என் மலர்
ஈரோடு
- ஈரோடு மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
- பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு:
ஆங்கில புத்தாண்டான 2023-ம் ஆண்டு இன்று நள்ளிரவில் பிறக்கிறது. புத்தாண்டை வரவேற்க மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகிறார்கள்.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நக ரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்று இரவு களை கட்டும். குறிப்பாக சென்னை மாநகரில் மக்கள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக திரண்டு புத்தாண்டு கொண்டாட் டத்தில் ஈடுபடுவார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் அதிகக்கூடும் இடங்கள், முக்கிய கடை வீதிகள், வழிபாட்டுத்தலங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈடுபட உள்ளார்கள்.
புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களை கேலி செய்வது போன்ற செயல் ஈடுபடும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கேளிக்கை விடுதி, தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் போலீசார் அறிவுறுத்தியுள்ள பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு வி.சசிமோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக ஈரோடு மாவட்ட போலீசார் பல்வேறு முன்னெ ச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2 ஆண்டாக கொரோனாவுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு அவ்வாறு இல்லாமல் வழக்கமான உற்சாகத்துடன் அவரவர் குடும்பத்தாரோடு கொண்டாடுங்கள்.
ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் உள்ளூர், ஆயுதப்படை காவலர்கள், ஊர் காவல் படையினர் என 1,500 பேர் சிறப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இன்று மாலை முதல் அனைத்து கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், மாநில, மாவட்ட எல்லை, முக்கிய சாலை சந்திப்புகள், பஸ் நிலையம், ரெயில் நிலையம், மக்கள் அதிகம் கூடும் இடங்களில், அனுமதிக்கப்பட்ட கேளிக்கை நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணி செய்கின்றனர்.
இருசக்கர வாகனங்களில் ரோந்து, 4 சக்கர வாகன ரோந்து, நெடுஞ்சாலை ரோந்து, மாநகர பகுதியில் 6 சிறப்பு ரோந்து வாகனங்களில் கண்காணிக்க உள்ளனர்.
நீண்ட துார பயணம் செய்வோர், இரவு நேர பயணத்தை தவிர்க்கவும். தவிர்க்க இயலாத காரணத்தால் பயணித்தால், குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறிது நேரம் ஓய்வெடுத்து பயணத்தை பாதுகாப்பாக தொடருங்கள்.
மோட்டார்சைக்கிளில் செல்வோர் தலைகவசம் அணிந்தும், 4 சக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிந்தும் பயணிக்க வேண்டும்.
வேகமாக, தாறுமாறாக வாகனங்கள் இயக்குவோர், மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோர், சாகச பயணம், பைக் ரேஸ்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் வாகனமும் பறிமுதல் செய்யப்படும். நள்ளிரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டா ட்டத்தை முடிக்க வேண்டும்.
பொது, தனியார் விடுதிகளில் உள்ள நீச்சல் குளங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். நீர் நிலைகள், இதர பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களை அசம்பாவிதம் இன்றி கொண்டாடுங்கள். சட்ட மீறல் நடந்தால் 96552 20100 என்ற எண்ணில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
மேலும் மாவட்டம் முழுவதும் முக்கிய சாலைகளில் தயார் நிலையில் ஆம்புலன்சுகள் நிறுத்தப்படுகிறது. விபத்தில் யாராவது சிக்கினால் உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.
- ராஜவர்தன், மற்றும் சின்னத்தம்பி, என்ற கும்கி யானைகளை வரவழைத்த வனத்துறையினர் கருப்பன் என்ற பெயரிட்ட அந்த ஒற்றை யானையை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்டி அடித்தனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.வனவிலங்குகள் அவ்வப் போது உணவு தண்ணீர் தேடி விவசாயத் தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும், கால்நடைகளை வேட்டையாடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
கடந்த 1 வருடத்துக்கு முன்பு தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது.
அதேபோல விவசாய தோட்டத்தில் காவலுக்கு இருந்த தர்மாபுரம் பகுதியை சேர்ந்த மல்லப்பா என்ற விவசாயி மற்றும் திகினாரை ஜோரைகாடு பகுதியை சேர்ந்த மாதேவா என்ற விவசாயியையும் அந்த ஒற்றை யானை மிதித்துக் கொன்றது.
அதைத் தொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்து ராஜவர்தன், மற்றும் சின்னத்தம்பி, என்ற கும்கி யானைகளை வரவழைத்த வனத்துறையினர் கருப்பன் என்ற பெயரிட்ட அந்த ஒற்றை யானையை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்டி அடித்தனர்.
அதேப்போல ஆசனூர் வனச்சரகத்தில் விவசாய நிலத்தில் புகுந்து அட்டகாசம் செய்யும் யானையை விரட்ட சின்னத்தம்பி,ராமு என இரண்டு கும்கி யானைகள் ஆசனூரில் நிறுத்தப்பட்டு துரத்தப்பட்டு வருகிறது.
தற்போது கடந்த 1 மாதமாக ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உப்பட்ட திகினாரை, ஜோரைகாடு, கரளவாடி, மரியபுரம், பகுதியில் கருப்பன் யானை விவசாய தோட்டத்தில் புகுந்து தொடர்ந்து கரும்பு, வாழை, மக்காச்சோளம், முட்டைக்கோஸ், பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. யானையை விரட்டும் விவசாயிகளையும் ஒற்றை யானை துரத்துவதும் வாடிக்கையாகியுள்ளது.
நேற்று முன்தினம் கருப்பன் யானையை பிடிக்க வேண்டுமென வனத்துறை வாகனத்தை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து நேற்று காலை பொள்ளாச்சியில் இருந்து கபில்தேவ் என்ற கும்கி யானை ஜோரகாடு பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.
பொதுவாகவே கருப்பன் யானை இரவு நேரத்தில் மட்டுமே விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. அதிகாலை நேரம் ஆனதும் கருப்பன் யானை மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது. இதனால் பகலில் கருப்பன் யானை இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று இரவு விடிய, விடிய கும்கி கபில்தேவ் உதவியுடன் வனத்துறையினர் கருப்பன் யானையை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
கும்கி கபில்தேவ் உதவியுடன் விடிய, விடிய கருப்பன் யானையை விரட்ட தேடுதல் வேட்டை நடத்தினோம். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. கருப்பன் யானை இருப்பது பற்றி தெரிந்தால் பொதுமக்கள் தாங்களாகவே விரட்டாமல் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும். இன்னும் சில நாட்களில் கருப்பன் யானையை பிடித்து காலர் ஐ.டி. பொருத்தப்படும். பின்னர் அந்த யானையின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். எனவே கருப்பன் யானையை விரட்டும் வரை பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தீ விபத்தில் சரோஜாவின் இடுப்புக்கு கீழ் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் நாகலூர் கிராமத்தை அடுத்த பெரும்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சோமு. இவரது மனைவி சரோஜா (57). இருவரும் விவசாயம் செய்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று காலை பெருமாள்பாளையம் விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிட சரோஜா சென்றார். சாமிக்கு வைத்திருந்த விளக்கில் எதிர்பாராத விதமாக சரோஜாவின் சேலைப்பட்டு தீப்பிடித்தது.
இதில் சரோஜாவின் உடலில் தீப்பிடித்து வேதனையால் அலறினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சரோஜாவின் இடுப்புக்கு கீழ் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சரோஜாவை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விக்னேஷ் குமாரை கடைக்குள் உள்ள ஒரு அறைக்கு இழுத்து சென்று அவரை தாக்கியதாக கூறப்படுகிறது
- பாரதீய ஜனதா கட்சியின் மாநில பட்டியல் அணி பொது செயலாளர் விநாயக மூர்த்தி மீது 3 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்
சூரம்பட்டி,
ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிதி நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரோட்டை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கடன் வாங்கி மொபட்டை வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியதற்கான தவணை கட்டப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் செந்தில் குமார் வாங்கிய மொபட்டை ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள ஒரு செருப்பு கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு ள்ளதாக நிதி நிறுவன த்திற்கு தகவல் கிடைத்தது.
இதையொட்டி நிதி நிறுவன ஊழியர்கள் விக்னேஷ் குமார் (26)என்பவர் உள்பட 3 பேர் அந்த கடைக்கு சென்று அங்கு நின்ற மொபட்டை எடுக்க முயற்சி செய்தனர்.
அப்போது கடையில் இருந்த செருப்பு கடையின் உரிமையாளரும் பாரதீய ஜனதா கட்சி பட்டியல் அணி மாநில பொதுச் செயலாளருமான விநாயக மூர்த்தி அவர்களை தடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் விக்னேஷ் குமாரை கடைக்குள் உள்ள ஒரு அறைக்கு இழுத்து சென்று அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ் குமார் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து விக்னேஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கியதாக பாரதீய ஜனதா கட்சியின் மாநில பட்டியல் அணி பொது செயலாளர் விநாயக மூர்த்தி மீது 3 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்.
இதுபற்றி சூரம்பட்டி போலீசார் கூறும் போது
இறந்த செந்தில் குமார் விநாயக மூர்த்தியிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணம் கடன் வாங்கி யிருந்ததாகவும் இந்த பணத்தை அவர் திருப்பி கொடுக்காமல் இறந்து விட்டதால் செந்தில் குமாரின் வீட்டுக்கு சென்று ஸ்கூட்டரை எடுத்து வந்ததாவும் அந்த மொபட்டை தனது செருப்பு கடை முன்பு நிறுத்தி இருந்ததாகவும் கூறினர்.
- வேலைக்கு சென்ற ஜீவா திடீரென மயங்கி கீழே விழுந்துவிட்டார்
- அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே ஜீவா இறந்து விட்டதாகத் தெரிவித்தார்
ஈரோடு,
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கோவிந்தராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபால் (72). சத்தியமங்கலத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி ஜீவா (60). இவரும் சத்திய மங்கலத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்.மகனுக்கு திருமணமாக வில்லை.
நேற்று காலை வழக்கம் போல ஜீவா வேலைக்கு சென்றுள்ளார். மாலை சுமார் 5.30 மணியளவில் அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துவிட்டார். உடனடியாக அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே ஜீவா இறந்து விட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து, சத்தியங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த ஸ்கேன் மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து அந்த அறையை பூட்டினர்
- 15 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மருத்துவத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்
ஈரோடு,
ஈரோடு சத்தி ரோட்டில் ஐஸ்வர்யா கருத்தரித்தல் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் உள்ள ஸ்கேன் மையம் உரிய உரிமம் இல்லாமல் செயல்பட்டு வருவதாக ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணிக்கு புகார்கள் சென்றது.
இதனை அடுத்து அவரது உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குனர் பிரேம குமாரி தலைமையில் மருத்துவக் குழு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்ட னர்.
அப்போது ஆஸ்பத்திரியில் உள்ள ஆவணங்களை சரிபார்த்தனர். புகார் தெரிவிக்கப்பட்ட ஸ்கேன் மையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஸ்கேன் மையத்தில் எத்தனை கருவிகள் பயன்படுத்தப்படு கிறது.
அந்த ஸ்கேன் மையத்துக்கு உரிமம் பெறப்பட்டுள்ளதா? மருத்துவ உபகரணங்கள் யார் பயன்படுத்துகிறார்கள். தினமும் எத்தனை பேருக்கு ஸ்கேன் மையம் மூலம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. உள்ளிட்ட கேள்விகளை அதிகாரிகள் எழுப்பினர்.
ஸ்கேன் மையத்துக்காக வசூலிக்கப்பட்ட கட்டணம் உள்ளிட்ட விவரங்களையும் அதிகாரிகள் கேட்டறிந்தனர். அப்போது ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் காண்பித்தனர். மற்ற ஆவணங்கள் சரியாக இருந்த போதும் ஸ்கேன் மையத்துக்கு உரிய உரிமம் பெறப்படவில்லை என்பது அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த ஸ்கேன் மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து அந்த அறையை பூட்டினர்.
மேலும் ஸ்கேன் மையம் இயக்கியது தொடர்பாக 15 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மருத்துவத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
- அணையின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது
- பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது
ஈரோடு,
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்ததால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது.
இதனால் பவானி ஆற்றங்கரை யோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததாலும் அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.10 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 968 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2 ஆயிரம் கன அடி, பவானி ஆற்றுக்கு 100 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி என மொத்தம் 2900 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- அதிக விலைக்கு மது பாட்டில்கள் வைத்து விற்பனை
- பவானி பாலக்கரை வீதியை சேர்ந்த குணசேகரன் (46) என்பவரை பவானி போலீசார் கைது செய்தனர்
பவானி,
பவானி அருகில் உள்ள சங்கர கவுண்டன் பாளையம் பகுதியில் பவானி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது சிங்காரவேலன் பெட்டிக்கடை அருகே மறைவான இடத்தில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து பவானி சங்கர கவுண்டன் பாளையம் பகுதியில் வசிக்கும் சிங்காரவேலன் (39) என்பவர் கைது செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் பவானி அந்தியூர் ஜங்ஷன் பூக்கடை அருகில் மறைவான பகுதியில் மதுபாட்டில்கள் வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக பவானி பாலக்கரை வீதியை சேர்ந்த குணசேகரன் (46) என்பவரை பவானி போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
- சந்தேகத்துக்கு இடமாக நின்று இருந்த 3பேரை பிடித்து விசாரணை நடத்தினர்
- பையை வாங்கி பார்த்த போது அதில் 15 குடிநீர் குழாய்கள் இருப்பது தெரியவந்தது
கோபி,
கோபிசெட்டி பாளையம் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பெரிய மொடச்சூர் ரோடு அண்ணாநகர் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்று இருந்த 3பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்களிடம் இருந்த ஒரு பையை வாங்கி பார்த்த போது அதில் 15 குடிநீர் குழாய்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் அவை திருடப்பட்டதும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3 ஆயிரம் ஆகும்.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது கவுந்தப்பாடியை சேர்ந்த ராஜூ (40), சங்கர் (31), மற்றும் சத்தியமங்கலத்தை சேர்ந்த பரமேஸ் (25), என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- தமிழ்ச்செல்வன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது
- போலீசார் பரமேஸ்வரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்
நம்பியூர்,
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (37). டிரைவர். இவருக்கு திருமணம் ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கடந்த 22-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற தமிழ்ச்செல்வன் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் கடந்த 23-ந் தேதி காலை 9 மணி அளவில் அலங்கியம் எல்.பி.பி. வாய்க்கால் பகுதியில் தமிழ்ச்செல்வன் பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து நம்பியூர் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அப்போது தமிழ்ச்செல்வன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது கோபிசெட்டி பாளையம் சின்ன மொடச்சூர் பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் (42) என்பவர் தமிழ்ச்செல்வ னிடம் கடைசியாக 7 முறை செல்போனில் தொடர்புகொண்டு பேசியது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் பரமேஸ்வரனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பரமேஸ்வரன் திருப்பூரில் உள்ள ஒரு லாரி பார்சல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருவது தெரிய வந்தது.
மேலும் இவருக்கு திருமணம் ஆகி 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் தமிழ்ச்செல்வன், பரமேஸ்வ ரனின் மனைவியை தகாத உறவுக்கு அழைத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பரமே ஸ்வரன் தமிழ்ச்செல்வனை தொடர்புகொண்டு உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி தற்கொலை க்கு தூண்டியது தெரிய வந்தது.
இதையடுத்து நம்பியூர் போலீசார் பரமேஸ்வரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்ப ட்டார்.
- டாக்டர் சக்திவேல் தனது உடலில் ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று தெரிய வந்தது.
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அத்தாணி அருகே உள்ள மேவாணி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(39). சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணரான இவர் ஈரோடு நியூ டீச்சர்ஸ் காலனியில் வசித்து வருகிறார். மேலும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். அவரது மனைவி அகமதாபாத்தில் படித்து வருகிறார். இன்று காலை டாக்டர் சக்திவேல் நீண்ட நேரமாகியும் ஆஸ்பத்திரிக்கு செல்லவில்லை. இதனால் ஆஸ்பத்திரியில் இருந்து அவரது செல்போனை தொடர்பு கொண்டனர். ஆனால் செல்போனை எடுக்கவில்லை. இதையடுத்து ஊழியர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் உள்பக்கம் தாழ்போடப்பட்டு இருந்தது.
இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது டாக்டர் சக்திவேல் இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது டாக்டர் சக்திவேல் தனது உடலில் ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று தெரிய வந்தது.
இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் டாக்டர் சக்திவேல் சாவுக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிறந்த 26 நாட்களிலே பெண் குழந்தை இறந்தது சிவகிரி போலீசாரும், சுகாதாரத்துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சிவகிரி தாண்டாம்பாளையம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் சுரேஷ், இவரது மனைவி ஜான்சிராணி. இவர்களுக்கு ஏற்கனவே 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் ஜான்சி ராணி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அவருக்கு கடந்த 4-ந் தேதி சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது குழந்தை நஞ்சினை குடித்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து குழந்தையை 8 நாட்கள் ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சையில் வைத்திருந்தனர்.
பின்னர் சிகிச்சை முடிந்து குழந்தையை வீட்டிற்கு கொண்டு சென்றனர். வீட்டிற்கு சென்றதும் மீண்டும் குழந்தைக்கு சளி மற்றும் முச்சுதிணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தையின் பெற்றோர் அதே பகுதியில் உள்ள ஒரு டாக்டரிடம் குழந்தையை கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதனை டாக்டர் டானிக் கொடுத்து கொடுக்க சொன்னார்.
இதற்கிடையே நேற்று ஜான்சிராணி குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு கட்டிலில் படுக்க வைத்து விட்டு சமையல் செய்தார். பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது குழந்தை எவ்வித அசைவும் இல்லாமல் இருந்தது.
இதையடுத்து உடனடியாக தாண்டாம்பாளையம் என்ற பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அப்போது அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதைக்கேட்டு குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பிறந்த 26 நாட்களே பெண் குழந்தை இறந்ததால் இது குறித்து சிவகிரி போலீசாரும், சுகாதாரத்துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவில்தான் குழந்தை மரணத்துக்கான காரணம் தெரியவரும்.






