என் மலர்tooltip icon

    ஈரோடு

    • டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவ சிலை மற்றும் நூலகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • இந்த பணியை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.நல்லசிவம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவ சிலை மற்றும் படிப்பகம் (நூலகம்) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணியை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.நல்லசிவம் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது டி.என்.பாளையம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் எம்.சிவபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து அமைச்சர்முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

    கள்ளிப்பட்டியில் வரும் 25-ந் தேதி மாலை கருணாநிதியின் 8 அடி உயர வெண்கல சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்து திறந்து வைக்க உள்ளார்.அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    சிலையும் தயாராகி விட்ட நிலையில் இந்த சிலை அமைப்பதற்காக தனியாரிடம் விலைக்கு வாங்கப்பட்ட நிலத்தில் 900 சதுர அடி பரப்பளவில் நூலகம் அமைக்கப்படுகிறது.

    இந்த நூலகத்தில் மாணவ-மாணவிகளின் அரசு போட்டி தேர்விற்கு தேவையான அனைத்து புத்தகங்களும் வைக்கப்படும். ஒரே நேரத்தில் 20 பேர் அமர்ந்து படிப்பதற்கான வசதிகள் செய்யப்படும்.

    அதே போன்று சட்டத்திற்கு உட்பட்டு அனுமதி பெற்று தான் சிலை அமைக்கப்படுகிறது.அதே போன்று நூலகமும் உரிய அனுமதியோடும், வழிகாட்டு நெறிமுறைப்படி தான் அமைக்கப்பட்டு வருகிறது.

    மேலும் முதல்-அமைச்சர் விழா முடிந்த பின் அத்தாணி, அந்தியூர், பவானி வழியாக ஈரோடு செல்வதாகவும், அதைத்தொடர்ந்து 26-ந் தேதி காலை ஈரோட்டில் 70 ஆயிரம் பேருக்கு பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், புதிய வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைப்பதோடு முடிவுற்ற பணிகளையும் திறந்து வைக்க உளளார்.

    நீர் நிலை ஆக்கிரமிப்புகளில் குடியிருப்பவர்களை வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் விற்பனையாகாமல் உள்ள வீடுகளில் குடியமர்த்துவது குறித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்க முடியும்.

    அதே போன்று நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக ஏதாவது மாற்று இடத்தை ஏற்பாடு செய்து தர முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களில் மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுத்து இருந்தால் இதற்குள் அனைத்து நெல் கொள்முதல் மையங்களுக்கும் மேற்கூரை அமைக்கப்பட்டு இருக்கும்.

    முதல்-அமைச்சர் ஒவ்வொரு மாதமும் துறைவாரியாக ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார். அதனடிப்படையில் விரைவில் விவசாயிகள் நலனுக்காக திட்டம் செயல்படுத்தப்படும்.

    நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் விற்பனையாகாமல் உள்ள வீடுகளின் மதிப்பு ரூ.12 லட்சம் வரை ஆகிறது. இந்த வீட்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் பயனாளிகள் செலுத்தினால் மீதமுள்ள தொகையை அரசு செலுத்துகிறது.

    வேறு ஏதாவது திட்டத்தை இதனுடன் செயல்படுத்த முடியுமா என்பதை ஆலோசனை செய்து தான் கூற முடியும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் தி.மு.க மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
    • இது மட்டுமின்றி போலீஸ் சார்பில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    ஈரோடு, ஆக. 10-

    ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் கஞ்சா விற்பனையை முழுமையாக ஒழிக்கும் பொருட்டு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி அருகே செயல்பட்டு வரும் கடைகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே வேம்பத்தி சிந்தகவுண்டம்பாளையம் ராம்தாஸ் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (45). இவரது மனைவி பழனியம்மாள்.

    தம்பதியினர் 2 பேரும் சம்பவத்தன்று பவானி புதிய பஸ் நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர். இது குறித்து பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாபு ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பவயிடத்திற்கு வந்து விசாரித்தபோது தம்பதியினர் வைத்திருந்த பையில் 1 கிலோ 400 கிராம் கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.

    உடனடியாக போலீசார் கஞ்சாவை கைப்பற்றி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் கணவன்-மனைவி இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதேப்போல் நேற்று ஒரே நாளில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் சூரம்பட்டி, பெருந்துறை பகுதிகளில் கஞ்சாவை பதுக்கி விற்ற 1 பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இது மட்டுமின்றி போலீஸ் சார்பில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கஞ்சா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    • தபால் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து இன்று தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஊழியர்கள் பணிக்கு வராததால் அனைத்து தபால் நிலையங்களிலும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    ஈரோடு:

    தபால் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து இன்று ஒரு நாள் அகில இந்திய அளவில் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி இன்று தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் 3 தலைமை தபால் நிலையங்கள், 65 துணை தபால் நிலையங்கள், 252 கிளை தபால் நிலையங்களில் 800-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்களில் இன்று 700 -க்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்கள் பணிக்கு வராததால் அனைத்து தபால் நிலையங்களிலும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புற பகுதியில் இயங்கும் 252 தபால் நிலையங்கள் மூடப்பட்டதால் பணிகள் கடுமையாக பாதித்தன. குறிப்பாக தபால் பட்டுவாடா, பண வர்த்தனை முடங்கியது.

    இதுகுறித்து அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்க ஈரோடு கோட்டச் செயலாளர் வெள்ளியங்கிரி கூறியதாவது:-

    தபால் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கை கண்டித்து அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஏற்கனவே இந்த கோரிக்கையை வலியுறுத்தி தபால் ஊழியர்கள் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதன் தொடர்ச்சியாக இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் காரணமாக தபால் பட்டுவாடா, பண பரிவர்த்தனை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோடி கணக்கில் வர்த்தகம் முடங்கி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சம்பவத்தன்று துரைசாமி குடும்பத்தார் வீட்டில் சமைத்து கொண்டிருக்கும் போது திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் தீப்பிடித்து அருகில் இருந்த குடிசையில் தீப்பிடித்துக் கொண்டது.
    • இந்த தீ விபத்தில் 2 மோட்டார் சைக்கிள் மற்றும் வீட்டிலிருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரம் மாரநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.

    இவரது மகன் சதீஷ்குமார், துரைசாமியின் வீட்டின் அருகிலேயே குடிசை அமைத்து அவரும் அங்கேயே தங்கி விவசாயம் செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரது குடிசை வீடும் தென்னங்கீற்றால் மேயப்பட்டு, தகர சீட்டு போட்டு உள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று துரைசாமி குடும்பத்தார் வீட்டில் சமைத்து கொண்டிருக்கும் போது திடீரென கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் தீப்பிடித்து அருகில் இருந்த குடிசையில் தீப்பிடித்துக் கொண்டது.

    காற்று வேகத்தின் காரணமாக அருகில் இருந்த சதீஷ்குமார் வீட்டு குடிசைக்கும் தீ பரவியது. 2 குடிசைகளும் கொழுந்து விட்டு எரிய தொடங்கின.

    இதனையடுத்து தீ எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்தனர். எனினும் தீயை அணைக்க முடியாமல் பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 2 மோட்டார் சைக்கிள் மற்றும் வீட்டிலிருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.

    • நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் 6 மதகுகளில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • அணையின் முன்பு உள்ள தரைப்பாலத்தையும், சொக்கநாதபாளையம் கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள நொய்யல் ஆற்றின் தரைப்பாலத்தையும் மூழ்கி தண்ணீர் செல்கிறது.

    சென்னிமலை:

    மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நொய்யல் ஆற்றில் நேற்று முன்தினம் இரவு முதல் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் நேற்று காலை 6 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 1040 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையில் 16 அடி தண்ணீர் தேங்கி இருந்தது.

    அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று மாலை 4 மணி அளவில் நீர்மட்டம் 20 அடியாக உயர்ந்தது. அப்போது வினாடிக்கு 2,523 கன அடி நீர்வரத்து இருந்தது. ஒரே நாளில் 4 அடி அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.

    அணையில் தேங்கியுள்ள தண்ணீரில் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது. இதனால் அணை முழுவதும் ஆகாயத்தாமரையின் ஆக்கிரமிப்பில் உள்ளது. நேற்று மாலை அணையில் இருந்து வினாடிக்கு 2,023 கனஅடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

    அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் 6 மதகுகளில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் அணையின் முன்பு உள்ள தரைப்பாலத்தையும், சொக்கநாதபாளையம் கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள நொய்யல் ஆற்றின் தரைப்பாலத்தையும் மூழ்கி தண்ணீர் செல்கிறது.

    இதனால் தரைபாலத்தை பொதுமக்கள் யாரும் கடந்து செல்ல வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனால் அணையின் அருகில் உள்ள ஒரத்துப்பாளையம், கொடுமணல், தம்மரெட்டிபாளையம், செம்மங்குழிபாளையம், மறவபாளையம், சொக்கநாதபாளையம், மருதுறை, குருக்கள் பாளையம், நத்தக்காடையூர் உள்பட பல கிராம புறங்களுக்கு இடையே செல்வேர் ஆற்றை கடந்து செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • ஒலகடம் சந்தை பகுதியில் உட்கார்ந்திருந்தார். அப்போது விஷ பாம்பு ஒன்று கார்த்தியை கடித்தது.
    • இதுகுறித்து வெள்ளிதிருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    பவானி அடுத்த ஒலகடம் ராஜகுமாரனூரை சேர்ந்தவர் கார்த்தி (38). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி, கருத்து வேறுபாட்டின் காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார்.

    கார்த்தி அவரது தந்தை சண்முகத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் கார்த்தி கடந்த 8-ந் தேதி ஒலகடம் சந்தை பகுதியில் உட்கார்ந்திருந்தார். அப்போது விஷ பாம்பு ஒன்று கார்த்தியை கடித்தது.

    இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு கார்த்தி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வெள்ளிதிருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாரியம்மன் சப்பரத்தில் வைக்கப்பட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து நாகேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் புடைசூழ பெண்கள் பால்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
    • காலையில் தொடங்கிய பால் அபிஷேகம் மதியத்திற்கும் மேல் தொடர்ந்தது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே ஊஞ்சலூரில் மாரியம்மன் கோவில், செல்லா ண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 17-வது ஆண்டாக 1008 பால் குட அபிஷேகம் நடைபெற்றது.

    இதனையொட்டி லட்சார்ச்சனை தொடங்கி நடைபெற்றது. அலங்க ரிக்கப்பட்ட மாரியம்மன் சப்பரத்தில் வைக்கப்பட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து நாகேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் புடைசூழ பெண்கள் பால்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

    பின்னர் காவிரி கரையில் உள்ள நாகே ஸ்வரர் கோவிலில் வைத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்ப ட்டது. ஊஞ்சலூர் மற்றும் சுற்றுப்புரத்தில் உள்ள கொளத்து ப்பாளையம், கருக்கம்பாளையம், அமராவதி புதூர், சொட்டையூர், வள்ளியம்பாளையம், காசிபாளையம் ஆகிய கிராமங்களில் இருந்து பால்குடம் எடுத்து வந்தவர்கள் அனைவரும் நாகேஸ்வரர் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர்.

    அதனை தொடர்ந்து 10½ மணியளவில் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு சப்பரத்தில் அம்மன் முன்னே வர ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் குடங்களில் பால் எடுத்து தொடர்ந்து வந்தனர்.

    ஊர்வலம் ஊஞ்சலூரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தது. முதலில் மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் துவங்கி யது. ஊர்வலமாக வந்தவர்கள் மாரியம்மன் கோவிலுக்கு ஒரு பிரிவி னரும் மற்றொரு பிரிவினர் செல்லாண்டியம்மன் கோவிலுக்கும் சென்று பால் அபிஷேகம் செய்தனர். காலையில் தொடங்கிய பால் அபிஷேகம் மதியத்திற்கும் மேல் தொடர்ந்தது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது.

    • மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனவேதனை அடைந்த குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
    • தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் குமார் உடல் பிரேத பரிசோதனை முடிந்து இன்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு செங்கோடம்பாளையம் ராஜீவ்நகரை சேர்ந்தவர் குமார் (வயது 39). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இரவு கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

    அதன்பிறகு குமார் தனது அறைக்கு தூங்க சென்று விட்டார். காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்து அவரது குடும்பத்தினர் கதவை தட்டி உள்ளனர். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. இதனையடுத்து குடும்பத்தினர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனவேதனை அடைந்த குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் குமார் உடல் பிரேத பரிசோதனை முடிந்து இன்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    • மனவேதனை அடைந்த மாதேஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கடம்பூர் மொசல் மடுவு பகுதியை சேர்ந்தவர் மாதேஷ்(37). டிராக்டர் டிரைவா். இவரது மனைவி பூங்ககொடி. மாதேஷிற்கு மதுப்பழக்கம் உள்ளது.

    கடந்த சில நாட்களாக மாதேஷ் மது குடித்து விட்டு சரி வர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். சம்பவத்தன்று கணவன்-மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு பூங்கொடி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதனால் மனவேதனை அடைந்த மாதேஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் மாதேஷை மீட்டு கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு மாதேஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈங்கூரில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனி சாமிக்கு சென்னிமலை வடக்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் 250 பேர் வரவேற்பு வழங்கி இரு சக்கர வாகனத்தில் பெருந்துறை வரை அணி வகித்து வந்தனர்.
    • ஈரோடு மாவட்ட முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கையை ஏற்று அ.தி.மு.க. ஆட்சியில் பெருந்துறைக்கு கொடிவேரி, ஈரோட்டுக்கு ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.

    பெருந்துறை:

    முன்னாள் முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செய லாளருமான எடப்பாடி பழனிசாமி பெருந்துறைக்கு வந்தார். அவருக்கு பஸ் நிலையம் அருகே ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் முன்னாள் அமை ச்சர்கள் கே.ஏ. செங்கோட் டையன் எம்.எல்.ஏ., கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ., ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராம லிங்கம், எம்.எல்.ஏ.க்கள் ஜெயக்குமார், பண்ணாரி ஆகியோர் தலைமை வகித்தனர்.

    முன்னதாக ஈங்கூரில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனி சாமிக்கு சென்னிமலை வடக்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் 250 பேர் வரவேற்பு வழங்கி இரு சக்கர வாகனத்தில் பெருந்துறை வரை அணி வகித்து வந்தனர்.

    அப்போது அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செய லாளர் எடப்பாடி பழனி சாமி பேசியதாவது:-

    ஈரோடு மாவட்ட முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கையை ஏற்று அ.தி.மு.க. ஆட்சியில் பெருந்துறைக்கு கொடிவேரி, ஈரோட்டுக்கு ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.

    விவசாயிகளின் 50 ஆண்டு கோரிக்கையான அத்திக்கடவு, அவினாசி திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.1,652 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டது. அந்த திட்டம் தற்போது தி.மு.க. ஆட்சியில் ஆமை வேகத்தில் நடக்கிறது. இந்த திட்டம் 6 மாதம் முன்பே முடிந்திருக்க வேண்டும்.

    இந்த திட்டம் மூலம் 3 மாவட்டங்களில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் பவானிசாகர் உபரி நீரால் நிரப்பப்பட்டு விவசாயிகள் பயன் அடைந்திருப்பார்கள். திட்டம் நிறைவேறாததால் பவானிசாகர் அணையின் உபரி நீர் கடலில் கலக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில் பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ் நன்றி கூறினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு, பெருந்துறை யூனியன் சேர்மன் சாந்தி ஜெயராஜ், பெருந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ், பெருந்துறை மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயன் என்கிற ராமசாமி, பெருந்துறை, கருமாண்டி செல்லி பாளையம் பேரூர் செயலாளர்கள், ஊத்துக்குளி ஒன்றிய செயலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொங்கல் பண்டிகை அன்று ரேஷன் அட்டை தாரர்களுக்கு இலவச வேட்டி- சேலை வழங்கப்பட்டு வருகிறது.
    • ஒவ்வொரு வருடம் ஜூன் மாதம் இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான ஆர்டர் வந்துவிடும்.

    ஈரோடு:

    தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகை அன்று ரேஷன் அட்டை தாரர்களுக்கு இலவச வேட்டி- சேலை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தில் கைத்தறி மற்றும் துணி நூல்துறை 223 விசைத்தறி, தொடக்க கூட்டுறவு நெசவாளர் சங்கத்திற்கு உட்பட்ட 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் 1.80 கோடி வேட்டி-சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இதில் ஈரோடு மாவட்டத்தில் 43 சொசைட்டிகளில் உள்ள 14 ஆயிரம் தறிகளில் தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் மொத்த உற்பத்தியில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 40 சதவீதம் இலவச வேட்டி-சேலை உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர்.

    ஒவ்வொரு வருடம் ஜூன் மாதம் இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான ஆர்டர் வந்துவிடும். அதன் பின்னர் உற்பத்தி பணி தொடங்கி விடும். ஆனால் கடந்த வருடம் தாமதமாக ஆர்டர் வந்தது. அதேபோல் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஆகியும் இதுவரை இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான ஆர்டர் வரவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இன்றி உள்ளனர்.

    இது தொடர்பாக தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று ஈரோடு, வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே சாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தது. ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் விசைத்தறியாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் பாலசுப்பிரமணியம், அமைப்பு செயலாளர் கந்தவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான ஆர்டர் கிடைத்து உற்பத்தியை தொடங்கி விடுவோம். ஆனால் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஆகியும் ஆர்டர் இதுவரை கிடைக்கவில்லை.

    இதனால் குறித்த நேரத்தில் உற்பத்தி செய்து கொடுப்பதில் சிக்கல் உள்ளது. எனவே அரசு இனியும் தாமதிக்காமல் ஆர்டரை வழங்கி உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கிராமத்திற்கு செல்ல மாயாற்றை கடந்து தான் செல்ல வேண்டும்.
    • மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது தெங்கு மரஹடா, கள்ளம்பாளையம் மலை கிராமம். இங்கு 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்திற்கு செல்ல மாயாற்றை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த பகுதி மக்கள் தினமும் பரிசல் மூலம் வியாபாரத்திற்காக சத்தியமங்கலம், கோத்தகிரி செல்கின்றனர்.

    இதேபோல் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்வதற்காகவும் பரிசலில் சென்று வருகின்றனர். இங்குள்ள கல்லூரி மாணவர்களும் பரிசல் மூலமே கல்லூரிக்கு சென்று வருகின்றனர். இவர்களுக்கு பரிசல் முக்கிய போக்குவரத்தாக இருந்து வருகிறது.

    ஆனால் மழைக்காலங்களில் திடீரென மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவிடும். இந்த மாதிரி நேரங்களில் ஆபத்தை உணராமல் மக்கள் பரிசலில் பயணம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் பவானிசாகர் நீர் பிடிப்பு பகுதியான அவலாஞ்சி, பைக்காரா, குன்னூர், அப்பர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால். மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் பைக்காரா அணை நிரம்பியுள்ளதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கூடுதல் நீர் வர வாய்ப்புள்ளதால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று கல்லூரிக்கு மாணவர்கள் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

    அதேபோல் வியாபாரிகள், விவசாயிகள் வெளியே செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இந்த பகுதியில் கோத்தகிரி தாசில்தார் மற்றும் குன்னூர் சப்-கலெக்டர் ஆகியோர் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ×