என் மலர்tooltip icon

    ஈரோடு

    • 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 321 பேரும், மாற்றுத்திறனாளிகள் 32 பேரும் என 353 பேர் உள்ளனர்.
    • வாக்களிக்காதவர்களுக்கு இறுதி வாய்ப்பாக வரும் 20-ந் தேதி மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவுக்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 321 பேரும், மாற்றுத்திறனாளிகள் 32 பேரும் என 353 பேர் உள்ளனர். இவர்கள் வாக்குச்சாவடி செல்லாமல் தபால் ஓட்டாக பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. 100 சதவீத ஓட்டை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 4-ந் தேதிக்குள் இது போன்றவர்கள் பட்டியல் பெறப்பட்டு அவர்களிடம் தனி படிவம் பெறப்பட்டது.

    சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் குமரன் தலைமையில் இந்த பணிகள் நடந்தது. தபால் வாக்குக்காக பதிவு செய்தவர்களிடம் தபால் ஓட்டை பெற 6 குழுக்கள் அமைக்கப்பட்டன. நேற்று முதல் இந்த குழுவினர் போலீஸ் பாதுகாப்புடன் அந்த வாக்காளர்களின் வீட்டுக்கே சென்று தபால் ஓட்டை பதிவு செய்ய வைத்தனர்.

    முதியவர்களிடம் யாருக்கு வாக்களிக்க உள்ளீர்கள் என்று கேட்டு அதற்கு தந்தார் போல் அதிகாரிகள் வசதிகள் செய்து கொடுத்தனர். நேற்று காலை தொடங்கி மாலை வரை தபால் வாக்கு சேகரிப்பு பணி நடந்தது. இதில் சில இடங்களில் முதியவர்கள் இல்லாததால் தபால் வாக்கு பதிவு செய்ய முடியவில்லை. நேற்று மாலை அந்த பெட்டி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கொண்டுவரப்பட்டு பத்திரமாக வைக்கப்பட்டு ள்ளது. இதனையடுத்து நேற்று வீட்டில் இல்லாதவர்களிடம் இன்று 2-வது நாளாக 6 பேர் கொண்ட குழுவினர் தபால் வாக்கு சேகரிக்க சென்றனர். அவர்களுடன் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணிக்கு சென்றனர். இன்று வாக்களிக்காதவர்களுக்கு இறுதி வாய்ப்பாக வரும் 20-ந் தேதி மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

    வரும் 20-ந் தேதியும் 6 பேர் கொண்ட குழுவினர் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டுக்கு வருவார்கள் அன்று வாக்களிக்காதவர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றும் அந்த வாக்காளர்கள் இல்லையென்றால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முகமூடி கும்பல் வீட்டுக்குள் நுழையும் போது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்கள் மீது துணிகளை கொண்டு மூடி மறைத்து விட்டனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு ரகுபதி நாயக்கன்பாளையம் ஜீவானந்தம் வீதியை சேர்ந்தவர் குணசேகரன்(58). மாட்டு வண்டியில் ஊட்டி வர்க்கி வியாபாரம் செய்து வருகிறார். இவர் முன்னாள் பா.ஜ.க பிரமுகர். இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர் . 2 மகள்களுக்கும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

    கணவன்- மனைவி மட்டும் தனியாக வசித்து வந்தனர். குணசேகரன் தோட்ட வீட்டில் தங்கி இருந்தார். இவரது வீட்டின் அருகே ரிங் ரோடு உள்ளது. இந்த பகுதியில் வீடுகள் சற்று தள்ளி தள்ளியே உள்ளது. இந்நிலையில் பானுமதி உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு பங்கேற்க வெளியூர் சென்று விட்டார். குணசேகரன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

    இந்நிலையில் இன்று நள்ளிரவு 1.25 மணி அளவில் 3 முகமூடி கும்பல் குணசேகரன் வீட்டின் காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து அவரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த குணசேகரனை அந்த மர்ம நபர்கள் மம்மட்டி கைப்பிடியை கொண்டு தாக்கினர். பின்னர் வீட்டில் உள்ள நகை-பணத்தை கொண்டு வர வில்லை என்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

    இதனால் பயந்து போன குணசேகரன் பீரோல் சாவியை அந்த மர்ம நபர்களிடம் கொடுத்தார். இதனையடுத்து அந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். முன்னதாக முகமூடி கும்பல் வீட்டுக்குள் நுழையும் போது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்கள் மீது துணிகளை கொண்டு மூடி மறைத்து விட்டனர்.

    இது குறித்து குணசேகரன் ஈரோடு தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தார். டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. ஆனால் மோப்பநாய் சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவி பிடிக்கவில்லை. மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர்.

    இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் முகமூடி கொள்ளையர்கள் தாக்கியதில் குணசேகரனின் வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கட்டையால் தாக்கியதில் அவரது கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குணசேகரன் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது.
    • தலைவர் முற்றுகையிட்டு வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசும், தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், சுயேட்சைகள் உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர்.

    தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க் கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் ஈரோட்டில் கடந்த சில நாட்களாகவே முகாமிட்டு வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் கண்டிப்பாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தி.மு.க.வினர் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்காக அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், செந்தில் பாலாஜி, எ.வ. வேலு, கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், ஆவடி நாசர், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, ஐ.பெரியசாமி, கீதாஜீவன், காந்தி, சக்கரபாணி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள பகுதிகளில் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

    இதேபோல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டை யன், கே.சி.கருப்பணன், கே.வி.ராமலிங்கம், ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி. வேலுமணி, தங்கமணி உள்பட 30-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் முகாமிட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து வருகிற 24, 25-ந்தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார். 24-ந்தேதி மாலை வேட்டுக்காட்டு வலசு 19-வது வார்டு, நாச்சாயி டீக்கடை, சம்பத் நகர், பெரிய வலசு, காந்தி நகர், அக்ரஹாரம், வைரபாளையம், ராஜாஜி புரம் ஆகிய பகுதிகளில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்.

    25-ந்தேதி காலை டீச்சர்ஸ் காலனி, சூரம்பட்டி நால்ரோடு, பெரியார் நகர், கள்ளுக்கடைமேடு, பழைய ரெயில்வே நிலையம் ரோடு, கருங்கல்பாளையம், சின்ன மாரியம்மன் கோவில், மணிக்கூண்டு, சென்ட்ரல் தியேட்டர், பன்னீர்செல்வம் பார்க் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 19, 20-ந் தேதிகளில் ஈரோட்டில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இதேபோல் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் கே.எஸ். தென்னரசுக்கு ஆதரவாக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 15-ந்தேதி மற்றும் நேற்று மாலை பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து இன்று மாலை 3-வது நாளாக காவேரி ரோடு, வண்டியூரான் கோவில், சின்ன மாரியம்மன் கோவில், வி.வி.சி.ஆர். நகர் போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இதைத்தொடர்ந்து 2-வது கட்ட பிரசாரமாக எடப்பாடி பழனிசாமி 24-ந்தேதி மாலை டீச்சர்ஸ் காலனி, சூரம்பட்டி நால்ரோடு, பெரியார் நகர், பேபி மருத்துவமனை, வளையக்கார வீதி, காந்தி சிலை, மணிக்கூண்டு போன்ற பகுதிகளிலும், 25-ந்தேதி காலை வெட்டுக்காட்டு வலசு, சம்பத் நகர், பெரியவலசு, சத்யா நகர், ராஜாஜி புரம், முத்துசாமி வீதி, தெப்பக்குளம் போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இதேபோல் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து மாநில துணைச்செயலளார் எல்.கே.சுதீஷ், விஜய பிரபாகரன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 13,14,15 ஆகிய நாட்களில் பிரசாரம் மேற்கொண்டார். 2-வது கட்ட பிரசாரமாக 21, 22, 23, 24, 25 ஆகிய நாட்களில் பிரசாரம் செய்கிறார்.

    தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. தலைவர் முற்றுகையிட்டு வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஈரோடு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

    • தாளவாடி வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள தேக்கு மர டிப்போ பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • வனத்துறையினர் விசாரணையில் இறந்து போன முதியவர் தாளவாடி அருகே உள்ள பாலப்படுகை கிராமத்தை சேர்ந்த மாதேவன்.

    சத்தியமங்கலம்,

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட தாளவாடி வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

    இந்நிலையில் வன விலங்குகள் அடிக்கடி உணவுக்காகவும், தண்ணீர்காகவும் வனத்தை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. சில சமயம் காவலில் இருப்பவர்களை தாக்கும் சம்பவம் தொடர்கதை ஆகி வருகிறது.

    இந்த நிலையில் தாளவாடி வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள தேக்கு மர டிப்போ பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது யானை தாக்கி முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் கிடந்தார்.

    உடனடியாக வனத்துறையினர் அவரை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்த போது முதியவர் பரிதாபமாக இறந்தார்.

    வனத்துறையினர் விசாரணையில் இறந்து போன முதியவர் தாளவாடி அருகே உள்ள பாலப்படுகை கிராமத்தை சேர்ந்த மாதேவன் (66) கோவில் பூசாரி என்பதும், இவர் விறகு எடுக்க சென்றதாக கிராம மக்கள் தெரிவித்தனர். விறகு எடுக்க சென்ற இடத்தில் யானை மிதித்து இறந்தது தெரிய வந்தது.

    இது குறித்து தாளவாடி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த மாதவன் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

    • வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகவே கூட்டணி வைக்கிறோம்.
    • மாநில உரிமையை பெறுவதில் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டியில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவு கோரி, சிறுபான்மையினர் அமைப்பினருடனான கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி  பேசியதாவது:-

    கூட்டணி சேர்ந்து விட்டால் அவர்களுடைய கட்சியின் கொள்கைகளை கேட்பார்கள் என்பது இல்லை, எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் எங்கள் கொள்கையை மட்டும் விட்டுக்கொடுக்கவே மாட்டோம். ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி அமையும். வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகவே கூட்டணி வைக்கிறோம்.

    தமிழக மக்களின் நலனுக்காக நாங்கள் பாடுபடுவோம். மாநில உரிமையை பெறுவதில் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை. எந்த மதத்தை சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டாலும் முதலில் குரல் கொடுப்பது அதிமுக.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர்.
    • போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள முத்துகவுண்டன் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகரில் 370 வீடுகள் உள்ளது.

    இந்த குடியிருப்புக்கு அருகே 46 புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட புறம்போக்கு நிலத்தில் 46 புதூர் ஊராட்சியை சேர்ந்த பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் குப்பைகளை சேமித்து பிரித்தெடுக்கும் குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது.

    இந்த குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை கொட்டி எரித்து வருவதாகவும், அதிலிருந்து வெளியேறும் புகையானது இந்த பகுதி முழுவதும் உள்ள குடியிருப்புகளுக்குள் பரவி பொதுமக்களை பெரிதும் பாதிப்புக்கு ள்ளாக்கி வருவதாக பொது மக்கள் வேதனை தெரிவித்தனர்.

    இங்கு எரியும் குப்பையில் இருந்து வெளியேறும் புகையால் மூச்சு திணறல், திடீரென மயக்கம் அடைதல், காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு பல்வேறு உடல் நோயால் பாதிக்கப்பட்டு வருவதால் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த கோரிக்கைகள் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என வலியுறுத்தி முத்துகவுண்டன் பாளையம் ரிங்ரோட்டில் திடீரென திரண்ட பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர்.

    இதனையடுத்து தகவல் அறிந்து வந்த மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர்.

    இதனைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் ஈரோடு - முத்தூர் பிரதான மற்றும் திண்டல் கொக்கராயன் பேட்டை ரிங் ரோட்டில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட னர்.
    • விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தனர்.

    ஈரோடு:

    தமிழக குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக அருண் பொறுப்பு ஏற்றதில் இருந்து பொது விநியோக திட்டத்தின் கீழ் மானிய விலையில் பொது மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களை வாங்கி பதுக்கல், கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் சம்பந்தமான குற்றங்கள் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் அலுவலர்கள் விவசாயிகளிடம் போதுமான ஆவணங்களை பெற்று கொண்டு நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.

    விவசாயிகளிடம் லஞ்சம் பெறக் கூடாது. விவசாயிகளை காக்க வைக்க கூடாது. வியாபாரி களிடமிருந்து நெல் கொள்முதல் செய்யக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.

    அதன் பேரில் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி தலைமையில் ஈரோடு சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார்,

    ஈரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஈரோடு மண்டல மேலாளர் பானுமதி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட னர்.

    ஈரோடு மாவட்டம் நசியனூர், காஞ்சி கோவில், பெத்தாம்பாளையம், பள்ளபாளையம் ஆகிய இடங்களில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையங் களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு விவசாயிகளிடம் இருந்து முறையாக கொள்முதல் செய்யப்படுகிறதா என ஆய்வு செய்ததுடன், அங்கிருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தனர்.

    மேலும் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி எச்சரிக்கை விடுத்தார். 

    • வீட்டின் மெயின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
    • தங்கச்சங்கிலி மற்றும் மோதிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்து.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம், வாய்ப்பாடி ரோட்டில் எஸ்.எம்.ஏ. தோட்டத்தில் குடியிருந்து வருபவர் ரத்தினசாமி (வயது 43).

    இவர் ஜே.சி.பி. எந்திரம் வைத்து எர்த் மூவர்ஸ் தொழில் செய்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத் தன்று சேர்வைக்காரன் பாளையத்தில் உள்ள தனது மாமனார் வீட்டின் விசேஷத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.

    பின்னர் மறுநாள் காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் மெயின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்த நிலையில் இருந்துள்ளது.

    அதில் வைத்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் ஒரு பவுன் மோதிரத்தை யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்து.

    இதனையடுத்து ரத்தினசாமி பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    • விவசாயிகள்1,219 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • மொத்தம் ரூ.32 லட்சத்து 16 ஆயிரத்து 218-க்கு பருத்தி விற்பனையானது.

    அம்மாபேட்டை:

    பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் புரட்டாசி பட்ட பருத்தி ஏலம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சந்திர சேகரன் முன்னிலையில் நடைபெற்றது.

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரம், தேவூர், எடப்பாடி, மேட்டூர், கொளத்தூர், அந்தியூர், அம்மாபேட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள்1,219 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் பிடி ரக பருத்தி குறைந்தபட்சமாக ரூ.7 ஆயிரத்து 869-க்கும், அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 490-க்கும் விற்பனையானது.

    இதனை பெருந்துறை, சத்தியமங்கலம், புளியம்பட்டி, அன்னூர், கோவை, கொங்கணாபுரம், அந்தியூர் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து போட்டி போட்டு ஏலத்தில் எடுத்து சென்றனர்.

    மொத்தம் ரூ.32 லட்சத்து 16 ஆயிரத்து 218-க்கு பருத்தி விற்பனையானது.

    • ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் அனுமதி இன்றி திறக்கப்பட்ட தேர்தல் அலுவலகங்கள் குறித்து கணக்கெடுக்க உத்தரவிட்டார்.
    • தி.மு.க.வினர் 10 இடங்களிலும், அ.தி.மு.க.வினர் 4 இடங்களிலும் அனுமதி இன்றி தேர்தல் அலுவலகம் திறந்து இருப்பது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 18-ந்தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அன்று மாலை முதலே கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

    மேலும் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால், உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும். இல்லை என்றால் அவை பறிமுதல் செய்யப்படும் என்றும், மேலும் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவித்தனர்.

    மேலும் தேர்தல் அலுவலகம் திறப்பு, பிரசாரம், வாகனங்கள், பொதுக்கூட்டத்துக்கு முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் தற்போது தீவிரமாக நடந்து வரும் நிலையில் தி.மு.க., அ.தி.மு.க.வினர் ஒருவர் மீது ஒருவர் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். அ.தி.மு.க.வினர், தி.மு.க.வினர் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதி இன்றி தேர்தல் அலுவலகம் திறந்து இருப்பதாக கூறினர்.

    இதே போல் அ.தி.மு.க.வினர் மீதும் தி.மு.க.வினர் புகார் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் அனுமதி இன்றி திறக்கப்பட்ட தேர்தல் அலுவலகங்கள் குறித்து கணக்கெடுக்க உத்தரவிட்டார். அதன்படி தேர்தல் அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது தி.மு.க.வினர் 10 இடங்களிலும், அ.தி.மு.க.வினர் 4 இடங்களிலும் அனுமதி இன்றி தேர்தல் அலுவலகம் திறந்து இருப்பது தெரியவந்தது.

    தி.மு.க. சார்பில் கே.எஸ்.நகர், கே.என்.கே. ரோடு, பி.பி.அக்ரஹாரம் பகுதியில் உள்ள வன்னியர் தெரு, வைராபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே உள்ள பணிமனை, அன்னை சத்யா நகர் பகுதியில் உள்ள பணிமனை, சிந்தன் நகர், வரதப்பா தெரு, பெரியார் நகர் அருகே சாந்தன் கரடு, கருங்கல்பாளையம், கள்ளுக்கடை மேடு ஆகிய இடங்களில் தி.மு.க தேர்தல் அலுவலகமும்,

    திருவள்ளுவர் நகர், கல்யாண சுந்தரம் வீதியில் உள்ள அலுவலகம், ஆலமரத்து தெரு, மணல் மேடு ஆகிய இடங்களில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகமும் அனுமதி இன்றி செயல்படுவது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த அலுவலகங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை தேர்தல் அதிகாரிகள் கள்ளுக்கடை மேட்டில் திறக்கப்பட்டு இருந்த தி.மு.க. தேர்தல் பணிமனையை பூட்டி சீல் வைத்தனர். தொடர்ந்து ஒவ்வொரு இடமாக சென்று சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    மேலும் அனுமதி இன்றி தேர்தல் அலுவலகம் திறந்த கட்சியினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவும் செய்து உள்ளனர்.

    • காமதேனு மண்டபம், திருநகர் காலனி, முத்துமாரியம்மன் கோவில், பச்சியப்பன் வீடு, அருள்நெறி பள்ளி ஆகிய வழியாக வந்து கமலா நகர் பகுதியில் கனிமொழி பேசுகிறார்.
    • விநாயகர் கோவில் வீதி, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் பேசுகிறார். பின்னர் காந்தி சிலை, அரசமர விநாயகர் கோவில் வழியாக சென்று அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பேசுகிறார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பாக இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கனிமொழி எம்.பி., இன்று மாலை பிரசாரம் செய்கிறார். 7 இடங்களில் பேசுகிறார்.

    மாலை 4.10 மணிஅளவில் சம்பத் நகரில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து பெரியவலசு, முனியப்பன் கோவில், 16 ரோடு ஆகிய பகுதி வழியாக வந்து நெறிக்கல் மேடு பகுதியில் பேசுகிறார். பின்னர் காமதேனு மண்டபம், திருநகர் காலனி, முத்துமாரியம்மன் கோவில், பச்சியப்பன் வீடு, அருள்நெறி பள்ளி ஆகிய வழியாக வந்து கமலா நகர் பகுதியில் பேசுகிறார்.

    விநாயகர் கோவில் வீதி, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் பேசுகிறார். பின்னர் காந்தி சிலை, அரசமர விநாயகர் கோவில் வழியாக சென்று அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பேசுகிறார்.

    பின்னர் கிருஷ்ணா தியேட்டர் பகுதிகளில் பேசுகிறார். பின்னர் மண்டப வீதி, மரப்பாலம் வழியாக சென்று மாணிக்கம் தியேட்டர் வீதியில் பேசுகிறார்.

    பின்னர் பெரியார் நகர் வழியாக சென்று சூரம்பட்டி நால் ரோடு பகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

    • ஈரோடு இடைத்தேர்தல் பொறுத்தவரைக்கும் அமைச்சர்கள் பணியாற்றினாலும் எந்த அலுவல் சார்ந்த பணிகளும் பாதிக்கப்படவில்லை.
    • அ.தி.மு.க 10 ஆண்டு கால ஆட்சியில் ஒரு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை கூட உருவாக்கவில்லை.

    ஈரோடு:

    ஈரோட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உலக வரலாற்றிலேயே ஈரோடு மாநகராட்சிக்கு தனி வரலாறு இருக்கிறது . 1917-ம் ஆண்டு தந்தை பெரியார் ஈரோடு நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்ததை 2008-ம் ஆண்டு தி.மு.க.ஆட்சியில் கருணாநிதி மாநகராட்சியாக தரம் உயர்த்தினார்.

    அதற்கு பின் வந்த ஆட்சியாளர்களால் அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. மீண்டும் தற்பொழுது தி.மு.க ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு இந்த மாநகராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை கொண்டு வருவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    ஈரோடு மாவட்டத்திற்கு 22 மருத்துவமனைகள் முதலமைச்சரால் கொண்டுவரப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் 13 மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. அ.தி.மு.க. ஆட்சியில் ஏராளமான பணிகளை செய்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது நகைப்பிற்குரியது. அவர் சொல்வது அனைத்தும் மக்களுக்கு பொய் என தெரியும்.

    ஈரோடு மாநகராட்சி புறக்கணிக்கப்பட்ட மாநகராட்சியாகவே தொடர்ந்து இருந்தது. 10 ஆண்டு காலம் புறக்கணிக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சி தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் ரூ.480 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றார்.

    ஈரோடு இடைத்தேர்தல் பொறுத்தவரைக்கும் அமைச்சர்கள் இங்கு பணியாற்றினாலும் எந்த அலுவல் சார்ந்த பணிகளும் பாதிக்கப்படவில்லை. அ.தி.மு.க 10 ஆண்டு கால ஆட்சியில் ஒரு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை கூட உருவாக்கவில்லை. இது குறித்து பேச எடப்பாடி பழனிசாமி தயாரா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×