search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    மோட்டார் சைக்கிள் மீது எருமை மாடு மோதி விபத்து- கணவருடன் சென்ற அரசு பள்ளி ஆசிரியை பலி

    ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மீது எருமை மாடு மோதிய விபத்தில் கணவருடன் சென்ற அரசு பள்ளி ஆசிரியை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு வி.மேட்டுப்பாளையம் ஐஸ்வர்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன்(42). மெடிக்கல் ஏஜென்சி உரிமையாளர். இவரது மனைவி சிவகாமசுந்தரி (38). இவர் திண்டல் அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

    இந்நிலையில் கணவன் -மனைவி இருவரும் சொந்த வேலையாக மோட்டார் சைக்கிளில் சென்னிமலை ரோட்டில் ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தனர். முத்தம்பாளையம் பால் பண்ணை அருகே வந்தபோது, சாலையோரம் கட்டப்பட்டிருந்த எருமை மாடு திடீரென சாலையின் குறுக்கே வந்து முத்துக்கிருஷ்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் முத்துக் கிருஷ்ணனும், சிவகாமசுந்தரியும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில், முத்துக்கிருஷ்ணனுக்கு லேசான காயமும், சிவகாமசுந்திரிக்கு தலை, தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து அக்கம்பக்கத்தினர் சிவகாமசுந்தரியை 108 ஆம்புலன்சு மூலம் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவகாமசுந்தரி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி, விபத்து ஏற்படும் வகையில் எருமை மாட்டினை சாலையோரம் கட்டிய அதன் உரிமையாளர் மணியாளி என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×