என் மலர்
ஈரோடு
- விசாரணை குறித்து மருத்துவ குழு, மற்றும் போலீஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணை குறித்தும் இரண்டு தரப்பினரும் பகிர்ந்து கொண்டனர்.
- சென்னை மருத்துவ குழுவினர் சேலம் மற்றும் ஓசூர் சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனைகளில் விசாரணை நடத்த கிளம்பி சென்றனர்.
ஈரோடு:
16 வயது சிறுமிக்கு கருமுட்டை எடுத்த விவகாரத்தில் உண்மை நிலையை கண்டறியும் வகையில் இரண்டு தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ குழு சென்று விசாரணையை தீவிரப்படுத்தியது.
இந்நிலையில் இந்த மருத்துவ குழு இன்று காலை ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், மற்றும் இந்த வழக்கை விசாரித்து வரும் ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி ஆகியோரை சந்தித்து ஆலோசித்தது.
அப்போது இதுவரை மேற்கொண்ட விசாரணை குறித்து மருத்துவ குழு, மற்றும் போலீஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணை குறித்தும் இரண்டு தரப்பினரும் பகிர்ந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை மருத்துவ குழுவினர் சேலம் மற்றும் ஓசூர் சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனைகளில் விசாரணை நடத்த கிளம்பி சென்றனர்.
- தவுடு மூட்டைகளை இறக்கிய போது தவறி விழுந்து தலையில் அடிபட்டு மயங்கினார்.
- சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈரோடு:
கோபிசெட்டிபாளையம் அடுத்த வடுகபாளையம்புதூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 72). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் வடுகபாளையம் புதூரில் இருந்து தவுடு லோடு ஏற்றி கொண்டு தாளவாடிக்கு சரக்கு வேனில் சென்றார். வேனை அப்துல் பாசித்து என்பவர் ஓட்டி சென்றார்.
தாளவாடி கொங்கள்ளி ரோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தின் முன்பு சரக்கு வேனை நிறுத்தி அதில் இருந்து சுப்பிரமணியம் தவுடு மூட்டைகளை இறக்கி கொண்டு இருந்தார்.
அப்போது அவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் அவருக்கு பின் தலையில் அடிப்பட்டு மயங்கி விழுந்தார்.
அவருடன் வந்தவர்கள் அவரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் அனுமதியின்றி மது விற்ற 9 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை அடியோடு தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டம் முழுவதும் அதிரடியாக போலீசார் கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அந்தியூர்-பர்கூர் ரோட்டில் உள்ள ஒரு கடையில் போலீசார் சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பொருட்கள் 3887 பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கடையின் உரிமையாளர் ராஜசேகரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அவர் கர்நாடகா மாநிலம் கொள்ளேகால் அப்பகுதியில் இருந்து ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை வாங்கி வந்து விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து 3887 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைப்போல் பவானி, பெருந்துறை கோபி, சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் போலீசார் கடைகளில் மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஹான்ஸ் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 4, 840 ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஹான்ஸ் புகையிலை விற்றதாக 46 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் அனுமதியின்றி மது விற்ற 9 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- இடியுடன் ஆலங்கட்டி மழையும் பெய்ததால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
- மின் சாதனப் பொருட்கள் வெடித்து சிதறின.
ஈரோடு:
ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று மாலை 5 மணி முதல் கனமழை பெய்தது. இடியுடன் ஆலங்கட்டி மழையும் பெய்ததால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
இந்நிலையில் கனி ராவுத்தர்குளம், காந்தி நகரில் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்தவர் துறையன் (65). இவரது மனைவி வனஜா துறையின் (63). கன மழை பெய்து கொண்டிருந்ததால் இவர்கள் வீட்டுக்குள் இருந்தனர்.
அப்போது இவர்கள் வீட்டின் மாடியில் தண்ணீர் தொட்டியில் இடி விழுந்தது. இதையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டில் உள்ள மின்சார மீட்டர் பாக்ஸ் வெடித்து சிதறியது. வீட்டில் உள்ள பேன், மிக்சி, பிரிட்ஜ், டிவி, லைட்டுகள் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் அனைத்தும் வெடித்து சிதறின.
இதனால் வீடு புகைமூட்டத்துடன் காணப்பட்டது. இவர்கள் வீட்டின் முன் பகுதி இடிந்து விழுந்தது.நல்லவேளையாக இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்றதால் உயிர் தப்பினர்.
இதேப்போல் இவர்கள் பக்கத்து வீட்டை சேர்ந்த முருகேசன், மற்றும் பழனியம்மாள் வீடுகளில் இடியின் தாக்கம் காரணமாக அனைத்தும் மின்சாதன பொருட்களும் வெடித்து சேதமடைந்தது. இதில் அவர்களும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்ததால் உயிர்தப்பினர்.
மேலும் அந்தப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் இடித்தாக்கம் காரணமாக மின்சாதன பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்து பழுதானது.
- திருட்டு, கஞ்சா உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதால் வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் அடைத்தனர்.
- போலீசார் வாலிபரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோபி:
கோபி பகுதியை சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன் (45) பழனிச்சாமி (38) இவர்கள் 2 பேரும் கடந்த மாதம் 7-ந் தேதி கோபியில் உள்ள ஒரு மது கடையில் பீர் குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சேலத்தை சேர்ந்த கவுதம் (22) என்பவர் இருவரிடமும் கூலிங் பீர் கேட்டு தகராறு செய்தார்.
இதில் பீரை கொடுக்க இருவரும் மறுத்ததால் ஆத்திரமடைந்த கவுதம் இருவரையும் பிராந்தி பாட்டிலால் தாக்கினார். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுதமனை கைது செய்தனர்.
பின்னர் அவரை கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கவுதம் மீத திருட்டு, கஞ்சா உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதால் கவுதமை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கவுதமை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
அதற்கான நகலை கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கவுதமிடம் போலீசார் வழங்கினர் அதை தொடர்ந்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- ஈரோடு ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி சிறுமிக்கு கருமுட்டை எடுத்த விவகாரத்தில் தொடர்புடைய இரண்டு தனியார் மருத்துவமனைக்கு சம்மன் அனுப்பி ஆஸ்பத்திரி நிர்வாகிகள், டாக்டர்கள் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.
- வளர்ப்புத் தந்தை தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்தது குறித்தும், எந்தெந்த ஆஸ்பத்திரிகளில் தனது கருமுட்டை எந்தெந்த நாட்களில் எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரத்தையும் சிறுமி விரிவாகக் கூறினார்.
ஈரோடு:
ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரத்தில் அவரது தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி, அவர்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த சூரம்பட்டி, பாரதிபுரம் பகுதியை சேர்ந்த ஜான் ஆகிய 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
ஈரோடு ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி சிறுமிக்கு கருமுட்டை எடுத்த விவகாரத்தில் தொடர்புடைய இரண்டு தனியார் மருத்துவமனைக்கு சம்மன் அனுப்பி ஆஸ்பத்திரி நிர்வாகிகள், டாக்டர்கள் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் உண்மை நிலையை கண்டறியும் வகையில் சென்னை மருத்துவ பணிகள் இயக்குனரகத்தின் துணை இயக்குனர் குருநாதன், இணை இயக்குனர் (சட்டம்) விசுவநாதன், ஈரோடு மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கோமதி, டாக்டர்கள் மலர்விழி, கதிரவன் உள்பட 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
நேற்று மருத்துவ குழுவினர் ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து அந்த மருத்துவக் குழுவிடம் கண்ணீர் மல்க கூறினார்.
அதில் தனது வளர்ப்புத் தந்தை தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்தது குறித்தும், எந்தெந்த ஆஸ்பத்திரிகளில் தனது கருமுட்டை எந்தெந்த நாட்களில் எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரத்தையும் சிறுமி விரிவாகக் கூறினார்.சிறுமியின் வாக்குமூலத்தை மருத்துவக்குழுவினர் பதிவு செய்து கொண்டனர்.
அதன் பின்னர் அங்கிருந்து கிளம்பி ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மதியம் 3 மணி அளவில் விசாரணைக்கு வந்தனர். தொடர்ந்து மருத்துவ குழுவினர் ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர், ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது கருமுட்டை தானம் எடுக்கும் முன்பு அரசு குறிப்பிட்டுள்ள வழிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா? எந்த சான்றிதழ் அடிப்படையில் அந்த சிறுமியிடம் இருந்து கருமுட்டை தானம் எடுக்கப்பட்டது. அந்த சிறுமிக்கு திருமணம் ஆகி விட்டதை உறுதி செய்தீர்களா? உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டனர். மேலும் அந்த சிறுமி தொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.
3 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 8 மணி வரை அதாவது 5 மணி நேரம் வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மருத்துவ குழுவினர் விசாரணையை முடித்துக் கொண்டு வெளியேறினர். பெருந்துறைக்கு சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் விசாரணையை தொடங்கினர்.
அங்கு 8.30 மணிக்கு விசாரணையை தொடங்கி அவர்கள் நள்ளிரவு 12.30 மணி வரை விசாரணையை மேற்கொண்டனர். அந்த மருத்துவமனை நிர்வாகிகள், டாக்டர்கள், ஊழியர்களிடம் சரமாரியாக கேள்வி மேல் கேள்வி எழுப்பினர். பின்னர் அந்த சிறுமி தொடர்பான ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து இன்று மருத்துவ குழுவினர் 2-வது நாளாக சேலத்திற்கு சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமியின் கருமுட்டை எடுத்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்கின்றனர். தொடர்ந்து இன்னும் 2 நாட்கள் அந்த மருத்துவ குழுவினர் பல்வேறு மருத்துவமனையில் சென்று விசாரணையை மேற்கொள்கின்றனர். இதனால் இந்த விவகாரம் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதுகுறித்து மருத்துவ பணிகள் இயக்குனரக இணை இயக்குனர் (சட்டம்) விஸ்வநாதன் கூறியதாவது:-
இந்த விவகாரத்தில் ஈரோடு மட்டுமின்றி பிற ஊர்கள், மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் வாக்குமூலம் பெற வேண்டியுள்ளது. ஏனெனில் அங்கும் கருமுட்டை விற்பனை நடந்துள்ளது.
முழுமையாக விசாரித்த பின்னரே முழு விவரம் வெளியே தெரியவரும். சிறுமி தற்போது நல்ல நிலையில் உள்ளார். முழுமையான விசாரணை முடிந்த பிறகு அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். சட்டவிரோதமாக கரு முட்டை விற்பனை நடந்து இருந்தால் மருத்துவமனை உரிமம் ரத்து செய்யப்படும். டாக்டர்கள் உடந்தையாக இருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காரை நிறுத்தி சோதனை செய்த போது காரில் 150 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
- கஞ்சா பொட்டலங்களை போலிசார் பறிமுதல் செய்தனர்
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையிலான போலீசார் வில்லரசம்பட்டி ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது காரில் 150 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து காரில் வந்தவர்களிடம் விசாரித்த போது அதே பகுதியைச் சேர்ந்த குமார்(20), நவீன் (20) என தெரியவந்தது.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ஒருவர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார்.
அவரை பிடித்து விசாரித்தபோது அவர் குப்பாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தயை சென்னியப்பன் (58) என்பதும் 200 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததை ஒப்புக்கொண்டார்.
அந்தியூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்த சென்னியப்பனை கைதுசெய்தனர். அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- 6 நாட்களுக்குப் பிறகு ஈரோடு மாவட்டத்தில் நேற்று 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
- ஈரோடு மாவட்டத்தில் இரண்டு பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக 3-வது அலை ஏற்பட்டு தினசரி பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியது.
கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பின் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்தது. இருப்பினும், அவ்வப்போது தொற்று ஏற்பட்டு, குணமடைந்தனர். கடந்த ஏப்ரல் 27 ல் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவரும் மே 4-ல் குணமடைந்தார்.
அதன்பின் தொற்று இல்லாத மாவட்டமானது ஈரோடு.இதன்பிறகு கடந்த, 17-ந் தேதி முதல் அடுத்தடுத்த நாளில் தொற்று ஏற்பட்டு 5 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்கள் அடுத்தடுத்த நாட்களில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் இருந்த ஒருவரும் கடந்த மே மாதம் 30-ந் தேதியுடன் குணமடைந்து வீடு திரும்பினார்.
இதையடுத்து மீண்டும் ஈரோடு கொரோனா இல்லாத மாவட்டமாக இருந்து வந்தது. கிட்டத்தட்ட 6 நாட்களுக்குப் பிறகு ஈரோடு மாவட்டத்தில் நேற்று 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தற்போது வரை கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 678 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 942 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் இரண்டு பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- ஈரோடு பஸ் நிலையம், வீரப்பன்சத்திரம் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.
- வரட்டுப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் அக்னி நட்சத்திர வெயில் முடிந்த பிறகும் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வந்தது. குறிப்பாக பகல் நேரங்களில் அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியது.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் மாலை 5 மணிக்கு பிறகு திடீரென வானம் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. பின்னர் சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் இடியுடன் கூடிய கனமழையாக மாறி வெளுத்து வாங்கியது. குறிப்பாக மின்னல் பயங்கரமாக மின்னியது. ஈரோடு பஸ் நிலையம், வீரப்பன்சத்திரம் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் வழக்கம்போல் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. இதன் காரணமாக பொதுமக்கள் வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். தொடர்ந்து இரவு வரை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதேப்போல் மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மொடக்குறிச்சி பகுதியில் 64 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதனால் ஈரோடு- கரூர் மெயின் ரோட்டில் சாவடிப்பாளையம் அடுத்த ஆரியங்காட்டு ரெயில்வே நுழைவு பாலம் பகுதியில் 2 அடி உயர அளவிற்கு மழை நீர் சென்றது. அப்போது ஈரோட்டில் இருந்து வந்த தனியார் பஸ் ஒன்று நுழைவு பாலத்தில் மழை நீர் வழியாக வந்தபோது பழுதாகி நின்று விட்டது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கரூரில் இருந்து வந்த வாகனங்கள் மொடக்குறிச்சி வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.
ஈரோட்டில் இருந்து வந்த வாகனங்கள் சாவடி பாளையத்திலிருந்து ஊத்துக்குளி வழியாக திருப்பி விடப்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேரம் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். போக்குவரத்தை மொடக்குறிச்சி போலீசார் சீர்படுத்தினர். இதேபோல் ஈரோடு -முத்தூர் ரோட்டில் தொட்டிபாளையம் பகுதியில் வேப்பமரம் ஒன்று விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் மற்றும் பொது பணித்துறை ஊழியர்கள் மரத்தை வெட்டி போக்குவரத்தை சரி செய்தனர்.
கீழ்பவானி வாய்க்காலில் சின்னச்சாமி புரம்என்ற இடத்தில் வாய்க்காலின் பாதையின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வெப்பிலி குலவிளக்கு வழியாக மாற்றுப்பாதையில் செல்கின்றனர். பொதுப்பணித்துறை ஊழியர்கள் மரத்தை வெட்டி போக்குவரத்தை சரிப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதேப்போல் கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதே போல் கவுந்தப்பாடி, சென்னிமலை, பவானி, அம்மாபேட்டை, வரட்டுப்பள்ளம், பெருந்துறை, கோபி போன்ற பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. நேற்று பெய்த திடீர் மழையால் வெப்பமான சூழ்நிலை மாறி குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதேபோல் அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் அணை பகுதியிலும் பரவலாக மழை பெய்துள்ளது.இந்த அணையின் முழு கொள்ளளவு 33.5 அடியாகும்.
கடந்த வாரம் பர்கூர் மலை மற்றும் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் பெய்த மழையினால் முழு கொள்ளளவை எட்டி உயிர் நீர் வெளியேறி வந்தது. மீண்டும் மழைப்பொழிவு இல்லாததால் முழு கொள்ளளவான 33.5 அடியாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு பர்கூர் மலை சுற்றுப் பகுதி மற்றும் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 14 மில்லிமீட்டர் மழை பொழிந்து உள்ளது. இதனால் வரட்டுப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது 43 கன அடி உபரி நீர் வெளியேறிவருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-
மொடக்குறிச்சி - 64, கவுந்தப்பாடி - 27, சென்னிமலை - 25, பவானி - 24, ஈரோடு- 19, அம்மாபேட்டை - 15, வரட்டுப்பள்ளம் - 14, பெருந்துறை - 11, கோபி - 7.4, நம்பியூர் - 7, தாளவாடி - 4, கொடிவேரி - 4, சத்தியமங்கலம் - 2, பவானிசாகர் - 1.2.
- ஈரோடு மாவட்டம் உள்பட தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- அரசின் விதிமுறைகளின் படி வேக கட்டுப்பாட்டு கருவி மற்றும் அவசரகால வழி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் இயக்கப்படுகிறதா? என நேரில் ஆய்வு செய்தார்.
- தகுதியான வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ்கள் வழங்கினார்.
கோபி:
தமிழகம் முழுவதும் இயங்கி வரும் பள்ளி வாகனங்களின் தரம் மற்றும் பராமரிப்பு குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆண்டு தோறும் ஆய்வு மேற்கொண்டு சான்றிதழ் வழங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் வரும் 13-ந் தேதி தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி ஈரோடு மாவட்டம் உள்பட தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து எல்லைக்குட்பட்ட சத்தியமங்கலம், பவானி மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான வாகன சோதனை ஒத்தக்குதிரை அருகே தனியார் கல்லூரி யில் நடைபெற்றது.
கோபி வட்டார போக்குவரத்து அலுவலர் முனுசாமி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. பிரியதர்ஷினி கலந்து கொண்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பள்ளி வாகனங்கள் அரசின் விதிமுறைகளின் படி வேக கட்டுப்பாட்டு கருவி மற்றும் அவசரகால வழி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் இயக்கப்படுகிறதா? என நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து தகுதியான வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்த ஆய்வில் கோபிசெட்டிபாளையம், சத்தி மற்றும் பவானி பகுதிகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டன.
- கவுந்தப்பாடி ரோடு பகுதியில் கார் ஒன்று பெண்ணின் மீது மோதிவிட்டு தலைகீழாக கவிழ்ந்து கிடப்பதாக தெரிவித்தனர்.
- கார் மோதி விபத்தில் அடிபட்டு படுகாயம் அடைந்த பெண் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சி க்கோயில் மூலக்கடை அரியான் காடு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருக்கும் இவரது கூட்டாளிகள் 4 பேருக்கும் அதே பகுதியில் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் இவர்கள் கரும்பு பயிர் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை தோட்டத்தின் மேல் செல்லும் மின்கம்பி காற்றினால் உராய்வு ஏற்பட்டு தீப்பொறிகள் கரும்பு பயிரின் மீது விழுந்துள்ளது.
இதனால் கரும்பு தோட்டத்தில் ஒரு பகுதியில் தீ பற்றியது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த ஒரு சிலர் ஓடிவந்து நிலைய அலுவலர் நவீந்திரனிடம் கவுந்தப்பாடி ரோடு பகுதியில் கார் ஒன்று பெண்ணின் மீது மோதிவிட்டு தலைகீழாக கவிழ்ந்து கிடப்பதாக தெரிவித்தனர். மேலும் அவர்களை உயிரை காப்பாற்றும் படி கேட்டுக்கொண்டனர்.
உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது கவிழ்ந்து கிடந்த காரிலிருந்து அனைவரையும் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கார் மோதி விபத்தில் அடிபட்டு படுகாயம் அடைந்த எடப்பாடி, சித்தூர் பகுதியை சேர்ந்த காவிரி என்பவரது மனைவி சின்னம்மா (வயது 57) என்பவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு தீயணைப்பு வாகனத்தி லேயே பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சின்னம்மா சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த காஞ்சிக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வரத்து அதிகரித்ததால் ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்தது.
- வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் கிருஷ்ணகிரி, ஆந்திரா, கர்நாடக மாநிலம் கோலார் போன்ற பகுதியில் இருந்து 15 டன் தக்காளி லோடு வந்தது. இதன் காரணமாக விலையும் கிடுகிடுவென சரிந்துள்ளது
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு தாளவாடி, கிருஷ்ணகிரி, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து தக்காளி அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. தினமும் 7 டன் வரை தக்காளி லோடு வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு வரத்து குறைய தொடங்கியது.
இதன் எதிரொலியாக ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டிற்கு 3 ஆயிரம் டன் வரை மட்டுமே தக்காளிகள் விற்பனைக்கு வந்தது. இதன் எதிரொலியாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது.
கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனையானது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து தக்காளி விளைச்சல் ஓரளவு அதிகரித்து வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
இதனால் கடந்த வாரம் வ.உ.சி. மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையானது.
இந்நிலையில் இன்று வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் கிருஷ்ணகிரி, ஆந்திரா, கர்நாடக மாநிலம் கோலார் போன்ற பகுதியில் இருந்து 15 டன் தக்காளி லோடு வந்துள்ளது. இதன் காரணமாக விலையும் கிடுகிடுவென சரிந்துள்ளது.
இன்று ஒரு கிலோ தக்காளி ரூ. 40-க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் வ.உ.சி மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் தக்காளி விலை சரிவின் காரணமாக 3 கிலோ, 5 கிலோ என அள்ளி சென்றனர்.
இதனால் இன்று தக்காளி வியாபாரம் விறுவிறுப்பாக நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.






