என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவிலில் சாமிகும்பிட்ட போது விளக்கு தீ சேலையில் பிடித்து பெண் உடல் கருகி பலி
- தீ விபத்தில் சரோஜாவின் இடுப்புக்கு கீழ் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் நாகலூர் கிராமத்தை அடுத்த பெரும்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சோமு. இவரது மனைவி சரோஜா (57). இருவரும் விவசாயம் செய்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று காலை பெருமாள்பாளையம் விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிட சரோஜா சென்றார். சாமிக்கு வைத்திருந்த விளக்கில் எதிர்பாராத விதமாக சரோஜாவின் சேலைப்பட்டு தீப்பிடித்தது.
இதில் சரோஜாவின் உடலில் தீப்பிடித்து வேதனையால் அலறினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சரோஜாவின் இடுப்புக்கு கீழ் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சரோஜாவை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






