என் மலர்
ஈரோடு
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியில் உள்ளது.
- அணையில் இருந்து குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் 3,400 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு, ஆக. 25-
பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.
இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.
இதன் காரணமாக அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் குறைய தொடங்கியது. எனினும் பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியிலேயே நீடித்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3600 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் 3,400 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
- மொத்தமாக தேங்காய், தேங்காய்பருப்பு சேர்த்து ரூ.3 லட்சத்து 58 ஆயிரத்து 56-க்கு விற்பனை நடை பெற்றது.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 12,042 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 1 காசுக்கும், அதிகபட்ச விலையாக 24 ரூபாய் 10 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 15 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 4,722 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 325-க்கு விற்பனையானது.
இதேபோல் தேங்காய்பருப்பு 111 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 73 ரூபாய் 60 காசுக்கும், அதிகபட்ச விலையாக 76 ரூபாய் 99 காசுக்கும், சராசரி விலையாக 75 ரூபாய் 89 காசுக்கும்,
இதேபோல் 2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக 40 ரூபாய் 60 காசுக்கும், அதிகபட்ச விலையாக 62 ரூபாய் 10 காசுக்கும், சராசரி விலையாக 50 ரூபாய் 10 காசுக்கு ஏலம் போனது.
மொத்தமாக 3,505 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு ரூ.2 லட்சத்து 51 ஆயிரத்து 731-க்கு விற்பனை நடைபெற்றது.
மொத்தமாக தேங்காய், தேங்காய்பருப்பு சேர்த்து ரூ.3 லட்சத்து 58 ஆயிரத்து 56-க்கு விற்பனை நடை பெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 4.30 மணியளவில் கோபிசெட்டிபாளையம் அடுத்த கள்ளிப்பட்டிக்கு செல்கிறார்.
- மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 8 அடி உயர முழு உருவ வெண்கல சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
ஈரோடு:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொங்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் 4 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து கோவை வந்தார்.
கோவையில் இரவு தங்கிய அவர் நேற்று காலை கோவையில் நடைபெற்றவிழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். பின்னர் மாலையில் பொள்ளாச்சியில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
பல்வேறு கட்சிகளை சேர்ந்த 55 ஆயரம் பேர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்களை தி.மு.க.வில் இணைத்து கொண்டனர். விழா முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூருக்கு வந்து இரவு தங்கினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் இன்று காலை தனியார் ஓட்டலில் சிறு, குறு,நடுத்தர தொழில் அமைப்பினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் கார் மூலம் ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்திற்கு வருகிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஈரோடு மாவட்ட எல்லையில் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் முத்துசாமி, மேற்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் ஆகியோர் தலைமையில் தாரை, தப்பட்டை, செண்டை மேளம் முழங்க பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள் வரவேற்பை பெற்று கொள்ளும் முதல்-அமைச்சர் கோபி செட்டி பாளையத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் தங்கி ஓய்வு எடுக்கிறார்.
பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 4.30 மணியளவில் கோபிசெட்டிபாளையம் அடுத்த கள்ளிப்பட்டிக்கு செல்கிறார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 8 அடி உயர முழு உருவ வெண்கல சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
மேலும் சிலையையொட்டி அமைந்துள்ள கலைஞர் படிப்பகத்தையும் திறந்து வைக்கிறார். தொடர்ந்து தி.மு.க. சுற்றுச்சூழல் அணி சார்பாக 1 லட்சம் மரக்கன்றுகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா பேருரையாற்றுகிறார்.
தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் ஈரோடு வருகிறார். அங்குள்ள காலிங்கராயன் அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார். பின்னர் நாளை (26-ந்தேதி) ஈரோட்டில்இருந்து புறப்பட்டு பெருந்துறைக்கு செல்கிறார்.
பெருந்துறை போலீஸ் நிலையம் முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதன் பின்னர் அங்கிருந்து சேனடோரியம், சீனபுரம் வழியாக கிரே நகர் செல்கிறார். அங்கு அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் 4-வது பம்பிங் ஸ்டேஷன் அமைந்துள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பெருந்துறை, சேனடோரியம் பை பாஸ் ரோடு வழியாக கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சரளையில் நடைபெறும் ஏழை, எளிய மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று 63 ஆயிரத்து 858 பயனாளிகளுக்கு ரூ.167.50 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
இதேபோல் ரூ.261.57 கோடி மதிப்பில் 135 முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கிறார். மேலும் ரூ.183.70 கோடி மதிப்பில் 1761 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் விழா சிறப்புரையாற்றுகிறார்.
விழா முடிவடைந்ததும் கார் மூலம் அங்கிருந்து கோவை செல்கிறார். முதல்-அமைச்சர் வருகையை ஒட்டி ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை சாவடிகளில் போலீசார் உஷார் படுத்தப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
- கார் மோதிய வேகத்தில் ரோட்டில் இருந்த மின் கம்பத்தில் மோதி நின்றது.
- இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
பவானி:
பவானி அருகே உள்ள புன்னம் நாரப்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் சக்திவேல் (29). மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த செங்கோடன் மகன் நந்தகோபால் (26).
இவர்கள் 2 பேரும் பவானி ஆப்பக்கூடல் மெயின் ரோடு, ஜம்பை பேரூராட்சி அலுவலகத்தின் அருகே உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்து விட்டு மோட்டார் சைக்கிளுடன் ரோட்டின் ஓரமாக நின்று கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த கார் எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதையடுத்து கார் மோதிய வேகத்தில் ரோட்டில் இருந்த மின் கம்பத்தில் மோதி நின்றது.
இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவர்களை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சக்திவேல் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையிலும், நந்தகோபால் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கார் டிரைவர் அர்த்தனாரீஸ்வரர் என்பவரிடம் போலீசார் விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜம்பையில் டீக்கடை முன்பாக ரோட்டின் ஓரம் நின்று கொண்டிருந்த வாலிபர்கள் 2 பேர் மீது கார் மோதி தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திடீரென குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது.
- இதில் மூதாட்டி சுந்தராம்பாள் அதிர்ஷ்ட வசமாக காயம் இன்றி உயிர் தப்பினார்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி அடுத்த சாவடிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தராம்பாள் (85).
இவரது கணவர் பொன்னுசாமி, மகன் மணி, மகள் லட்சுமி ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டனர். இவரது மருமகள் பூவாய் நாமக்கல் மாவட்டம் வேலூரில் வசித்து வரு கிறார்.
இந்நிலையில் சுந்தராம்பாள் சாவடிபாளையம் பகுதியில் தனியாக குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இரவு சுந்தராம்பாள் இரவில் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் இருந்த சுந்தரா ம்பாளை மீட்டனர். இதையடுத்து தீயணைப்பு நிலையத்தக்கு தகவல் கொடுத்தனர். மொடக்குறிச்சி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர்.
இதில் மூதாட்டி சுந்தராம்பாள் அதிர்ஷ்ட வசமாக காயம் இன்றி உயிர் தப்பினார். இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பவானி அருகே உள்ள குதிரைக்கல் மேடு பேரேஜ் பகுதியில் பாம்பு இருப்பதாக பவானி தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது.
- சுமார் 5 அடி நீளம் கொண்ட சாரை பாம்பை உயிருடன் பிடித்தனர்.
பவானி:
பவானி அருகே உள்ள குதிரைக்கல் மேடு பேரேஜ் பகுதியில் பாம்பு இருப்பதாக பவானி தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது.
இதையடுத்து பவானி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ஆறுமுகம் மற்றும் தீய ணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அப்போது பேரேஜ் பகுதியில் தீயணைப்பு துறையினர் சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு இரும்பு குழாயின் உள்ளே பாம்பு ஒன்று இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் பாம்பு பிடிக்கும் சாதனத்தின் மூலம் சுமார் 5 அடி நீளம் கொண்ட சாரை பாம்பை உயிருடன் பிடித்தனர். தொடர்ந்து அந்த பாம்பை வன பகுதியில் தீயணைப்பு துறையினர் விட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- திம்பம் மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம்.
- வாகன ஓட்டி ஒருவர் சிறுத்தை நடமாட்டத்தை செல்போனில் வீடியோ பதிவு செய்தார்.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன.
இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.
திம்பம் மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம்.
இந்த நிலையில் இரவு 19-வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச் சுவரில் ஒரு சிறுத்தை ஜாலியாக நடந்து சென்றது. அப்போது அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அச்சமடைந்தனர்.
வாகன ஓட்டி ஒருவர் சிறுத்தை நடமாட்டத்தை செல்போனில் வீடியோ பதிவு செய்தார். சிறிது நேரம் சாலையோரம் நடமாடிய சிறுத்தை பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
- டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்த டிரைவர் டிராக்டர் ரோட்டேட்டரில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பரமசிவத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு அடுத்த ஆர்.என்.புதூர் பெருமாள்மலையை சேர்ந்தவர் பரமசிவம் (53). கடந்த சில நாட்களாக பரமசிவத்திற்கு தலை சுற்றல் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று பிற்பகலில் காஞ்சி கோவில் அடுத்த பூச்சம்பதி சாணங்காட்டில் உள்ள ஒரு தோட்டத்தில் டிராக்டரில் பரமசிவம் உழவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது பரமசிவம் திடீரென டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார். அப்போது டிராக்டர் ரோட்டேட்டரில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து காஞ்சிகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பரமசிவத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- வாகன சோதனையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் 1.5 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
- இதையடுத்து 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
அந்தியூர்:
ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் பஸ் நிலையம் எதிரில் உள்ள அண்ணாமலை லே-அவுட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து கொண்டிருந்தனர்.
அவர்களை நிறுத்தி மேற்கொண்ட சோதனையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் 1.5 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
விசாரணையில், அவர்கள் கருங்கல்பாளையம் கமலா நகரைச் சேர்ந்த சக்திகுமார் (30), கேரள மாநிலம், சுல்தான் பத்தேரியைச் சேர்ந்த சதீஷ் (34) என்பது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல, பர்கூரை அடுத்துள்ள கர்கேகண்டி சோதனைச் சாவடியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை மடக்கிப் பிடித்து சோதனையிட்டதில் 850 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் பர்கூரைச் சேர்ந்த மாதேவன் (52), சின்னப்பி (32) என்பதும், கர் நாடக மா நிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, பர்கூர் போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கடத்தி வரப்பட்ட 2¼ கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
- வாலிபர் கொலை வழக்கு விசாரணை ஈரோடு இரண்டாம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
- இதையடுத்து அவர்கள் 5 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஈரோடு:
ஈரோடு ஆர்.என்.புதூர் மாதேஸ்வரன் நகரை சேர்ந்தவர் சித்துராஜ்(35). பழைய துணி வியாபாரி. மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் அடிபட்டு மனநலம் பாதிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 7-ந் தேதி அவர் வீட்டு அருகே உள்ள பொதுக் குழாயில் பெண்கள் சிலர் குடிநீர் குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற சித்துராஜ் குடத்தை நகர்த்தி விட்டு கை கால் கழுவியுள்ளார்.
அப்போது தண்ணீர் பிடிக்க வந்திருந்த அதே பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவி பானுமதி (47), அவரது மகள் சிவரஞ்சனி (25), உறவினர்களான ராஜேந்திரன் மனைவி சித்ரா (33), லட்சுமணன் மனைவி கல்யாணி (55), முருகேசன் மனைவி சகுந்தலா (36) ஆகியோர் கண்டித்து வாக்குவாதம் செய்தனர்.
அப்போது சிவரஞ்சினியின் கணவரான ரங்கநாதன் (29) அங்கு வந்தார். சித்துராஜிடம் தகராறில் ஈடுபட்டார். ஆத்திரம் அடைந்த சித்துராஜ் தான் மறைத்து வைத்திருந்த சிறு கத்தியால் ரங்கநாதன் உடம்பில் குத்தி கிழித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த 5 பெண்களும் விறகு கட்டையால் சித்துராஜை தாக்கினர்.
மேலும் அவர் வைத்திருந்த கத்தியை பறித்து குத்தியதில் சித்துராஜ் இறந்தார். இது தொடர்பாக சித்தோடு போலீசார் 5 பெண்கள் உள்பட 6 பேரை கைது செய்தனர். இதில் 2021 இல் கல்யாணி என்பவர் இறந்துவிட்டார்.
இந்த வழக்கு விசாரணை ஈரோடு இரண்டாம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி மாலதி தீர்ப்பு வழங்கினார். அதில் பானுமதி, சிவரஞ்சனி, சித்ரா, சகுந்தலா மற்றும் ரங்கநாதன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.
மேலும் தலா 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர்கள் 5 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
- சம்பவத்தன்று சாமிநாதன் இடைவிடாது வாந்தி எடுத்துள்ளார்.
- உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், நம்பியூரை அடுத்துள்ள மொட்டனம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (41). இவரது கணவர் சாமி நாதன் (50). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
சாமிநாதனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று சாமிநாதன் இடைவிடாது வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து, நம்பியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
நேற்று அவருக்கு மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே சாமி நாதன் இறந்து விட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து, விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் வரப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கருங்கல்பாளையம் சோதனைசாவடியில் போலீஸ் ஏட்டு அற்புதராஜ் மீது மோட்டார் சைக்கிள் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
- இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆறு சோதனை சாவடியில் கருங்கல்பாளையம் போலீஸ் ஏட்டு அற்புதராஜ் (46) நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் பள்ளிபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி வேகமாக வந்தது. அந்த மோட்டார் சைக்கிளில் 3 நபர்கள் இருந்தனர்.
அந்த மோட்டார் சைக்கிளை ஏட்டுஅற்புதராஜ் நிறுத்த முயன்றார். ஆனால் அற்புதராஜ் மீது அந்த மோட்டார் சைக்கிள் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் அற்புதராஜின் 2 கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மற்ற போலீசார் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சோதனை சாவடியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மோட்டார்சைக்கிளை ஓட்டிய நபர் கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில், கிருஷ்ணன் வீதியை சேர்ந்த முத்துக்குமார் (30) சுமை தொழிலாளி, ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (28), இவரது சகோதரர் முரளிதரன் (27) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்க ப்பட்டனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த ஏட்டு அற்புதராஜ் தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.






