என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கருணாநிதி முழு உருவ வெண்கல சிலை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார்
    X

    கருணாநிதி முழு உருவ வெண்கல சிலை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார்

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 4.30 மணியளவில் கோபிசெட்டிபாளையம் அடுத்த கள்ளிப்பட்டிக்கு செல்கிறார்.
    • மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 8 அடி உயர முழு உருவ வெண்கல சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    ஈரோடு:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொங்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் 4 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து கோவை வந்தார்.

    கோவையில் இரவு தங்கிய அவர் நேற்று காலை கோவையில் நடைபெற்றவிழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். பின்னர் மாலையில் பொள்ளாச்சியில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

    பல்வேறு கட்சிகளை சேர்ந்த 55 ஆயரம் பேர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்களை தி.மு.க.வில் இணைத்து கொண்டனர். விழா முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூருக்கு வந்து இரவு தங்கினார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் இன்று காலை தனியார் ஓட்டலில் சிறு, குறு,நடுத்தர தொழில் அமைப்பினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

    இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் கார் மூலம் ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்திற்கு வருகிறார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஈரோடு மாவட்ட எல்லையில் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் முத்துசாமி, மேற்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் ஆகியோர் தலைமையில் தாரை, தப்பட்டை, செண்டை மேளம் முழங்க பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள் வரவேற்பை பெற்று கொள்ளும் முதல்-அமைச்சர் கோபி செட்டி பாளையத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் தங்கி ஓய்வு எடுக்கிறார்.

    பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 4.30 மணியளவில் கோபிசெட்டிபாளையம் அடுத்த கள்ளிப்பட்டிக்கு செல்கிறார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 8 அடி உயர முழு உருவ வெண்கல சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    மேலும் சிலையையொட்டி அமைந்துள்ள கலைஞர் படிப்பகத்தையும் திறந்து வைக்கிறார். தொடர்ந்து தி.மு.க. சுற்றுச்சூழல் அணி சார்பாக 1 லட்சம் மரக்கன்றுகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா பேருரையாற்றுகிறார்.

    தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் ஈரோடு வருகிறார். அங்குள்ள காலிங்கராயன் அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார். பின்னர் நாளை (26-ந்தேதி) ஈரோட்டில்இருந்து புறப்பட்டு பெருந்துறைக்கு செல்கிறார்.

    பெருந்துறை போலீஸ் நிலையம் முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அதன் பின்னர் அங்கிருந்து சேனடோரியம், சீனபுரம் வழியாக கிரே நகர் செல்கிறார். அங்கு அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் 4-வது பம்பிங் ஸ்டேஷன் அமைந்துள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பெருந்துறை, சேனடோரியம் பை பாஸ் ரோடு வழியாக கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சரளையில் நடைபெறும் ஏழை, எளிய மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று 63 ஆயிரத்து 858 பயனாளிகளுக்கு ரூ.167.50 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

    இதேபோல் ரூ.261.57 கோடி மதிப்பில் 135 முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கிறார். மேலும் ரூ.183.70 கோடி மதிப்பில் 1761 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் விழா சிறப்புரையாற்றுகிறார்.

    விழா முடிவடைந்ததும் கார் மூலம் அங்கிருந்து கோவை செல்கிறார். முதல்-அமைச்சர் வருகையை ஒட்டி ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை சாவடிகளில் போலீசார் உஷார் படுத்தப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

    Next Story
    ×