என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கும்கி யானையை காண தாளவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குழந்தைகளுடன் அங்கு குவிந்தனர்.
    • வனத்துறையினர் யாரையும் அருகில் செல்ல அனுமதிக்கவில்லை. சுமார் 300 மீட்டர்தூரத்தில் இருந்து யானையை பார்த்து புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்தும் பொதுமக்கள் மகிழ்ந்தனர்.

    தாளவாடி:

    தாளவாடி வனச்சர–கத்துக்கு உட்பட்ட இரியபுரம் ,தொட்டகாஜனூர், தர்மாபுரம் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் என்ற ஒற்றை யானை விவசாய பயிர்களை சேதபடுத்தியும் பொதுமக்களையும் தாக்கி வந்தது.

    அந்த யானையை கட்டுப்படுத்த பொள்ளாச்சி ஆணைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சின்னதம்பி மற்றும் ராஜவர்தன் என்ற 2 கும்கி யானைகள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தாளவாடி அடுத்த இரிபுரம் பகுதிக்கு கொண்டுவரபட்டது.

    இந்நிலையில் நேற்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் கும்கி யானையை காண தாளவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குழந்தைகளுடன் அங்கு குவிந்தனர்.

    வனத்துறையினர் யாரையும் அருகில் செல்ல அனுமதிக்கவில்லை. சுமார் 300 மீட்டர்தூரத்தில் இருந்து யானையை பார்த்து புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்தும் பொதுமக்கள் மகிழ்ந்தனர். காலை முதல் மாலை வரை பொதுமக்கள் ஆவலுடன் வந்து யானையை பார்த்து சென்றனர்.

    • பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து உள்ளது.
    • இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 87.70 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணை ஈரோடு,கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான தெங்குமரஹடா, அல்லிமாயார், ஊட்டி, குந்தா, பில்லூர் அணைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்றும் பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து உள்ளது.

    இதன் காரணமாக கடந்த 4 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 5 அடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 87.70 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,736 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 900 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1005 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று மாலைக்குள் அணையின் நீர்மட்டம் 88 அடியை கடந்து விடும்.

    • பவானி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலியானார்.
    • இது குறித்து பவானி ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    பவானி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூர் மேட்டு வளவு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் நவீன் (19). 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு லேத் பட்டறையில் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் பவானியில் இருந்து மேட்டூர் ரோட்டில் நேற்று மாலை நவீன் அவருடைய நண்பர் அருண் என்பவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த நவீனை அக்கம் பககத்தினர் மீட்டு ஆம்புலன்சு மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதில் அருண் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் பவானி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து பவானி ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • ஈரோடு மாவட்டம் சிவகிரியில் கீழ்பவானி ஆயக்கட்டு பாசன உரிமை பாதுகாப்பு மாநாடு நடை பெற்றது.
    • இம் மாநாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஈரோடு மாவட்ட செயலாளர் சுப்பு, கீழ்பவானி ஆயக்கட்டு பாசனத்தார்கள் சங்க பொருளாளர் சண்முகராஜ் உள்பட 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரியில் கீழ்பவானி ஆயக்கட்டு பாசன உரிமை பாதுகாப்பு மாநாடு நடை பெற்றது.

    இம்மாநாட்டிற்கு கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் காசியண்ணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆறுமுகம் வரவேற்று பேசினார். துணைத் தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார்.

    மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் எல்.பி.பி. கால்வாய் சீரமைத்து அனைத்து ஆயக்கட்டு பாசனத்துக்கு சமச்சீரான தண்ணீர் வழங்க வேண்டும்.

    நகரமயமாதல் காரண மாக பாசனம் பெறாத சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களை ஆயக்கட்டில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும்.

    34 கசிவு நீர் திட்டத்தின் கீழ் உள்ள 17 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கீழ்பவானி ஆயக்கட்டில் இணைக்க வேண்டும்.

    கீழ்பவானி ஆயக்கட்டில் இல்லாத முறைகேடான நீரேற்று பாசனங்களை உடனே தடை செய்ய வேண்டும்.

    தாராபுரம் கட்என்ற பெயரில் நீக்கம் செய்துள்ள 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கீழ்பவானி ஆயகட்டு பாசனத்தில் இணைக்க வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கீழ்பவானி ஆயகட்டு பாசனதாரர்கள் சங்க தலைவர்பெரியசாமி, செயலாளர் பொன்னையன் ஆகியோர் மாநாட்டின் கொள்கைகளை விளக்கிப் பேசினார்கள்.

    இம் மாநாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஈரோடு மாவட்ட செயலாளர் சுப்பு, கீழ்பவானி ஆயக்கட்டு பாசனத்தார்கள் சங்க பொருளாளர் சண்முகராஜ் உள்பட 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் எல்.5 பாசன செயலாளர் செங்கோட்டு வேலுமணி நன்றி கூறினார்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியானார்.
    • இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் அங்கம்மாள் (வயது 68). இவர் ஈரோடு சத்தியமங்கலம் ரோடு கணபதிபாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக கிரே நகர் பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் மோட்டார் சைக்கிளில் வந்தார். மோட்டார் சைக்கிள் பின் பகுதியில் ரோகினி (25) என்பவர் அமர்ந்திருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத வித மாக அங்கம்மாள் மீது மோதியது. இதில் அங்க ம்மாள் மற்றும் ரோகினி ஆகியோர் படுகாயம் அடைந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழி யிலேயே அங்கம்மாள் பரிதாபமாக இறந்தார். ரோகினி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • முகாமில் 84 ஆயிரம் பேர் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4-ம் அலையை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நேற்று 31-வது மெகா தடுப்பு முகாம் நடந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை நடந்து முடிந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம் பல லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இன்னமும் ஈரோடு மாவட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள், பள்ளிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம் உள்பட 3,194 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

    இதில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதேபோல் 60 வயது கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. மாவட்டத்தில்1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தடுப்பூசி பணிக்காக மாவட்டம் முழுவதும் 4,260 பணியாளர்கள் ஈடுபட்டனர். 71 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டது. பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தினர்.

    நேற்று நடந்த முகாமில் 84 ஆயிரம் பேர் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • முதல் போட்டி நாளை ஓவல் மைதானத்தில் நடக்கிறது. 2-வது போட்டி 14-ந் தேதியும், 3-வது போட்டி 17-ந் தேதியும் நடக்கிறது.
    • 20 ஓவர் போட்டி தொடரை கைப்பற்றியதால் அந்த உத்வேகத்தை ஒரு நாள் போட்டியிலும் தொடர இந்திய அணி முயற்சிக்கும்.

    ஓவல்:

    ரோகித்சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

    முதல் ஆட்டத்தில் 50 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 49 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வென்றது. நாட்டிங்காமில் நேற்றுநடந்த 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அடுத்து இந்தியா-இங்கிலாந்து அணிகள் 3 ஆட்டம் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகின்றன.

    முதல் போட்டி நாளை ஓவல் மைதானத்தில் நடக்கிறது. 2-வது போட்டி 14-ந் தேதியும், 3-வது போட்டி 17-ந் தேதியும் நடக்கிறது.

    20 ஓவர் போட்டி தொடரை கைப்பற்றியதால் அந்த உத்வேகத்தை ஒரு நாள் போட்டியிலும் தொடர இந்திய அணி முயற்சிக்கும்.

    இந்திய அணியில் ஷிகர் தவான், கோலி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரிஷப்பண்ட், ஹர்த்திக் பாண்ட்யா, முகமது சமி, ஜடேஜா, சாகல், பிரசித் கிருஷ்ணா உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ஜோரூட், பேர்ஸ்டோவ், மொயின் அலி, பென்ஸ்டோக்ஸ், ஜேசன்ராய், டேவிட் வில்லி ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    20 ஓவர் போட்டி தொடரை இழந்துள்ளதால் ஒருநாள் தொடரை கைப்பற்ற இங்கிலாந்து அணி முனைப்பு காட்டும்.

    இரு அணிகளும் சமபலம் வாய்ந்துள்ளது என்பதால் இத்தொடர் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இரு அணி வீரர்கள் வருமாறு:-

    இந்தியா: ரோகித்சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், கோலி, இஷான் கிஷன், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், ஜடேஜா, சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, அக்சர் படேல், சாகல், முகமது சமி, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்.

    இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜேசன் ராய், ஜோரூட், பேர்ஸ்டோவ், லிவிங்ஸ்டன், பிலிப் சால்ட், பென்ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, மொய்ன் அலி, ஹாரி புருக், சாம் கர்ரன், கிரேக் ஓவர்டன், பிரைடன் கார்சே, பார்கின்சன், டாப்லே.

    • ரயான் துணி தயாரித்த விசைத்தறியாளர்களுக்கு ஒரு மீட்டருக்கு ரூ.3 வரை நஷ்டம் ஏற்பட்டது.
    • ஈரோடு மாவட்டத்தில் 8 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்குப் பிறகு மீண்டும் விசைத்தறிகள் செயல்பட தொடங்கியன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம், அசோகபுரம், மாணிக்கம் பாளையம், லக்காபுரம், சித்தோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் என மொத்தம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.

    இந்த விசைத்தறிகளில் காட்டன் துணி, ரயான் துணி உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் மட்டும் ரயான் துணி உற்பத்தி நடந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி நடந்து வந்தது.

    இந்நிலையில் ரயான் துணிகளின் விலை குறைந்ததால் மார்க்கெட்டில் ரயான் துணி உற்பத்தி செய்த விலையை விட குறைவான விலைக்கு விற்பனையானது. இதனால் ரயான் துணி தயாரித்த விசைத்தறியாளர்களுக்கு ஒரு மீட்டருக்கு ரூ.3 வரை நஷ்டம் ஏற்பட்டது.

    தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்ததால் இதனை சமாளிக்கும் வகையில் கடந்த 3-ந் தேதி முதல் ரயான் துணி உற்பத்தியை நிறுத்தி விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஈரோடு மாவட்டத்தில் 30 ஆயிரம் விசைத்தறிகள் மூடப்பட்டன.

    இதனால் நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நாளொன்று ரூ.6 கோடி வர்த்தகம் முடங்கியது. மேலும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்தனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து 8 நாட்களாக நடந்தது. இதனால் ரூ.48 கோடி வர்த்தகம் முடங்கியது. 1 கோடியே 92 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கைத்தறி துறை அமைச்சரை சந்தித்தனர். அப்போது அமைச்சர் முதற்கட்டமாக வேட்டி தயாரிப்பு அனுமதி வழங்குவதாக உறுதி அளித்தார். இதனை ஏற்று விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டனர்.

    இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மாநில அமைப்பு செயலாளர் கந்தவேல் கூறியதாவது:-

    ரயான் துணிக்கு மீட்டருக்கு 3 ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது. இதனால் உற்பத்தி நிறுத்தப்பட்டது. உற்பத்தி நிறுத்தப்பட்ட காலத்திலும் மீட்டருக்கு 25 காசுகள் மட்டுமே உயர்ந்தது. இந்நிலையில் கடந்த 7-ந் தேதி தமிழ்நாடு விசைத்தறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில நிர்வாகிகள் கைத்தறித்துறை அமைச்சரை சந்தித்து மனு அளித்தோம்.

    அப்போது அரசின் இலவச வேட்டி, சேலை தயாரிப்பில் முதற்கட்டமாக வேட்டி தயாரிப்பு அனுமதி வழங்குவதாக அமைச்சர் உறுதி அளித்தார். இதனை ஏற்று விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 8 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் விசைத்தறிகள் செயல்பட தொடங்கியன.

    • தினமும் 20 டன்கள் மீன்கள் வரத்தாகி வந்த நிலையில் நேற்று 30 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
    • வரத்து அதிகரித்ததன் காரணமாக மீன்கள் விலையும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் குறைந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் சத்தியமங்கலம், தாளவாடி, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், கர்நாடக மாநிலம் கோலார் மற்றும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களும், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர்களும் அதிக அளவில் இங்கு வந்து காய்கறிகளை வாங்கிச்செல்கின்றனர். இந்த நிலையில் காய்கறிகள் வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளது. இதன் எதிரொலியாக காய்கறிகள் விலை குறைய தொடங்கி உள்ளது.

    ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் நேற்று விற்பனையான காய்கறிகள் விலை கிலோவில் வருமாறு:-

    கத்தரிக்காய்-ரூ.45, வெண்டைக்காய்-ரூ.20, பீர்க்கங்காய்-ரூ.35, முள்ளங்கி-ரூ.30, பாகற்காய்-ரூ.40, முருங்கைக்காய்-ரூ.35, சவ்சவ்-ரூ.35, மிளகாய்-ரூ.50, தக்காளி-ரூ.10, உருளைக்கிழங்கு-ரூ.35, பெரிய வெங்காயம் ரூ.20, சின்ன வெங்காயம்-ரூ.20, புடலங்காய்-ரூ.40, இஞ்சி-ரூ.60, அவரைக்காய்-ரூ.60, கேரட்-ரூ.55, பீன்ஸ்-ரூ.70, பீட்ரூட்-ரூ.55, முட்டைகோஸ்-ரூ.30. சுரைக்காய் ஒன்று ரூ.15-க்கும், காலிபிளவர் ஒன்று ரூ.25-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இதேபோல் ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று வழக்கத்தை விட அதிகமான மீன்கள் விற்பனைக்கு வந்தன. தினமும் 20 டன்கள் மீன்கள் வரத்தாகி வந்த நிலையில் நேற்று 30 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வரத்து அதிகரித்ததன் காரணமாக மீன்கள் விலையும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் குறைந்துள்ளது. இதனால் மீன் வியாபாரம் நேற்று விறுவிறுப்பாக நடந்தது.

    ஈரோட்டில் நேற்று விற்கப்பட்ட மீன்களின் விலை கிலோவில் வருமாறு:-

    வஞ்சரம்-ரூ.800, சங்கரா-ரூ.400, அயிலை-ரூ.270, விளா-ரூ.450, மத்தி-ரூ.200, மஞ்சள் பாறை-ரூ.450, கருப்பு வவ்வால்-ரூ.700, மடிலா-ரூ.500, நண்டு-ரூ.360, இறால்-ரூ.600, கிளி மீன்-ரூ.500, முரல்-ரூ.300, கடல் கொடுவா-ரூ.500, நெத்திலி-ரூ.250.

    • நேற்று காலை முதல் வனத்துறை ஊழியர்கள் வனப்பகுதிகுள் சென்று கருப்பன் என்ற ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தை காண்காணித்தனர்.
    • அங்கு நின்றிருந்த கருப்பன் என்ற ஒற்றை யானையை கும்கி யானை மூலம் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அடர்ந்த வனப்பகுதியில் விரட்டி விட்டனர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் மான், சிறுத்தை, புலி, யானை போன்ற ஏராளமான வ னவிலங்குகள் வசித்து வருகின்றன.

    வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி விவசாய நிலத்தை புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.

    தாளவாடி வனச்சரகத்தில் உள்ள இரிபுரம், திகனாரை, மல்குத்திப்புரம், தர்மா புரம் பகுதியில் கடந்த வாரங்களாக நாட்களாக ஒற்றை யானை தொடர்ந்து விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    அதை விரட்ட செல்லும் வன ஊழியர்களையும் அந்த ஒற்றை யானையை தாக்கியது. கடந்த 2 மாதத்தில் திகினாரையில் ஒரு விவசாயி, தர்மபுபுரம் பகுதியில் ஒரு விவசாயியை ஒற்றை யானை தாக்கிக் கொன்றது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்த ஒற்றை யானையை பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து விவசாய பயிர்களையும் மனிதர்க ளையும் சேதப்படுத்தி வரும் யானையை கட்டுபடுத்த பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சின்னதம்பி மற்றும் ராஜவர்தன் ஆகிய 2 கும்கி யானைகள் நேற்று முன்தினம் தாளவாடி கொண்டு வரபட்டது.

    நேற்று காலை முதல் வனத்துறை ஊழியர்கள் வனப்பகுதிகுள் சென்று கருப்பன் என்ற ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தை காண்காணித்தனர். அதில் சுமார் 2 கிலோ மீட்டார் தூரத்தில் கருப்பன் காட்டு யானை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மதியம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை துறை மருத்துவர் சதாசிவம், ஈரோடு வனப்பாதுகாப்பு அலுவலர் பழனிச்சாமி மற்றும் தாளவாடி வனச்சரக சதீஷ் மற்றும் வனத்துறை ஊழியர்கள் கருப்பன் என்ற ஒற்றைக் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட 2 கும்கி யானைகளுடன் வனப்பகுதிக்குள் சென்றனர்.

    அங்கு நின்றிருந்த கருப்பன் என்ற ஒற்றை யானையை கும்கி யானை மூலம் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அடர்ந்த வனப்பகுதியில் விரட்டி விட்டனர்.

    மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று யானை நடமாடத்தை கண்காணித்து கும்கி யானைகள் மூலம் கருப்பன் என்ற ஒற்றை யானையை விரட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • திருடப்பட்ட லாரி கோபி செட்டிபாளையத்தில் இருப்பதாக லாரி உரிமையாளர் லட்சுமி தேவியின் கணவர் ராஜேந்திரனுக்கு தகவல் கிடைத்தது.
    • லாரியை திருடிய 3 பேரும் லாரியை எங்கு மறைத்து வைப்பது என்று தெரியாமல் ஆங்காங்கே சுற்றி வந்துள்ளனர்.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகாவிற்கு உட்பட்ட எல்லப்பாளையத்தை சேர்ந்தவர் லட்சுமிதேவி (38). இவர் 2 லாரிகளை சொந்தமாக வைத்துள்ளார்.

    இதில் ஒரு லாரியில் பழுது ஏற்பட்டதால் அதை சரி செய்வதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு பவானி அருகே உள்ள லட்சுமி நகரில் உள்ள ராஜா என்பவருக்கு சொந்தமான ஒர்க் ஷாப்பில் லாரியை பழுது பார்க்க கொடுத்துள்ளார். லாரி ஒர்க்ஷாப் முன் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில் கடந்த 7-ந் தேதி ராஜா ஒர்க் ஷாப்பிற்குள் புகுந்த 3 மர்ம நபர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லட்சுமி தேவியின் லாரியை திருடி சென்றனர். இதுகுறித்து ராஜா சித்தோடு போலீசில் புகார் அளித்திருந்தார்.

    இந்நிலையில் திருடப்பட்ட லாரி கோபி செட்டிபாளையத்தில் இருப்பதாக லாரி உரிமையாளர் லட்சுமி தேவியின் கணவர் ராஜேந்திரனுக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து ராஜேந்திரன் ஒர்க ஷாப் உரிமையாளர் ராஜா உள்ளிட்டோர் லாரியை தேடி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது லாரி கவுந்தப்பாடியில் இருந்து பவானி சாலையில் சென்று கொண்டிருந்தது தெரிய வந்தது. லாரியை மடக்கி பிடிக்க ராஜேந்திரன் அவருடன் வந்தவர்கள் காரில் அந்த லாரியை விரட்டி சென்றனர்.

    இதற்கிடையே திருடப்பட்ட லாரி பவானி சாலையில் வருவதை அறிந்த உப்புகாரபள்ளம் என்ற இடத்தில் அதே பகுதியை சேர்ந்த அமுதசாகரன் என்பவர் லாரியை மடக்கி பிடிக்க முயன்றார். ஆனால் லாரியை கடத்தி சென்ற மர்ம நபர்கள் லாரியை நிறுத்தாமல் அமுதசாகரன் மீது மோதி உள்ளனர். இதில் அமுதசாகரன் 2 கால்களும் நசுங்கியது.

    இதனால் ஆத்திரமடைந்த உப்புகாரபாளையம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் லாரியை தங்களது வாகனங்களில் விரட்டி சென்றனர். கிராம மக்கள் விரட்டுவதை அறிந்த லாரியை திருடிய நபர்கள் லாரியை இன்னும் வேகமாக ஓட்டி சென்றனர். சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்ற கிராம மக்கள் பூலப்பாளையம் என்ற இடத்தில் லாரியை மடக்கி பிடித்தனர்.

    இதையடுத்து லாரியில் இருந்தவர்களை பொதுமக்கள் அடித்து உதைத்தனர். சினிமா போல் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இது குறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பொதுமக்களிடமிருந்து கொள்ளையர்களை மீட்டு விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் 3 பேரும் பவானி அருகே உள்ள காளிங்கராயன்பாளையத்தை சேர்ந்த தீபக்குமார் (32), நல்லசிவம் (36), லோகு (32) என தெரிய வந்தது.

    இதில் தீபக் குமார் மற்றும் லோகு ஆகியோர் லாரி டிரைவர்கள் என்பதும், லாரியை கடத்துவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ராஜாவின் ஒர்க் ஷாப்பிற்கு அவ்வப்போது வந்து செல்பவர்கள் என்பதும், நல்லசிவம் லாரி ஸ்பிரிங் கட் வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. லாரியை திருடிய 3 பேரும் லாரியை எங்கு மறைத்து வைப்பது என்று தெரியாமல் ஆங்காங்கே சுற்றி வந்துள்ளனர்.

    அப்படி கோபிசெட்டிபாளையம் பகுதியில் லாரியுடன் சுற்றியபோது லாரி உரிமையாளர் கண்ணில் படவே அவரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது விபத்து ஏற்பட்டதும் அதன் பிறகு பொது மக்களிடம் பிடிபட்டதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கோபிசெட்டிபாளையம் கடைவீதி சாரதா மாரியம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேக விழா நடைபெற்றது.

    கோபிசெட்டிபாளையம் கடைவீதி சாரதா மாரியம்மன் கோவிலில் 26-ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா, 1008 சங்காபிஷேக விழா மற்றும் கும்பாபிஷேக 12-வது ஆண்டு விழா நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு கணபதி பூஜை 10 மணிக்கு லட்சார்சணை தொடங்கியது. பகல் 1 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

    விழாவையொட்டி இன்று 10 தேதி காலை 8 மணிக்கு 1008 சங்குகள் பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 11 மணியளவில் 1008 சங்க அபிஷேகம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு லட்ச்சார்சனை நிறைவு பெற்றது.

    இதையொட்டி மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் கோபி,கரட்டூர், மேட்டுவளவு, வெள்ளாளபாளையம், மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

    ×