி என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 8 ஆயிரத்து 286 பேருக்கு பரிசோதனை செய்ததில் 193 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 187 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 91 ஆயிரத்து 305 ஆக உயர்ந்தது.
இதற்கிடையில் நேற்று ஒரே நாளில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 174 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 88 ஆயிரத்து 22 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர்.
தற்போது தொற்று உள்ள 2 ஆயிரத்து 668 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 615 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு:
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, நேதாஜி வீதியை சேர்ந்தவர் குமரேசன் (23). இவர் பெருந்துறை பஸ் நிலையம் எதிரில் உள்ள ஒரு லாட்ஜில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று குமரேசன் பணியில் இருந்தபோது ஈரோட்டை சேர்ந்த சக்திவேல் என்பவர் அறை வாடகைக்கு வேண்டும் என்று கேட்டார்.
இதையடுத்து சக்திவேலுக்கு அறை வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்து சிலர் அந்த அறைக்கு வந்து சென்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் மேலாளர் குமரேசன் அந்த அறைக்கு சென்று பார்த்தார்.
அப்போது செல்போனில் ஆன்லைனில் அவர்கள் லாட்டரி சூதாட்டம் நடத்தி கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பெருந்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது ஆன்லைன் சூதாட்டமாடுவது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் ஈரோடு, அசோகபுரத்தை சேர்ந்த கோபி என்கிற வெங்கடாச்சலம் (36), வீரப்பன்சத்திரம், எம்.ஜி.ஆர். வீதியை சேர்ந்த காளி முத்துக்குமார் (26), நேரு வீதியை சேர்ந்த விக்னேஸ்வரன் (26), ஏ.எஸ்.ஜி. வீதியை சேர்ந்த சக்திவேல் (41) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து சூதாட்ட பணத்தையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆசீப் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.






