என் மலர்
ஈரோடு
- அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் படிக்கும் மாணவிக்கு பாதுகாப்பு இல்லை.
- தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தில் இரண்டு முறை எம்.பி.யான கனிமொழி என்ன நடவடிக்கை எடுத்தார்.
ஈரோடு:
ஈரோடு பெருமாள் மலைப்பகுதியில் பட்டாவுக்காக போராடும் மக்களை இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாக சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு அறிந்தார். பின்னர் நிருபர்களுக்கு சீமான் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் பெரியாரை இழிவுபடுத்தவில்லை. பெரியார் என்ன பேசி இருந்தாரோ எழுதியிருந்தாரோ அதை எடுத்து பேசினேன். பெரியாரைப் பற்றி அனைவரும் பேசுகிறார்கள் கனிமொழி உட்பட. பெரியார் என்ன பேசினார்? பெரியார் என்ன எழுதினார் என்று எடுத்துப் பேச உங்களுக்கு யாருக்கும் துணிவு இல்லை. பெரியார் யார் தெரியுமா என்று கேட்கிறீர்கள் தெரியவில்லை சொல்லுங்கள் என்றால் சொல்ல மறுக்கிறீர்கள்.
பெரியாரை தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி அளவுக்கு யாராவது இழிவு படுத்தி பேசி உள்ளார்களா? பெரியார் எங்கு சாதி ஒழிப்பை நீக்கினார். பெரியார் பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி உள்ளது.
பெரியாரை பற்றி பேசும் பெருமக்கள் பெரியார் பேசியது எழுதியதை பேச துணிவில்லை.
கனிமொழி பெரியாரிஸ்டா? கடவுள் மறுப்பிலா? சமூக நீதி, பெண்ணிய உரிமை? திமுக கொடுத்த பெண்ணிய உரிமையை பேச முடியுமா? பெரியார் எங்கு சாதி ஒழிப்பு நிலையம் கட்டியுள்ளார்?
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்பதை பெண்ணிய உரிமை நிலை நாட்டிய பெரியாரிய பெருமக்களிடம் கேட்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் படிக்கும் மாணவிக்கு பாதுகாப்பு இல்லை. ஈசிஆர் சாலையில் பயணித்த திமுக கட்சி கொடியுடன் வந்த காரில் குறுக்காட்டி தடுத்துள்ளனர். கேட்டால் இடித்துவிட்டது என பொய் பேசுகின்றனர்.
பொள்ளாச்சியில் கூட்டு பாலியல் வன்கொடுமை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த நிலையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தில் இரண்டு முறை எம்.பி.யான கனிமொழி என்ன நடவடிக்கை எடுத்தார். அருணா ஜெகதீசன் தாக்கல் செய்த அறிக்கைக்கு நடவடிக்கை என்ன?
எம்ஜிஆர் கடைசியில் தனது சொத்தை காது கேளாதோர், வாய் பேச முடியாதவர் அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார். பெரியார் என்ன செய்தார்?
உங்கள் வீட்டில் கை கட்டி நிற்கிறேனா? கூலி என்கிறாய்?
500 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாக்குகளை பறிக்கிறார் நீதான் கூலி. வாக்கிற்கு பணம் கொடுக்காமல் நின்று காட்டு.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரு வாக்குக்கு ரூ.3 ஆயிரம் கொடுக்க தி.மு.க முடிவு செய்துள்ளதாக தகவல்.
- திராவிடம் என்பது கட்டுக்கதை.
ஈரோடு:
ஈரோடு, குமலன்குட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது சீமான் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு ஒரு வாக்குக்கு ரூ.3 ஆயிரம் கொடுக்க தி.மு.க முடிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
வாக்கினை தி.மு.க.விற்கு செலுத்தி அதனை புகைப்படம் எடுத்து வந்து காட்டினால் தான் பணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் நல்ல ஆட்சி நடக்கிறது என்று மக்கள் சொல்ல வேண்டும். ஆனால் முதலமைச்சர் தனக்குத்தானே நல்லாட்சி நடப்பதாக சான்று கொடுக்கிறார்.
நல்லாட்சி நடக்கிறது என்றால், ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கிற்கு எதற்கு பணம் கொடுக்க வேண்டும்? முதலமைச்சர், அமைச்சர்களைப் பார்க்க மக்கள் தானாக வரவில்லை என்றால், அந்த அளவுக்கு ஆட்சியின் தரம் உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
முதலமைச்சர், துணை முதலமைச்சர் கூட்டங்களுக்கு பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கப்படுகிறது. தி.மு.க.விற்கு வாக்களிக்காவிட்டாலும் பரவாயில்லை, நாம் தமிழருக்கு வாக்களித்து விடாதீர்கள் என்ற பிரசாரம் நடக்கிறது.
தமிழ்தேசம் பேசுவது பிரிவினை வாதம் என்றால் ஆந்திராவில் என்.டி.ராம ராவ் தெலுங்கு தேசம் ஆரம்பித்தபோது ஏன் மவுனமாக இருந்தீர்கள்? ஒவ்வொரு மாநிலத்தவரும் அந்த மாநிலத்தவராக இருக்கும் போது, தமிழர்கள் மட்டும் திராவிடர்களாக சித்தரிக்கப்படுவது ஏன்? திராவிடம் என்பது கட்டுக்கதை.
நம்ப வைத்த போலி கோட்பாடு. திராவிட முன்னேற்றம் என்பது திருடர்கள் முன்னேற்றம் தான். தமிழர் அல்லாதவர் வசதியாக வாழவும், ஆளவும் கொண்டு வரப்பட்ட ஏற்பாடுதான் திராவிடம். இதை சகித்துக் கொள்ள முடியாது. இதனை அம்பலப்படுத்துவதே எங்களின் நோக்கம்.
50 ஆயிரம் ஆண்டுகளுக்கு மூத்த மொழியான தமிழை நாங்கள் தான் செம்மொழி ஆக்கினோம் என்று திராவிடம் கூறுகிறது. உலகின் மூத்த மொழியான தமிழை, அவதூறாகப் பேசியவர் பெரியார். பெரியார் பேசியதை, எழுதியதை நான் எடுத்து பேசுகிறேன். பெரியார் குறித்து நாங்கள் முன் வைக்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை.
அதற்கு பதிலாக அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். அநீதி எந்த வடிவத்தில் வந்தாலும் தமிழர்கள் எதிர்த்து போராடுவார்கள். இது பரம்பரை குணம். தமிழ்நாடு என நாங்கள் தான் பெயர் சூட்டினோம் என்று திராவிடர்கள் பொய் பரப்புகின்றனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கும் இவர்களால் எப்படி சமூகநீதியை, இட ஒதுக்கீட்டை பெற்றுத் தர முடியும்?
இவ்வாறு அவர் பேசினார்.
- 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
- நேற்று 37 ஆயிரத்து 146 வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 5-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு வீடு வீடாக சென்று பூத்சிலிப் வழங்கும் பணி கடந்த 26-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 26-ந்தேதி 40 ஆயிரத்து 429 வாக்காளர்களுக்கும், 27-ந் தேதி 34 ஆயிரத்து 859 வாக்காளர்களுக்கும், 28-ந்தேதி 32 ஆயிரத்து 79 வாக்காளர்களுக்கும், நேற்று 37 ஆயிரத்து 146 வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது.
மொத்தம் இதுவரை 1 லட்சத்து 44 ஆயிரத்து 513 வாக்காளர்களுக்கு பூத்சிலிப் விநியோகம் செய்யப் பட்டுள்ளது. மீதமுள்ள 83 ஆயிரத்து 33 வாக்காளர்களுக்கு இன்றும், நாளையும் பூத் சிலிப் வழங்கி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- சீமான் மீது ஏற்கனவே 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
- தேர்தல் பறக்கும்படை அதிகாரி நவீன், கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்குத் தொகுதியில் முகாமிட்டு தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தெருமுனைப் பிரசாரம், பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். இதில், தேர்தல் விதிகளை மீறியும், அனுமதி பெறாமல் பிரசாரம் செய்ததாக ஏற்கனவே வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சீமான், கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் சீமான் மீது ஏற்கனவே 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஈரோடு நெரிக்கல்மேட்டில் நேற்று மாலை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை பொதுக்கூட்டம் நடத்திட நாம் தமிழர் கட்சியினர் அனுமதி பெற்றிருந்தனர்.
ஆனால், தேர்தல் விதிகளை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து மாலை 6.15 மணிக்கு பொது க்கூட்டத்தை தொடங்கி இரவு 9.15 மணிக்கு முடித்தனர். இதுகுறித்து தேர்தல் பறக்கும்படை அதிகாரி நவீன், கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் தேர்தல் விதிகளை மீறியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சியினர் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க ஆன்லைன் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
- தேர்தல் ஆணையம் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு ஒத்திவைப்பு.
சென்னை:
ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதி தேர்தலில் செல்வாக்கான கட்சிகள் கொட்டகை அமைத்து வாக்காளர்களை தங்க வைப்பதை தடுக்கக் கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.-ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானதை அடுத்து, அந்த தொகுதிக்கு பிப்ரவரி 5-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொகுதியில் வாக்கா ளர்களை கொட்டகைகளில் அடைத்து வைப்பதை தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி கொங்குதேச மறுமலர்ச்சி மக்கள் கட்சியைச் சேர்ந்த கே.பி.எம்.ராஜா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து உள்ளார்.
அந்த மனுவில், தொகுதி யின் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமகன் ஈ.வெ.ரா மரணத்தை தொடர்ந்து 2023-ம் ஆண்டு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் போட்டியிட்ட ஆளும் கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றிபெறச் செய்யவும், மற்ற வேட்பாளர்கள் வாக்காளர்களை அணுகுவதை தடுக்கவும் ஒவ்வொரு வார்டிலும் கொட்டகைகளை அமைத்து, அதில் வாக்காளர்களை தங்க வைக்கப்பட்டனர்.
கொட்டகைகளில் தங்க வைக்கப்பட்ட வாக்காளர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
ஓட்டுக்குக்கு பணம் வழங்கப்பட்டது. அதனாலேயே அந்த தேர்தலில் நான் போட்டியிட்டு தோல்வி அடைந்தேன். தற்போது நடக்க உள்ள தேர்தலில் கொட்டகை பாணி பின்பற்றக் கூடும்.
இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 8-ந்தேதி மனு அளித்தேன்.
அதில், தொகுதிக்கு வரும் வெளியாட்களுக்கும், வெளியூர் செல்லும் தொகுதி வாக்காளர்களுக்கும் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க ஆன்லைன் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தேன். அதனை பரிசீலிக்கும் படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் ஆகியோர், மக்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும். யார் தான் சலுகைகள் வழங்கவில்லை என கேள்வி எழுப்பினார். பின்னர், மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.
- பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- செல்போன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து வரும் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதில், தி.மு.க, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 46 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களது பெயர் பட்டியல் மற்றும் சின்னங்கள் கடந்த 20-ந் தேதி ஒதுக்கீடு செய்து இறுதி செய்யப்பட்டன.
அதனைத்தொடர்ந்து, வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் ஆகியவை அச்சிடப்பட்ட 'பேலட் ஷீட்'களை அச்சிடப்படும் பணிகளை தேர்தல் அலுவலர்கள் சென்னைக்கு நேரடியாக சென்று மேற்கொண்டனர்.
இந்த நிலையில், அந்த பேலட் ஷீட்களை வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்தும் பணி இன்று காலை 9.30 மணியளவில் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் தொடங்கியது.
இதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதற்காக கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. மாநகராட்சி நுழைவாயில் வேட்பாளர்கள், முகவர்கள், செல்போன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இதுபோல் வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்காளர்கள், பெயர் சின்ன பொருத்தும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கும் உள்ளே செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. வேட்பாளர்கள் முகவர்கள், கடும் சோதனைக்கு பிறகே உள்ள அனுமதிக்கப்பட்டனர். அவர்களது உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு சோதனை செய்யப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தேர்தல் ஸ்ரீகாந்த் முன்னிலையில் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. இதையடுத்து வாக்குப்பதிவு எந்திரங்களில் பேலட் ஷீட்களை பொருத்தும் பணியை அலுவலர்கள் மேற்கொண்டனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் 237 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் வாக்குப் பதிவுக்காக கூடுதலாக 20 சதவீதம் வாக்குப்பதிவு எந்திரங்களையும் சேர்த்து 284 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் 16 வேட்பா ளர்களின் பெயர்கள் மட்டுமே பொருத்த முடியும். கூடுதலாக கடைசியில் நோட்டாவுக்கான பட்டன் இருக்குமாறு வடிவைக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் மற்றும் நோட்டாவுடன் சேர்த்து 47 பட்டன்கள் தேவை உள்ளதால் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் 3 எந்திரங்கள் பயன்படுத்தபடவுள்ளன.
அதன்படி இந்த தேர்தலில் 237 வாக்குச்சாவடிகளிலும், 20 சதவீதம் கூடுதல் வாக்குப் பதிவு எந்திரங்களையும் சேர்த்து மொத்தம் 852 வாக்குப்பதிவு எந்திரங்கள், 284 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 308 விவி பேட் எந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
இதில் 852 வாக்குப்பதிவு எந்திரங்களிலும் வேட்பாளரின் பெயர், சின்னம் அச்சிடப்பட்டுள்ள பேலட் ஷீட்கள் பொருத்தப்படுகிறது. இன்று தொடங்கிய இந்தப் பணி இன்னும் 2 அல்லது 3 நாட்களில் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக ஈரோடு மாநகராட்சி பாதுகாப்பு அறையில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறக்கப்பட்டு மாநகராட்சி கூட்டரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.
- தி.மு.க. சார்பில் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
- நான் வெடிகுண்டை வீசினால் உன்னை புதைத்த இடத்தில் புல் கூட முளைக்காது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தி.மு.க. சார்பில் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலை அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க., த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.
தி.மு.க. சார்பில் வி.சி.சந்திரகுமார் உதயசூரியன் சின்னத்திலும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி மைக் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். இவர்கள் உட்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், திமுக, நாதக வேட்பாளர்கள் மட்டுமல்லாது சுயேட்சை வேட்பாளர்களும் பிரசாரத்தை தொடங்கி பல்வேறு பகுதிகளிலும் வாக்காளர்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.
ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவு திரட்டி பேசினார்.
சீமான் பேசுகையில், உன் பெரியாரிடம் வெங்காயம் தான் உள்ளது. என் தலைவனிடம் வெடிகுண்டு உள்ளது. நீ வெங்காயத்தை என் மீது வீசு, நான் வெடிகுண்டை உன் மீது வீசுவேன்.
வெடிகுண்டை வைத்திருக்கிறேன், இன்னும் வீசவில்லை. நான் வெடிகுண்டை வீசினால் உன்னை புதைத்த இடத்தில் புல் கூட முளைக்காது என்று பேசி உள்ளார்.
இதனையடுத்து, தேர்தல் பரப்புரையில் சீமான் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
- பக்தர்கள் வழக்கத்தை விட அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
- இறந்த முன்னோர்களுக்கு பரிகார பூஜை செய்தனர்.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் தினமும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் பவானி, காவிரி கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம் தென்னகத்தின் காசி பரிகாரத் தளம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.
மேலும் இங்கு தினமும் பொதுமக்கள் பலர் வந்து புனித நீராடி வருகிறார்கள். அமாவாசை, பவுர்ணமி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் வழக்கத்தை விட அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
குறிப்பாக ஐப்பசி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை உள்பட ஒவ்வொரு மாத த்தில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் பலர் வந்து தங்கள் குடும்ப த்தில் இறந்த முன்னோ ர்களுக்கு திதி, தர்ப்பணம், எள்ளும் தண்ணியும் விடு தல், பிண்டம் விடுதல் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் இங்கு செய்யப்படுகிறது.
இதனால் பவானி கூடுதுறைக்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், உள்ளூர், வெளியூர் என தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வந்து பல்வேறு பரிகாரங்கள் செய்து வருகிறார்கள். அதே போல் கர்நாடகா, ஆந்திரா உள்பட வெளி மாநில பக்தர்கள் ஏராளமான வர்கள் வந்து புனித நீராடி பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) தை மாத அமாவாசை தினத்தை யொட்டி பவானி சங்கமே ஸ்வரர் கோவில் கூடுதுறை பின்பகுதியில் உள்ள முக்கடல் சங்கமிக்கும் கூடுதுறைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி சேலம்,நாமக்கல், கரூர், கோவை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் காலை முதலே பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
இதை தொடர்ந்து அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் பல்வேறு பரிகார பூஜைகள் செய்து விட்டு சென்றனர். இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர்.
இதையொட்டி பவானி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து ஆண்கள் மற்றும் பெண்கள் தனி த்தனியாக குளித்து விட்டு பரிகார பூஜைகள் செய்தனர். தொடர்ந்து சங்கமேஸ்வரரை வழிபாடு செய்து விட்டு சென்றனர்.
தை அமாவாசை தின த்தை முன்னிட்டு அங்கு தற்காலிக இரும்பு தகர செட் அமைக்கப்பட்ட இடங்களில் இறந்த முன்னோர்களுக்கு பரிகார பூஜை செய்தனர்.
பவானி போலீசார் சிசி டிவி கேமராக்கள் பொரு த்தப்பட்டு குற்ற செயல்களை தடுக்கும் வகையில் பாது காப்பு பணியில் பவானி மற்றும் சித்தோடு, அம்மா பேட்டை, அந்தியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வரு கிறார்கள்.

இதேபோல் அம்மாபேட்டை காவிரி படித்துறையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தனர்.
மேலும் ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து காவிரி ஆற்றில் புனித நீராடினர். தொடர்ந்து அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கும் திதி கொடுத்தனர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பலர் வந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
இதே போல் திருமணம் ஆகாத இளம் பெண்கள், வாலிபர்கள் அதிகளவில் வந்து ஆற்றில் புனித நீராடி பரிகார பூஜைகள் செய்தனர். மேலும் பலர் பல்வேறு பரிகாரங்களையும் செய்து விட்டு சென்றனர்.
இதையடுத்து கொடுமுடி மகுடேஸ்வரர் மற்றும் வீர நாராயண பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு சென்றனர். இதனால் அதிகாலை முதலே கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.
இதே போல் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையில் நகரின் பல பகுதிகளைில் இருந்து வந்த பக்தர்கள் தங்கள் முன்னோ ர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து விட்டு சென்றனர். தொடர்ந்து பக்தர்கள் குடும்பத்துடன் வந்து பரிகார பூஜைகள் செய்து விட்டு சென்றனர்.
- நீரும், சோறும் இல்லை என்றால் ஒரு நாட்டில் புரட்சி வெடிக்கும்.
- தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட சம்பத் நகர் பகுதியில், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது தி.மு.க. அமைதியாக இருந்து வேடிக்கை பார்த்தது. தமிழுக்கும், தமிழினத்திற்கும் தி.மு.கவும், கருணாநிதியும் பல துரோகங்களைச் செய்துள்ளனர். அதனை பொறுக்க முடியாமல் தான் நாம் தமிழர் இயக்கம் உருவானது.
நாட்டு மக்களுக்கு மொபைல்போன், கார் உள்ளிட்ட வசதிகளைச் செய்து கொடுக்க அரசிடம் திட்டம் இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு உணவு கொடுக்க அரசிடம் திட்டம் இல்லை. நீரும், சோறும் இல்லை என்றால் ஒரு நாட்டில் புரட்சி வெடிக்கும். இலங்கை, வங்கதேசம் போன்ற நாடுகளில் இது நடந்துள்ளது.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. சொத்துவரி, மின்கட்டண உயர்வு பற்றி தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. சாராய விற்பனையைத் தவிர இவர்களுக்கு வருவாய் தரும் மாற்றுத் திட்டம் இல்லை.
எனவே வெற்று வாக்குறுதிகளைக் கொடுத்து, நான் வாக்காளர்களை ஏமாற்ற விரும்பவில்லை. நாங்கள் குறைகேட்க வரவில்லை. குறைதீர்க்க வந்திருக்கிறோம். 100 நாள் வேலைத்திட்டத்தில், சோம்பி உட்கார்ந்து இருப்பவர்களுக்கு சம்பளம் கொடுக்கின்றனர்.
அவர்கள் தினம் ஒரு மரம் நட்டிருந்தால் கூட பூமி பசுமையாகி இருக்கும். 100 நாள் வேலை திட்டத்தால் வேளாண் பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. தமிழகத்தில் முன்பு இந்தி திணிக்கப்பட்டது.
இப்போது, வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களை வேலை நிமித்தமாக குடியேற்றம் செய்யும் சதி நடக்கிறது. இதனை தடுத்து தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு, நல்ல வாழ்க்கை வழங்க நாம் தமிழர் கட்சியால் மட்டுமே முடியும்.
மக்கள் எதிர்ப்பை மீறி பரந்தூர் விமான நிலையத்தை கட்டிக் காட்ட முடியுமா? பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டு விட்டோம் என்று சொல்லும் நாளை நான் உருவாக்குவேன். நீங்கள் எல்லாம் சூத்திரன் என்று சொல்லி பெரியார் நம்மை ஏமாற்றினார். அதில் நானும் ஏமாந்தேன்.
திராவிடர்களுக்கு ஒரு பெரியார் தான். தமிழர்களுக்கு ஓராயிரம் பெரியார்கள் இருக்கிறார்கள். ஈரோடு கிழக்கில் எங்களுக்கு வாக்களித்து நம்பிக்கையோடு ஒரு அடி எடுத்து வையுங்கள். மாபெரும் அரசியல் புரட்சிக்கான காலடித்தடம் ஈரோடு கிழக்கில் தொடங்கட்டும். இந்த வெற்றி தமிழ் தேசிய இனத்தின் வெற்றியாக கருதி எங்களுக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கடந்த 19-ந்தேதி முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
- வருகிற 3-ம் தேதி இறுதிக்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்காக ஈரோடு கிழக்கு தொகுதியில் 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதில் 9 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க-நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் என 46 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலையொட்டி மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா தலைமையில் கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் மற்றும் அலுவலர்கள் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி, வாக்குச்சாவடிகளை பயன்படுத்தும் பணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இப்பணியை மாநகராட்சி ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு வார்டிலும் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களது வாக்காளர் அடையாள அட்டையை பரிசோதித்து அவர்கள் வாக்களிக்கும் போது எடுத்துச் செல்ல வேண்டிய பூத்சிலிப்பை வழங்கி வருகின்றனர்.
பூத் சிலிப் வழங்கும் பணி ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளில் 33 வார்டுகள் ஈரோடு கிழக்கு தொகுதியை உள்ளடக்கியதாகும். இங்கு பூத்சிலிப் வழங்கும் பணி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 237 வாக்கு சாவடிகளுடன் கூடுதலாக 20 சதவீதம் வாக்குச்சாவடிகள் சேர்த்து 284 முதன்மை அலுவலர், முதல் நிலை அலுவலர், 2-ம் நிலை அலுவலர், 3-ம் நிலை அலுவலர்கள் மற்றும் 1200 வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடிகளுக்கு கூடுதலாக 58 நான்காம் நிலை அலுவலர்கள் என 1,194 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.
இவர்களுக்கு கடந்த 19-ந்தேதி முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இன்று ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஆர்.ஏ.என்.எம் கலை அறிவியல் கல்லூரியில் 2-ம் கட்ட பயிற்சி நடந்தது. இவர்களுக்கு மண்டல அலுவலர்கள் பயிற்சி அளித்தனர்.
இதில் வாக்குப்பதிவின்போது வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது ஏற்பட்டால் அவற்றை எவ்வாறு சரி செய்வது, வாக்குச்சாவடிகளில் அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வருகிற 3-ம் தேதி இறுதிக்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு தபால் ஓட்டு போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு எந்தெந்த வாக்கு சாவடி மையங்களில் பணியாற்றுவது குறித்த ஆணை வழங்கப்படும்.
- தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.
- 15-க்கும் மேற்பட்ட யானை கூட்டங்கள் நிலத்தில் சுற்றி திரிந்துள்ளது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வன சரத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.
சமீப காலமாக கர்நாடகாவில் இருந்து இடம்பெயர்ந்து தாளவாடி அருகே வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட அருள்வாடி கிராமத்திற்கு கர்நாடக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 15-க்கும் மேற்பட்ட யானை கூட்டங்கள் அருள்வாடி கிராமம் அருகே உள்ள மானாவாரி நிலத்தில் சுற்றி திரிந்துள்ளது.
இதனால் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் அச்சம் அடைந்தனர். யானை கூட்டங்கள் விவசாய நிலத்தில் அல்லது ஊருக்குள் புகுந்தால் அதிக சேதாரம் ஏற்படும் என்பதால் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானைக் கூட்டங்கள் அருள்வாடி கிராமத்திற்குள் புகாதவாறு கண்காணித்து வருகின்றனர். மேலும் யானைக் கூட்டங்களை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
- பெரியாரும் வேண்டும், பெருமாளும் வேண்டும் என்று கூறியவன் நான்
- தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சமூக நீதிக்கு அடித்தளம் இட்டவர் தந்தை பெரியார் தான்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. துரை வைகோவிடம் பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த துரை வைகோ, "பெரியாரும் வேண்டும், பெருமாளும் வேண்டும் என்று கூறியவன் நான். நான் இந்து பக்தன் தான். எல்லா கோவிலுக்கும் போவேன். அதேநேரத்தில் தந்தை பெரியார் இல்லாமல் சமூகநீதி கிடையாது. சமூக வளர்ச்சி கிடையாது. குறிப்பாக பெண்கள் படிக்கலாம், வேலை செல்லலாம் என்று சம உரிமை கொடுத்தது பெரியார் தான்.
நம்முடைய இளைஞர்களுக்கு ஆங்கிலப்புலமை இருப்பதற்கு இருமொழி கொள்கை தான் காரணம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சமூக நீதிக்கு அடித்தளம் இட்டவர் தந்தை பெரியார் தான். நமக்காக பாடுபட்ட பெரியாரை இழிவுபடுத்தும் யாராக இருந்தாலும் ஈனப்பிறவிதான்" என்று தெரிவித்தார்.






